Pages

Wednesday, July 16, 2008

அடக்கம் அமரருள் உய்க்கும்

அடக்கம் அமரருள் உய்க்கும் = அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.


என்பது வள்ளுவம்.

அடக்கத்தைப் பற்றி பல்வேறு நிலைகளில் பல்வேறு பொருட்கள் கூறப்பட்டபோதிலும்
ஒன்று தெளிவாகத் தெரிகிறது.

தெரிந்தவன் தனக்குத் தெரியும் என்பதாலும், தெரிந்தவை மனதிற்கு ஒரு
முழுமையையும் அமைதியும் தருகின்றன என்பதாலும், தாம் தெரிந்தவற்றிற்கு
மாற்றாக ஏதும் சொல்லப்படும்போது, அச்சூழ்னிலை, சொல்வோர், சொல்வோர்
மன நிலை, அவையோர் மன நிலை, ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு
வாளா இருந்து விடுகின்றனர்.

தெரிந்தவர் ' சும்மா இரு' த்தலும் இதனால்தானோ !

மாறாக, தனக்குத் தெரியுமென மற்றவர் மத்தியிலே வாதிடுபவர் ஒரு வகையான‌
வ்யூகத்தில் தன்னை அறியாது சிறைப்படுகிறார்.

ஒன்று, தான் சொல்வது மற்றவர்க்குப் புரிவதில்லை. அதைப் புரிவதற்கான
பக்குவமோ அறிவோ அவர்களிடம் இல்லை.
இரண்டு. மாறாக நிலை எடுத்தவர்களுக்கு ஒரு 'தான் சொல்லிவிட்டோம்' என்றதொரு
ஆணவப்பிரச்னையும் இருக்கலாம். அதை எதிர்த்து ஒரு வார்த்தை வந்து அதற்கு தாம்
கட்டுப்பட்டால் (ஒத்துக்கொண்டால்) உற்றம், சுற்றமதில் தமது மதிப்பு குறைந்து விடும்
என்கிற அச்சமும் காரணமாக இருக்கலாம்.

ஆதலால், தெரிந்தவர் வாளா இருந்துவிடுகிறார். சொல்லித்தான் ஆகவேண்டுமென்ற‌
நிலையிலும் குறிப்பாக உணர்த்துகிறார். காலம் உணர்த்தும், தாமாகவே எதிர்வாதி
புரிவார் என்றும் மெளனம் சாதிக்கிறார். இது அடக்கமா ?

அடக்கம் எனும் சொல்லைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால், அடங்கியிருப்பது
அடக்கமா, அல்ல ! தனது புரிதலை ( understanding ) தனக்குள்ளே
அடக்கிவைத்திருப்பவனது செயல் அடக்கமா ?

அவையிலே தனது புதல்வர்கள் செய்யும் தகாத காரியங்களைப் பார்த்தும் வாளா இருந்த‌
திருதராஷ்டிரன் புத்திர பாசத்தில் அடங்கிப் போய் உறைந்து இருக்கிறான்.

அரச அவையின் குருமார் எனச்சொல்லப்படும் பீஷ்மர் தம்மால் அந்தக் காட்சிகள்
பார்க்கப் பட இயலவில்லை எனினும், அரச விசுவாசம் எனும் தளையில் அடங்கிப்போகிறார்.

அர்ச்சுனனது வில்லும் வீரமும் அடங்கிப் போன காட்சி.

இவர்கள் காட்டிய அடக்கம் சரித்திரத்தில் இடம் பெற்றனவே தவிர இவர்களுக்கு
அழகோ, மாட்சியோ, பெருமையோ தரவில்லை.

அடுத்த காட்சி இதோ !
பாண்டிய அவையில், கண்ணகி தன் கணவன் கள்வன் அல்ல என நிரூபித்துவிடுகிறாள்.
தன் கணவன் உயிரை அவசியமில்லாது ஆராயாது அபகரித்த ஆட்சியாளரைச் சுடுசொல்
சொல்லிடும்பொழுது கண்ணகியின் சினத்தில் உள்ள நியாயம், தருமம் எல்லாம்
புரிந்து, யானோ அரசன் ! யானே கள்வன் எனச் சொல்லித் தன்னையே மாய்த்துக்கொள்கிறான்
பாண்டிய மன்னன்.
இவன் அடக்குவது என்ன ? தனது அரசு தனக்குத் தரும் அதிகார பலத்தை. அதை உபயோகித்து
எதையும் செய்யலாம் என்ற ஆணவத்தை.
இவன் எதில் அடங்குகிறான் ? சட்டத்திற்கு, நியாயத்திற்கு, தருமத்திற்குத் தலை வணங்குகிறான்.
இல்லை! தன்னுயிரையும் துறக்கிறான்.

ஆக, தர்மம் என்ன சொல்கிறதோ அதற்கு அடங்குபவர் பிரதிபலிப்பதுவே அடக்கம்.
தர்மம் என்ன சொல்கிறதோ அதற்கு அடங்கி, தருமமில்லா எல்லா உணர்வுகளையும்,
அவ்வுணர்வுகளைப் பெருக்கும் ஐம்புலன்களை அடக்கி வாழ்வதே அடக்கம்.

இங்ஙனம் வாழ்வாரே அமரருள் உய்வார் என்பது வெள்ளிடைமலை.

எப்படி ? வள்ளுவர் அதையும் கூறுவாரே !

ஒருமையுள், ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

தன் ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனுக்கு ஏழும் பிறவிகளிலும் நன்மை உண்டாம்.


4 comments:

 1. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
  அவையகத்து அஞ்சா தவர்!

  என்கிறார் வள்ளுவர். அஞ்சாது உரையாற்றும் வல்லமை வாய்க்கப் பெற்ற கற்றோர்களுக்கு அடக்கம் என்பது ஆருயிர்போன்றது. யாதொன்றும் அறியாதவர் அடங்கியிருப்பதா அடக்கம்? இல்லை. எல்லாம் அறிந்தும் தான் ஒன்றும் அறியாதவன் பொல் மேலும் அறியத்துடிப்போன் அடக்கமே நிகரற்ற அடக்கமாகும்.

  அடக்கமென்ப (தி)யாதெனில் யாவும் அறிந்தும்
  அறியாரைப் போலிருத்த லாம்! -அகரம் அமுதா

  அவையின் கண் தான் முழுமையாகக் கற்ற தெரிந்துகொண்ட ஒன்றைத் தவறாக ஒருவன் கூறும் போதும் அடக்கமென்ற பேரில் சும்மாயிருந்துவிடுதல் அடக்கமா என்றால் அவ்வடக்கமும் கல்வியும் பேடிகை ஓள்வாள் ஆகிவிடும். அவ்விடத்தில் உண்மையை அறத்தை நிலைநாட்டுதலும் அடக்கமேயாகும்.

  நாவடங்கி நல்லவையுள் நாவடக்கார் நாவடக்கல்
  நல்லடக்கம் என்றே நவில்! -அகரம்.அமுதா

  அடக்கத்தைப் பற்றி மிக அடக்கமாகவும் அழகாகவும் கட்டுரைத்துள்ளீர்கள். நான்தான் கொஞ்சம் அடக்கமில்லாமல் பின்னூட்டில் எகிரிக் குதித்துவிட்டேனோ?

  ReplyDelete
 2. இரண்டாவது வெண்பாவைச் சற்றே மாற்றியமைத்தால் நன்று எனக் கருதுகிறேன்.

  நாவடங்கி நல்லவையுள் நாவடக்கார் நாவடக்கல்
  பண்டிதர் என்பார்தம் பண்பு!

  நன்றி

  ReplyDelete
 3. //எகிரிக் குதித்துவிட்டேனோ?//

  சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய இடத்தில், நேரத்தில் சொல்லவேன்டிய நபர்களிடத்தில்
  சொல்தல்
  எகிறிக்குதித்தல்
  எப்படி ஆகும் ?

  முத்துமாலை நடுவே வைரம் ஜொலிப்பது போல் உங்கள் பின்னோட்டத்தின் நடுவே
  உங்கள் செய்யுட்கள் அழகு சேர்க்கின்றன.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.
  http://menakasury.blogspot.com

  ReplyDelete
 4. நாட்கள் சுவைகூட்டும் நால்வர் சொலக்கேட்டேன்;
  நாட்கள் நகர நரைகூடும்; -நாட்கள்
  பதினைந்து சென்றும் பதிவேற்றா ததும்ஏன்?
  பதிவைப் படைத்திடுவீர் பார்த்து!

  அகரம்.அமுதா

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி