Pages

Tuesday, April 08, 2008

சொல் வன்மை





தாம் அறிந்தனவற்றைப் பிறர் அறிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துரைப்பது
சொல் வன்மை எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.


" கல்விக்கழகு கசடற மொழிதல் " என்கிறது நறுந்தொகை. (அதி வீர ராம பாண்டியர் இயற்றியது )

ஆழ்கடலைப் போன்று அறிவு உண்டெனினும், அத்தகைய அறிவின் வெளிப்பாடு சொல் மூலமாகத்தான். எழுத்தாகவோ அல்லது பேச்சாகவோ ஒருவனது அறிவின் அகலம், ஆழம் வெளிப்படுகிறது.

எப்பொழுது பேசத்துவங்கினாலும், யாரிடம் பேசுகிறோம், அவர்தம் அறிவு, ஆற்றல் குறித்துத் தெளிவாக இருப்பது நலம்.

நீங்கள் சொல்லும் சொல்லானது "கேட்டார் பிணிக்கும் தகை அவாய்" இருத்தல் வேண்டும். அதாவது, கேட்டவர் கேட்டதை விரும்பும்படி இருக்கவேண்டும். கேளாதோர் நீங்கள் பேசி தாம் கேட்கவேண்டும் என விரும்பவேண்டும்.

ஆக, ஒவ்வொரு சொல்லும் சொல்கையில் அதன் "திறன் அறிந்து சொல்க" என்பார் வள்ளுவர். சொல் வன்மையின் முதல் பாடமே, நாம் சொல்லும் சொற்களின் வலிமைதனை அறிந்த பின்பு தான் அவற்றை உபயோகித்தல் நலம்.

இன்னமும் சொல்வார் வள்ளூவர்:
"சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல், அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து "

எப்படிப்பட்ட சொற்கள் நாம் சொல்லவேண்டும் ? நாம் சொல்லிய சொற்களை
வெல்லும் தகுதி மாற்றான் பேசும் சொற்களுக்கு இல்லா வண்ணம் இருத்தல் வேண்டும். ஒரு பொருளை விளக்க, இதுதான் சிறந்த சொல் எனத்தீர்மானித்துச்
சொல்வது தான் சொல் வன்மை எனக் கூறலாம்.

அவ்வை தன் மூதுரையில் கல்லாதான் கற்ற கவி பற்றிக் கூறியது நாம் அறியாதது அல்ல.
"கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானும்தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போதுமே
கல்லாதான் கற்ற கவி "

கல்லாதவர் கற்றவர் போல் தமை நினைந்து செயல் படுவது ஒரு வகை.
இன்னொரு வகை, தாம் கற்ற அறிவின் திண்மை அறியாது, முழுவதும்
கற்றவர் போல் செயல்படுவது.
பிறிதோர் வகையும் உண்டு.

ஒருவனுடைய சொல்லுக்கும் சொல் வன்மைக்கும் இத்துணை ஆற்றல் இருப்பினும்,
தன் சொற்களையோ அல்லது சொல் வன்மைதனையோ தவறாக பயன் படுத்துதல் தீது. தமக்குத்தான் வாதிடும் திறமை அதிகம் உள்ளது எனக் கொண்டு, தம் சொற்களை ஆயுதமாகக் கொண்டு, மற்றவரை தமது வாதத்தில் தோற்கடிப்பதுதான் குறிக்கோளாய் கொள்தல் பெரியோர் செயலோ சான்றோர் அழகோ அல்ல.

இவ்வாறு வெற்று வாதத்திற்காகவே அலையும் பலர் நம்மிடையே உளர். வம்புச் சண்டைக்கும் போக இவர்கள் அஞ்சுவது இல்லை. தாம் என்ன சொன்னாலும் அதனைப் பிறர் நம்பும்படி செய்து விடலாம் என இவர் எண்ணுகிறார்கள்.அவர் சாதிப்பது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. தமது நேரத்தையும் அடுத்தவர் நேரத்தையும் வீணாக்குகிறார் என்பதைத் தவிர வேறொன்றும் இவர் செய்வதில்லை. நாளடைவில் இவரது வாதம் வெற்று வாதம், ஏட்டுச் சுரைக்காய் எனத் தெரிந்த பின்பு யாரும் இவர்களை அணுகுவதும் இல்லை. ஒரு அவையில் இவர்கள் சிறிது சிறிதாகத் தனிமைப் படுத்தப் படுவர். கற்றவர் முன்னால் இவர் தோற்று ப்போகிறார். எனினும் தாம் தோற்றுவிடுவோம் என்பதனையும் இவர் அறியார். ஆகவே பயனற்ற பலவற்றினைப் பேசிப் பேசியே வாழ்வினைக் கழிப்பார் இவர்.

பதிணெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் ஒரு பாடல் வருகிறது.
பார்ப்போமா ?

சொற்றாற்றுக் கொண்டு சுனைத் தெழுதல் காமுறுவர்
கற்றாற்றல் வன்மையுந்தாந்தேறார் = கற்ற
செலவுரைக்கும் ஆறறியார், தோற்பதறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.

நமது சொற்கள் நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் நடுவே நின்று
செயல்படும் ஓர் பாலம்.

ஆகவே நமது வாயிலிருந்து வெளிவரும் சொற்களை நமது எண்ணங்களின்
தூதன் எனவும் கொளலாம்.

சொற்களுக்குப் பின் வருவது செயல். (சொற்கள் இல்லாதபடியே எண்ணங்கள்
செயல்களாய் உருவெடுக்கவும் கூடும்)

அறிவுக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தூதனே சொல் வன்மை.

சொல் வன்மை படைத்தவன் பண்பு என்ன ? வள்ளுவர் சொல்லாததும் உண்டோ?

தூய்மை, துணைமை, துணிவுடைமை, இம்மூன்றின்
வாய்மை, வழி உரைப்பான் பண்பு.

ஆக, சொல்லை உதிர்க்குமுன், எண்ணிச் செயல்படுவோம்.

வணக்கம்.