Pages

Sunday, June 08, 2008

வேண்டுவது எல்லாமே ஒன்றுதான்.தமிழ் வலையுலகில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எல்லா நிலமும் உண்டு. அது மட்டுமல்ல‌

தொல்காப்பியர் வகுத்தது போல,

மாயோன் மேய காடுறை புலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன் னுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்

உண்டு. அத்துடன்,

"முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பழித்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்"

என்ற போதிலும் " முல்லையுங் குறிஞ்சியுங் மொழிசமப்பாவை " எனச் சொல்லப்பட்டதால்

பாலை நிலமும் உண்டெனக் கொள்வார் அறிவோர்.

அப்பாலையிலே பசுஞ்சோலைகள் அவ்வப்போது கண்டு அங்கோர் கணப்பொழுது
தங்கி அச்சோலைகளில் பெருகி வரும் சுனை நீரை உண்டு மகிழும் போது
ஏற்படும் மன நிறைவுக்கோர் சொல்லும் உண்டோ !

அத்தகைய சோலை ஒன்றில் அண்மையில்
ஒரு புலவர் உலகை அளந்த மாலோனை விட எங்கள் நாட்டிலே பிறந்து எங்கள் தாய்மொழியாம் தமிழ்
மொழிக்கு வளமூட்டிய வள்ளுவன் பெருமை உடைத்து என்றார்.
ஏன் என்றேன். அவர் சொல்வார்:

"சீரடி மூன்றால்பார் தீரவளந் திட்டான்மால்
ஈரடி போதும் இவர்க்கு! "

அதிசயித்தேன். வள்ளுவனுக்கு இப்படி ஒரு இசையா !

அகர முதல எழுத்தெல்லாம் என அமுது படைத்திட்டவன் சொன்ன செய்தி என்ன ?

அறம், பொருள், இன்பம் என மூன்றும் அடைந்திடினும்
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என
( ஆணவத்தை அடக்காதார் ஈயார் அவ்வுலகம் செல்லாரென)‌‌
விடாது, வீட்டின் பெருமைதனை
எள்ளளவும் குறையாது
ஏகனை ப் போற்றிப் பின்
ஐயமில்லை.
ஒருவனே அவன். அவனை
ஓயாது நினை என்றார்.

பார்க்கும் இடம் எல்லாம் நந்த லாலா என்று பாரதி பாடினானே ..
அவனை அடைய வேண்டி வேண்டுபவர் யாவரும்

"பற்றுக பற்றற்றான் பற்றினை ‍ அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு "

"ஆசை அறுமின். ஆசை அறுமின். ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்போர்" ஞானிகள்."வேண்டுவது எல்லாமே ஒன்றுதான்.
வேண்டாம் என வேண்ட வேண்டும்.

பற்றற்றான் பற்றினைப் பற்றும்போது தான்
பற்றுகிறவனும் பற்றியவனும் பற்றும் ஒன்றெனப் புலப்படும்.

இதே கருத்தினை இன்னுமொரு கோணத்தில் பிரதிபலிக்கும் ஒரு நூல்
ஒன்று அண்மையில் கிடைத்தது. அது திரு நெறியாம்.


( திரு நெறி எனும் நூல் ஒன்று தஞ்சை சரசுவதி மஹாலில் கிடைத்தது. சைவ சித்தாந்த
உண்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்கிடும் நூலிது. இந்த நூலை
இயற்றியவர் : கண்ணுடைய வள்ளல். இது சுவடி வடிவில் இருந்தது. வித்துவான்
இராம. கோவிந்தசாமி பிள்ளை வாயிலாக இது தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளது
அச்சு வடிவில். ))
11 வது பா.

அகணிதமாய் அழிவிலதாய் ஆணவத்தான் மறைப்புண்
உருவினைக்கா முருவெடுத்தங்க துவதுவாய்க்கன்ம‌
வெகுவிதமுன் நுகர்வழியா யிருவினைகள் புரிந்து
மீள்வது போ லதுவாகி மேவுமல பாகத்
தகுதியின்ற் றாரகமா மருளொளியான் முன்னைத்
தம்மகற்றித் தாணுவீனற் றாணிழல்சார்ன் தின்ப‌
மிகுதியெறு மாருபிரின் றொகுதிகளென் றென்றே
வேதமுமா சுமந்தானும் விளம்பு மன்றே.


கணிப்புக்கு அப்பாற்பட்டதாய், அழிவு என ஒன்று இலாது என்றும் இருப்பதும்
ஆணவம் எனப்படும் மூன்று மலங்களால் மறைந்து காணப்படும்
ஆன்மாவினை அனாதியாக ( ஆரம்பம் என்று ஒன்றிலாத )
இதுகாறும் பழைய பிறவிகளினூடே பற்றிய அருவினைகள் காரணமாக,
உடலாகிய உரு எடுத்து
எடுத்த உடலுக்கு ஏற்ப பல செயல்கள் செய்து
இரு வினைகளையும் அனுபவித்துப் பின்
தன்னிடத்தே திரும்பும் ஆன்மாவினை
பிரவணமாகிய தாரக மந்திரமென்னும் அருட்பிரகாசத்தால்
முன்னைப் பிறப்புகளிற் செய்த தவத்தினால்
பிறப்பறுக்க வேண்டி
வேண்டுதல் வேண்டாமை ஆகிய
விருப்பு வெறுப்புகள் அனைத்தும் களைந்து
உலக த்தின் காரணமான
பரமேச்வரன் அவன் திருவடி நிழலை
பற்றி
பேரின்பமாகிய மேம்பாட்டினைப் பெறும்
அரிய உயிர்களுடைய கூட்டம் எனவே
வேத ஆகமங்கள் எல்லாம்
கூறா நிற்கும்.8 comments:

 1. அய்யாநீர் என்கவியை ஆண்ட விதங்கண்டு
  மெய்யாய்ச் சிலிர்க்குதென் மெய்!

  மணக்கும் தமிழிலெனை மாண்புறச் செய்தீர்
  வணக்கங்கள் உம்சே வடிக்கு!

  ReplyDelete
 2. //பற்றற்றான் பற்றினைப் பற்றும்போது தான்
  பற்றுகிறவனும் பற்றியவனும் பற்றும் ஒன்றெனப் புலப்படும்.//
  நல்லது,
  நானே வழியும், அடைய வேண்டிய பொருளுமாய் இருக்கிறேன், என்றல்லவா சொன்னான்!

  ReplyDelete
 3. ஈரடியால் உலகப்பொதுமறையாகிய பெருந்தகை நூலை அனைவரும் பார்க்கும் வண்ணம், நேரடியாக இணைத்திருப்பது, அருமை!

  ReplyDelete
 4. (ஆணவத்தை அடக்காதார் ஈயார் அவ்வுலகம் செல்லாரென)‌‌

  ஈயாது தனக்கு தனக்கு என்று இருப்பவர்களைத் தான் மரங்களாகப்
  படைத்து விட்டானோ என்று தோன்றும்.

  உலகத்து அனைத்து உயிரினங்களுக்கும்
  உணவு தயாரித்து கொடுத்துக் கொண்டே இரு,
  என நகர முடியாது நிலத்துடன் கட்டிப் போட்டு விட்டானோ எனத் தோன்றும்.

  நகரும் படியாக இருந்திருந்தால், இலை காய்கனிகளை மனிதர்களோ மிருகங்களோ பறிக்கப் போகும் போது தரமாட்டேன் என்று ஓடி ஓடியே அனைத்து உயிரினங்களையும் களைக்க செய்தே கொன்று தீர்த்து விடும்.

  உணவு தயார் பண்ணும் சக்தியைக் கொடுத்து, நகரமுடியாது சக்தியைப் பறித்து அவன் விளையாட்டைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது! ஐயா:)

  ReplyDelete
 5. anonymous said:
  //ஈயாது தனக்கு தனக்கு என்று இருப்பவர்களைத் தான் மரங்களாகப்
  படைத்து விட்டானோ என்று தோன்றும்.//

  உலகத்து அனைத்து உயிரினங்களுக்கும்
  உணவு தயாரித்து கொடுத்துக் கொண்டே இரு,
  என நகர முடியாது நிலத்துடன் கட்டிப் போட்டு விட்டானோ எனத் தோன்றும். //


  இப்பிற‌ப்பில் ஈயாதோர் அடுத்த‌ ச‌ன்ம‌த்தில் ம‌ர‌மாய்ப் பிற‌த்த‌லும் கூடும் என‌ச்சொல்லி
  அற‌ம் செய்வ‌தின் க‌ட்டாய‌த்தை உண‌ர்த்தியிருக்கிறீர்க‌ள்.

  ஈயாதோரை இன்னொரு கோண‌த்தில் நீங்க‌ள் பார்த்திருப்ப‌து புரிகிற‌து.

  இந்த‌ ஜ‌ன்ம‌த்தில் ம‌ன‌ம் நெகிழாதோர் ( ந‌கராதோர் ) அடுத்த‌ ஜ‌ன்ம‌த்தில்
  உட‌ல் ந‌க‌ராதோர் ஆகிடுவ‌ர் என்ப‌தை சொல்லாம‌ல் சொல்லியிருக்கிறீர்க‌ள்.
  ம‌ர‌ம் த‌ன‌க்கென்று எதையும் எடுத்துக்கொள்வ‌தில்லை, த‌ன்னுடைய‌து
  எல்லாவ‌ற்றையும் பிற‌ர்க்குத் த‌ரும் கொடை வ‌ள்ள‌ல் என‌த்தான் ப‌டித்திருக்கிறோம்.
  அதே ச‌ம‌ய‌ம், ம‌ர‌த்திலிருந்து‌ வ‌லுவினிலே ப‌ழ‌ங்க‌ளை, பூக்களைப் ப‌றிக்கும்போது
  ம‌ர‌ம் ஒன்றும் செய்ய‌ இய‌லாது, வாளா இருக்கிற‌து. உண்மைதான்.

  நீங்க‌ளாக‌ கொடுங்க‌ள். இல்லையேல் உங்க‌ளிட‌த்திலிருக்கும் அனைத்தும்
  ப‌றித்துக் கொள்ள‌ப்ப‌டும் என்ப‌தும் பொருளோ ?

  வ‌ள்ளுவ‌ரே சொல்கிறாரே:

  என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பு இலதனை அறம்.

  எலும்பு இல்லாத புழுக்களை வெயில் வருத்துவது போல, அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.

  தங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 6. ஈயாது தனக்கு தனக்கு என்று மட்டும் வைத்திருந்தோரைத்தான் தான் மரங்களாகப்
  படைத்து விட்டானோ என்று தோன்றும்.
  தவறுக்கு மன்னிக்கவும்.


  மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் அடுத்தவரைத் துன்புறுத்துவோர் மரங்களாகவும்

  மனம், வாக்கினால் துன்புறுத்துவோர் மனம், வாக்கு இரண்டும் பறிக்கப்பட்டு பறவைகள், மிருகங்களாகவும்,

  மனதினால் துன்புறுத்துவோர் மனிதனாகவும் பிறப்பெடுப்பர் என எங்கோ படித்தேன் எங்கு என்பது நியாபகத்தில் இல்லை.

  //நீங்க‌ளாக‌ கொடுங்க‌ள். இல்லையேல் உங்க‌ளிட‌த்திலிருக்கும் அனைத்தும்
  ப‌றித்துக் கொள்ள‌ப்ப‌டும் என்ப‌தும் பொருளோ ?//

  எதையும் இவ்வுலகுக்கு எடுத்து வராத நாம் அளவுக்கு அதிகமாக எதுதானும் வைத்திருந்தால் அது அடுத்தவர் உடமையையும் அள்ளி வைத்துள்ளோம் என்றுதானே பொருள்.

  ஆதலால் பதுக்கி வைத்திருப்பவை பறித்துக்கொள்ளப் படும் என்றும் பொருள் கொள்வதில் தவறு இல்லை தானே?

  ReplyDelete
 7. Anonymous said...

  // எங்கோ படித்தேன் எங்கு என்பது நியாபகத்தில் இல்லை//

  நான் படித்ததில்லை.

  ReplyDelete
 8. அய்யா! அடுத்த இடுகைக்கு ஏன் கால தாமதம்! என் இலக்கிய இன்பம் வலைக்கு அடிக்கடி வந்து செல்லவும். வாரம் இரு இடுகைகள் கட்டாயம் பதிவுசெய்துவிடுவேன்!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி