Pages

Sunday, October 04, 2009

மனம் வேண்டும்

ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலா என்று சர வெடிகளும், பூ வானங்களும் சங்கு சக்கரங்களும், வானத்தில் பூ மழை பொழிந்து பின் வெடிக்கும் மத்தாப்புகளும் லட்சக்கணக்கிலே விற்கத்துவங்கி விட்டன.

ஆம். இந்த வருடம் தீபாவளி வந்து விட்டது. புத்தம் புதிய ஆடைகள், புதிய ஆபரணங்கள், புதிய வீட்டு சாதனங்கள், இனிப்பு வகைகள் ஏராளம் . எங்கு பார்த்தாலும் ஜன நெரிசல்.மக்கள் ஆயிரக்கணக்கில் ரூபாய்கள் செலவழித்து வெடிகள் வாங்குகிறார்கள். எங்கள் வீட்டு வளாகத்தில் 200 க்கும் அதிகமான ஃப்ளாட்டுகள். ஒவ்வொன்றிலும் 5000 முதல் 25000 வரை வெடிகள் தீபாவளிக்கென வாங்கி அந்த நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

மக்கள் மகிழ்ச்சியாக எந்த பண்டிகை தினத்தை கொண்டாடினாலும் அது எல்லோருக்கும் மகிழ்வையே தரும்.
ஐயமில்லை.

இருப்பினும், ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது.

ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய்கள், ஏன் ! சில வீடுகளில் 50000 ரூபாய்க்கும் மேலாக பட்டாசுகள் வாங்கி ஒரு சில மணி நேரத்தில் கரியாக்குகிறார்கள்.

கண் முன்னே இப்பட்டாசுகள் கரியாகும் நேரத்தில், பற்பல அனாதை சிறுவர்கள் காப்பகங்களில்,அனாதை முதியோர் இல்லங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் போதிய உணவு, இருக்கை, உடை இல்லாது இருக்கின்றனர்.
அவர்களது நலம் கருதி பணிபுரியும் என்.ஜி.ஓ. நிறுவனங்கள் பொது மக்களின் நன்கொடைகளை எதிர்பார்த்தே இயங்குகின்றன.

தீபாவளி நல் நாளில் இந்த ஏழைச் சிறுவர்களுக்காக, அனாதையான முதியோர் நலனுக்காக, நாம் பட்டாசுக்காக செலவழிக்கும் பணத்தில் ஒரு பத்து விழுக்காடு ஆவது தந்து உதவக்கூடாதா ?

ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்குபவர் ஒரு நூறு ரூபாய் இது போன்ற நிறுவனங்களுக்கு நன்கொடையாகத்தந்து உதவிடவேண்டும். பத்தாயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்குபவர் ஒரு ஆயிரம் இந்த ஏழை மக்கள் நல்வாழ்வுக்காக‌ ஈதால், குறைந்தா போய்விடுவர் ?

மனம் வேண்டும். அவ்வளவு தான்.

கொடுக்கவேண்டும் என்று ஒரு மன நிலை வந்து விட்டால், கொடுப்பதற்கு நம்மிடம் நிறையவே இருக்கிறது
எனத் தெரிய வரும்.

நீங்கள் கொடுக்கும் நன்கொடைக்கு வருமான விதிவிலக்கு 80 ஜி படி தர, ஒரு சான்றிதழும் இந்த நிறுவனங்கள்
தருகின்றன.

இந்த நிறுவனத்திற்குத்தான் தர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏராளமான என்.ஜி.ஓ. நிறுவனங்கள்
செயல்படுகின்றன. உதவும் கரங்கள், சேவாலயா ( திருனின்றவூர்) , ஹெல்பேஜ், போன்ற பல தொண்டு அமைப்புகள்
இருக்கின்றன. மன நோயால், காச நோயால், ஹெச். ஐ.வி. நோயால் வாடும் மக்களுக்காக பணி புரியும் தொண்டு நிறுவனங்கள் பல இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுங்கள்.

உதவி செய்யுங்கள். நீங்கள் நீட்டும் உதவிக்கரம் ஒரு ஏழைச் சிறுவனின் கண்களில் அந்த தீபாவளி தினத்தன்று
மகிழ்ச்சியைத் தரும் எனின், நீங்கள் செய்யும் புண்ணிய காரியத்தில் எல்லாவற்றிலும் சாலச்சிறந்தது அதுவே.

உதவி செய்யுங்கள். மன நிறைவு தருவது அது ஒன்றே. மகிழ்ச்சி தருவது அது ஒன்றே.

Friday, October 02, 2009

காந்தியைக் காணோமே !!


காந்தியைக் காணோமே !!
2 october
இன்று நமது தேச பிதா மஹாத்மா காந்தியின் பிறந்த நாள்.

பல்வேறு பத்திரிகைகளில், தொலை காட்சிகளில், காந்தியின் வாழ்க்கை குறிப்புகள்,
அவரது கொள்கைகள், பல்வேறு பொருட்களில் அவரது நிலைப்பாடுகள் எல்லாவற்றினையும்
பற்றி எழுதியிருக்கிறார்கள், ஒலி, ஒளி பரப்புகிறார்கள்.

காந்திஜியை நினைவு கூர்வதற்கு இந்த ஒரு நாள் அவசியம் தேவைப்படத்தான் செய்கிறது.

நம் நினைவிலே மட்டுமே அவரது கொள்கைகளும், சத்திய சோதனைகளும், அஹிம்சா தர்மமும்
இன்று இருக்கின்றன.

நமது நாடு இந்திய தேசத்திலே இன்று ஜனத்தொகை 110 கோடிக்கும் மேலே இருக்கும் .
இத்தனை ஜனப்பெருக்கத்தின் நடுவிலே எங்கேயாவது ஒரு காந்தி தென்படுவாரா என்று
யோசித்துப் பார்த்தேன். தேடிப்பார்த்தேன்.

காந்தி போன்ற ஒரு அற நெறியாளர், வாய்மை எனும் சொல்லுக்கு உதாரணமாக விளங்கியவர்,
மனித நேயத்தின் பரிணாமமாக விளங்கிய அந்த மஹாத்மா போல் இன்னொருவர் எங்கேயாகிலும்
எத்துறையாயிலும், எத்திசையாயிலும் இருப்பாரோ எனத் தேடிப்பார்த்தேன்.

இல்லையே !

உங்கள் கண்களுக்குப் பட்டிருந்தால் சொல்லுங்களேன்.