காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Wednesday, July 02, 2008
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இந்த ஒளவை பிராட்டி இருந்தாரே ! அவர் சொல்லாத விஷயம் இல்லை.
ஆத்திசுவடியிலே அத்தனையும் ஒரு சில வார்த்தைகளிலே சொல்லுவதில்
நறுக் தெரித்தாற்போல் சொல்கிறார்.
" அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தந்தை தாய்ப்பேண்
தாயின் சிறந்தது ஒரு கோயிலும் இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. "
குமர குருபரர் இன்னும் ஒரு படி மேலே சென்று
" குலமகட்குத் தெய்வம் கொழுகனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் = அறவோர்க்(கு)
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை " என்பார்.
( நற்குடிப்பிறந்த கற்புடைய பெண்ணுக்குக் கணவனே தெய்வம்;
பிள்ளைகளுக்கு உறுதியாக தந்தை தாயே தெய்வமாவர்;
இல்லர நெறியை மேற்கொண்டவர்க்கு துறவிகள் தெய்வமாவர்;
எல்லோர்க்கும் இலையினது நுனி போலப் பசும் பொன்னால்
செய்யப்பட்ட அணிகலன்களையுடைய அரசே தெய்வமாவான். )
பெற்ற தாயின் பெருமையை பெருமிதத்துடன் எனது வலையுலக
நண்பர் ஜீவா அவர்கள் தனது பதிவிலே அண்மையில் இவ்வாறு
சொல்கிறார்:
http://jeevagv.blogspot.com
"தாயின் பெருமையைச் சொல்லாத இலக்கியம் இல்லை.
"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தெனை காத்திடும்..." எனத் தாயுமானவனைப் பாடுவார், மாணிக்க வாசகர் பெருமான். தாய் பரிந்து கவனிக்காவிட்டால், சேய் தனை காப்பவர் யார்?
தாய்க்குத் தாயாக பேருலகம் தனை ஈன்ற பெருந்தேவி,
அன்னை மகாலட்சுமி அல்லவோ அகில உலகிற்கும்
அருள் சுரக்கும் தாய்! அம்மா, எனைக்காத்து இரட்சிப்பாய்."
ஏன் இதெல்லாம் சொல்கிறீர்கள் ? என்று கேட்பீர்கள்.
சில நாட்கள் முன் எனது வளாகத்தில் இருக்கும் ஒரு பெரியவரிடம்
பேசிக்கொண்டிருந்தேன். அவர் தனக்கு அண்மையில் நிகழ்ந்த
நிகழ்வு ஒன்றை விவரித்தார்.
அவரது ஒரு வயது முதிர்ந்த நண்பர் ஒருவர் இறந்து விட்டார் எனச்
செய்தி கேட்டு அவருக்கு மரியாதை தெரிவிக்க, அந்த வீட்டுக்குச்
சென்றாராம். இறந்தவர் உடல் ஒரு குளிர் சாதனப் பேழையில்
வைக்கப்பட்டு இருந்தது. கூடியிருந்தவர்கள் துக்கம் விசாரித்துக்
கொண்டிருக்கையில் இவர் மட்டும் லேசாகச் சிரித்தாராம். என்ன
இந்த இடத்தில் சிரிக்கிறீர்கள் எனப் பக்கத்தில் இருந்தவர்
சீற , இவர் சொன்னாராம்:
பாருங்கள் ! என் நண்பன் உயிருடன் இருந்தபோது ஒரு ஃபேன்
சுற்றினால், கரண்டு செலவு ஆகிவிடுகிறது என்று வாசலில் படுக்கச்
சொல்லி வற்புறுத்தினர் இவரது மகனும் மகனின் மனைவியும்.
செத்தபின் பாருங்கள் இவனுக்கு அடித்த யோகம்.
ஏ.ஸியில் என்ன சுகத்துடன் தூங்குகிறான் பாருங்கள் ! என்றாராம்.
காட்டுக்கு வேட்டையாடச் சென்ற தசரத மஹராஜா அங்கு வெகு தொலைவில்
ஒரு மிருகம் நீர் குடிக்கிறது தடாகத்தில் இறங்கி என நினைத்து, ஓசை வரும்
திசை நோக்கி தன் அம்பைச் செலுத்த, அந்த அம்பினால் ஒரு சிறுவன்
இறந்தான் எனவும், அந்தச் சிறுவன் தனது பார்வையற்ற பெற்றோரைத் தன்
தோள்களில் சுமந்து செல்லும்போது, தந்தை தாய் தாகம் எனச்சொல்ல, அவர்கள்
தாகத்தைத் தீர்க்க, அவர்களைச் சற்று நேரம் அமர வைத்துவிட்டு, ஒரு
பானையில் நீர் மொள்ளும்போது தான் தசரதன் அம்பினை எதிர் கொண்டான்
என்பதும் புராணம்.
புராணங்கள் எல்லாம் கதை கற்பனை. சாத்தியம் இல்லை. நடக்ககூடிய
தாகச் சொல்லுங்கள். மாதா மாதம் முதியோர் இல்லத்துக்குப் பணம்
அனுப்பி விட்டால், அவர்கள் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்களாம்.
இறந்தபின், உடனே வர முடியவில்லை, ப்ளேன் டிக்கெட் கிடைக்கவில்லை
என்றாலும், அவரவர் சம்பிரதாயத்திற்கு உகந்த வகையில் இறந்தவரைக்
கரையேற்றி விடுகிறார்களாம்.
இருக்கட்டும்.
வயதான பெற்றோரை வாழும் வரை தவிக்கவிட்டு
அவர் உயிர் நீத்த உடன், பசு மாடு தானம், சுவர்ண தானம்,
குடை தானம். பஞ்ச பாத்ர தானம். என்று பல்வேறு தானங்களைச்
செல்வோரையும் பார்க்கிறோம்.
இந்த தானங்களுக்கு ஏதும் மதிப்பு உண்டா ? தெரியவில்லை.
விஷயம் தெரிந்தவர்கள்தான் சொல்லவேண்டும்.
கர்மாக்களைப் பற்றிப் பேசுகிறோம். பல கர்மாக்களை
பயத்தின் அடிப்படையில்தான் செய்கிறோம் என்று தோன்றுகிறது.
பக்தியோ நம்பிக்கையோ தெரியவில்லை.
( We do more out of FEAR than out of FAITH)
அது பயமோ பக்தியோ எதுவோ அதைப்பற்றி பேசவேண்டாம்.
செய்யவேண்டியதை செய்து தான் தீரவேண்டும்.
இதுவும் ஒரு கட்சி.
இதற்கும் அப்பால் இன்னொரு நியாயம். நியாயமாம் !
உங்கள் கர்ம பலன் எதுவோ அதுதான் நடக்கும். நீங்களே
உங்கள் அம்மா அப்பாவுக்கு கயா ச்ரார்த்தம், நித்ய ச்ரார்த்தம்
செய்யவில்லை. காசி, ராமேச்வரம் செல்லவில்லை. அங்கே
கொடுக்கவேண்டிய தானங்களையும் கொடுக்கவில்லை.
உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு கொடுப்பார்களோ இல்லையோ
என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்.
எல்லாம் நினைத்து ப்பார்த்தால் ஒன்று தான் தோன்றுகிறது.
அறக்கடவுளை நாம் வந்தித்தால், அறக்கடவுள் நம்மைக் காப்பார்.
( தர்மோ ரக்ஷதி, ரக்ஷிதஹ ) ( ரக்ஷகஹ என்றும் சொல்வதுண்டு )
அறம் எத்துணை வலியது என்பதை வள்ளுவர் கூறுவார்:
என்பு இலதனை வெயில் போல் காயுமே
அன்பு இல் அதனை அறம்.
" அன்னையும் தந்தையும் தானே..அண்ட சராசரம்..."
என்று துவங்கிப் பாடுகிறார் பாகவதர்.
ஆம். அமரர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.
அவர் பாடுவதைக் கேளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
ஐயா பய பக்தி பற்றி நீங்க சொன்னது உண்மைதான்.
ReplyDeleteதானம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கீங்க. அது இறந்தவர் பொருட்டு செய்வது இல்லையா? அதற்கு பலன் இறந்தவருக்கு கிடைக்கும்.
பெற்றோரை வதைத்த பலன் வதைத்தவருக்கு கிடைக்கும்!
நல்ல பதிவு.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
ReplyDeleteசெய்நன்றி கொன்ற மகற்கு!
இவ்வரிகளுக்கு நூலாசிரியர்கள் கூறும் உரை:- எத்தகைய அறத்தை அழிப்பவனுக்கும் பாவத்தினின்று நீங்கும் வழியுண்டு. ஒருவர் செய்த நன்றியை மறந்தவனுக்கு அதினின்று உய்யும் வழியில்லை என்பதாம்.
நாம் இதன் பொருளை வேறு மாதிரி பார்த்தால் நலம் எனக்கருதுகிறேன்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு!
நன்றி என்பதன் பொருள்:- நன்மை உதவி செய்நன்றி அறம் என்பதாம். நாம் இங்கு உதவி எனும் பொருளில் பார்ப்போம்.
வள்ளுவன் குறளின் இறுதிச்சொல்லில் மகற்கு எனும் சொல் தான் ஈன்ற மழலைச்செல்வங்களையும் குறிக்கும் சொல்லல்லவா? இப்பொழுது பாடலின் பொருளைப் பார்ப்போமா?
பிறர்நமக்குச் செய்த எத்தகைய உதவியை மறப்பினும் பிழையில்லை பாவத்தினின்று தப்பித்துவிடலாம். ஆனால் தாய்தந்தையராயிருந்து தம்மக்களுக்கு அவர்கள் ஆற்றும் கடமை இருக்கிறதே அந்த நன்றியை மறந்துவிடின் அம்மக்களுக்கு உய்வென்பதும் இல்லையாம் எனக்கொள்ளலாம்.
அத்தகைய பெருமைக்குறிய தந்தைதாய்க்கு மக்கள் ஆற்றவேண்டிய கடமையை விட்டுவிட்டு அவர்கள் மாண்டபின் கொடைகொடுப்பது குண்டூசிகொடுப்பது என்பதெல்லாம் வீண் என்பதை மிக அருமையாக உணர்த்தியுள்ளீர்கள்.
அகிலப் பற்றையெல்லாம் அகற்றிய துறவியாலும் அன்னைப் பற்றை அகற்றிவிடமுடியுமா? கடவுளுக்கு நேரானவள் அல்லவா அவள்! அன்னையைத் தொழுவதும் ஆண்டவனைத் தொழுதற்கு நேரல்லவா?
முற்றும் துறந்த நிலையில் கூட பட்டினத்தார் தன் தாயின் இறப்பை அறிந்து ஆற்றாது கண்ணீர் விட்டு
ஐயிரண்டு திங்களா அங்கமெல்லாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?
என்று பாடல்கள் செய்து தன் துயரத்தை வெளிப்படுத்துகிறார் என்றால் தாயின் சிறப்பை என்னவென்று கூறுவது!
//பிறர்நமக்குச் செய்த எத்தகைய உதவியை மறப்பினும் பிழையில்லை பாவத்தினின்று தப்பித்துவிடலாம். ஆனால் தாய்தந்தையராயிருந்து தம்மக்களுக்கு அவர்கள் ஆற்றும் கடமை இருக்கிறதே அந்த நன்றியை மறந்துவிடின் அம்மக்களுக்கு உய்வென்பதும் இல்லையாம்//
ReplyDeleteஅகரம் ஒரு தரம் சொன்னா நூறு தரம் சொன்னா மாதிரி.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
திவா கூறுகிறார்:
ReplyDelete// பெற்றோரை வதைத்த பலன் வதைத்தவருக்கு கிடைக்கும்!//
கிடைக்கும்போது பாத்துக்கலாம் அப்ப ஒரு பரிகாரம் பண்ணிக்கலாம்.
அப்படிங்கறது ஒரு எண்ணம் இருக்கிறது.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
முன்னறிவு முந்திநின்று நல்வழி காட்டிட
ReplyDeleteதன்னறிவு தங்கிநின்று தாய்தந்தை தாங்கிட
சேராதோ வளம்யாவும் என்று.
////// ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDeleteமுன்னறிவு முந்திநின்று நல்வழி காட்டிட
தன்னறிவு தங்கிநின்று தாய்தந்தை தாங்கிட
சேராதோ வளம்யாவும் என்று./////
ஜீ! இது தாங்கள் எழுதிய சிந்தியலா? நன்று சிந்திக்கத் தகுந்ததாய் உள்ளது. வாழ்த்துக்கள்.
"சேராதே வளம்யாவும் என்று" என்பதைவிட
"சேரும் வளம்யாவும் சென்று" என்றிருந்தால் அழகாயிருக்குமேன்பது என்கருத்து. தாங்களிருவரும் (ஜீ, சுப்புஅய்யா) என்ன நினைக்கிறீர்கள்
சேராதோ எனக் கேட்டதிற்கு சேரும் என நம்பிக்கை சேர்த்தமைக்கு நன்றிகள் மேடம். சேருதலுக்கு 'சென்று' என்பதே சிறப்பாக இருக்கு, 'என்று' என்பதைக் காட்டிலும்.
ReplyDeleteஇதுபோலவே குமரன் பதிவில் ஒரு சிந்தியலை முயற்சித்திருந்தேன்:
தஞ்சம் அடைந்தாரை அஞ்சேல் எனக்காத்த
கொஞ்சு மொழியான் பிதற்றலைக் கேட்டாலே
கிட்டாதோ நாளும் மிடுக்கு?
அதற்கு பதிலாக அவரும்:
தஞ்சம் அடைந்தாரை அஞ்சேல் எனக்காக்கும்
கொஞ்சு மொழியான் பிதற்றலைக் கேட்டாலே
கிட்டுமே நாளும் மிடுக்கு!
என்று நம்பிக்கை தந்தார்!
Jeeva Venkataraman said:
ReplyDelete//சேராதோ எனக் கேட்டதிற்கு சேரும் என நம்பிக்கை சேர்த்தமைக்கு நன்றிகள்//
கிட்ட அது இல் என்பர்
கிட்டாது எனவும் சொல்வர்
கிட்டாதோ என ஐயம் கொண்டு
எட்டவே நின்றிடுவர்.
கிட்டுமெனக் கொள்வாரும்
சேருமெனச் சொல்வாரும்
சோராதார். மற்றெதையும்
சேராதார். பற்றெலாம் விட்டுவிடக்
கிட்டுமென உறுதி கொள்வார்
கிட்டனவன் தாள் சேர்வார்.
சுப்புரத்தினம்.
தஞ்சை.
வலைச்சர அறிமுகத்திற்கு
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா..
//அறக்கடவுளை நாம் வந்தித்தால், அறக்கடவுள் நம்மைக் காப்பார்.
( தர்மோ ரக்ஷதி, ரக்ஷிதஹ ) ( ரக்ஷகஹ என்றும் சொல்வதுண்டு )//
தர்மம் தலை காக்கும்..
தக்க சமயத்தில் உயிர் காக்கும் ...!