Pages

Monday, July 27, 2009

ஆறடி உயரத்திலே அதி யற்புத வடிவத்திலே



தமிழகம் எங்கிலுமே , வீதிக்கு வீதி, முக்குக்கு முக்கு, மூலைக்கு மூலை, சந்திக்கு சந்தி ஒரு ஆலமரம் இருக்கும் இல்லையேல் ஒரு அரசமரம் இருக்கும். அதனடியில் அமர்ந்து அருளும் ஆசியும் தரும் வினாயகப்பெருமான் முன் நின்று ஒரு கணம் அவன் உருவத்தினை நெஞ்சினிலே இருத்தி அவனைத் தொழுவார்க்குத் தீவினை எதுவுமே அண்டிடாது.

இது ஆன்றோர், சான்றோர் உரைத்த நல்வாக்கு.

திருமூலர் கூறுவார்:

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.

சேக்கிழாரோ தமது புராணத்தில்:

வானுலகும் மண்ணுலகும் வாழ்மறை வாழப்
பான்மைதரு செய்ய்தமிழ் பார்மிசை விழங்க‌
ஞானமத ஐந்து கர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுகனைப் பரவி அஞ்சல் செய்கிற்பாம்.

பெருந்தேவனார் எனும் புலவர் சொல்வார்:

புண்ணியம் கோடி வரும் பொய்வாழ்க்கை ஓடிவிடும்
எண்ணியது கைகூடும் ஏற்றதுணை நண்ணிடவே
வாழ்வில் வளர் ஒளியாம் வள்ளல் வி நாயகனை
நாளெல்லாம் வாழ்த்திடுவோம் நன்று.

அந்தத் தும்பிக்கணபதியை நினைத்து வணங்குபவர் நீங்காத செல்வம் அடைந்து
இம்மையிலும் மறுமையிலும் புகழ் பெறுவர்.

" திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்" என்கின்றது விருத்தாசல புராணம்.

என்ன அழகிய எளிய தமிழ்ச் சொற்கள் !

சங்கத்தமிழ் மூன்றும் தா ! எனக்கோரிக்கை வைத்த அவ்வையும்
ஆரம்பிப்பது வி நாயக துதியுடனே.


அக்கணபதிக்கு எதைப் படைப்பது ?
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்.
என்ற பிராட்டி சொல்வார்.
எதைக் கொண்டு அவரை அர்ச்சிப்பது:
கையில் எது இருக்கிறதோ அது போதும்.

இருப்பினும் ஒரு அழகிய தமிழ்ப் பாடல் ஒன்று இருக்கிறது. அது இங்கே:

மேற்கு மாசிப்பச்சை நதுங்கை யாந்தகரை
வில்வமுடன் ஊமத்தை நொச்சி நாயுருவி
யேதமில் கத்தரி வன்னி அலரி காட்டாத்தி
யெருக்கு மருதுடன் மால்பேரி யம்புகாந்தி
மாதுளையே உய்ர் தேவதாரும் அரு நெல்லி
மன்னு சிறு சண்பகமே கெந்தளி பாதிரியே
ஓதரி யவ நுகு இவையோர் இருபத்தொன்று
முயர்வி நாயக சதுர்த்திக் குரைத்த திருபத்திரமே.

இத்தனையும் திரட்டி எடுத்துக்கொண்டு வாழ்வில் எஞ்சிய சில நாட்களில் என்றாவது ஒரு நாள் அந்த பிள்ளையார் பட்டி பிள்ளையாரைப் பார்த்து வழிபட்டு வரலாமென் நினைத்த வேளையில் எனது பேத்தி, அவள்தான், தாத்தா என என்னை அன்புடன் அழைக்கும் கவிதாயினி கவி நயா அவர்கள்
பிள்ளையார்பட்டி பிள்ளையாரைப்போற்றி எழுதிய பாடல் கிடைக்க்ப்பெற்றேன்.

என்னால் அடாணா ராகத்தில் பாடப்படுகிறது.




கற்பக கணபதியே
பிள்ளையார் பட்டியில் உறைநிதியே!
சொற்பதம் கடந்தவனே
உந்தன் பொற்பதம் பணியவந்தோம்!

ஆறடி உயரத்திலே
அதி யற்புத வடிவத்திலே
கோதறு குணத்தினிலே
வளர் பார்புகழ் கணபதியே!

கல்லினால் ஆனவனே
கருணையில் கரும்பென இனிப்பவனே!
புல்லினால் பூஜித்தாலும்
அகம் மிகமகிழ்ந் தருள்பவனே!

உமையவள் திருமகனே
எம்மை இமையென காப்பவனே!
குறைகளை தீர்ப்பவனே
எங்கள் சுமைகளை ஏற்பவனே!

வலம்புரி நாயகனே
பழம்பெற இறைவலம் வந்தவனே!
மறைகளின் அதிபதியே
எங்கள் மனம்அமர் குணநிதியே!


--கவிநயா

கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம்.



கவி நயா அவர்கள் வலைப்பதிவுக்குச் செல்லவும்.
அவர்களுடன் சேர்ந்து அந்த
ஆறுமுகத்தோன் அண்ணனை
துதித்து எல்லா நலமும் பெறவும்.

Saturday, July 25, 2009

"அய்யா ! தெரியாதைய்யா ! சொல்லிட்டேன் !!


அய்யா ! தெரியாதைய்யா ! சொல்லிட்டேன் !!

என்று ஒரு தமிழ்ப் படத்தில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு நகைச் சுவை கலைஞர்
அடிக்கடி சொல்வது நினைவுக்கு வருகிறது.
நினைவு கூற வைத்த நிகழ்வு அண்மையில் நடந்தது அமெரிக்க மண்ணில்.
ஆம்.
இந்த நிகழ்வு நமது நாட்டில் நடந்தது அல்ல. அமெரிக்காவில் நடந்துள்ள நிகழ்ச்சி.

அது நடந்த உடனேயே அதுபற்றிய தனது கருத்துக்களை, முழுமையான தகவல்கள்
இல்லாத நேரத்திலேயே, பொறுப்பில் உள்ள ஒருவர் தமது கருத்துக்களைச்சொன்னதினால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றிய‌ செய்தி இது.

http://www.cnn.com/2009/US/07/24/officer.gates.arrest/index.html?eref=rss_topstories


ஆங்கிலத்தில் உள்ள இச்செய்தி சி.என்.என். எனும் செய்தித்தாளில் உள்ளது. அதை முதற்கண் படிக்கவேண்டும். பின் மேற்கொண்டு படிக்கவும்.

இந்த நிகழ்ச்சியை விவரிப்பதோ அல்லது விவாதிப்பதோ இப்பதிவின் மையக்கருத்து அல்ல.

இருப்பினும், இந்த நிகழ்ச்சியையும், இந்த நிகழ்ச்சிக்குப் பின் நடக்கும் விவாதங்களையும் நோக்குகையில், ஒன்று தெளிவாகக் காணப்படுகிறது. இச்செய்தியே ஒரு பாடம் கற்பிப்பதாகத் தோன்றுகிறது.


முதற்கண், எந்த ஒரு பொருளைப்பற்றியும் அதைப்பற்றிய முழுத் தகவல்கள் அறிந்தபின்னே கருத்துக்கள் வெளியிடுவது நல்லது.

உடனடியாகத் தானே அதற்கு பதிலைத் தரவேண்டுமா ? எனவும் சிந்திக்கவேண்டும்.

அக்கருத்துக்களை வெளியிடும்பொழுது, கருத்துக்களுக்கான விளைவு நிகழ்ச்சியின் விளைவினை விட, அதைக் கேட்பவர் மனதிற்க்கு ஏதோ ஒரு வகையில் துன்பம் விளைவதாக இருக்கக்கூடும். என்பதையும் கவனத்தில் கொண்டு, தாம் சொல்வது நிகழ்வுக்குத் தீர்வு காண்பதாக இருக்குபொழுதே சொல்லவேண்டும்.

முன்னமேயே ஒரு பதிவில் சொல்லியது போல, சொல்லாத சொல்லுக்கு நாம் எஜமானன். சொல்லிய‌ சொல்லுக்கு நாம் அடிமை ஆகிவிடுகிறோம். அதை ஏன் சொன்னோம், எதற்கு சொன்னோம் எனப்பல்வேறு வகையில் விளக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டு, கடைசியில் பல சமயம், இச்சொற்களை நாம் தவிர்த்திருக்கலாமே என்று தோன்றும் மன நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

வள்ளுவர் அறிவுரை இதோ !

யா காவாராயினும் நா காக்க .. காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.


மனிதன் மனிதனாய் வாழ் முதற்கண் அடக்கம் தேவை. அடக்கம் எண்ணங்களிலும் பின் சொற்களிலும் பின் செயல்களிலும் பரிணமிக்கும்.

வள்ளுவரின் அறிவுரை மனித குலத்துதித்த யாவருக்குமே என்றாலும், ஒருவன் பதவி, அந்தஸ்து, செல்வம் ஆகிய ஏணிகளில் ஏறுகையில் , ஏறி நிற்கையில் வழுவாது கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றாம். உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் வாயிற்காப்போன் சொல்வதற்கும் அலுவலக அதிகாரி சொல்வதற்கும், பல்வேறு நேரங்களில், பொருள் ஒன்றாயினும், அவர்கள் சொல்லும் சொற்கள் ஒன்றாயினும், அவற்றினை கேட்பவர், அருகாமையில் இருப்பவர் புரிந்துகொள்ளும் தன்மை வேறு, நிலை வேறு. அவர்தமக்கு ஏற்படும் பாதிப்புகளும் அவ்வாறே. ஒன்று தெளிவு. மேலே செல்லச் செல்லப் பொறுப்புகள் அதிகரிக்கின்றன அல்லவா ?

ஆகவே தான், செங்கோன்மை எனும் அதிகாரத்தில், வள்ளுவர் சொல்வார்:

ஓர்ந்து கண்ணோடாது, இறைபுரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை.


நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர்
முதற்கண் குற்றம் என்ன என அறியவேண்டும்.
குற்றம் புரிந்தவரை, எந்த ஒரு தயவு தாட்சணியமும் இல்லாது,
நடு நிலையில் அமைந்து நின்று,
நீதி செய்வதே செங்கோலாகும்.

Friday, July 10, 2009

எழு ! என்னவெனக் கேளு. !!

அண்மையில் தமிழ் வலையுலகத்தில் ஒரு கேள்வி மழை பொழிந்தது. முப்பத்திரண்டு கேள்விகளும் அதற்கான வலைப்பதிவாளரின் பதில்களும்.
எனக்கும் வந்தது . நானும் என் பதிவில் பதில்கள் எழுதியிருந்தேன்.
என்ன கேள்விகள் ! உனக்கு ஏன் இந்தப் பெயர் ? உனக்கு என்ன சாப்பாடு புடிக்கும் ? யார் பக்கத்தில் இருக்கிறார்கள் ? இது போல்
உப்பு சப்பு இல்லாத கேள்விகள். பல நபர்களின் பதில்கள் பல்வேறு விதமாக இருந்தன.

கேள்விகள் என்றால் அதில் ஒரு பஞ்ச் இருக்கவேண்டும். பதில் சொல்பவரின் மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்கவேண்டும்.
பதிலளிப்பவர் கொஞ்சமாவது யோசிக்கவேண்டும். அந்தக் கேள்வியினால், கேட்பவருக்கு சிறிதாவது புதிய தெளிவு பிறக்கவேண்டும்
பதிலளிப்பவருக்கு புதிய வழி காண்பதற்குப் பயனாய் அமைய வேண்டும். இது எதுவுமே இல்லாத ஒரு கேள்விக்கணையினால்
என்ன பயன் !!

கேள்விகள் வேள்விகளாக இருக்கவேண்டும். அவ்வேள்வித்தீயில் பதிலளிப்பவன் புகுந்து வெளிவரவேண்டும். புது உணர்வும் புது நிலையும் அடையவேண்டும். பதிலளிப்பவருக்கும் அப்பதிலைப்படிப்பவருக்கும் அவை பயன் தரும் வகையாக இருக்கவேண்டும்.

"கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்
வேட்ப, மொழிவதாம் சொல்."
நாம் பேசும் சொல் எவ்வாறு இருக்கவேண்டும் என வலியுறுத்திச்சொல்லுகையில் வள்ளுவர் கூறுவார்: நாம் கேட்பவற்றை கேட்பவரும் கேளாதாரும் விரும்பும் வண்ணம் நாம் பேசவேண்டும்.

இவ்வகையில் யோசித்துப் பார்த்தபொழுது, தமிழ் வலையுலகில் இன்றைய தேதியில் ஏறத்தாழ பத்தாயிரம் பதிவாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் தமிழ் வலை தோன்றிய‌கால முதலே செயல்படுபவர், பலர் இடைக்காலத்தே வந்தவர், மற்றும் பலரோ வலையுலகத்தை விட்டு ஏதோ காரணங்களுக்காக விட்டுச் சென்றுவிட்டனர்.

தொடர்ந்து செயல் படுவோர் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் என சில எனக்குத் தோன்றின.
இவற்றிற்கான பதில்களை நான் எதிர்பார்க்கவில்லை. எல்லோருமே தன்னைத்தானே கேட்டு பதிலை அறிய வேண்டும். ஆங்கிலத்தில் இதை ஒரு செல்ஃப் இன்ட்ராஸ்பெக்ஷன் எனச் சொல்லலாம்.


முதல் கேள்வி: தமிழ் வலை உலகில் முதலடி நீங்கள் வைத்தபோதும், முதற்பதிவு என்று ஒன்று நீங்கள் எழுதியபோதும், சாதிக்கவேண்டும் என ஏதாவது நினைத்தீர்களா ? அது எந்த அளவிற்கு இப்போது சாத்தியமாயிருக்கிறது ? இல்லை எனின் நீங்கள் அடுத்து செய்யவேண்டியது என்ன ?

இரண்டாவது கேள்வி: உங்கள் வாசகர் வட்டம் தரும் கர ஒலி உங்களை மேலும் மேலும் எழுதத் தூண்டும் வகையில் உள்ளதா ? மேன்மேலும் தெரியாதனவற்றைத்தெரிந்துகொள்ளவேண்டுமென ஒரு ஆவலைத் தூண்டி, உங்கள் "அறிந்தவற்றின்" எல்லைகளைக் கடக்கத்தூண்டுகின்றனவா ? குட்டுப்படும்போது குனிந்து போவீர்களா ? வாசகரது கருத்து உங்களிடையே ஒரு சுய சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறதா ? மாற்றுக்கருத்துக்களையும் கவனமாகக் கேட்டு அதற்குத் தக்க பதிலைத் தரும் பண்பினையும் ( empathetical listening ) பொறுமையையும் (patience ) வளர்த்திருக்கிறதா ?

மூன்றாவது கேள்வி: தமிழ் வலைப்பதிவு உலகத்தை மற்ற மொழிகளில் வரும் வலைப்பதிவுகளோடு ஒப்பிட்டு இருக்கிறீர்களா ? ஆம் எனின், மற்ற மொழிகளில் வரும் வலைப்பதிவுகளில் உங்களைக் கவர்ந்து, இது போல தமிழ் வலையுலகத்தில் இல்லையே என வருத்தப்பட நேர்ந்ததுண்டா ?

நான்காவது கேள்வி: இன்றைய தேதியில் தமிழ் வலைப்பதிவுகள் தமிழரது சிந்தனை வளத்தை செம்மைப்படுத்துகின்றனவா ? தமிழரை ஆக்கவழிகளில் அழைத்துச் செல்ல அவை முயல்கின்றனவா ? ஆம் எனின் எப்படி ? இல்லை எனின் அவை எவ்வாறு இருக்கவேண்டும் ?

ஐந்தாவது கேள்வி: வாசகர், முகம், பெயர் கூட தெரியாத நிலையிலே நபர்கள் பலர் உங்களுக்கு வலை மூலமாக அறிமுகம் ஆகியிருக்கக்கூடும். அவர்களின் அன்பான. ஆரோக்கியமான பின்னூட்டம் சுவையாக இருந்திருக்ககூடும். அவர்களில் எத்தனை நபர்களுடன் நீங்கள் நட்பினைத் தொடர விரும்புவீர்கள் ?

ஆறாவது கேள்வி: தமிழ் வலைப்பதிவு உலகத்தில் நிகழும் கருத்து சுதந்திரம் ஆரோக்கியமானதாகத் தான் உள்ளதா ? இந்த சுதந்திரத்திற்கு ஒரு நாள் தடை வரும் என நினைப்பதுண்டா ? (ஒரு சில நாடுகளில் வருகிறது என்பது தங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்காது ) இல்லை. பத்திரிகை உலகத்திற்கு இது பரவாயில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா ?

ஏழாவது கேள்வி: வலையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாகவோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ, இது போன்ற இலவச வசதிகளை எதிர்காலத்தில் கூகுள், வேர்டுப்ரஸ், யாஹூ, ஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள் தொடர வில்லை எனின் எந்த அளவிற்கு நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் ?

கேள் என்பதற்கு இரு பொருள். கேள்வி கேள் (ASK) ஒரு பொருள். அதற்கு பதில் வரும்போது கேள் (HEAR, LISTEN). இது இரண்டாவது பொருள். நாம் கேட்கும் கேள்விக்கு ஒரு பொருள் இருக்கவேண்டும். யாரிடம் கேட்கிறோமோ அவருக்கு பயன் தரவேண்டும்.
அவர் பதில் அளிக்கும்போது அதைக்கேட்டிட பொறுமை வேண்டும். அதனால் நாம் பயன் அடைய வேண்டும்.

ன்ன பயன் ? இன்று தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் தலை சிறந்த வலைப்பதிவாளர் (பிளாக்கர்) என்று
ஒரு நோபெல் பரிசு கூட கிடைக்கலாம். அதற்கான தகுதியை இளைய சமுதாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும் .


இக்கேள்விகள் நம்மை நாமே கேட்டுக் கொள்பவை. ஆகவே, பொறுமையுடன நம் உள் மனம் என்ன சொல்கிறது என்பதைக் கேட்போம். பயனடைவோம்.




Friday, July 03, 2009

ஆண்டவன் எழுதிய எழுத்து


ஆண்டவன் எழுதிய எழுத்து
இரு நூறு வருடங்களுக்கு முன்பே ஜெஃபர்ஸன் அவர்களுக்கு அவரது நண்பர் ராபர்ட் பேட்டர்சன்(கணிதப் பேராசிரியர், பென்சில்வேனியா பல்கலைக்கழகம்) அனுப்பிய ஒரு தகவல் அடங்கிய ரகசிய மடல் இன்னமும் இன்னது என புரியாமல் இருந்தது, தற்பொழுது அதன் ரகசியப்பேழை எண்கள் பற்றிய விவரம்
கண்டுபிடிக்கப்பட்டு, மிகப்பெரிய செய்தியாக பேசப்படுகிறது. இந்த ரகசியத்தை உடைப்பது அவ்வளவு எளிதான
காரியம் அல்ல. ஒவ்வொரு எண் அல்லது எழுத்துக்கும் ஒரு மதிப்பு இருக்கும். அது இடத்திற்குத்தகுந்தாற்போலவும்
மாறிவிடும். அது அதை எழுதியவர்க்கும் அதை உரியவர்க்கும் மட்டுமே புரியும். இது பற்றி சுவையான தகவல்
அறிய இங்கே செல்லவும். (What is CRYPTOGRAPHY? )
http://online.wsj.com/article/SB124648494429082661.html#mod=whats_news_free?mod=igoogle_wsj_gadgv1


நிற்க.
நமது வீடுகளில் இன்னும் 'க' ந சங்கேத பேச்சு பிரபலம். கசி கனி கமா கவு கக் ககு கபோ கக கலா கமா என்றால் சினிமாவுக்கு ப் போகலாமா ? வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கோ அல்லது வீட்டில் உள்ளவருக்குக் கூட புரியாத, தமக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் பேசிக்கொள்வது கணவன் மனைவி மார்களுக்குக் கை வந்த கலை ஆகும்.

உதாரணமாக,

வந்திருக்கும் விருந்தினர்களிடையே அல்லது கணவன் வீட்டு உறவினர்களிடையே
கணவன் இடைவிடாது பேசிக்கொண்டே இருக்கிறார். மனைவிக்கு அது பிடிக்கவில்லை.
என்ன அப்படி வாய் ஓயாம பேசுறாரு ? இருந்தாலும் அத்தனை பேர் மத்தியிலே
என்னங்க பேசிக்கிட்டே இருக்கீங்க..கொஞ்சம் வாய் மூடிட்டு இருங்களே ! அப்படி
சொல்ல முடியுமோ ? !!! முடியாது தானே !!
ஆனால் எப்படி சொல்கிறாள் பாருங்கள்:
வாசற்கதவை திறந்தே வச்சுருக்கீகளே !!
கணவனுக்குப் புரிகிறது. கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பிக்கிறார்.

இன்னும் ஒரு உதாரணம்.
க ந பாஷை.
உதாரணமாக:

கது கள கசி கத கல கம் கவ கலை கப கதி கவு கதா கன் கஎ கன கக் ககு கபி கடி கக் ககு கம்.கஏ கனெ கனி கன்
கஅ கது களி கய கத கமி கழி கல் க இ கரு கக் ககி கற கது.
க வை நீக்கிவிடுங்கள். உடனடியாகப் புரிந்துவிடுகிறது

துளசிதலம் வலை பதிவு தான் எனக்குப் பிடிக்கும். ஏனெனின் அது எளிய தமிழில் இருக்கிறது.


இதையே அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். முதல் வரி மட்டும்.

கது காள கிசி கீத குல கூம் கெவ கேலை கைப கொதி கோவு கெளதா கெளன் கோஎ கொன கைக் கேகு
கெபி கூடி குக் காகு கம்.

இதன் இரண்டாவது பகுதி முதற்பகுதியின் வரும் வழி.

இருந்தாலும் இந்த வரியில் காணப்படும் வார்த்தைகளின் முதல் எழுத்தை நீக்கிவிட்டால் உடன் செய்தி
கிடைத்துவிடுகிறது.

ஆனால், சங்கேத மொழி அவ்வளவு எளிதில் அறியக்கூடியதோ அல்லது ஆக்கப்படுவதோ அல்ல. இன்னமும்
சற்று கடினமாக்கப்படுகிறது. எண்கள் புகுத்தப்படுகின்றன. அந்த எண் ஒரு பாஸ் வேர்டு போல . அதை
சரியாக உபயோகிக்கும்பொழுது தான் செய்தி தெரிய வரும்.

இப்போது இதே உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
துளசிதளம் வலை பதிவு எளிய தமிழில் இருக்கிறது.
இதை எப்படி மாற்றலாம் ?
1த4ள1ச30த்1ள்1ம்00 2வ்1ல்9 3ப்1த்3வ்5000 4எள்3ய்10000 5த்1ம்3ழில்00000 6இர்3க்க்3ற்1த்300000.
இதில் முதல் எண், வரியில் இவ்வார்த்தை இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. அடுத்த எழுத்துக்கள் மெய் எழுத்து
வரிசையின் இடத்தில் காணப்படும் எழுத்து. உதாரணமாக , த4 என்பது து.
முதல் எண், வரியிலே இவ்வார்த்தை இருக்கும் இடத்தைக் குறிப்பது என்று சொன்னவுடனே, இந்தக்குறியீட்டை எப்படியும் மாற்றலாம்.

இதை ஆக்குவது கடினமல்ல. இதை ஒரு கணினி வழியாக ப்ரொக்ராம் செய்து விடலாம். அது எந்த கோப்பில் இருக்கிறது என்கிற தகவலையும் உள்ளடக்கலாம்.

அது சரி ! இதெல்லாம் எழுதுவதற்குள் போதும் போதும் என்று ஆகி உடம்பு வியர்த்துப்போயிடுமே !
அதற்குப் பதிலாக யாருக்கு எழுதுகிறோமோ அவருக்கே ஒரு ஃபோன் போட்டு சொல்லிவிடலாமே என்று
கேட்கிறீர்கள். சரிதான்.
ஆனால், உங்கள் தகவல், இன்னமும் ஒரு 200 வருடங்களுக்குப் பிறகு வரும் உங்கள் கொள்ளுப்பேரர்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என நீங்கள் விரும்பினால் ?

மற்றும், குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே தெரியவேண்டும் என நீங்கள் நினைக்கும்போதும் இதுபோன்ற‌
சங்கேத மொழிகள் பயன்படும்.

இதெல்லாம் இருக்கட்டும். ரகசிய மொழிகள், சங்கேதக்குறிப்புகள் இவற்றையெல்லாம் படித்து நாம்
என்ன செய்யப்போகிறோம். இந்த எழுத்துக்கள் என்னவாயிருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன
என நம்மில் பலர் நொந்துகொள்ளாமல் இல்லை.

உண்மைதான். எந்த ஒரு லிபி அதாவது எழுத்தையும் டி கோட் செய்துவிடலாம். ஆண்டவன் எழுதிய‌
தலை எழுத்தை மட்டும் முன்னமேயே டி கோட் செய்து அறிய இயலாது.
என்னதான் ஜாதகம், எண் கணிதம்,கை ரேகை சாத்திரம், நாடி ஜோசியம், குறி பார்த்தல் ஆகியவை இருந்தாலும் அவற்றின் வரம்பு
ஒன்று இருக்கிறது.

ஆண்டவன் எழுதிய எழுத்து அந்த வரம்புகட்குமேல் அப்பாற்பட்டது. அவ்வெழுத்து அவரவர் செய்த‌
அறன்பால் உடைத்து.
அதனால் தானோ என்னவோ வள்ளுவர் எழுதினார்:

அறத்து ஆறு இது என வேண்டா , சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.