Pages

Tuesday, July 13, 2010

தருமம் ஒன்றே துணை நிற்கும்.

தருமம் ஒன்றே துணை நிற்கும்.
 உன்னையும் என்னையும் ஏன், யாவரையுமே காக்கும்.
எப்போது?
தருமத்தை நீ காக்கவேண்டும். அப்போது தருமம் உன்னை காக்கும்.

தர்மம் என்பது தான தர்மத்தைப் பற்றி மட்டும் அல்ல. அது  நாணயத்தின் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நம் ஒவ்வொருவருக்கும் சமூகத்தினால் கொடுக்கப்பட்டு இருக்கும் விதிகள், நெறிகள், பண்புகள்.
இவைகள் எல்லாவற்றையும் ஒரு நாட்டின்  சட்டம் சொல்கிறதா என்றால் ஓரளவு மட்டுமே சொல்கிறது என்றுதான் கொள்ளவேண்டும்.  சட்டத்திற்கு ஒரு எல்லை உண்டு.
ஒரு நாட்டின் எல்லைகள் போலவே .  ஆனால், சட்டத்திற்கு மேல் நியாயம் இருக்கிறது.
நியாயத்திற்கு மேல் தர்மம் இருக்கிறது.
ஆகவே, சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறேன்,  நடக்கிறேன், காரியங்கள் செய்கிறேன் என்று ஒருவன் சொன்னால் போதுமா ?
போதாது என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு காரியத்திலும் தான் செய்வது நியாயமா ? தர்மமா ? என்ற கேள்விகளை தமக்குத்தாமே கேட்டுக்கொள்தல் அவசியமாகிறது.  
சட்டத்திற்குட்பட்டு, ஆனால் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் புறம்பான செயல்களை, நிதி மன்றங்கள் ஒன்றும் செய்ய இயலாது.  இந்த நாடு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் இதுவே தான் நடப்பு நிகழ்வு.
தாம் செய்வது நியாயமா தர்மமா என்று யார் கேட்பது?
அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பது முது மொழி,
தர்மத்தையும், நியாயத்தையும் சமூக நலனுக்காக தொழில் செய்பவர்கள்  சரிவர கடைப்பிடிக்கிறார்களா ?
அவரவர் மனசாட்சி தான் சாட்சி. 



தருமம் தலை காக்கும் எனும் பாடல் நம் மனத்திரையில் ஒலிக்காது என்றும் இருந்ததில்லை.

"நாச்செற்று விக்குள் மேல் வாராமுன், நல்வினை
மேற்சென்று செய்யப்படும் "

என்பார் வள்ளுவர்.  அவர் மேலும் சொல்லுவார்:

"அன்று அறிவாம் என்னாது அறம் செய்க : மற்றது
போன்றும் கால் பொன்றாத் துணை. ""

இவ்விரண்டையும் மறுமுறை உணர்த்தியது போல இருந்தது இன்று காலை நான் படித்த இரு பதிவுகள். இவற்றை எழுதிய ஆசிரியர் திருமதி ஹேமா அவர்களுக்கு எனது நன்றிக்கடனை எடுத்து சொல்லிடவே இந்த பின்னூட்டத்தை அவர்கள் பதிவில் இட்டேன் மற்றும் பாடினேன். குரங்கின் கையிலே குச்சியை கொடுத்து ஆடு என சொல்லிவிடின், அது என்ன ஆட்டம் ஆடும் ? என்ன சொல்லி பாடும்?  எதிரே உட்கார்ந்திருப்பவனோ அரசன்.

இன்று காலை தமிழ் வலையுலகப் பதிவு ஒன்றில் ஒரு அழகான கவிதை படித்தேன். பத்து வரிகளில் படித்த அந்த கவிதை என்னை பத்து நிமிடங்களுக்குக் கண் கலங்க வைத்துவிட்டது. அறியா வயசு என்னும் கவிதை அது.  அதை இங்கே படியுங்கள். அந்த உணர்வுகளில் முழுகி இருக்கும்பொழுதே அவருடைய இன்னொரு பதிவையும் பார்க்க நேர்ந்தது. அவர் ஒரு தமிழ் கவிஞர்  .  ஒரு படத்தை இட்டு நண்பர்களை எல்லாம் கவிதை எழுதலாம் வாருங்கள் என்று எழுதியிருந்தார். அது ஒரு குரங்கு குச்சியை வைத்துகொண்டு ஒரு அரசன் முன்னாலோ அல்லது தனது எசமான் முன்னிலையில் ஆடுவது பொல இருந்தது. அவரவர்கள் தத்தம் மன நிலைக்கு ஏற்றபடி அரசியல், சமூகம் ஆகிய நிலைகளின் இருந்து கவிதை எழுதி இருந்தனர்.  நானும் ஒன்று எழுதினேன்.

அது இங்கே:


     நானும் ஆடறேன். நீயும் ஆடறே !!
     ஆடுவதுனக்குத் தெரியாது.  நீ
 
    ஆடிய ஆட்டம் கூடிய கூட்டம்
    எங்கே என்னும் தெரியாது.   நீ

    ஆடும  ஆட்டம் முடியும் வரைக்கும்
    தேடிய பாவம் தெரியாது.
   
   பாடிய சந்தமும்  ஓடிய பந்தமும் 
   நாடியே    திரும்பவும்  வாராதோ !

    வாடிய உறவும்  வாசமும் கொண்டு
   தேடியே என்னை வாராதோ !

    அறியாயோ நீ ! ஆண்டவனருகில் !!
    நெறிகள் யாவும் மறந்தனையோ !!

    அமரும் அரியணை அசையும் ஒரு நாள்
    தமரும் தொலைந்தே போய்விடுவார்.

     அருமை எனவே வாங்கிய யாவும்
   அங்கங்கே தான் நின்று விடும்.
    எருமைவாகனன்  அழையும்போதுன்
    உருவும் உடனே மறைந்துவிடும்.

   கருமம் ஒன்றே துணை நிற்கும் அந்த‌
    தருமக் குரலினைக் கேட்டிடுவாய்.  
 
  


Saturday, July 03, 2010

மனித நேயமும் மெளனமும்

 மனித நேய உணர்வுகள் மேம்படவேண்டும் .  என்ன செய்யலாம் ? ஒரு பதிவு எழுதட்டுமா ? என்றேன் என் மனைவியிடம்.

    "என்னங்க...  இப்படி ஒரு பதிவு எழுதினீக அப்படின்னா படிக்க யாரு வருவாக ?   அறு சுவைகள் பத்தி     எழுதுங்க..  "    நம்ம செய்யத்தான் முடியல்ல... எழுதியாவது ரசிக்கலாம் இல்லையா ..  என்று அங்கலாய்த்தாள் அவள்.

    "எழுதலாம்.  ஆனால் அதைப்பத்தி விலாவாரியா ஏகப்பட்ட பதிவுகள் இருக்கே.  அது மட்டுமா !  ஒவ்வொரு சுவையும்    அப்படின்னு சொன்னா, உவர்ப்பு, உரைப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு இவையெல்லாம் நம்ம உடம்பிலே என்னென்ன‌      செய்யுதுன்னு கூட அழகா, தெளிவா சொல்லியிருக்காங்களே !!" 

    " அப்ப நவ ரசங்கள் பத்தி எழுதுங்க...  பரதக்கலையிலே முக பாவங்கள் எந்தெந்த உணர்வுகளை சொல்லுது அப்படின்னு   விலா வாரியா எழுதுங்க..."

      "எழுதலாம். சரிதான்.  இருந்தாலும் போன வாரம் தான் கவிஞர் கவி நயா அவங்க விலா வாரியா எழுதிக்கொண்டு       இருக்கிறார்களே !   " 

      " அப்ப எதுனாச்சும் எழுதுங்க...  உங்களுக்கும் பொழுது போவணும்லே "    சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திருக்காமலே, காது கேளா தூரத்திற்கு சென்று விட்டாள் அவள்.
   சரி, நம்ப நம்ம வேலையை கவனிப்போம் என்று துவங்கினேன். 
    மனிதனின் மனம் அன்றலர்ந்த தாமரையை ஒத்து இருக்கவேண்டும்.  இருக்கிறதா ?
ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகளைச் சித்தரிக்கும் படம் இங்கே.
எல்லா உணர்வுகளுக்கும் அங்கே இடம் உண்டு.  சிருங்காரம் முதல் ஆங்காரம் வரை.
காதல் முதல் கோபம் வரை. ஆனால் ஒன்றுக்கு மட்டும் இடம் இல்லை. அது என்ன ? 
 இன்றைக்கு உலகிலே மனித மனங்களிலே அமைதி இல்லை.  அறு சுவைகளிலே கார்ப்பும், உவர்ப்பும் மேலோங்கி    இருக்கின்றன.   பெரும்பாலான  மனித செயல்களிலே, வீரம் இல்லை. கருணை இல்லை, மற்றவர்களையும் தம்போல்  பார்க்கும் கண்ணோட்டம் இல்லை.  மாறாக, ரெளத்ரமும், பீபத்ஸமும் (அருவருப்பும்) , காய்தலும் தான் மேலோங்கி    நிற்கின்றன.

மேலே நிற்பவர்கள், மேலாக தம்மை நினைப்பவர்கள் பலர் கீழான செயல்களைச் செய்ய நாம் பார்த்து  நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே , இருட்டிலே நீதி மறையட்டுமே ... என்ற பாடல் அன்றும், இன்றும், என்றும் சத்தியம். 

   இந்நிலையில், மனித சமூகத்தில் உறவுகள் மேம்படவேண்டும் என்றால் ஒரு செயற்கரிய செயலாகத்தான் தோன்றுகிறது.   அண்மையில் யாஹூவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நானும் பதிலளித்தேன்.  மனித இனம்  எல்லாவற்றையும் உதறிவிட்டு ஒன்று பட வேண்டுமெனின், என்ன செய்யவேண்டும் ?  வள் வள் என வளர்த்தாமல்,    சுருக்கமாக, நாலு வரிகள்லே சொல்லுங்க என்று.   நானும் சொன்னேன்.  இருந்தாலும் இதெல்லாம் நடக்குமா ?

 நம்பிக்கை இல்லை.

வள்ளுவனும், வள்ளலாரும் சொல்லாத மனித நேயக் கருத்துக்களையா நாம் சொல்ல்ப்போகிறோம் !!

மேனேஜ்மென்ட் குரு எனச்சொல்லப்படும் கென்னத் ப்ளான்சேர்டு , ஜான் மேக்ஸ்வெல் (ஒரு சிறந்த தலைவன் ஆவது எப்படி ) துவங்கி    இந்திய மண்ணில் ஆன்மீக ஒளிபரப்பும் சுவாமி சிவானந்தா வரை சொல்லும் செய்திகளுக்கு அப்பால்   நாம் சொல்லப்போவது புதிது ஒன்றும் இல்லை

.(சென்னை நர்மதா பதிப்பக புத்தகம் ஒன்று அண்மையில் கிடைத்தது. அதுவே மலிவுப்பதிப்பு.  எனக்கு இலவசமாக கிடைத்தது. அப்புத்தகத்தில்  சுவாமி சிவானந்தா  அவர்கள் சொல்லிய கருத்துக்கள்  அடிப்படையில் எண்ணுவோம்.)

 எல்லாவற்றிக்கும் அடித்தளம் மனம்தான்.
மனமே முருகனின் மயில்வாகனம்.
 ஆமாம். அந்த மனம் அதை உற்று கவனிப்போம்.  அதை ஒரு ஊற்றாக நினைப்போமா !

  அல்லது  மனம் என்பதை ஒரு பூங்காவாக நினைக்க முடியுமா ?
  நினைத்தால், அங்கு என்னென்ன இருக்க வேண்டும் ?  அந்த மனதில் மணம் வீசவேண்டும் என்றால்  என்ன செய்யவேண்டும் ?

  என்னென்ன இருக்கக்கூடாதோ , அவற்றினை முதற்கண் களை எடுத்தல் வேண்டும்.    எருக்கஞ்செடியும், சப்பாத்திக் கள்ளுச்செடியும் பூங்காவில் இருந்தால் யார் வருவார்கள் ?  யார் ஒரு கணம் அங்கே உட்கார்ந்து உரையாடுவார்கள் ! 

    அடுத்து மண்ணை உழவேண்டும்.  நீர் பாய்ச்சவேண்டும். நல்ல உரம் இடவேண்டும். 

    மனதை உழுவது எளிதா என்ன?  பாராங்கற்கள் அல்லவா அங்கே பதிந்துகிடக்கின்றன.  அவற்றினை பேர்த்து எடுத்து எறிய வேண்டாமா ?  உளிகள் ,   கலப்பைகள், கோடாரிகள் போதாது என்றால் அவற்றினை மிஞ்சும் நவீன சாதனங்களை (diggers and bulldozers) பயன்படுத்தவேண்டும். 

  அடுத்து நல்ல நீர் பாயச்சவேண்டும்.  இங்கே குடி நீரில் கூட  சாக்கடை நீர் கலக்கிறது.   என்ன செய்வது ?

   நல்ல உரமா !  எங்கே கிடைக்கும் !!   எல்லாமே கலப்படம்தானே இங்கே !!  மஞ்சள் பொடியிலே கூட கலப்படம். மாம்பழத்தில் கெமிகல். அதுதான் போகட்டும். திருநூறு வாங்குவோம்ன்னு நினைச்சா போதிலே அதுலே மாக்கல் பொடி என நீங்கள் எண்ணுவதெல்லாம்   தெரிகிறது.  மனம் தளராதீர்கள்.

   முயற்சி செயவோம்.

முதல் பாராங்கல் கண்ணில் பட்டது.    மனதில் உள்ள அகந்தை.  தான் , தனது என்ற மமதை.  அதை தூள் தூளாக்க‌   வேண்டும் என்ற உறுதி எடுப்போம். அடுத்து, பிறரைப் பற்றி நாம் முன்னதாகவே போட்டு இருக்கும் எடை.  அதன் அடிப்படையிலே அவர் என்ன சொல்லப்போகிறார் என்று கேளாமலே செயல் படுகின்ற நமது இயல்பு.  ( Ego and Biases about others. A sort of prejudice ..Conditioned mind )   இவை உடைந்தால் தான் அடுத்து நாம் போக முடியும்.

   பாராங்கல் உடைந்தது.  அதை எங்கே கொண்டு போய் போடுவது ?  பக்கத்து ப்ளாட்டில் போட்டால் பிரச்னை.  தெருவில்   போட்டால் வழியை அடைக்கும்.  

    மனதில் உள்ள அகந்தையை தூள் தூளாக்கி கண் காணா இடத்திற்கு எடுத்துச் சென்று தூக்கி எறியுங்கள்.  இது முதல்  வேலை. 

    அடுத்த படி என்ன ?

 மண்ணை வளப்படுத்தவேண்டும்.  நீர் பாய்ச்ச வேண்டும்.

    பிரச்னை என்று ஒன்று வரின், அந்த பிரச்னையின் மேலோட்ட அதிர்வுகளுக்கு தீர்வு காண்பது பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருமா என்ன ?  பிரச்னையின் அடித்தளத்திற்குச் செல்லவேண்டும். (analyse the cause rather than treating the symptoms)
 அடித்தளத்திற்குச் செல்லும்போது,  நமது எண்ணங்கள் இளகவேண்டும் a frame of mind to reconcile with others.
மற்றவர்கள் எண்ணங்களுக்குச் செவி   சாய்க்கவேண்டும்.(listen with not sympathy but empathy)  பக்கத்தில் இருப்போர்களையும் தீர்வுகள் காண்பதில் உள்வரச்செய்யவேண்டும். (Allow participation by all stake-holders) அவர்கள்    எண்ணங்களுக்கு மதிப்பு தருகிறோம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படவேண்டும்.  (openness and frankness in discussions ) எண்ணங்களில் வேறுபாடு    இருப்பின்,  யார் முன்வந்து ஒத்துப்போவது என்று வரும்போது நாம் நாமாகவே கீழ் இறங்கி வரவேண்டும். ( shed the ego..Extend your hand first.for reconciliation)

   முடியுமா !  முடியும். 

    அடுத்து, வள வளா என்று பேசிக்கொண்டே இராமல், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவேண்டும். சுற்றுக்கதைகளை   தேவையில்லா உதாரணங்களை, பழைய சரித்திரங்களை, ஒரு சல்லிக்காசு கூட பெறாத சுய புராணங்களைத் தவிர்க்க வேண்டும். (avoid procrastination, loose talks)

அடுத்து, எந்த ஒரு செயலையும் நாசூக்காக கையாளுங்கள்.  ஒரு ஐம்பது வருடங்கள் முன்பு என்னிடம் ஒரு    அறுவை சிகிச்சை நிபுணர் எனது நண்பர் டாக்டர் கருணாகரன் அவர்கள் சொன்னார்: ஒரு அறுவை வைத்தியருக்கு, முக்கியமாக, இதய அறுவை நிபுணருக்கு   என்ன தேவை ?   என்ன இலக்கு எனும் தெளிவு.  என்ன பாதை என்ற ஆராய்ந்த முடிவு.   தைரியத்தில்  சிங்கம் போன்ற ஒரு இதயமும் செயல்பாட்டுத் திறனில்  தாமரை இதழ்கள்  போன்ற நளினமான   விரல்களும் தேவை என்றார். ( a surgeon should be having a heart of a lion and fingers as smooth as the leaves of a lotus.)

   நமது   பேச்சிலும், செயலிலும் நாசூக்கு இருக்கவேண்டும்.  ஆங்கிலத்தில்  subtlety   எனச் சொல்லிடலாம்.   ( Be diplomatic and subtle in your communications.)

(நாசூக்காக என்பதற்கு இன்னமும் அழகான ஒரு தமிழ்ச்சொல் இருப்பின் யாரேனும் சொல்லவும்.)

 எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் பிடிக்காது.  அது எத்தனை  நல்ல விஷயமாக இருந்தாலும் சரி.     கொடிய விஷங்கள்  பிடிக்கிற அள்விற்கு நல்ல விஷயங்கள் பிடிக்காது.    சலித்து போகாதீர்கள்.  (Never get fatigued nor  lose heart ) 

 லோகோ பின்ன ருசிஹி என்பார்கள்.  ஒரு மரத்தில்   இருக்கும் இலைகள் பார்ப்பதற்குத்தான் ஒன்று போல் இருக்கின்றனவே தவிர ஒன்றன் மேல் வைத்துப் பார்த்தால், எந்த இலையும் எந்த ஒரு இலையுடன் சுத்தமாக ஒத்துப்போகவே போகாது.  (   Incongruity otherwise known as vividity  is the very essence of nature  )
   உங்களுக்குப் பிடிக்கும் ஒரு துறையைப் பற்றிய விஷயங்கள் அவை எத்தனை உங்களுக்கு நல்லவையாகவும்    நன்மை பயப்பனவாக இருந்தாலும் அவற்றினை மற்றோரிடத்தில் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா   இல்லையா எனவும் பாராது , அவர்கள் சகிப்புத்தன்மைக்கு ஒரு சோதனை போல, தொடர்ந்து பேசிக்கொண்டே    இருக்காதீர்கள்.    யோவ் !  அந்த ஆள் பக்கமே போகாதேய்யா !  நம்மை தினசரி ஒரு தினுசா அறுத்தே   சாகடிச்சுடறான என்ற பழிக்கு ஈடாகாதீர்கள்.  (Be aware that others are only as tolerant as U R )

  நம்மைப் போல் மற்றவரையும் மதிக்கவேண்டும். அவரவர்க்குரிய மரியாதையைக் காட்டவேண்டும்.  (Be courteous ) (Encourage self-esteem)
 
  செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்.  உங்களது காரோட்டியும், உங்களது தலை முடி, முகம் அலங்கரிப்பாளர்,  உங்கள் வீட்டு வேலைகளைச் செய்பவர் அவரவர் தத்தம் வேலைகளைத் திறம்படச் செய்தால் தான் நீங்கள் உங்கள்  தொழிலில் கவனமாக இருக்க இயலும்.  ஆகவே அவர்கள் செய்யும் தொழிலை மதியுங்கள்.  இது என்ன பெரிசு ?  என்றோ அல்லது இவங்க செய்யறத நான் நூறு பங்கு இன்னமும்  நன்றாகச் செய்வேன் என்று இறுமாப்புடன் அவர்கள் முன்னாடியே   அவர்கள் தொழிலை நிந்திக்காதீர்கள்.  மாறாக அவர்கள் பணிமுடித்து வீடு செல்கையில் ஒரு இதமான் புன்முறுவல்   காட்டுங்கள்.  ஒரு புன்னகை ஒரு நூறு ரூபாய் ஊதிய உயர்வுக்குச் சமம்.    இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை எனச்   சொல்லாதீர்கள்.  ஏன் ! நினையாதீர்கள்.  மனம் இருந்தால் மணித்துளிகள் தாமே வரும்.( Appreciate the value and dignity  of labour)

என்றைக்கும்   எல்லாமே நூற்றுக்கு நூறு சரியாகப் போகாது.   போகவில்லை. இனியும் போகவும் போகாது.  இது காலம் கண்ட உண்மை. ( Perfection is ideal but never practical.  Be pragmatic.)   முழுமைக்காக காத்திருந்தீர்கள் என்றால் எந்த பணிதனையும் முடிக்க இயலாது. மற்றவர்களை நம்பித்தான் நீங்கள் செயல் படவேண்டும். நம்பி பணிதனை ஒப்படையுங்கள் ஆயினும் அவ்வப்போது கவனியுங்கள். ( Trust but Verify )

  உங்களது நம்பிக்கைக்குகந்தவன் கூட உங்களை ஏமாற்றலாம், அல்லது, உங்கள் எதிர்பார்ப்புக்கும் குறைவாகச் செய்யலாம்.  அப்பொழுது உங்களுக்குத் தேவை சகிப்புத்தன்மை.    ( tolerance serves where tyranny fails  ) 

   மற்றவர்கள் குறிப்பாக உங்கள் நண்பர்கள், உங்கள் கீழே வேலை செய்பவர்கள்   (subordinates )     ஏதேனும்    துயர் உற்றால், அல்லது உடல் இன்னல் பட்டு விடுமுறை கழிந்து திரும்ப வேலையில் சேரும்பொழுது,     அவர்களது நலத்தை அவர்கள் இடத்திற்குச் சென்று விசாரியுங்கள்.      ( தயவு செய்து அவர்கள் வேலைக்கு    ராதபொழுது எந்த அளவிற்கு வேலை பளு உங்களுக்கு அதிகரித்துவிட்டது, அதை எப்படி சமாளித்தீர்கள்    என்று உடன் சொல்லவேண்டாம் (Never blow your own trumpet !)

  கடைசி, ஆம் கடைசியோ கடைசி !!
  கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பார் வள்ளுவர்.
  இன்றைக்கு ஒரு முடிவு எடுங்கள்.  இனி இனிய சொற்கள் மட்டும் பேசுவோம்.
  இனிய சொற்கள் . அப்படின்னா என்ன ? மற்றவர்களுக்கு இதமான சொற்கள்,இசைவான‌   சொற்கள் .

  வாய் இனிக்க இனிக்க , உங்கள் வாழ்வு இனிக்க,
  ஒவ்வொரு தரம் உங்கள் வாயை த்திற்க்கும்பொழுதெல்லாம்,
   இனிய சொற்கள் மட்டுமே பேசுவது என்ற முடிவு எடுங்கள்.

   அப்படி பேச முடியவில்லை என்றால்,
    வாயை மூடிக்கொண்டிருங்கள். Be quiet.
    பல நேரங்களில்,
     ஓராயிரம் வார்த்தைகள்   செய்ய இயலாததை மெளனம் சாதித்துவிடும்.

    சும்மா இரு அப்படின்னு ரமண மகரிஷி அன்னிக்கு சொன்னார்.    ரொம்ப பேருக்கு புரியல்லே.

    கம்முனு கிட . மனோரமா  சொன்னாங்க. நல்லாவே புரியுது.