காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Sunday, August 31, 2008
சொல்லுக, சொல்லில் பயன் உடைய
ஈண்டு இவ்வுலகத்தில் என்றுமே இல்லாத அளவிற்கு வாதப் பிரதிவாதங்கள்
அதிகமாகிவிட்டன என்று தோன்றுகிறது.
பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள் என்றெல்லாம் சின்னத்திரைகளில்
அவ்வப்போது போடப்பட்டு, மக்களைச் சிந்திக்கச்செய்கிறதோ என்னவோ
சிரிக்கச்செய்கின்றன.
ஒட்டிப் பேசும்போதும் வெட்டிப்பேசும்போதும் பொருளை விட்டு வெகுதூரம்
அகன்று சென்று தனது சொற் திறமைதனை மட்டுமே வெளிக்காட்டி அதன்மூலம்
தன்னை முன்னிறுத்த முயல்வோரும் பலர் உளர்.
ஆதலால், ஒரு பட்டி மன்றம் முடிவடையும் நிலையிலே, ஒரு பொருள் குறித்து
நாம் கொண்டிருந்த அறிவு அகன்றதா அல்லது ஆழ்ந்ததா என்றால் பல வேளைகளில் இல்லை என்றே குறிப்பிடவேண்டியிருக்கிறது. We left no wiser than before என்று ஆங்கிலத்தில் சொல்வர். கேட்பவருக்கு எந்த விதமான பலனும்
அளிக்காது முடியும் பேச்சுக்கள், பட்டி மன்றங்களினால் என்ன பயன் !
கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க், கேளாரும்
வேட்ப, மொழிவதாம் சொல் என்பார் வள்ளுவர்.
பிணிக்கும் என்ற சொல்லுக்குத் தன் வசமாக்கும் என பொருள் கொள்க.
ஒருவரது பேச்சு என்னைத் தன் வசமாக்குகிறது என நான் நினைத்தால்,
அதற்கு காரணம் பேச்சிலே காணப்பட்ட அழகா அல்லது பொருளா என
நான் நினைத்துப் பார்ப்பேன்.
எதுகை மோனை பல கூட்டி வார்த்தைகளிலே, சொற்தொடர்களிலே அணிகள் சேர்த்து
இது பேச்சா அல்லது கவிதை மழையா என திகைக்கச்செய்வார் பலர்.
அந்த மழையிலே நனைந்து வீடு திரும்பும்போது ஒரு கணம் நினைத்துப்
பார்க்கிறோம் : இத்தனை பேசினாரே பேச்சாளர், அதில் மையக்கருத்து
என்ன இருக்கிறது என்று ! ஒன்றுமே இல்லையே என பல சமயங்களில்
தோன்றுகிறது.
புற அழகு ஒரு பேச்சுக்குத் தேவைதான். இல்லையெனச் சொல்லிவிடுதல்
இயலாது. புற அழகை வைத்துத்தான் ஒரு கூட்டத்தினரை மயக்கி அமைதியாக வைத்துக் கொள்ள முடிகிறது. அந்த அழகிலே பல்வேறு ஏற்றத் தாழ ஒலிகளும்
உணர்வு நிலைகளும் தேவைதான். அதற்கேற்ப குரல் வளமும் அமைந்து
விட்டாலோ சொல்லவேண்டாம். கூட்டத்தினர் மகுடிக்கு முன் பாம்பு போல்
நிற்கும் விந்தை காணக்கரியது.
ஆனாலும், அறிஞர் அக்காலத்து தமது பேச்சுத் திறனை தமது கருத்துக்களை
செவ்வனே சொல்வதற்கும் அவை சிறிதும் பிறளாது கேட்போர் சிந்தைதனை
அடைவதற்குமே பயன்படுத்தினர்.
இது நடந்து ஒரு இருபது வருடம் இருக்கும் என நினைக்கிறேன்.
ஒரு கூட்டத்தில் இரண்டு மணி நேரம் பேசுங்கள் என்றார்கள். உடனே
ஒப்புக்கொண்டேன். பேசச்சொல்லி என்னை அழைத்தவர் அதிசயித்தார்:
"என்ன ! நான் தலைப்பு கூட இன்னமும் தரவில்லையே ! அதற்குள்
ஒத்துக்கொண்டுவிட்டீர்களே " என்றார்.
நான் சொன்னேன்: " நீங்கள் ஒரு ஐந்து நிமிடங்கள் தான் பேசலாம் என
வரையறுத்து இருந்தால் தான் பொருள் தேவை. இரண்டு மணி நேரம்
எனும்போது என்ன பொருள் என்பது அவ்வளவு தேவையில்லை.'என்ன அழகாகப்
பேசுகிறார்' எனும் பிரமிப்பில் 'என்ன பேசுகிறார்' என்பது மறைந்துவிடும்"
என்றேன்.
இல்லை என்றார்.
நான் சொல்லியது தவறு எனச் சொல்கிறாரோ என
நினைத்தேன். பின்பு தான் புரிந்தது. ' இல்லை ' எனும் தலைப்பில்
பேசச்சொன்னார்.
பேசினேன். ஒன்றல்ல, இரண்டல்ல, இரண்டரை மணி நேரம் பேசினேன்.
தலைப்பு : "இல்லை" தான்.
பேச்சின் முடிவில் கேட்பவர் புரிந்துகொண்ட தலைப்பு : ' "நான்" என்பது
இல்லை'
****
பேசிக்கொண்டிருக்கும்போதே
ஒரு தருணத்தில் ' இல்லை ' எனும் வார்த்தையை இரண்டாகப்பிரித்தால்,
' இல் ' என்றும் ' ஐ " என்றும் வருகிறது.
இல் என்பதற்கு இல்லை என்று தான் பொருள்.
ஐ ஆங்கிலத்தில் நான் என்று எடுத்துக்கொண்டால்,
"இல்லை என்பதற்கு ' நான் ' என்பது இல்லை என தொனிக்கிறது" என்றேன்.
கூட்டத்தினர் கை தட்டினார்கள்.
எனக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும்.
இது வார்த்தை ஜாலம். ஆங்கிலத்தில் சொன்னால் verbal jugglery.
அவ்வப்போது கூட்டத்தினர் சோர்வடைவதாகத் தோற்றமளிக்கையில்
தரும் டானிக் மாத்திரை.
ஆனால், டானிக் மாத்திரைகளே உணவாகிடுமா ?
அது போல, வார்த்தை ஜாலங்களே ஒரு சொற்பொழிவின்
மையமாகிவிடுதல் கூடாது.
*********************************
கேட்டவன் கேட்பதற்கு முன் கொண்ட மன நிலையும் கேட்டபின் கொண்ட
மன நிலையும் மாறி கேட்டவனின் நன்மைக்கு அமையும் பொழுதுதான்
பேச்சுக்கு ஒரு பொருள் இருக்கும்.
பொருள் இலாத பேச்சினால் கேட்பவருக்கும் நன்மை இல்லை. அதைச்
சொல்பவருக்கும் நன்மை இல்லை.
வள்ளுவப்பெருந்தகை கூறுவார்;
சொல்லுக, சொல்லில் பயன் உடைய, சொல்லற்க,
சொல்லில் பயன் இலாச் சொல்.
இன்றைய தமிழ் வலை உலகிற்கும் இது பொருந்துமா ?
படிப்போர் தான் முடிவெடுக்கவேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
சரிதான் ஸ்வாமி.முற்றிலும் உண்மை. மேலும் படித்து/ கேட்டவற்றை வெறும் தியரியாக வைத்துக்கொள்கிறார்களே -நடைமுறைக்கு வராமல் - அதை என்ன சொல்லுவது?
ReplyDeleteபதிவுலகுக்கு மட்டுமல்ல, ஏழேழு உலகற்கும் பொருந்தும் - உலகப்பொதுமற அல்லவா!
ReplyDelete// இரண்டு மணி நேரம்
ReplyDeleteஎனும்போது என்ன பொருள் என்பது அவ்வளவு தேவையில்லை....//
:))
//சொல்லுக, சொல்லில் பயன் உடைய,//
பயனுள்ள வகையில்தான் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி
மேடைப்பேச்சுக்களில் குறிப்பாக பட்டிமன்றங்களில் பேச்சு என்பது எப்படி அமையவேண்டும் என்பதனை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். வாழ்த்துகள். இல்லை சொல்விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்தது.
ReplyDeleteமேடைப்பேச்சுக்களில் குறிப்பாக பட்டிமன்றங்களில் பேச்சு என்பது எப்படி அமையவேண்டும் என்பதனை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். வாழ்த்துகள். "இல்லை" சொல்விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்தது.
ReplyDeleteமேடைப்பேச்சுக்களில் குறிப்பாக பட்டிமன்றங்களில் பேச்சு என்பது எப்படி அமையவேண்டும் என்பதனை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். வாழ்த்துகள். "இல்லை" சொல்விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்தது.
ReplyDelete