Pages

Wednesday, December 31, 2008

புத்தாண்டு சபதம் என்ன எடுத்துக்கொள்வோம் ?

2009
புத்தாண்டு உறுதிமொழி
என்ன எடுத்துக்கொள்வோம் ?

புத்தாண்டு 2009 ஜனவரி திங்கள் முதல் நாள்
எல்லோரும் எல்லோரையும் வாழ்த்தும், வாழ்த்தி வணங்கும் ஆசி பெறும் திரு நாள்.

இனியதோர் புத்தாண்டு பிறக்கும் நல்வேளையில் உலகத்து தமிழர்களுக்கெல்லாம் புத்தாண்டு நல் வாழ்த்துக்களும்
எனது ஆசிகளையும் கூறும் அதே தருணம் அவர்தமக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கலாம் என நினைத்தேன்.

எல்லோரும் புத்தாண்டு பிறந்த உடனே, ஒரு உறுதி எடுத்துக் கொள்வர். அதைக் கடைப்பிடிப்போமென‌
இன்னொரு உறுதியும் கொள்வர்.

இந்த வருடம் என்ன உறுதி எடுத்துக் கொள்வது ?

முக்காலத்துக்கும் பொதுவாம் தமிழ் மறையாம் திருக்குறளிலிருந்து ஒரு பத்து குறட்பாக்களை ஈண்டு தந்து
அவற்றினில் ஏதேனும் ஒன்றில் புதைந்திருக்கும் கருத்தினை அறிவுறைதனை இவ்வருடம் முழுவதும் இம்மி குறையாது கடைப்பிடிப்போமென‌ உறுதி கொள்ளலாமா ?

முதலாவது:
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ' இவன் தந்தை
என் நோற்றான் கொல்" எனும் சொல்.

இரண்டாவது:
கற்க கசடுஅறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.

மூன்றாவது:
தேறற்க யாரையும் தேராது, தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

நான்காவது:

ஆக்கம் கருதி,முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடையார்.

(லாபமே குறிக்கோளாகக் கொண்டு தமது முதலையும் இழக்கும் காரியத்தை
அறிவுள்ளோர் செய்ய மாட்டார்.)


ஐந்தாவது:
நெடு நீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடு நீரார் காமக் கலன்.

ஆறாவது.:
ஒல்வது, அறிவது அறிந்து, அதன் கண் தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

ஏழாவது:
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவது ஓர் நோய்.

எட்டாவது:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.

ஒன்பதாவது:
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

பத்தாவது:
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன்:
ஆகுல நீர பிற.

நன்றே செய் அதை இன்றே செய் என்பார்கள்.
நமக்கு நல்லது என்று தோன்றுவதை இன்னொரு கணத்துக்கு ஒத்திப்போடவும் கூடுமோ ?

யார் எதை எடுத்துக்கொள்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தப் பத்துக்குறட்பாக்கள் மட்டும்தான் என்றில்லை. எந்த ஒரு குறளையும் எடுத்து
அது புகட்டும் பண்பினையும் நன்னெறிதனையும் மனதில் இறுத்தி வாழ்வினை
வளம் பெறச்செய்வோமாக.

Friday, December 05, 2008

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்திருவாசகம்.


தில்லையில் அருளிய அச்சுப்பத்து

ஆனந்தம் உறுதல்.

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

இசை ஞானி இளையராஜா இன்னிசையுடன்

courtesy: kskogulan from www.youtube.com
இப்பதிகத்தின் பொழிப்புரை இப்பதிகத்தின் கீழ் தரப்பட்டுள்ளது.
நன்றி: ஸ்ரீ சுவாமி சித்பவானந்தர். ஸ்ரீ ராமகிருஷண தபோவனம்


புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

அம்மநாம் அஞ்சு மாறே.
அம்மநாம் அஞ்சு மாறே. 1


வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.2

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.3


கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.4

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.5


வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.6


தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.7

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.8

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.9

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 10


1 சிவனைக்குறித்து சிறப்பு அறிவு இலாதலால், அவனிடத்து ஒன்றாத எவரிடமும்
பழகுதல் ஒவ்வாது.

2 ஈசனிடம் பக்தி இல்லையேல் வரும் கேடு கொலைக்கருவியினால் வரும் கேட்டைவிட‌
பயங்கரமானது. கொடியது. உலகப்பற்றுடையார் உறவு பக்தியின் மேன்மைக்கும்
வளர்ச்சிக்கும் ஒவ்வாது.

3 சிலரோ பக்தியின் மேல் நிலைக்குச்சென்றபின் இறங்கிவிடுவர். இவர்களுடன் நேசம்
பொருந்தாது.

4 திரு நீறு போன்ற சிவ சின்னங்கள் அணிவது சாதனத்துக்குத் துணை. ஆதலின்
சின்னங்களைப் புறக்கணிக்கலாகாது. சிவனிடத்து பக்தியும் சிவ சின்னங்களிடத்து
பக்தியும் ஒன்றே.

5 மலர்கள் போன்ற பூசைக்குரிய சாதனங்களை ப்பயன்படுத்துவது பக்தியை வளர்ப்பதற்கோர்
உபாயமாம். மலர்களைக் கொய்ய வருகையில் தடைகள் ஏற்படினும் பக்தர் அதை
பொருட்படுத்தமாட்டார்.

6 ஒன்றுமித்த கூட்டுறவு பக்தருக்கும் பக்திக்கும் பேருதவியாம். பக்தரைப் பழிப்போரும்
உலகில் உண்டே. அன்னவருக்கு அஞ்சி தன் பக்தி சாதனங்களை மறைப்பது
முறையாகாது.

7 ( நிந்தையும் புகழ்ச்சியும் பக்தனுக்குப் பொருளற்றவை. இறப்புக்கு அவன்
அஞ்சுவதில்லை.)

8 விவேகம் உடையவர் உறவு வேண்டும் அது போல விவேகம் அற்றவர் உறவு உதவாது.
யானைக்கும் புலிக்கும் விவேகம் உள்ளவர் அஞ்சார். ஆனால் விவேகம் அற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பர்.

9 எதைக்கண்டும் அஞ்சுபவர் யாருக்கும் உதவார். சிறப்பான ஆத்ம சாதனமான பக்திக்கு
அன்னார் உதவிடார்.

10 யான் கொடிய ஆயுதத்திற்கு அஞ்சமாட்டேன். மரணத்துக்கு அஞ்சமாட்டேன்.
' சந்திரசேகரனாகிய சிவனைத் தீவிரமாக வழுத்தும் ஆண்மையடையாதவனுக்கு அஞ்சுவேன் 'சந்திரசேகரனாம் சிவனைத் தீவிரமாக பக்தி செய்யாதவனுக்கு அஞ்சுவேன்.

Sunday, September 21, 2008

வாய்மை இதுதான் !வாய்மை இதுதான் என்று இரண்டே வார்த்தைகளில், இல்லை, இரண்டே வாக்கியங்களில் சொல்லுங்கள், இல்லையா, இரண்டு நிமிட நேரத்திற்குள் சொல்லுங்கள் என பலரிடம் கேட்டேன்.

சத்தியம் இதுதான் என்று இரண்டே வார்த்தைகளில், இல்லை,இரண்டே
வாக்கியங்களில் சொல்லுங்கள் என்று பலரிடம் பேசிப்பார்த்தேன்.

மெய் இதுதான் என்று வரையறுத்து இரண்டே வார்த்தைகளில், இல்லை,
இரண்டு வாக்கியங்களில் சொல்லுங்கள் என பற்பல மெய்யன்பர்களிடம்
வினவினேன்.

எல்லோருமே பேசுகிறார்கள். மணிக்கணக்காக, ஏன் ! நாட்கணக்காகவும் பேசுகிறார்கள். பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்.
பற்பல மொழி இலக்கியங்கள், பற்பல நீதி நூல்கள், வேத சான்றுகள்,
மதக் கோட்பாடுகள் ஆகியன பலவற்றிலிருந்தும் கோடிட்டுக் காட்டிவிட்டு,
மெய் இதுதான் என உணர்த்துகிறார்கள். இல்லை எனச் சொல்லிட இயலாது.
இருப்பினும், எல்லோருமே மெய் என்பது, இது இல்லை, இது இல்லை என‌
பலவற்றினையும் நீக்கி மிச்சம் எது உள்ளதோ அதுவே எனச் சொல்லாமல்
சொல்கிறார்களே தவிர, மெய் இது தான் என ஒன்றைக் குறிப்பிட்டுச்சொல்வதைத் தவிர்த்துவிடுகின்றனர்.

More than a positive affirmation, truth is defined only by negating "what is not true " as perceived easily by the mind through the senses, and understood by the intellect.


வள்ளுவர் சொல்வார்:

ஒருவன் " மனத்தொடு வாய்மை மொழியின் " அவன் தானம் தருமம் செய்கின்றவனை விட மேலானவன். அவனது " அகம் தூய்மை, வாய்மையால் காணப்படும்" என்றும் சொல்வார். மற்றும் "வாய்மை எனப்படுவது யாது ? எனின் " யாது ஒன்றும் "தீமை இலாத‌ சொலல் " எனவும் விளக்குவார்.

கடைசிப்பாவாக அமைகிறது ஒரு முத்தான குறள்.

" யாம் மெய்யாக் கண்டவற்றுள், இல்லை, எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற "

யோசித்துப் பார்த்தால், எது நமது வார்த்தைகளுக்கப்பால், புலன்களுக்கப்பால், மனதிற்கப்பால், புத்திக்கு அப்பால் இருந்து, இவை அத்தனையும் நீங்கும்போது உணரப்படுமோ அதுவே மெய்.

அதை எப்படி இரண்டு வார்த்தைகளாகச் சொல்வது ? அது ஒன்று தானே !!

ஏன் எனில் ,

"ஆங்கென்றும் ஈங்கென்றும் உண்டோ ‍ சச்சி
தானந்த சோதி அகண்ட வடிவாய்
ஓங்கி நிறைந்தது கண்டால் ‍ = பின்னர்
ஒன்றென்று இரண்டென்று உரைத்திடலாமோ ?" == தாயுமானவர்.

Sunday, August 31, 2008

சொல்லுக, சொல்லில் பய‌ன் உடையஈண்டு இவ்வுலகத்தில் என்றுமே இல்லாத அளவிற்கு வாதப் பிரதிவாதங்கள்
அதிகமாகிவிட்டன என்று தோன்றுகிறது.

பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள் என்றெல்லாம் சின்னத்திரைகளில்
அவ்வப்போது போடப்பட்டு, மக்களைச் சிந்திக்கச்செய்கிறதோ என்னவோ
சிரிக்கச்செய்கின்றன.

ஒட்டிப் பேசும்போதும் வெட்டிப்பேசும்போதும் பொருளை விட்டு வெகுதூரம்
அகன்று சென்று தனது சொற் திறமைதனை மட்டுமே வெளிக்காட்டி அதன்மூலம்
தன்னை முன்னிறுத்த முயல்வோரும் பலர் உளர்.

ஆதலால், ஒரு பட்டி மன்றம் முடிவடையும் நிலையிலே, ஒரு பொருள் குறித்து
நாம் கொண்டிருந்த அறிவு அகன்றதா அல்லது ஆழ்ந்ததா என்றால் பல வேளைகளில் இல்லை என்றே குறிப்பிடவேண்டியிருக்கிறது. We left no wiser than before என்று ஆங்கிலத்தில் சொல்வர். கேட்பவருக்கு எந்த விதமான பலனும்
அளிக்காது முடியும் பேச்சுக்கள், பட்டி மன்றங்களினால் என்ன பயன் !

கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க், கேளாரும்
வேட்ப, மொழிவதாம் சொல்
என்பார் வள்ளுவர்.

பிணிக்கும் என்ற சொல்லுக்குத் தன் வசமாக்கும் என பொருள் கொள்க.
ஒருவரது பேச்சு என்னைத் தன் வசமாக்குகிறது என நான் நினைத்தால்,
அதற்கு காரணம் பேச்சிலே காணப்பட்ட அழகா அல்லது பொருளா என
நான் நினைத்துப் பார்ப்பேன்.

எதுகை மோனை பல கூட்டி வார்த்தைகளிலே, சொற்தொடர்களிலே அணிகள் சேர்த்து
இது பேச்சா அல்லது கவிதை மழையா என திகைக்கச்செய்வார் பலர்.
அந்த மழையிலே நனைந்து வீடு திரும்பும்போது ஒரு கணம் நினைத்துப்
பார்க்கிறோம் : இத்தனை பேசினாரே பேச்சாளர், அதில் மையக்கருத்து
என்ன இருக்கிறது என்று ! ஒன்றுமே இல்லையே என பல சமயங்களில்
தோன்றுகிறது.

புற அழகு ஒரு பேச்சுக்குத் தேவைதான். இல்லையெனச் சொல்லிவிடுதல்
இயலாது. புற அழகை வைத்துத்தான் ஒரு கூட்டத்தினரை மயக்கி அமைதியாக வைத்துக் கொள்ள முடிகிறது. அந்த அழகிலே பல்வேறு ஏற்றத் தாழ ஒலிகளும்
உணர்வு நிலைகளும் தேவைதான். அதற்கேற்ப குரல் வளமும் அமைந்து
விட்டாலோ சொல்லவேண்டாம். கூட்டத்தினர் மகுடிக்கு முன் பாம்பு போல்
நிற்கும் விந்தை காணக்கரியது.

ஆனாலும், அறிஞர் அக்காலத்து தமது பேச்சுத் திறனை தமது கருத்துக்களை
செவ்வனே சொல்வதற்கும் அவை சிறிதும் பிறளாது கேட்போர் சிந்தைதனை
அடைவதற்குமே பயன்படுத்தினர்.

இது நடந்து ஒரு இருபது வருடம் இருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு கூட்டத்தில் இரண்டு மணி நேரம் பேசுங்கள் என்றார்கள். உடனே
ஒப்புக்கொண்டேன். பேசச்சொல்லி என்னை அழைத்தவர் அதிசயித்தார்:
"என்ன ! நான் தலைப்பு கூட இன்னமும் தரவில்லையே ! அதற்குள்
ஒத்துக்கொண்டுவிட்டீர்களே " என்றார்.

நான் சொன்னேன்: " நீங்கள் ஒரு ஐந்து நிமிடங்கள் தான் பேசலாம் என‌
வரையறுத்து இருந்தால் தான் பொருள் தேவை. இரண்டு மணி நேரம்
எனும்போது என்ன பொருள் என்பது அவ்வளவு தேவையில்லை.'என்ன அழகாகப்
பேசுகிறார்' எனும் பிரமிப்பில் 'என்ன பேசுகிறார்' என்பது மறைந்துவிடும்"
என்றேன்.

இல்லை என்றார்.

நான் சொல்லியது தவறு எனச் சொல்கிறாரோ என‌
நினைத்தேன். பின்பு தான் புரிந்தது. ' இல்லை ' எனும் தலைப்பில்
பேசச்சொன்னார்.

பேசினேன். ஒன்றல்ல, இரண்டல்ல, இரண்டரை மணி நேரம் பேசினேன்.

தலைப்பு : "இல்லை" தான்.

பேச்சின் முடிவில் கேட்பவர் புரிந்துகொண்ட தலைப்பு : ' "நான்" என்பது
இல்லை'

****

பேசிக்கொண்டிருக்கும்போதே
ஒரு தருணத்தில் ' இல்லை ' எனும் வார்த்தையை இரண்டாகப்பிரித்தால்,
' இல் ' என்றும் ' ஐ " என்றும் வருகிறது.
இல் என்பதற்கு இல்லை என்று தான் பொருள்.
ஐ ஆங்கிலத்தில் நான் என்று எடுத்துக்கொண்டால்,
"இல்லை என்பதற்கு ' நான் ' என்பது இல்லை என தொனிக்கிறது" என்றேன்.

கூட்டத்தினர் கை தட்டினார்கள்.

எனக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும்.

இது வார்த்தை ஜாலம். ஆங்கிலத்தில் சொன்னால் verbal jugglery.

அவ்வப்போது கூட்டத்தினர் சோர்வடைவதாகத் தோற்றமளிக்கையில்
தரும் டானிக் மாத்திரை.
ஆனால், டானிக் மாத்திரைகளே உணவாகிடுமா ?
அது போல, வார்த்தை ஜாலங்களே ஒரு சொற்பொழிவின்
மையமாகிவிடுதல் கூடாது.

*********************************

கேட்டவன் கேட்பதற்கு முன் கொண்ட மன நிலையும் கேட்டபின் கொண்ட‌
மன நிலையும் மாறி கேட்டவனின் நன்மைக்கு அமையும் பொழுதுதான்
பேச்சுக்கு ஒரு பொருள் இருக்கும்.

பொருள் இலாத பேச்சினால் கேட்பவருக்கும் நன்மை இல்லை. அதைச்
சொல்பவருக்கும் நன்மை இல்லை.

வள்ளுவப்பெருந்தகை கூறுவார்;

சொல்லுக, சொல்லில் பய‌ன் உடைய, சொல்லற்க,
சொல்லில் பயன் இலாச் சொல்.


இன்றைய தமிழ் வலை உலகிற்கும் இது பொருந்துமா ?
படிப்போர் தான் முடிவெடுக்கவேண்டும்

Sunday, August 03, 2008

ஆத்திசூடி.2008ஆத்திசூடி 2008.

அறியாமை உணர். 2. அகந்தை விலக்கு.
ஆணவம் தவிர்.
இன்பமெலாம் இன்னலே. 2. இருளை அகற்றும் குருவடி சேர்.
ஈகையில்லையேல் ஈண்டு இசை இல்லை. 2. ஈகையிலா ஈட்டம் இசை தரா.
உட்பகை உறவு கொல்லும். 2. உள்ளத்தே சினம் அறு.
ஊரை எளியாதே. 2. ஊணை இகழாதே
எவ்வுயிரும் கொல்லாதே.
ஏமாறாதே. ஏமாற்றாதே. 2. ஏணிதனைத் தள்ளாதே.
ஐயம் தொலை.
ஒடிய நடை போடாதே. 2. ஒவ்வாப் பொருள் தவிர்.
ஓடுவதை விரட்டாதே. 2. ஓங்கியதை இகழாதே.
ஓளடதமாம் பசித்து உண்ணல்.

Wednesday, July 16, 2008

அடக்கம் அமரருள் உய்க்கும்

அடக்கம் அமரருள் உய்க்கும் = அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.


என்பது வள்ளுவம்.

அடக்கத்தைப் பற்றி பல்வேறு நிலைகளில் பல்வேறு பொருட்கள் கூறப்பட்டபோதிலும்
ஒன்று தெளிவாகத் தெரிகிறது.

தெரிந்தவன் தனக்குத் தெரியும் என்பதாலும், தெரிந்தவை மனதிற்கு ஒரு
முழுமையையும் அமைதியும் தருகின்றன என்பதாலும், தாம் தெரிந்தவற்றிற்கு
மாற்றாக ஏதும் சொல்லப்படும்போது, அச்சூழ்னிலை, சொல்வோர், சொல்வோர்
மன நிலை, அவையோர் மன நிலை, ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு
வாளா இருந்து விடுகின்றனர்.

தெரிந்தவர் ' சும்மா இரு' த்தலும் இதனால்தானோ !

மாறாக, தனக்குத் தெரியுமென மற்றவர் மத்தியிலே வாதிடுபவர் ஒரு வகையான‌
வ்யூகத்தில் தன்னை அறியாது சிறைப்படுகிறார்.

ஒன்று, தான் சொல்வது மற்றவர்க்குப் புரிவதில்லை. அதைப் புரிவதற்கான
பக்குவமோ அறிவோ அவர்களிடம் இல்லை.
இரண்டு. மாறாக நிலை எடுத்தவர்களுக்கு ஒரு 'தான் சொல்லிவிட்டோம்' என்றதொரு
ஆணவப்பிரச்னையும் இருக்கலாம். அதை எதிர்த்து ஒரு வார்த்தை வந்து அதற்கு தாம்
கட்டுப்பட்டால் (ஒத்துக்கொண்டால்) உற்றம், சுற்றமதில் தமது மதிப்பு குறைந்து விடும்
என்கிற அச்சமும் காரணமாக இருக்கலாம்.

ஆதலால், தெரிந்தவர் வாளா இருந்துவிடுகிறார். சொல்லித்தான் ஆகவேண்டுமென்ற‌
நிலையிலும் குறிப்பாக உணர்த்துகிறார். காலம் உணர்த்தும், தாமாகவே எதிர்வாதி
புரிவார் என்றும் மெளனம் சாதிக்கிறார். இது அடக்கமா ?

அடக்கம் எனும் சொல்லைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால், அடங்கியிருப்பது
அடக்கமா, அல்ல ! தனது புரிதலை ( understanding ) தனக்குள்ளே
அடக்கிவைத்திருப்பவனது செயல் அடக்கமா ?

அவையிலே தனது புதல்வர்கள் செய்யும் தகாத காரியங்களைப் பார்த்தும் வாளா இருந்த‌
திருதராஷ்டிரன் புத்திர பாசத்தில் அடங்கிப் போய் உறைந்து இருக்கிறான்.

அரச அவையின் குருமார் எனச்சொல்லப்படும் பீஷ்மர் தம்மால் அந்தக் காட்சிகள்
பார்க்கப் பட இயலவில்லை எனினும், அரச விசுவாசம் எனும் தளையில் அடங்கிப்போகிறார்.

அர்ச்சுனனது வில்லும் வீரமும் அடங்கிப் போன காட்சி.

இவர்கள் காட்டிய அடக்கம் சரித்திரத்தில் இடம் பெற்றனவே தவிர இவர்களுக்கு
அழகோ, மாட்சியோ, பெருமையோ தரவில்லை.

அடுத்த காட்சி இதோ !
பாண்டிய அவையில், கண்ணகி தன் கணவன் கள்வன் அல்ல என நிரூபித்துவிடுகிறாள்.
தன் கணவன் உயிரை அவசியமில்லாது ஆராயாது அபகரித்த ஆட்சியாளரைச் சுடுசொல்
சொல்லிடும்பொழுது கண்ணகியின் சினத்தில் உள்ள நியாயம், தருமம் எல்லாம்
புரிந்து, யானோ அரசன் ! யானே கள்வன் எனச் சொல்லித் தன்னையே மாய்த்துக்கொள்கிறான்
பாண்டிய மன்னன்.
இவன் அடக்குவது என்ன ? தனது அரசு தனக்குத் தரும் அதிகார பலத்தை. அதை உபயோகித்து
எதையும் செய்யலாம் என்ற ஆணவத்தை.
இவன் எதில் அடங்குகிறான் ? சட்டத்திற்கு, நியாயத்திற்கு, தருமத்திற்குத் தலை வணங்குகிறான்.
இல்லை! தன்னுயிரையும் துறக்கிறான்.

ஆக, தர்மம் என்ன சொல்கிறதோ அதற்கு அடங்குபவர் பிரதிபலிப்பதுவே அடக்கம்.
தர்மம் என்ன சொல்கிறதோ அதற்கு அடங்கி, தருமமில்லா எல்லா உணர்வுகளையும்,
அவ்வுணர்வுகளைப் பெருக்கும் ஐம்புலன்களை அடக்கி வாழ்வதே அடக்கம்.

இங்ஙனம் வாழ்வாரே அமரருள் உய்வார் என்பது வெள்ளிடைமலை.

எப்படி ? வள்ளுவர் அதையும் கூறுவாரே !

ஒருமையுள், ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

தன் ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனுக்கு ஏழும் பிறவிகளிலும் நன்மை உண்டாம்.


Wednesday, July 02, 2008

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்இந்த ஒளவை பிராட்டி இருந்தாரே ! அவர் சொல்லாத விஷயம் இல்லை.
ஆத்திசுவடியிலே அத்தனையும் ஒரு சில வார்த்தைகளிலே சொல்லுவதில்
நறுக் தெரித்தாற்போல் சொல்கிறார்.

" அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தந்தை தாய்ப்பேண்
தாயின் சிறந்தது ஒரு கோயிலும் இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. "


குமர குருபரர் இன்னும் ஒரு படி மேலே சென்று

" குலமகட்குத் தெய்வம் கொழுகனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் = அறவோர்க்(கு)
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை "
என்பார்.

( நற்குடிப்பிறந்த கற்புடைய பெண்ணுக்குக் கணவனே தெய்வம்;
பிள்ளைகளுக்கு உறுதியாக தந்தை தாயே தெய்வமாவர்;
இல்லர நெறியை மேற்கொண்டவர்க்கு துறவிகள் தெய்வமாவர்;
எல்லோர்க்கும் இலையினது நுனி போலப் பசும் பொன்னால்
செய்யப்பட்ட அணிகலன்களையுடைய அரசே தெய்வமாவான். )

பெற்ற தாயின் பெருமையை பெருமிதத்துடன் எனது வலையுலக‌
நண்பர் ஜீவா அவர்கள் தனது பதிவிலே அண்மையில் இவ்வாறு
சொல்கிறார்:
http://jeevagv.blogspot.com

"தாயின் பெருமையைச் சொல்லாத இலக்கியம் இல்லை.
"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தெனை காத்திடும்..." எனத் தாயுமானவனைப் பாடுவார், மாணிக்க வாசகர் பெருமான். தாய் பரிந்து கவனிக்காவிட்டால், சேய் தனை காப்பவர் யார்?
தாய்க்குத் தாயாக பேருலகம் தனை ஈன்ற பெருந்தேவி,
அன்னை மகாலட்சுமி அல்லவோ அகில உலகிற்கும்
அருள் சுரக்கும் தாய்! அம்மா, எனைக்காத்து இரட்சிப்பாய்."


ஏன் இதெல்லாம் சொல்கிறீர்கள் ? என்று கேட்பீர்கள்.

சில நாட்கள் முன் எனது வளாகத்தில் இருக்கும் ஒரு பெரியவரிடம்
பேசிக்கொண்டிருந்தேன். அவர் தனக்கு அண்மையில் நிகழ்ந்த
நிகழ்வு ஒன்றை விவரித்தார்.
அவரது ஒரு வயது முதிர்ந்த நண்பர் ஒருவர் இறந்து விட்டார் எனச்
செய்தி கேட்டு அவருக்கு மரியாதை தெரிவிக்க, அந்த வீட்டுக்குச்
சென்றாராம். இறந்தவர் உடல் ஒரு குளிர் சாதனப் பேழையில்
வைக்கப்பட்டு இருந்தது. கூடியிருந்தவர்கள் துக்கம் விசாரித்துக்
கொண்டிருக்கையில் இவர் மட்டும் லேசாகச் சிரித்தாராம். என்ன‌
இந்த இடத்தில் சிரிக்கிறீர்கள் எனப் பக்கத்தில் இருந்தவர்
சீற , இவர் சொன்னாராம்:

பாருங்கள் ! என் நண்பன் உயிருடன் இருந்தபோது ஒரு ஃபேன்
சுற்றினால், கரண்டு செலவு ஆகிவிடுகிறது என்று வாசலில் படுக்கச்
சொல்லி வற்புறுத்தினர் இவரது மகனும் மகனின் மனைவியும்.
செத்தபின் பாருங்கள் இவனுக்கு அடித்த யோகம்.
ஏ.ஸியில் என்ன சுகத்துடன் தூங்குகிறான் பாருங்கள் ! என்றாராம்.

காட்டுக்கு வேட்டையாடச் சென்ற தசரத மஹராஜா அங்கு வெகு தொலைவில்
ஒரு மிருகம் நீர் குடிக்கிறது தடாகத்தில் இறங்கி என நினைத்து, ஓசை வரும்
திசை நோக்கி தன் அம்பைச் செலுத்த, அந்த அம்பினால் ஒரு சிறுவன்
இறந்தான் எனவும், அந்தச் சிறுவன் தனது பார்வையற்ற பெற்றோரைத் தன்
தோள்களில் சுமந்து செல்லும்போது, தந்தை தாய் தாகம் எனச்சொல்ல, அவர்கள்
தாகத்தைத் தீர்க்க, அவர்களைச் சற்று நேரம் அமர வைத்துவிட்டு, ஒரு
பானையில் நீர் மொள்ளும்போது தான் தசரதன் அம்பினை எதிர் கொண்டான்
என்பதும் புராணம்.

புராணங்கள் எல்லாம் கதை கற்பனை. சாத்தியம் இல்லை. நடக்ககூடிய‌
தாகச் சொல்லுங்கள். மாதா மாதம் முதியோர் இல்லத்துக்குப் பணம்
அனுப்பி விட்டால், அவர்கள் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்களாம்.
இறந்தபின், உடனே வர முடியவில்லை, ப்ளேன் டிக்கெட் கிடைக்கவில்லை
என்றாலும், அவரவர் சம்பிரதாயத்திற்கு உகந்த வகையில் இறந்தவரைக்
கரையேற்றி விடுகிறார்களாம்.
இருக்கட்டும்.

வயதான பெற்றோரை வாழும் வரை தவிக்கவிட்டு
அவர் உயிர் நீத்த உடன், பசு மாடு தானம், சுவர்ண தானம்,
குடை தானம். பஞ்ச பாத்ர தானம். என்று பல்வேறு தானங்களைச்
செல்வோரையும் பார்க்கிறோம்.
இந்த தானங்களுக்கு ஏதும் மதிப்பு உண்டா ? தெரியவில்லை.
விஷயம் தெரிந்தவர்கள்தான் சொல்லவேண்டும்.

கர்மாக்களைப் பற்றிப் பேசுகிறோம். பல கர்மாக்களை
பயத்தின் அடிப்படையில்தான் செய்கிறோம் என்று தோன்றுகிறது.
பக்தியோ நம்பிக்கையோ தெரியவில்லை.
( We do more out of FEAR than out of FAITH)

அது பயமோ பக்தியோ எதுவோ அதைப்பற்றி பேசவேண்டாம்.
செய்யவேண்டியதை செய்து தான் தீரவேண்டும்.
இதுவும் ஒரு கட்சி.

இதற்கும் அப்பால் இன்னொரு நியாயம். நியாயமாம் !

உங்கள் கர்ம பலன் எதுவோ அதுதான் நடக்கும். நீங்களே
உங்கள் அம்மா அப்பாவுக்கு கயா ச்ரார்த்தம், நித்ய ச்ரார்த்தம்
செய்யவில்லை. காசி, ராமேச்வரம் செல்லவில்லை. அங்கே
கொடுக்கவேண்டிய தானங்களையும் கொடுக்கவில்லை.

உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு கொடுப்பார்களோ இல்லையோ
என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்.

எல்லாம் நினைத்து ப்பார்த்தால் ஒன்று தான் தோன்றுகிறது.

அறக்கடவுளை நாம் வந்தித்தால், அறக்கடவுள் நம்மைக் காப்பார்.
( தர்மோ ரக்ஷதி, ரக்ஷிதஹ ) ( ரக்ஷகஹ என்றும் சொல்வதுண்டு )

அறம் எத்துணை வலியது என்பதை வள்ளுவர் கூறுவார்:

என்பு இலதனை வெயில் போல் காயுமே
அன்பு இல் அதனை அறம்.


" அன்னையும் தந்தையும் தானே..அண்ட சராசரம்..."
என்று துவங்கிப் பாடுகிறார் பாகவதர்.
ஆம். அமரர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.
அவர் பாடுவதைக் கேளுங்கள்.

Wednesday, June 25, 2008

உரத்த சிந்தனை (உறுத்திய சிந்தனை ! ) LOUD THINKINGஎங்கே போனாலும் நமக்கு இரண்டு வழிகள் தென்படுகின்றன.
இப்படியா, அப்படியா, இதுவா, அதுவா என்றே பல நேரம்
குழம்புகிறோம். நம்மைச் சுற்றியுள்ளோரையும் குழப்பத்தில்
ஆழ்த்துகிறோம். எதுவுமே துவக்கத்திலேயே முடிவெடுக்க இயலாத நிலை.
எதையுமே முழுமையாக நம்பி இதுதான் சரி, நமக்குத் தகுந்தது என்று
முடிவெடுக்க முடியவில்லை.
ஏதோ ஒன்று வாங்கவேண்டுமெனக் கிளம்பி, ஏதோ கண்களில் பட,
ஏதோ ஒன்று வாங்கி அதையும் அடுத்த நாள் மாற்றி இன்னொன்று
வாங்கி அதிலும் திருப்தி அடையாமல் இருக்கிறோம். பல தருணங்களில்
நாம் நம்பிக்கை வைத்தது தவறாகப்போய்விட்டதே என்றும் வருந்துகிறோம்.
என்னவோ ! நான் நினைச்சதே வேற ! நடந்ததே வேற என
வருத்தப்படுவோர் பலர்.
ஏதோ படிக்கவேண்டும், ஏதோ வேலைக்கு போகவேண்டும், ஏதோ
ஒருவனை (ளை) த்திருமணம் செய்யவேண்டும், என பல ஏதோக்களில்
தமது வாழ்க்கையை நடத்துபவர் பலர் தமது வாழ்வின் மத்தியிலோ
அல்லது மாலையிலோ தமைத்தாமே நொந்தும் கொள்கிறார்க்ள்.
இவற்றிற்குக் காரணம் கூறப்போனால் ஒன்று இவர்களுக்கு என்ன‌
வேண்டுமென்பதிலே இருக்கும் தெளிவின்மை.
இரண்டாவது எது வேண்டுமோ அது பற்றிய விவரங்கள், விளக்கங்கள்
இலாத நிலை. ஆகா ! இவர் சொல்லிவிட்டார் சரியாகத்தான் இருக்கும் .
அவர் வாங்கியிருக்கிறார். நன்றாகத்தான் இருக்கும். என்று பல விஷயங்களில்
பலரை நம்பி பின் ஏமாற்றம் அடைகிறோம்.
நாம் எதை நம்பவேண்டும் எதை நம்பிவிடக்கூடாது என்பதில் போதுமான‌
தேர்ச்சி நமக்கில்லை எனவே தோன்றுகிறது.

"தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயறவும்,
தீரா இடும்பை தரும் " என்பார் வள்ளுவர்.

(ஆராயாமல் ஒருவரை (ஒரு கருத்தை) நம்புதலும், ஆராந்தபின், எதை நம்பிச்
செயல்படத்துவங்கிவிட்டோமோ, அதன்பால், சந்தேகக்கண்களுடனேயே இருப்பதும்
முடிவிலா துன்பத்தைத் தரும்)

" ஒல்வது, அறிவது அறிந்து அதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல் " என்றும் சொல்கிறார் வள்ளுவர்.

ஒரு காரியம் நம்மால் முடியுமா ? அதில் அறியவேண்டியது எல்லாம் அறிந்து
விட்டோமா என்று எண்ணாமலேயே பல காரியங்களை நடுவிலே கொண்டு
வந்து நிறுத்திய நிலையில் குழப்பத்துடன் நிற்கும் மத்திய தர பிரிவினர்
ஏராளம்.

நமது பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உலகத்து அன்றாட வாழ்க்கையிலே
நமது தெளிவின்மையும் ஆராயாத நம்பிக்கையும் மட்டுமே முதற் காரணங்கள்.

நேரமில்லை. ஏதோ நடப்போம். செய்வோம். எல்லாம் அந்த ஆண்டவன்
பார்த்துக் கொள்வான் என்று சொல்பவரும் பலர்.

சஞ்சலம், குழப்பத்தின் மூல காரணமே indecision.

ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று ஆன்மீகப்பக்கம் திரும்பினால்
அங்கும் ஏகப்பட்ட குரல்கள். எது சரி ? எதை நம்புவது ? தோத்திரங்கள்,
சாத்திரங்கள், ஜாதகங்கள், பரிகாரங்கள், பல்வேறு புண்ய ஸ்தலங்கள்,
அங்கே ( நமது கர்ம வினைகளை நீக்குவதாகச் சொல்லப்படும்)
நீத்தார் கடன் முடித்தல், நாம் முத்தி பெற செய்யவேண்டிய கருமங்கள்,
ஹோமங்கள், பலவித தானங்கள். இவையெல்லாம் அவ்வளவு வேண்டாம்,
ஏதோ நம் வீட்டில் இருந்துகொண்டே இறை பக்தி செய்தால் மட்டும் போதும் என்று நினைத்தாலும், அங்கு
பற்பல திசைகளிலிருந்து பற்பல பரிந்துரைகள்.

இதுவா அதுவா என்று புரியாத‌ நிலையில் இரண்டையுமே ஒழிந்து நிற்பவர் ஏராளம். எதற்கு வம்பு, என‌
இரண்டையுமே கடைப்பிடிப்பர் சிலர். சிவனா, பெருமாளா ? அம்பாளா,
தாயாரா ? வினாயகனா , விச்வ்க்சேனரா ? தமிழா வட மொழியா ? தெய்வம்
பார்த்து இருப்பது கிழக்கா, வடக்கா, தெற்கா, மேற்கா ? எந்தக் கடவுள்
எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் !! எந்தத் திதியில் ? பிள்ளையாரா சதுர்த்தியில் . முருகன் சட்டியில்.
சிவன் பிரதோஷத்தன்று. எந்தக் கடவுளுக்கு எந்தக் கிழமையில் அர்ச்சனை செய்வது நல்லது ?
சனி பகவானுக்கு சனிக்கிழமை. அங்காரகனுக்கு செவ்வாய்
தக்ஷிணாமூர்த்திக்கு வியாழன். அம்பாளுக்கு வெள்ளி.
அனுமனுக்கும் சனிக்கிழமை விசேடம். முருகனுக்கும் வியாழன்
விசேடம்.

போதாக்குறைக்கு சூரிய மண்டலத்திலே சாயா க்ருஹமாம், ராகு கேது.
எல்லா க்ருஹங்களும் க்ளாக் வைஸ். ராகு கேது மட்டும் ஆன்டி க்ளாக்‍ வைஸ்
ராகுகாலத்தில் சனிக்கிழமையன்று அதை எதிர்பக்கம் சுற்றணும்னு எங்க வீட்டு ஜோசியர் சொல்றாரே?

எங்க சாமிக்கு என்ன பூ ? அரளியா,வில்வமா, துளசியா ? அனுமாருக்கு என்ன போடவேண்டும் ? வெண்ணையா ? வெற்றிலையா இல்லை வெற்று பேப்பரையே மடித்து ராமா ராமா என எழுதி அதை மாலையாக்கலாமா ?

நாம் வழிபடும் கடவுளுக்குப்பிடித்தது வடையா ? பாயசமா,
கொழுக்கட்டையா, நிலக்கடலை சுண்டலா ?

" எதுவுமே இல்லை. நமக்கு எது பிடிக்குமோ சாப்பிடுகிறோமோ அதையே
ஆண்டவனுக்கும் அர்ப்பித்துவிட்டு நாம் உண்ணலாம். தவறே இல்லை."

இது அத்வைத வ்யாக்யானம் அப்படின்னு வேற பக்கத்து வீட்டு வேத வித்தகர் சொல்கிறார்.

இவர்கள் போடும் வாதப் பிரதிவாதங்கள் எல்லாமே சரியென்று தோன்றினாலும், இந்த‌
வாதங்கள் முடிவதற்கு முன்னாடியே நாம் முடிந்து போய் விடுவோம் போல் இருக்கிறதே ! என்று
நினைத்தேன்.

எதிர்வீட்டு நண்பர் சொல்வார்: இது கலியுகம். மந்திரம், தந்திரம் எதுவுமே வேண்டாம் ராம ராம என்று இறைவனை இதயத்தில் நிறுத்தி ஜபம் செய்யுங்கள் அது போதும் .

அப்படியா ! சரிதான்! இராமனை விட இராம நாமம் தான் உசத்தி. என்று
கொஞ்ச நேரம் ராம ஜெபம் செய்யப்போனால், பக்கத்து வீட்டிலிருந்து சுதா பாடுகிறார்:
" சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார் ? சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார் ? "
நான் எனது மனைவியைப் பார்க்கிறேன். " எதற்கு நமக்கு வம்பு ? " நான்
ராம ராமான்னு சொல்றேன். நீங்கள் ஓம் நமசிவாய சொல்லுங்கள். அந்தக்
கடவுளுக்கு நம்மைப்பற்றித் தெரியாதா என்ன ? எல்லாம் அவன் அட்ஜஸ்ட்
பண்ணிக்கொள்வான்' என்று அட்வைஸ் தரும் தரும பத்னி.

இதெல்லாம் எதுவுமே இல்லை. நான் தான் அந்த கடவுள்.
விஷ்ணுவின் அவதாரம். என்று ஊருக்கு ஒரு கடவுள் உயிரோட.

ஏன் இப்படி ஏகப்பட்டது இருக்கே நமது நம்பிக்கைக்குள்ளே என்றால்
அதுதான் நமது மதத்தின் பெருமை. Diversity is the essence of our religion.
அப்படியும் சொல்கிறார்கள்.

என் நண்பர் ஒருவர். அரசாங்கத்தில் மிகப்பெரிய பதவியிலிருந்து ஓய்வு
பெற்றவர். மறைகளனைத்தும் ஒருங்கே கற்றவர். கற்று அதற்குத்தக‌
நிற்பவர். அவரிடம் கேட்டேன். "அய்யா ! வள்ளுவர் சொல்கிறாரே !

"யாம்மெய்யாக் கண்டவற்றுள், இல்லை, எனைத் தொன்றும்
வாய்மெயின் நல்ல பிற "


அய்யா ! இவர்கள் சொல்வதில் எல்லாம் எது உண்மை ? "

அவர் கேட்டார் , நீர் தமிழ் கற்றவர் தானே !
சரியென்றும் சொல்லமுடியவில்லை. இல்லை என்றும் சொல்ல "தான்" எனைத் தடுத்த நிலை.

மெளனித்தேன். அவர் தொடர்ந்தார்:

" நாடிலெழுத் தாறும் நடுவெழுத் தீரைந்தும்
ஓடி னொருபதினா லாகுமே ‍ = ஓடாய் நீ
ஓரெழுத்தைக் கண்டுறங்கி உன்னோ டுறங்கி நெஞ்சே
ஓரெழுத்தி லேசென் றுரை.
"

(அகரம் ஆரம்பித்த பாடங்களை ஏன் படிக்கவில்லை என்கிறாரோ ? )

" ஓரெழுத்தா ? "
"ஆம்."
" அதை எங்கே சொல்லித்தருவார்கள் ?"
"எங்கேயும் இல்லை ."
' அப்ப நான் முத்தி எப்படித்தான் பெறுவது " ஒரு விரக்தியுடன் கேட்டேன்.
அவர் பதில் சொன்னார்: சும்மா இரு.

எனக்கு புரிவது போல இருந்தது.
எண்ணங்களை ஒடுக்கினாலன்றி தெளிவு ஏற்படாது. ஆகவே மனதைக் கட்டுக்கொள் கொண்டு வா.
மனம் அமைதியுறும் போது இலக்கு நன்றாகத்தெரியும் எனச்சொல்கிறார்.
என்னால் முடியும் என்று தோன்றவில்லை.
நான் சொன்னேன்: அய்யா ! என்னால் சும்மா இருக்க முடியலையே !


"எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு."
சொல்றாருல்லே வள்ளுவரு, அது போல‌
இருந்துட்டுபோ அப்படின்னு சொல்றீகளோ ?

" இல்லை.
"சஞ்சலம் அற்று எல்லாம் நீ தான் என்று உணர்ந்தேன் என்
அஞ்சலியும் கொள்ளாய் அரசே பராபரமே " ... தாயுமானவர் சொல்வார் இல்லையா ?
அது போல் "எல்லாமே நீதான் என்று உணர்" என்றார்."


" அந்த ' நீ ' யாருங்க அய்யா ?
" அது நீ தான் "
" நான் நீ எனக்குறிப்பிட்டது அவனை.
நீங்கள் ' நீ ' எனக்குறிப்பிடுவது என்னையல்லவா ?"
" இந்த இரண்டுமே ஒன்று தான் . "


அதே சஞ்சலம்.

ஆனாலும் புரிகிறாற்போல் தோன்றியது.

"அய்யா" என்று அழைத்தேன். "இங்கேதான் இருக்கிறேன்.சொல்" என்றார்.
" நான் இத்தனை மறை படித்திருக்கிறேன். ! எவ்வளவு பாசுரங்கள்
ஓயாது ஒரு நாளைக்கு முப்பது மணி நேரம் சொல்லுகிறேன் !
இவ்வளவு படித்த எனக்குத் தெரியாத உண்மை அந்த மாடு மேய்த்த‌
சத்யகாமனுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது ?"

"அவன் ஒருவனைப் பிடித்துக்கொண்டான். அவன் வழி நடந்தான்."

"அந்த ஒருவன் யார் ? பிரும்மனா ?"

" இல்லை . பிரும்மனை அறியும் வித்தையைக் கற்பிக்கும் ஆசான்."

" எங்கே இருக்கிறார் ?"

http://jeevagv.blogspot.com

Sunday, June 08, 2008

வேண்டுவது எல்லாமே ஒன்றுதான்.தமிழ் வலையுலகில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எல்லா நிலமும் உண்டு. அது மட்டுமல்ல‌

தொல்காப்பியர் வகுத்தது போல,

மாயோன் மேய காடுறை புலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன் னுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்

உண்டு. அத்துடன்,

"முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பழித்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்"

என்ற போதிலும் " முல்லையுங் குறிஞ்சியுங் மொழிசமப்பாவை " எனச் சொல்லப்பட்டதால்

பாலை நிலமும் உண்டெனக் கொள்வார் அறிவோர்.

அப்பாலையிலே பசுஞ்சோலைகள் அவ்வப்போது கண்டு அங்கோர் கணப்பொழுது
தங்கி அச்சோலைகளில் பெருகி வரும் சுனை நீரை உண்டு மகிழும் போது
ஏற்படும் மன நிறைவுக்கோர் சொல்லும் உண்டோ !

அத்தகைய சோலை ஒன்றில் அண்மையில்
ஒரு புலவர் உலகை அளந்த மாலோனை விட எங்கள் நாட்டிலே பிறந்து எங்கள் தாய்மொழியாம் தமிழ்
மொழிக்கு வளமூட்டிய வள்ளுவன் பெருமை உடைத்து என்றார்.
ஏன் என்றேன். அவர் சொல்வார்:

"சீரடி மூன்றால்பார் தீரவளந் திட்டான்மால்
ஈரடி போதும் இவர்க்கு! "

அதிசயித்தேன். வள்ளுவனுக்கு இப்படி ஒரு இசையா !

அகர முதல எழுத்தெல்லாம் என அமுது படைத்திட்டவன் சொன்ன செய்தி என்ன ?

அறம், பொருள், இன்பம் என மூன்றும் அடைந்திடினும்
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என
( ஆணவத்தை அடக்காதார் ஈயார் அவ்வுலகம் செல்லாரென)‌‌
விடாது, வீட்டின் பெருமைதனை
எள்ளளவும் குறையாது
ஏகனை ப் போற்றிப் பின்
ஐயமில்லை.
ஒருவனே அவன். அவனை
ஓயாது நினை என்றார்.

பார்க்கும் இடம் எல்லாம் நந்த லாலா என்று பாரதி பாடினானே ..
அவனை அடைய வேண்டி வேண்டுபவர் யாவரும்

"பற்றுக பற்றற்றான் பற்றினை ‍ அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு "

"ஆசை அறுமின். ஆசை அறுமின். ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்போர்" ஞானிகள்."வேண்டுவது எல்லாமே ஒன்றுதான்.
வேண்டாம் என வேண்ட வேண்டும்.

பற்றற்றான் பற்றினைப் பற்றும்போது தான்
பற்றுகிறவனும் பற்றியவனும் பற்றும் ஒன்றெனப் புலப்படும்.

இதே கருத்தினை இன்னுமொரு கோணத்தில் பிரதிபலிக்கும் ஒரு நூல்
ஒன்று அண்மையில் கிடைத்தது. அது திரு நெறியாம்.


( திரு நெறி எனும் நூல் ஒன்று தஞ்சை சரசுவதி மஹாலில் கிடைத்தது. சைவ சித்தாந்த
உண்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்கிடும் நூலிது. இந்த நூலை
இயற்றியவர் : கண்ணுடைய வள்ளல். இது சுவடி வடிவில் இருந்தது. வித்துவான்
இராம. கோவிந்தசாமி பிள்ளை வாயிலாக இது தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளது
அச்சு வடிவில். ))
11 வது பா.

அகணிதமாய் அழிவிலதாய் ஆணவத்தான் மறைப்புண்
உருவினைக்கா முருவெடுத்தங்க துவதுவாய்க்கன்ம‌
வெகுவிதமுன் நுகர்வழியா யிருவினைகள் புரிந்து
மீள்வது போ லதுவாகி மேவுமல பாகத்
தகுதியின்ற் றாரகமா மருளொளியான் முன்னைத்
தம்மகற்றித் தாணுவீனற் றாணிழல்சார்ன் தின்ப‌
மிகுதியெறு மாருபிரின் றொகுதிகளென் றென்றே
வேதமுமா சுமந்தானும் விளம்பு மன்றே.


கணிப்புக்கு அப்பாற்பட்டதாய், அழிவு என ஒன்று இலாது என்றும் இருப்பதும்
ஆணவம் எனப்படும் மூன்று மலங்களால் மறைந்து காணப்படும்
ஆன்மாவினை அனாதியாக ( ஆரம்பம் என்று ஒன்றிலாத )
இதுகாறும் பழைய பிறவிகளினூடே பற்றிய அருவினைகள் காரணமாக,
உடலாகிய உரு எடுத்து
எடுத்த உடலுக்கு ஏற்ப பல செயல்கள் செய்து
இரு வினைகளையும் அனுபவித்துப் பின்
தன்னிடத்தே திரும்பும் ஆன்மாவினை
பிரவணமாகிய தாரக மந்திரமென்னும் அருட்பிரகாசத்தால்
முன்னைப் பிறப்புகளிற் செய்த தவத்தினால்
பிறப்பறுக்க வேண்டி
வேண்டுதல் வேண்டாமை ஆகிய
விருப்பு வெறுப்புகள் அனைத்தும் களைந்து
உலக த்தின் காரணமான
பரமேச்வரன் அவன் திருவடி நிழலை
பற்றி
பேரின்பமாகிய மேம்பாட்டினைப் பெறும்
அரிய உயிர்களுடைய கூட்டம் எனவே
வேத ஆகமங்கள் எல்லாம்
கூறா நிற்கும்.Sunday, May 18, 2008

முறைசெய்யா மன்னவன்கொடுமையான சூறாவளிக்காற்று, வெள்ளத்தினால் அவதியுறும் லக்ஷக்கணக்கான‌
பர்மிய நாட்டவரை பசியிலிருந்தும் பட்டினியிருந்தும் காப்பாற்ற பல்வேறு நாடுகள்
உதவ வரும்போதும் அந்த உதவியை மறுக்கின்ற பர்மீய அரசாங்கத்தின் மானுட‌
நெறி கோட்பாடு தான் என்ன ?

இது பற்றி எண்ணுகையில் இந்த பதிவு எழுதினேன்.Click here to know what's happening in Burma.


http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7406801.stm


A Crime against humanity

********************************************************************************நமது தமிழ் பண்டைய இலக்கியங்களில் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்திற்கும் உள்ள பணிகள்,
கடமைகள் பற்றி விரிவாக, விளக்கமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது

ஒரு தந்தை தனது மகன்களுக்குச் செய்யவேண்டிய கடமை, மகன் தன் தந்தைக்குச் செய்யவேண்டியவை,
கல்வி புகட்டுவோர் பால் கற்போர் காட்டவேண்டிய மரியாதை, கடமை பற்றி மட்டும் நில்லாது ஒரு குடி மகன் தனது அரசுக்குச் செய்யவேண்டிய கடமைகள் பற்றியும், அரசு தன் குடிமக்களுக்குச் செய்யவேண்டிய
கடமைகளைப்பற்றியும் வெகுவாக எடுத்துரைக்கிறது.

ஒரு அரசு குடிமக்களிடம் வரி வசூல் செய்வது எதற்காக ? அம்மக்களைக் காப்பதற்காக. பொது நலம்
கருதி தன்னலம் விழையா மன்னரே நல்லாட்சி செய்யும் அரசரென காலம் சொல்லும். தனது நாட்டில்
நிகழும், நிகழப்போகும் குற்றங்களைச் சரிவர ஆராய்ந்து நீதி செய்யாத அரசன் ஒருவன் தன் நாட்டையே
இழப்பான் என்று சொல்கிறார் வள்ளுவர்.

நாள் தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள் தொறும் நாடு கெடும்.


இதில் சொல்லப்பட்ட பல வினைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை:
முதற்கண் மக்களது குறைகளைக் கண்டறிய வேண்டும். அவர்கட்கு நன்மை பயப்பது எது தீயது எது என்பதை
அவர்கள் வாயிலாகவே அறிதல் அவசியம். ' நாடி ' என்கிறார் வள்ளுவர். அதையும் நாள் தொறும் எனச்சொல்வதால், அத்தகைய மக்கள் தொடர்பினை தொடர்ந்து செய்தல் அவசியம் என்பார். தமக்குக் கிடைத்த‌
தகவல்களை ஆராய வேண்டும். மக்கள் விரும்புதல் என்ன ? மக்கள் வெறுப்பது என்ன ? என்பதை எல்லாம்
அறிதல் தேவை. அவர்கள் எதிர்கொள்ளப்போகும் இன்னல்கள் என்னென்ன என்பதையும் ஆராய்தல் வேண்டும்.
வருமுன் காப்போம் எனச்சொல்வது மிகப்பொருத்தம். ஒரு வியாதி வந்தபின் அதற்கு மருந்து கொடுப்பது முக்கியம் எனில் அது வருமுன்னே அந்த வியாதியைத் தடுத்து மக்களை அண்ட விடா வண்ணம் செய்வது மிகவும்
முக்கியம்.

நல்ல அரசாட்சி எது என்பதை விளக்குகையில், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை, மக்கள் படும் இன்னல்களை உணர்ந்து, எவரிடத்தும் தயவு தாட்சண்யம் பாராது நடு நிலையில் நின்று செயல் படுவதே என்பார் வள்ளூவர்;

ஓர்ந்து கண்ணோடாது, இறை புரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை.

ஒரு சமுதாயத்தில் குற்றங்கள் வலுக்குமாயின், நீதி முறை தவறுமாயின், மக்கள் அரசனை அன்றி எவரை
நாடுவர் ? வள்ளுவர் சொல்வார்: மக்கள் மழைக்காக வானை நோக்குவது போல், நீதி நிலை நாட்டு வதற்காக மக்கள் அரசாட்சிதனையே எதிர்பார்ப்பர்.

ஒரு அரசு நீடிப்பதும் நீர்த்துப்போவதும் மக்கட்பால் அதற்குள்ள அன்பினையே மையமாகக் கொண்டுள்ளன என்பதைச் சொல்லிடவும் வேண்டுமோ ?

Tuesday, April 08, 2008

சொல் வன்மை

தாம் அறிந்தனவற்றைப் பிறர் அறிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துரைப்பது
சொல் வன்மை எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.


" கல்விக்கழகு கசடற மொழிதல் " என்கிறது நறுந்தொகை. (அதி வீர ராம பாண்டியர் இயற்றியது )

ஆழ்கடலைப் போன்று அறிவு உண்டெனினும், அத்தகைய அறிவின் வெளிப்பாடு சொல் மூலமாகத்தான். எழுத்தாகவோ அல்லது பேச்சாகவோ ஒருவனது அறிவின் அகலம், ஆழம் வெளிப்படுகிறது.

எப்பொழுது பேசத்துவங்கினாலும், யாரிடம் பேசுகிறோம், அவர்தம் அறிவு, ஆற்றல் குறித்துத் தெளிவாக இருப்பது நலம்.

நீங்கள் சொல்லும் சொல்லானது "கேட்டார் பிணிக்கும் தகை அவாய்" இருத்தல் வேண்டும். அதாவது, கேட்டவர் கேட்டதை விரும்பும்படி இருக்கவேண்டும். கேளாதோர் நீங்கள் பேசி தாம் கேட்கவேண்டும் என விரும்பவேண்டும்.

ஆக, ஒவ்வொரு சொல்லும் சொல்கையில் அதன் "திறன் அறிந்து சொல்க" என்பார் வள்ளுவர். சொல் வன்மையின் முதல் பாடமே, நாம் சொல்லும் சொற்களின் வலிமைதனை அறிந்த பின்பு தான் அவற்றை உபயோகித்தல் நலம்.

இன்னமும் சொல்வார் வள்ளூவர்:
"சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல், அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து "

எப்படிப்பட்ட சொற்கள் நாம் சொல்லவேண்டும் ? நாம் சொல்லிய சொற்களை
வெல்லும் தகுதி மாற்றான் பேசும் சொற்களுக்கு இல்லா வண்ணம் இருத்தல் வேண்டும். ஒரு பொருளை விளக்க, இதுதான் சிறந்த சொல் எனத்தீர்மானித்துச்
சொல்வது தான் சொல் வன்மை எனக் கூறலாம்.

அவ்வை தன் மூதுரையில் கல்லாதான் கற்ற கவி பற்றிக் கூறியது நாம் அறியாதது அல்ல.
"கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானும்தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போதுமே
கல்லாதான் கற்ற கவி "

கல்லாதவர் கற்றவர் போல் தமை நினைந்து செயல் படுவது ஒரு வகை.
இன்னொரு வகை, தாம் கற்ற அறிவின் திண்மை அறியாது, முழுவதும்
கற்றவர் போல் செயல்படுவது.
பிறிதோர் வகையும் உண்டு.

ஒருவனுடைய சொல்லுக்கும் சொல் வன்மைக்கும் இத்துணை ஆற்றல் இருப்பினும்,
தன் சொற்களையோ அல்லது சொல் வன்மைதனையோ தவறாக பயன் படுத்துதல் தீது. தமக்குத்தான் வாதிடும் திறமை அதிகம் உள்ளது எனக் கொண்டு, தம் சொற்களை ஆயுதமாகக் கொண்டு, மற்றவரை தமது வாதத்தில் தோற்கடிப்பதுதான் குறிக்கோளாய் கொள்தல் பெரியோர் செயலோ சான்றோர் அழகோ அல்ல.

இவ்வாறு வெற்று வாதத்திற்காகவே அலையும் பலர் நம்மிடையே உளர். வம்புச் சண்டைக்கும் போக இவர்கள் அஞ்சுவது இல்லை. தாம் என்ன சொன்னாலும் அதனைப் பிறர் நம்பும்படி செய்து விடலாம் என இவர் எண்ணுகிறார்கள்.அவர் சாதிப்பது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. தமது நேரத்தையும் அடுத்தவர் நேரத்தையும் வீணாக்குகிறார் என்பதைத் தவிர வேறொன்றும் இவர் செய்வதில்லை. நாளடைவில் இவரது வாதம் வெற்று வாதம், ஏட்டுச் சுரைக்காய் எனத் தெரிந்த பின்பு யாரும் இவர்களை அணுகுவதும் இல்லை. ஒரு அவையில் இவர்கள் சிறிது சிறிதாகத் தனிமைப் படுத்தப் படுவர். கற்றவர் முன்னால் இவர் தோற்று ப்போகிறார். எனினும் தாம் தோற்றுவிடுவோம் என்பதனையும் இவர் அறியார். ஆகவே பயனற்ற பலவற்றினைப் பேசிப் பேசியே வாழ்வினைக் கழிப்பார் இவர்.

பதிணெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் ஒரு பாடல் வருகிறது.
பார்ப்போமா ?

சொற்றாற்றுக் கொண்டு சுனைத் தெழுதல் காமுறுவர்
கற்றாற்றல் வன்மையுந்தாந்தேறார் = கற்ற
செலவுரைக்கும் ஆறறியார், தோற்பதறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.

நமது சொற்கள் நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் நடுவே நின்று
செயல்படும் ஓர் பாலம்.

ஆகவே நமது வாயிலிருந்து வெளிவரும் சொற்களை நமது எண்ணங்களின்
தூதன் எனவும் கொளலாம்.

சொற்களுக்குப் பின் வருவது செயல். (சொற்கள் இல்லாதபடியே எண்ணங்கள்
செயல்களாய் உருவெடுக்கவும் கூடும்)

அறிவுக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தூதனே சொல் வன்மை.

சொல் வன்மை படைத்தவன் பண்பு என்ன ? வள்ளுவர் சொல்லாததும் உண்டோ?

தூய்மை, துணைமை, துணிவுடைமை, இம்மூன்றின்
வாய்மை, வழி உரைப்பான் பண்பு.

ஆக, சொல்லை உதிர்க்குமுன், எண்ணிச் செயல்படுவோம்.

வணக்கம்.

Monday, March 24, 2008

ஆத்திசூடிஅறங்செய விரும்பு

ஆத்திசூடி என்றாலே முதல் 10 வரிகள் மட்டுமே பலருக்குத் தெரிந்திருக்கிறது.
ஒளவை பிராட்டி தமிழ் மக்களுக்குத் தந்த தங்கப் பேழை இது.

நல் வாழ்வு வாழ்ந்திட நல்லுரை வழங்கிடும் இந்த 106 வரிகளும் எல்லாபபள்ளிகளிலும் பாடத்தொகுப்பினில் அமைதல் அவசியம்.

நேற்றும் ஒரு வலைப்பதிவில் பார்த்தேன். ஏதோ போட்டியாம். அதில் பங்கெடுத்துக்கொள்ள அறஞ்செய விரும்பு முதல் 10 வரிகளைத் தந்து விட்டு, அதற்கு மேல் எங்கு இருக்கிறது
எனக் கேட்டிருக்கிறார்கள். அத்தனையும் இரவு 12 மணிக்கு மேல் உட்கார்ந்து
தட்டச்சு செய்து அதை பின்னோட்டமாகத் தந்தேன்.
அதற்கும் போட்டி முடிந்துவிட்டதால், அதற்குரிய ஈடுபாடும் குறைந்துவிட்டது
போலும் !!

என்னுடைய இந்த வலைப்பதிவின் முதல் பதிவே 'அறஞ்செய விரும்பு " தான்.
மற்ற வரிகள் இதோ !!
12. ஒளவியம் பேசேல்.
13. அ:கம் சுருக்கேல்.
14. கண்டு ஒன்று சொல்லேல்.
15. ஙப்போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. (இ)டம்பட வீடு எடேல்.
19. (இ) ணக்கம் அறி ந்து இணங்கு.
20. த ந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர்செய்.
23. மன்றுபறித்து உண்ணேல்.
24. (இ)யல்பு அலாதன் செயேல்.
25. (அ) ரவம் ஆட்டேல்.
26. (இ)லவம்பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன் செயேல்.
29. இளமையில் கல்.
30. அறனை மறவேல்.
31. அன ந்தல் ஆடேல்.
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப்பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41.கொள்ளை விரும்பேல்.
42. கோது ஆட்டு ஒழி.
43. சக்கர நெறி நில்.
44. சான்றோர் இனத்து இரு.
45. சித்திரம் பேசேல்.
46. சீர்மை மறவேல்.
47. சுளிக்கச் சொல்லேல்.
48. சூது விரும்பேல்.
49. செய்வன திரு ந்தச்செய்.
50. சேரிடம் அறி ந்து சேர்.
51. சைஎனத் திரியேல்.
52. சொல்சோர்வு படேல்.
53. சோம்பித் திரியேல்.
54. தக்கோன் எனத்திரி.
55. தானமது விரும்பு.
56. திருமாலுக்கு அடிமைசெய்.
57. தீவீனை அகற்று.
58. துன்பத்திற்கு இடம்கொடேல்.
59. தூக்கி வினைசெய்.
60. தெய்வம் இகழேல்.
61. தேசத்தோடு ஒத்துவாழ்.
62. தையல்சொல் கேளேல்.
63. தொன்மை மறவேல். 64. தோற்பன தொடரேல். 65. நன்மை கடைப்பிடி.
66. நாடு ஒப்பன் செய். 67. நிலையிற் பிரியேல். 68. நீர்விளை யாடேல்.
69. நுண்மை நுகரேல். 70. நூல்பல கல். 71. நெற்பயிர் விளை. 72. நேர்பட ஒழுகு.
73. தைவினை நணுகேல். 74. நொய்ய உரையேல். 75. நோய்க்கு இடம்கொடேல்.
76.பழிப்பன் பகரேல். 77.பாம்பொடு பழகேல். 78. பிழைபடச் சொல்லேல். 79. பீடுபற நில். 80. புகழ் ந்தாரைப் போற்றிவாழ். 81. பூமி திருத்தி உண். 82. பெரியாரைத் துணை கொள். 83. பேதைமை அகற்று. 84. பையலோடு இணங்கேல். 85. பொருள்தனைப் போற்றி வாழ். 87. மனம் தடுமாறேல். 88. மாற்றானுக்கு இடம்கொடேல். 89. மிகைபடச் சொல்லேல். 90. மீதூண் விரும்பேல். 91. முனைமுகத்து நில்லேல்.92. மூர்க்கரோடு இணங்கேல். 93. மெல்லினல்லாள் தோள்சேர். 94. மேன்மக்கள் சொற்கேள். 95. மைவிழியார் மனையகல். 96. மொழிவது அற வழி. 97. மோகத்தை முனி. 98. வல்லமை பேசேல். 99. வாது முன்கூறேல். 100. வித்தை விரும்பு. 101. வீடு பெற நில். 102. உத்தமனாய் இரு.
103. ஊருடன் கூடிவாழ். 104. வெட்டு எனப் பேசேல். 105.வேண்டி வினைசெயேல்.
106. வைகறைத் துயிலெழு. 107. ஒன்னாரைத் தேறேல். 108. ஓரம் சொல்லேல்.

Monday, March 10, 2008

காசிக்குப் போய் எதை விடவேண்டும்?

இன்று ஒரு தமிழ்ப் பதிவினில் ஒரு கதை படித்தேன்

.http://koodal1.blogspot.com/

"உண்மையைப் பேசுவதை விட மிகச் சிறந்தது ஒன்றும் இல்லை. மக்களுக்குச் சேவை செய்வதை விட சிறந்த வழிபாடு ஒன்றும் இல்லை"

காசி விசுவனாத ஆலயத்தின் முன் பலர் ஒரு ஏழைக் கிழவனும் கிழவியும் தாகத்திற்குத் தண்ணீர்
கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். அவர்களது குரலை ஈசனைத் தேடி வந்தோர் யாவரும்
கேட்ட பாடில்லை. அப்போது அங்கே ஒரு திருடன் வருகிறான். அவன் அந்த முதியோருக்கு
தண்ணீர் தருகிறான். நீ யாரப்பா எனக் கேட்க, பொய் சொல்ல விரும்பாத திருடன், ஐயா, நான்
நல்லவனில்லை. திருடித்தான் நான் பொருள் ஈட்டுகிறேன் என்கிறான். முதியவர் அதற்கு பதில்
சொல்கிறார்: நீ திருடனாக இருந்தாலும் உண்மை பேசினாயே அது நீ செய்யும் குற்றங்களுக்கெல்லாம்
ஒரு பிராயச்சித்தம் என்கிறார்.

பிச்சை கேட்ட முதியவர் அந்த ஈசனே.

இந்த பதிவினைப் படித்த நான் பின்னோட்டமாக எழுதியிருந்தேன்: காசிக்குப் போகும் யாவரும்
ஏதோ ஒன்றை விடுவார்கள். இந்த திருடன் பொய் பேசுவதை விட்டுவிட்டான். காசிக்கு ப்போகும்
மற்ற எல்லோரும் எதை விடப் போகிறார்கள் எனக் கேட்டிருந்தேன்.

காசிக்குப் போகிறவர்கள் ஒன்றை விடவேண்டும்.
அந்த ஒன்று ஆசை தான்.
அந்த ஆசைதான் நம்மை ஆலாய்ப் பறக்கவைக்கிறது.
அந்த ஆசைதான் அற வழிகளிலிருந்து நம்மை அப்புறப்படுத்துகிறது.
அந்த ஆசைதனை விட்டால் தான் வீட்டை (முக்திதனை..மோட்சத்தினை) அடையலாம்
என அறனெறிச்சாரம் கூறுவதை இன்று கவனிப்போம்.

அருளால் அறம் வளரும்; ஆள்வினையால் ஆக்கம்;
பொருளால் பொருள்வளரும் நாளும்; = தெருளா
விழைவு இன்பத்தால் வளரும் காமம்; அக்காமம்
விழைவுஇன்மையால் வளரும் வீடு.

அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை எனும் வள்ளுவனின்
வாக்கை நாம் மறக்கலாகுமோ ? அந்த அருள் வேண்டின்
பொருள் மேல் உள்ள ஆசைதனை விட்டிட வேண்டும். குறைந்த பட்சம்
நமக்குத் தேவையில்லாதவற்றின் பால் உண்டாகும் ஆசைதனை விட்டொழியவேண்டும்.

Saturday, February 09, 2008

ஈதல் என்றால் என்ன ?ஈதல் என்றால் என்ன ?
பலர் பல்வேறு விதமாக விளக்கம் அளித்துள்ளனர்.
வள்ளுவர்
"ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு " எனச் சொல்லி
ஒருவன் வாழும் காலத்தே புகழ் பட வாழ நினைப்பின்
ஈதல் ஒன்றே அவன் செய்யவேண்டிய கருமம் என்றார். எதைச் செய்யினும் நமக்குச்
செய்வதனால் என்ன கிடைக்கும் என்று நினைக்கின்ற கால கட்டத்தில் பலர் நம்மிடையே இருப்பது
வெள்ளிடை மலை. தான் சம்பாதிப்பது, தனக்கும் தன் குடும்பத்தாருக்குமே போதாத நிலையில் என்ன தான தருமம்
செய்வது என நினைப்பவரும் உள்ளர். அது ஒரு வகை. தான் செலவழித்தது போக, மிச்சத்தை மற்றவருக்கு தருவது தருமம் செய்வது அடுத்த வகை. தனக்கு எந்த விதத்திலும் உபயோகமில்லாது போன வற்றை மற்றவருக்குத் தந்து
தானம் செய்தேன் தருமம் செய்தேன் என்று சொல்பவர் இன்னொரு வகை. இவை எல்லாவற்றினையுமே நியாயப்படுத்திப் பேச இயலும்.

ஆனால், ஈதல் என்னும் பொருளினை மற்றோர் கண்ணோட்டத்துடன் பார்த்திருக்கிறார் அறனெறிச்சாரம் இயற்றிய முனைப்பாடியார் . இவர் சமண சமயத்தினைச் சார்ந்திருந்த போதிலும் சமய வெறுப்பு இல்லாதவர். இப்புலவர்
"ஈதலை" தலை, இடை, கடை என மூன்றாக வகுத்துள்ளார்.

கொடுப்பவன் பணிந்து கொடுக்கவேண்டும். தனக்கு கொடுப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்ற நினைப்புடன்
ஈயவேண்டும். அப்படி ஈயும்போது, அதை வாங்கிக் கொள்பவர் அதற்கான தகுதி உடைத்தாரா என்றறிந்து தருமம் செய்யவேண்டும். அவ்வாறு, கொடுப்போரும் பெறுவோரும் பணிவுடனே இருக்கையிலே அதனை தலையான தருமம் எனச் சொல்கிறார்.

பணிவு இல்லாதவர் ஆணவத்துடன், தான் கொடுக்கிறோம் என்ற நினைப்புடனே, தனக்கு அடங்கியவருக்கு தருவது இடை நிலை தருமம் ஆகும். ஆங்கிலத்தில் இதை the beggar has no choices
என்றும் சொல்வார்கள். பெறுபவன் கொடுப்பவனுக்குத் தகுதி இருக்கிறதா எனக்கவனித்துப் பின் பெறுவது
அசாத்தியம். ஏதோ கிடைக்கிறதே என்று ஆண்டவனுக்கும் கொடுத்தவனுக்கும் நன்றி சொல்லி விட்டு செல்லுதல் இயற்கை. இந்த வகைதனை இடை நிலை தருமம் எனச் சொல்கிறார் புலவர் பெருமான்.

மூன்றாவது நிலை. பணிவற்றவன், ஆணவ, அகங்காரத்துடன், தான் தான் கொடுக்கிறேன் என்ற இறுமாப்புடன்,
ஊர் எல்லாம் பறை சாற்றிக் கொடுப்பதும், அவற்றைப் பெறுபவர், இவன் என்ன கொடுத்துவிட்டான் என இகழ்ச்சியுடன் எண்ணத்தோடு செயல்படுவதும், மூன்றாவது கடை நிலை தருமமாகும். இந்தக் காட்சி எப்படி
இருக்கின்றது என்றால், தோலால் செய்த இரு பொம்மைகள் நாடக அரங்கிலே போர் புரிவது போலாகும்.

இப்பொழுது பாட்டினைக் கேட்போமா?

அடங்கி அங்கினார்க்கு ஈதல் தலையே அடங்காது
அடங்கினார்க்கு ஈதல் இடையே = நுடங்கு இடையாய்!
ஏற்பானும் தானும் அடங்காக்கால் அ:து என்ப‌
தோற்பாவைக் கூத்தினுள் போர்.

ஆக, பண்பு என்ன? தருமம் செய்யும்போது வினயம் வேண்டும்.

தருமம் செய்தவர், இந்த தருமத்திற்கு எனக்கு என்ன பிரதி பலன் கிடைக்கும் என எதிர்பார்ப்பதும் ஒரு இடை நிலை தான். ஈக. ஈன்றவுடன் அதை மறப்பது மிகவும் நல்லது. இவனுக்கு இன்ன செய்தோம், பார் ! நம்மை ஒரு தடவை கூட நன்றி உணர்வோடு பார்க்கிறானா பார் ! என்று நினைத்திடல் கூட பண்பு அல்ல என்றே தோன்றுகிறது.

ஓளவையார் கூறுவார்:

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந நன்றி
என்று தருங்கொல் என வேண்டா.. நின்று
தளரா வள்ர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்.

நல்ல குணமுடைய ஒருவனுக்கு செய்யப்பட்ட உபகாரம் உறுதியாக நிலைத்து நிற்கும். ஐயம் வேண்டாம்.
நாம் வைத்த தென்னங்கன்று மரமாகி இனிக்கும் இள நீர் தரும் என்பது திண்ணம். ஆனால் அது தனக்கு
கிடைத்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலை தவிர்ப்பது நல்லது.

இத்தகைய மாண்பு படைத்த மனிதர் தனக்கென வாழா பிறர்க்கென வாழ்கின்றபடியால், அவர் இசை பட‌
வாழ்கிறார், புகழ் அவரைத் தாமாகவே வந்தடைகிறது.

Sunday, January 06, 2008

மூன்று சிங்கங்கள் !!!நான்கு நரிக்குட்டிகள் !!!!ஐந்து ஆனைக்குட்டிகள் ! ! ! ! !

நமது சீவனை என்னென்ன பிடித்துக்கொண்டிருக்கின்றன ? அறிவோமா ?

மூன்று சிங்கங்கள் !!!
நான்கு நரிக்குட்டிகள் !!!!
ஐந்து ஆனைக்குட்டிகள் ! ! ! ! !

திகைத்து நீங்கள் நிற்பது நன்றாகவே தெரிகிறது. நீங்களா திகைக்கின்றீர்கள். உங்கள் சிந்தை அல்லவா
திகைத்து நிற்கிறது.
திருமந்திரத்தின் 2214 வது பாடல் என்ன சொல்கிறது பார்ப்போமா ?

" திகைக்கின்ற சிந்தையும் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே."

சிந்தை தனை சிதற விடாமல் காப்பது சாதாரணமா என்ன ?
"சென்றவிடத்தாற் செலவிடாது தீதொறி
நன்றின்பால் உய்ப்பது அறிவு " எனவோ கூறினார் வள்ளுவர்.

அந்த அறிவை ப்பயன்படுத்தி இது நன்மை, இது தீமை எனப் பிரித்து அறிய இயலாதோர் மனந்தனில்
மூன்று சிங்கங்கள் (அதுவும் பசி வேகத்தில் ) குடி இருக்குமாம். அவை என்ன ? காமம், வெகுளி, மயக்கம்
என்ற கொடிய விலங்குகள் தான் அவை.
அவற்றைக் கூண்டில் அடைக்கவேண்டாமா? ஆனால் அதற்கு தடையாக நான்கு நரிக்குட்டிகள் இங்குமங்கும்
நம்மை ( நம் சிந்தையை ) சிதறடித்து விடுகின்றன். அவை நமது அந்தக்கரணங்களே. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் நான்கு நரிகள் வஞ்சகமாய் ( நமக்கு மகிழ்ச்சி தருவது போன்ற ஒரு பிரமையை உண்டுபடுத்தி) விடயங்களை நம்மைப் பற்ற வைக்கின்றன். அது சரி, இந்த ஐந்து ஆனைக்கன்றுகள் யாவை? நமது ஐந்து புலன்கள்தாம். இந்த நரிகள், ஆனைக்கன்றுகள் மூலமாக சதி செய்து ( conspiracy ) நம்மை சிங்கங்களுக்கு
இரையாக்கிவிடுகின்றன்.

இதிலிருந்து தப்ப ஒரே வழி என்ன?
சித்தத்தை சிவன் பாலே வைய்யுங்கள்.
அவன் நம் இதயத்திலே சோதி வடிவில் இருக்கிறான் என உறுதியுடன் நம்பி அதே எண்ணத்தில் நிலை பெறுங்கள்.
மனம் அமைதி பெறும். நல்லது எது தீயது எது என்ற தெளிவு ஏற்படுவது திண்ணம்.
இந்தத் தெளிவு ஏற்பட்ட பின், ஐம்புலன்களை நமக்கு அடிமையாக்குங்கள். யானையை அடக்க அங்குசம் தேவை. ஏகாக்ர சித்தம் ( concentrated thought on single point ) இந்த அங்குசமாகப் பயன்படும்.
புலன்களை அடக்கி விடின், நரிகள் இடைஞ்சல் செய்வது நன்றாகவே புலப்படும்.
அந்த நரிகளை விரட்ட, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவைகள் தூய்மைப்படுதல் அவசியம்.
மனம் என்பது சீவன் மேல் போர்த்தப்பட்ட ஆவரணம். இதில் " நான் " எனும் உணர்வு ஒரு வைரஸ் போல
ஒட்டியிருக்கும். அந்த கிருமி தனை ஒழிக்க ஒரு நாசினி தேவை. நாசினி ஓங்கிய அறிவு ( higher intellect )
தான். ஓங்கிய அறிவின் விளைவு புத்தி தன் வசம் ஏற்படும். புத்தி வசமான பிறகு மூன்று சிங்கங்களை அடக்குவது அல்லது கூண்டில் அடைப்பது கடினமா என்ன ?

காமம் என்பது வெறும் ஆசை அல்ல. நமக்குச் சேரவொண்ணாதவைகளின் பால் நமக்கு ஏற்படும் ஒரு வெறி.
பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை மூன்றுமெ இதில் அடங்கும்.
நாம் எவை வேண்டும் என நினைக்கிறோமோ, அவற்றினை வைத்திருப்போர் மேல் நமக்கு ஏற்படும் பொறாமை, நமக்கு கிடைக்கவில்லையே என்ற நிலையில் ( frustration ) எழுகின்ற கோபம். கோபத்தினால் உண்டாகும்
மயக்க நிலை . அமைதி குலைந்த நிலை. ஆவேசம் கொண்ட நிலை. எதைச்செய்தாவது பெறவேண்டும் என்ற நிலை. இது மனம் அழுகிப்போன நிலை.

அழுகிய மனது ஒரு புற்று நோயாம். புற்று நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டாமா?புற்று நோய் வந்தவுடன் கவலைப்படுவதில் என்ன லாபம்?

புற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கு ஒரு வழிதான் தெரிகிறது.
அதையும் வள்ளுவரே சொல்வார்.

" பற்றுக பற்றற்றான் பற்றினை ‍= அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு " ...350

இன்னமுமா சொல்லவேண்டும். இல்லை. ஆனால் செய்யவேண்டும். என்ன செய்வது?
முதற்கண்.
சும்மா இரு.
சொல்லற.