Pages

Sunday, January 06, 2008

மூன்று சிங்கங்கள் !!!நான்கு நரிக்குட்டிகள் !!!!ஐந்து ஆனைக்குட்டிகள் ! ! ! ! !

நமது சீவனை என்னென்ன பிடித்துக்கொண்டிருக்கின்றன ? அறிவோமா ?

மூன்று சிங்கங்கள் !!!
நான்கு நரிக்குட்டிகள் !!!!
ஐந்து ஆனைக்குட்டிகள் ! ! ! ! !

திகைத்து நீங்கள் நிற்பது நன்றாகவே தெரிகிறது. நீங்களா திகைக்கின்றீர்கள். உங்கள் சிந்தை அல்லவா
திகைத்து நிற்கிறது.
திருமந்திரத்தின் 2214 வது பாடல் என்ன சொல்கிறது பார்ப்போமா ?

" திகைக்கின்ற சிந்தையும் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே."

சிந்தை தனை சிதற விடாமல் காப்பது சாதாரணமா என்ன ?
"சென்றவிடத்தாற் செலவிடாது தீதொறி
நன்றின்பால் உய்ப்பது அறிவு " எனவோ கூறினார் வள்ளுவர்.

அந்த அறிவை ப்பயன்படுத்தி இது நன்மை, இது தீமை எனப் பிரித்து அறிய இயலாதோர் மனந்தனில்
மூன்று சிங்கங்கள் (அதுவும் பசி வேகத்தில் ) குடி இருக்குமாம். அவை என்ன ? காமம், வெகுளி, மயக்கம்
என்ற கொடிய விலங்குகள் தான் அவை.
அவற்றைக் கூண்டில் அடைக்கவேண்டாமா? ஆனால் அதற்கு தடையாக நான்கு நரிக்குட்டிகள் இங்குமங்கும்
நம்மை ( நம் சிந்தையை ) சிதறடித்து விடுகின்றன். அவை நமது அந்தக்கரணங்களே. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் நான்கு நரிகள் வஞ்சகமாய் ( நமக்கு மகிழ்ச்சி தருவது போன்ற ஒரு பிரமையை உண்டுபடுத்தி) விடயங்களை நம்மைப் பற்ற வைக்கின்றன். அது சரி, இந்த ஐந்து ஆனைக்கன்றுகள் யாவை? நமது ஐந்து புலன்கள்தாம். இந்த நரிகள், ஆனைக்கன்றுகள் மூலமாக சதி செய்து ( conspiracy ) நம்மை சிங்கங்களுக்கு
இரையாக்கிவிடுகின்றன்.

இதிலிருந்து தப்ப ஒரே வழி என்ன?
சித்தத்தை சிவன் பாலே வைய்யுங்கள்.
அவன் நம் இதயத்திலே சோதி வடிவில் இருக்கிறான் என உறுதியுடன் நம்பி அதே எண்ணத்தில் நிலை பெறுங்கள்.
மனம் அமைதி பெறும். நல்லது எது தீயது எது என்ற தெளிவு ஏற்படுவது திண்ணம்.
இந்தத் தெளிவு ஏற்பட்ட பின், ஐம்புலன்களை நமக்கு அடிமையாக்குங்கள். யானையை அடக்க அங்குசம் தேவை. ஏகாக்ர சித்தம் ( concentrated thought on single point ) இந்த அங்குசமாகப் பயன்படும்.
புலன்களை அடக்கி விடின், நரிகள் இடைஞ்சல் செய்வது நன்றாகவே புலப்படும்.
அந்த நரிகளை விரட்ட, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவைகள் தூய்மைப்படுதல் அவசியம்.
மனம் என்பது சீவன் மேல் போர்த்தப்பட்ட ஆவரணம். இதில் " நான் " எனும் உணர்வு ஒரு வைரஸ் போல
ஒட்டியிருக்கும். அந்த கிருமி தனை ஒழிக்க ஒரு நாசினி தேவை. நாசினி ஓங்கிய அறிவு ( higher intellect )
தான். ஓங்கிய அறிவின் விளைவு புத்தி தன் வசம் ஏற்படும். புத்தி வசமான பிறகு மூன்று சிங்கங்களை அடக்குவது அல்லது கூண்டில் அடைப்பது கடினமா என்ன ?

காமம் என்பது வெறும் ஆசை அல்ல. நமக்குச் சேரவொண்ணாதவைகளின் பால் நமக்கு ஏற்படும் ஒரு வெறி.
பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை மூன்றுமெ இதில் அடங்கும்.
நாம் எவை வேண்டும் என நினைக்கிறோமோ, அவற்றினை வைத்திருப்போர் மேல் நமக்கு ஏற்படும் பொறாமை, நமக்கு கிடைக்கவில்லையே என்ற நிலையில் ( frustration ) எழுகின்ற கோபம். கோபத்தினால் உண்டாகும்
மயக்க நிலை . அமைதி குலைந்த நிலை. ஆவேசம் கொண்ட நிலை. எதைச்செய்தாவது பெறவேண்டும் என்ற நிலை. இது மனம் அழுகிப்போன நிலை.

அழுகிய மனது ஒரு புற்று நோயாம். புற்று நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டாமா?புற்று நோய் வந்தவுடன் கவலைப்படுவதில் என்ன லாபம்?

புற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கு ஒரு வழிதான் தெரிகிறது.
அதையும் வள்ளுவரே சொல்வார்.

" பற்றுக பற்றற்றான் பற்றினை ‍= அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு " ...350

இன்னமுமா சொல்லவேண்டும். இல்லை. ஆனால் செய்யவேண்டும். என்ன செய்வது?
முதற்கண்.
சும்மா இரு.
சொல்லற.