Pages

Wednesday, June 25, 2008

உரத்த சிந்தனை (உறுத்திய சிந்தனை ! ) LOUD THINKINGஎங்கே போனாலும் நமக்கு இரண்டு வழிகள் தென்படுகின்றன.
இப்படியா, அப்படியா, இதுவா, அதுவா என்றே பல நேரம்
குழம்புகிறோம். நம்மைச் சுற்றியுள்ளோரையும் குழப்பத்தில்
ஆழ்த்துகிறோம். எதுவுமே துவக்கத்திலேயே முடிவெடுக்க இயலாத நிலை.
எதையுமே முழுமையாக நம்பி இதுதான் சரி, நமக்குத் தகுந்தது என்று
முடிவெடுக்க முடியவில்லை.
ஏதோ ஒன்று வாங்கவேண்டுமெனக் கிளம்பி, ஏதோ கண்களில் பட,
ஏதோ ஒன்று வாங்கி அதையும் அடுத்த நாள் மாற்றி இன்னொன்று
வாங்கி அதிலும் திருப்தி அடையாமல் இருக்கிறோம். பல தருணங்களில்
நாம் நம்பிக்கை வைத்தது தவறாகப்போய்விட்டதே என்றும் வருந்துகிறோம்.
என்னவோ ! நான் நினைச்சதே வேற ! நடந்ததே வேற என
வருத்தப்படுவோர் பலர்.
ஏதோ படிக்கவேண்டும், ஏதோ வேலைக்கு போகவேண்டும், ஏதோ
ஒருவனை (ளை) த்திருமணம் செய்யவேண்டும், என பல ஏதோக்களில்
தமது வாழ்க்கையை நடத்துபவர் பலர் தமது வாழ்வின் மத்தியிலோ
அல்லது மாலையிலோ தமைத்தாமே நொந்தும் கொள்கிறார்க்ள்.
இவற்றிற்குக் காரணம் கூறப்போனால் ஒன்று இவர்களுக்கு என்ன‌
வேண்டுமென்பதிலே இருக்கும் தெளிவின்மை.
இரண்டாவது எது வேண்டுமோ அது பற்றிய விவரங்கள், விளக்கங்கள்
இலாத நிலை. ஆகா ! இவர் சொல்லிவிட்டார் சரியாகத்தான் இருக்கும் .
அவர் வாங்கியிருக்கிறார். நன்றாகத்தான் இருக்கும். என்று பல விஷயங்களில்
பலரை நம்பி பின் ஏமாற்றம் அடைகிறோம்.
நாம் எதை நம்பவேண்டும் எதை நம்பிவிடக்கூடாது என்பதில் போதுமான‌
தேர்ச்சி நமக்கில்லை எனவே தோன்றுகிறது.

"தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயறவும்,
தீரா இடும்பை தரும் " என்பார் வள்ளுவர்.

(ஆராயாமல் ஒருவரை (ஒரு கருத்தை) நம்புதலும், ஆராந்தபின், எதை நம்பிச்
செயல்படத்துவங்கிவிட்டோமோ, அதன்பால், சந்தேகக்கண்களுடனேயே இருப்பதும்
முடிவிலா துன்பத்தைத் தரும்)

" ஒல்வது, அறிவது அறிந்து அதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல் " என்றும் சொல்கிறார் வள்ளுவர்.

ஒரு காரியம் நம்மால் முடியுமா ? அதில் அறியவேண்டியது எல்லாம் அறிந்து
விட்டோமா என்று எண்ணாமலேயே பல காரியங்களை நடுவிலே கொண்டு
வந்து நிறுத்திய நிலையில் குழப்பத்துடன் நிற்கும் மத்திய தர பிரிவினர்
ஏராளம்.

நமது பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உலகத்து அன்றாட வாழ்க்கையிலே
நமது தெளிவின்மையும் ஆராயாத நம்பிக்கையும் மட்டுமே முதற் காரணங்கள்.

நேரமில்லை. ஏதோ நடப்போம். செய்வோம். எல்லாம் அந்த ஆண்டவன்
பார்த்துக் கொள்வான் என்று சொல்பவரும் பலர்.

சஞ்சலம், குழப்பத்தின் மூல காரணமே indecision.

ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று ஆன்மீகப்பக்கம் திரும்பினால்
அங்கும் ஏகப்பட்ட குரல்கள். எது சரி ? எதை நம்புவது ? தோத்திரங்கள்,
சாத்திரங்கள், ஜாதகங்கள், பரிகாரங்கள், பல்வேறு புண்ய ஸ்தலங்கள்,
அங்கே ( நமது கர்ம வினைகளை நீக்குவதாகச் சொல்லப்படும்)
நீத்தார் கடன் முடித்தல், நாம் முத்தி பெற செய்யவேண்டிய கருமங்கள்,
ஹோமங்கள், பலவித தானங்கள். இவையெல்லாம் அவ்வளவு வேண்டாம்,
ஏதோ நம் வீட்டில் இருந்துகொண்டே இறை பக்தி செய்தால் மட்டும் போதும் என்று நினைத்தாலும், அங்கு
பற்பல திசைகளிலிருந்து பற்பல பரிந்துரைகள்.

இதுவா அதுவா என்று புரியாத‌ நிலையில் இரண்டையுமே ஒழிந்து நிற்பவர் ஏராளம். எதற்கு வம்பு, என‌
இரண்டையுமே கடைப்பிடிப்பர் சிலர். சிவனா, பெருமாளா ? அம்பாளா,
தாயாரா ? வினாயகனா , விச்வ்க்சேனரா ? தமிழா வட மொழியா ? தெய்வம்
பார்த்து இருப்பது கிழக்கா, வடக்கா, தெற்கா, மேற்கா ? எந்தக் கடவுள்
எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் !! எந்தத் திதியில் ? பிள்ளையாரா சதுர்த்தியில் . முருகன் சட்டியில்.
சிவன் பிரதோஷத்தன்று. எந்தக் கடவுளுக்கு எந்தக் கிழமையில் அர்ச்சனை செய்வது நல்லது ?
சனி பகவானுக்கு சனிக்கிழமை. அங்காரகனுக்கு செவ்வாய்
தக்ஷிணாமூர்த்திக்கு வியாழன். அம்பாளுக்கு வெள்ளி.
அனுமனுக்கும் சனிக்கிழமை விசேடம். முருகனுக்கும் வியாழன்
விசேடம்.

போதாக்குறைக்கு சூரிய மண்டலத்திலே சாயா க்ருஹமாம், ராகு கேது.
எல்லா க்ருஹங்களும் க்ளாக் வைஸ். ராகு கேது மட்டும் ஆன்டி க்ளாக்‍ வைஸ்
ராகுகாலத்தில் சனிக்கிழமையன்று அதை எதிர்பக்கம் சுற்றணும்னு எங்க வீட்டு ஜோசியர் சொல்றாரே?

எங்க சாமிக்கு என்ன பூ ? அரளியா,வில்வமா, துளசியா ? அனுமாருக்கு என்ன போடவேண்டும் ? வெண்ணையா ? வெற்றிலையா இல்லை வெற்று பேப்பரையே மடித்து ராமா ராமா என எழுதி அதை மாலையாக்கலாமா ?

நாம் வழிபடும் கடவுளுக்குப்பிடித்தது வடையா ? பாயசமா,
கொழுக்கட்டையா, நிலக்கடலை சுண்டலா ?

" எதுவுமே இல்லை. நமக்கு எது பிடிக்குமோ சாப்பிடுகிறோமோ அதையே
ஆண்டவனுக்கும் அர்ப்பித்துவிட்டு நாம் உண்ணலாம். தவறே இல்லை."

இது அத்வைத வ்யாக்யானம் அப்படின்னு வேற பக்கத்து வீட்டு வேத வித்தகர் சொல்கிறார்.

இவர்கள் போடும் வாதப் பிரதிவாதங்கள் எல்லாமே சரியென்று தோன்றினாலும், இந்த‌
வாதங்கள் முடிவதற்கு முன்னாடியே நாம் முடிந்து போய் விடுவோம் போல் இருக்கிறதே ! என்று
நினைத்தேன்.

எதிர்வீட்டு நண்பர் சொல்வார்: இது கலியுகம். மந்திரம், தந்திரம் எதுவுமே வேண்டாம் ராம ராம என்று இறைவனை இதயத்தில் நிறுத்தி ஜபம் செய்யுங்கள் அது போதும் .

அப்படியா ! சரிதான்! இராமனை விட இராம நாமம் தான் உசத்தி. என்று
கொஞ்ச நேரம் ராம ஜெபம் செய்யப்போனால், பக்கத்து வீட்டிலிருந்து சுதா பாடுகிறார்:
" சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார் ? சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார் ? "
நான் எனது மனைவியைப் பார்க்கிறேன். " எதற்கு நமக்கு வம்பு ? " நான்
ராம ராமான்னு சொல்றேன். நீங்கள் ஓம் நமசிவாய சொல்லுங்கள். அந்தக்
கடவுளுக்கு நம்மைப்பற்றித் தெரியாதா என்ன ? எல்லாம் அவன் அட்ஜஸ்ட்
பண்ணிக்கொள்வான்' என்று அட்வைஸ் தரும் தரும பத்னி.

இதெல்லாம் எதுவுமே இல்லை. நான் தான் அந்த கடவுள்.
விஷ்ணுவின் அவதாரம். என்று ஊருக்கு ஒரு கடவுள் உயிரோட.

ஏன் இப்படி ஏகப்பட்டது இருக்கே நமது நம்பிக்கைக்குள்ளே என்றால்
அதுதான் நமது மதத்தின் பெருமை. Diversity is the essence of our religion.
அப்படியும் சொல்கிறார்கள்.

என் நண்பர் ஒருவர். அரசாங்கத்தில் மிகப்பெரிய பதவியிலிருந்து ஓய்வு
பெற்றவர். மறைகளனைத்தும் ஒருங்கே கற்றவர். கற்று அதற்குத்தக‌
நிற்பவர். அவரிடம் கேட்டேன். "அய்யா ! வள்ளுவர் சொல்கிறாரே !

"யாம்மெய்யாக் கண்டவற்றுள், இல்லை, எனைத் தொன்றும்
வாய்மெயின் நல்ல பிற "


அய்யா ! இவர்கள் சொல்வதில் எல்லாம் எது உண்மை ? "

அவர் கேட்டார் , நீர் தமிழ் கற்றவர் தானே !
சரியென்றும் சொல்லமுடியவில்லை. இல்லை என்றும் சொல்ல "தான்" எனைத் தடுத்த நிலை.

மெளனித்தேன். அவர் தொடர்ந்தார்:

" நாடிலெழுத் தாறும் நடுவெழுத் தீரைந்தும்
ஓடி னொருபதினா லாகுமே ‍ = ஓடாய் நீ
ஓரெழுத்தைக் கண்டுறங்கி உன்னோ டுறங்கி நெஞ்சே
ஓரெழுத்தி லேசென் றுரை.
"

(அகரம் ஆரம்பித்த பாடங்களை ஏன் படிக்கவில்லை என்கிறாரோ ? )

" ஓரெழுத்தா ? "
"ஆம்."
" அதை எங்கே சொல்லித்தருவார்கள் ?"
"எங்கேயும் இல்லை ."
' அப்ப நான் முத்தி எப்படித்தான் பெறுவது " ஒரு விரக்தியுடன் கேட்டேன்.
அவர் பதில் சொன்னார்: சும்மா இரு.

எனக்கு புரிவது போல இருந்தது.
எண்ணங்களை ஒடுக்கினாலன்றி தெளிவு ஏற்படாது. ஆகவே மனதைக் கட்டுக்கொள் கொண்டு வா.
மனம் அமைதியுறும் போது இலக்கு நன்றாகத்தெரியும் எனச்சொல்கிறார்.
என்னால் முடியும் என்று தோன்றவில்லை.
நான் சொன்னேன்: அய்யா ! என்னால் சும்மா இருக்க முடியலையே !


"எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு."
சொல்றாருல்லே வள்ளுவரு, அது போல‌
இருந்துட்டுபோ அப்படின்னு சொல்றீகளோ ?

" இல்லை.
"சஞ்சலம் அற்று எல்லாம் நீ தான் என்று உணர்ந்தேன் என்
அஞ்சலியும் கொள்ளாய் அரசே பராபரமே " ... தாயுமானவர் சொல்வார் இல்லையா ?
அது போல் "எல்லாமே நீதான் என்று உணர்" என்றார்."


" அந்த ' நீ ' யாருங்க அய்யா ?
" அது நீ தான் "
" நான் நீ எனக்குறிப்பிட்டது அவனை.
நீங்கள் ' நீ ' எனக்குறிப்பிடுவது என்னையல்லவா ?"
" இந்த இரண்டுமே ஒன்று தான் . "


அதே சஞ்சலம்.

ஆனாலும் புரிகிறாற்போல் தோன்றியது.

"அய்யா" என்று அழைத்தேன். "இங்கேதான் இருக்கிறேன்.சொல்" என்றார்.
" நான் இத்தனை மறை படித்திருக்கிறேன். ! எவ்வளவு பாசுரங்கள்
ஓயாது ஒரு நாளைக்கு முப்பது மணி நேரம் சொல்லுகிறேன் !
இவ்வளவு படித்த எனக்குத் தெரியாத உண்மை அந்த மாடு மேய்த்த‌
சத்யகாமனுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது ?"

"அவன் ஒருவனைப் பிடித்துக்கொண்டான். அவன் வழி நடந்தான்."

"அந்த ஒருவன் யார் ? பிரும்மனா ?"

" இல்லை . பிரும்மனை அறியும் வித்தையைக் கற்பிக்கும் ஆசான்."

" எங்கே இருக்கிறார் ?"

http://jeevagv.blogspot.com

22 comments:

 1. தேரான் தெளிவும்....
  இதை படிக்கும் போது இராமகிருஷ்ணர் & விவேகானந்தரும் தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.
  விவேகானந்தரின் சந்தேகக்கண்ணை இராமகிருஷ்ணர் வெறுக்கவில்லை என்று படித்த ஞாபகம்.

  ReplyDelete
 2. ஒருமுறை நான் எங்கள் பாட்டி அவ்வை வீட்டிற்குப் போயிருந்தேன். ஓடிவந்து வாரியணைத்த பாட்டி தன்மடியில் கிடத்தி அன்பைப் பொழியலானாள். குழந்தாய்! இப்பொழுது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றாள். படித்துக்கொண்டிருக்கிறேன் பாட்டி என்றேன். நல்லா படிக்கிறாயா? யார் ஆசான்? என்றாள். யாருமில்ல பாட்டி நானாதான் தன்முயற்சியால படிச்சிக்கிட்டிருக்கிறேன் என்றேன்.

  பாட்டி சொன்னாள்:-

  மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிகம்நல்
  நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் -கூடும்
  குருவில்லா வித்தை குணமில்லாப் பெண்டு
  விருந்தில்லா வீடும் விழல்.

  என்ன புரிஞ்சிதா? ஒரு குருவைத் தேர்ந்தெடுத்துக்கோ என்றாள்.
  சரி பாட்டி எனச்சொல்லிவிட்டுத் தோட்டப்பக்கமா ஓலையும் கையுமா உக்காந்திருந்த எங்க தாத்தா வள்ளுவர்கிட்ட ஓடினேன்.

  அடேடே! வா குழந்தை! பாட்டியோட அப்படி என்ன ரொம்ப நேரமா பேசிக்கிட்டிருந்தே? அப்டின்னார்.

  ஒழுங்கா படிக்கிறியான்னு கேட்டாங்க தாத்தா!

  இதையா இவ்வளவுநேரம் பேசிக்கிட்டிருந்தீங்க? என்றார்.
  ஆமாம் தாத்தா! நல்லா படிச்சிப் பெரியாளா வரணும்னா ஒரு குருவைத் தேர்ந்தெடுத்துக்கோ-ன்னாங்க தாத்தா!

  அப்டியா? குருவைத் தேர்ந்தெடுக்கும் போது எப்படிப் பட்ட குருவைத் தேர்ந்தெடுக்கணும் தெரியுமா?:-

  அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
  திறனறிந்து தேர்ந்து கொள் -அத்தோட மட்டுமா?

  உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
  பெற்றியாரைப் பார்த்துத் தெர்ந்துகொள் -என்ன புரிஞ்சிதா? என்றார்.

  ஒண்ணுமே புரியல அப்டின்னுட்டு அவர்கன்னத்தில் நல்லா எச்சில்பட ஒரு முத்தம் வெச்சேன்.

  அடடா! இப்பத்தான் உண்மை விளங்கிற்று ஒரு பாட்டைத்தப்பா எழுதிட்டேன்னு திருத்தியெழுதத் துவங்கினார்.

  பாலொடு தேன்கலந் தற்றே குழந்தாய்!உன்
  வாலெயிறு ஊறிய நீர்.

  அந்த நேரம் எங்க பெரிய தாத்தா திருமூலர் வந்தாங்க. (அவர்தான் நம்ம குடும்பத்துக்கே மூலம்ன்னு அம்மா சொல்லியிருக்காங்க.)

  அடேய்! குழந்தைக்கிட்ட இப்படியா புரியாதமாரி சொல்றது? நான் சொல்றேன் வா குழந்தாய் ன்னு தோளில் வாரியணைத்துக்கொண்டு சொல்லத்துவங்கினார்.

  எப்படிப்பட்ட குருவைத்தேர்ந்தெடுக்கணும்ங்கறதுக்கு முன்னால் குருடுன்னா என்னன்னு தெரியுமா? என்னார்.

  ஓ! நல்லா தெரியுமே! கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்! புண்ணுடையர்ன்னா குருடர்ன்னுதானே பொருள்? அப்டித்தான் சின்ன தாத்தா சொல்லித்தந்தார். ஹா! ஹா! ஹா!

  ஆமாமாம். ஆனா இன்னுமொரு பெருங்குருடிருக்கிறது. அதத்தான் இப்ப நான் உனக்கு சொல்லப்போறேன்.

  குருடினை நீக்கும் குருவினைக் காணார்
  குருடினை நீக்காக் குருவினைக் காண்பார்
  குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக்
  குருடினில் வீழ்வது குருடது வாமே!

  ஆங்! புரிஞ்சிது தாத்தா! நம்ம அறிவுக்கண்ணைத் திறப்பவரா பார்த்துத் தேர்ந்தெடுக்கணுங்கறீங்க. அப்படியே செய்கிறேன் தாத்தா!

  ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...

  அய்யோ! மணி ஏழாச்சே! விடிஞ்சது கூடத்தெரியாம(ல்) தூங்கிக்கிட்டிருந்திருக்கிறோமே.

  ReplyDelete
 3. //பிரம்ம வித்தையை கற்பிக்கும்//
  திருவெண்காட்டில், பிரம்மவித்யாநாயகி தாள் சரணம்!

  ReplyDelete
 4. /எங்க சாமிக்கு என்ன பூ ? அரளியா,வில்வமா, துளசியா ? அனுமாருக்கு என்ன போடவேண்டும் ? வெண்ணையா ? வெற்றிலையா இல்லை வெற்று பேப்பரையே மடித்து ராமா ராமா என எழுதி அதை மாலையாக்கலாமா ?/
  இப்படியெல்ல்லாம் நிறைய நிறைய எத்தனையோ எதற்கு என்று யோசித்தால் - அத்தனைக் கர்மாக்களை செய்தால் தான் கொஞ்சமாவது துலங்கும் போல!

  ReplyDelete
 5. வடுவூர் குமார் said:

  //விவேகானந்தரின் சந்தேகக்கண்ணை இராமகிருஷ்ணர் வெறுக்கவில்லை//

  ஐயங்களைக் களைவது ஆசானின் கடமை அல்லவா ?
  அவற்றினை எவ்வாறு வெறுக்க இயலும் ?
  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 6. அகரம் அமுதா said:

  //அய்யோ! மணி ஏழாச்சே! விடிஞ்சது கூடத்தெரியாம(ல்)
  தூங்கிக்கிட்டிருந்திருக்கிறோமே.//

  மணி ஏழாச்சு.
  அகரம் முழித்துக்கொண்டு விட்டார்.
  சுப்புவுக்கு ஏழு மணி
  எப்ப வரும் ?

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 7. // திருவெண்காட்டில், பிரம்மவித்யாநாயகி தாள் சரணம்!//

  திருவெண்காடு புதன் க்ஷேத்ரம். புதன் வித்யா காரகன் அல்லவா ?
  தக்க தருணத்தில் எடுத்துச் சொன்னதற்கு
  மிக்க நன்றி.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 8. Jeeva Venkataraman said:

  //அத்தனைக் கர்மாக்களை செய்தால் தான் கொஞ்சமாவது துலங்கும் போல!//

  அப்படியா ! !!!!!!!!

  சத்யகாமன் கதை சொன்னவரா இதை எழுதுகிறார் ?
  சாந்தோக்கியத்தில் அடுத்து வரும் ஸ்வேதகேது கதை
  அல்லது அதற்குப்பிறகு வரும் சனத்குமாரன் கதைகளை தமது அடுத்த‌
  பதிவுகளில் எடுத்துச்சொல்வார் அல்லவா ?
  அப்பொழுது அளவளாவுவோம்.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 9. அப்படியா, கர்மாக்களைப்பற்றி திவா சார் இங்கே சொல்லிட்டு இருக்காரு.
  அங்கே வந்தும் கொஞ்சம் சொல்லலாமே!
  http://anmikam4dumbme.blogspot.com/

  ReplyDelete
 10. அகரம் அமுதா அவர்கள் "திருவள்ளுவரும்
  திருமூலரும் இருக்கையிலே இன்னொரு குருவும்
  வேண்டுவதோ ? என வினவியிருப்பது போல் தோன்றுகிறது.
  அப்படி இருந்தால் எனது பதில்:

  வள்ளுவம் விஞ்சிய வேதமில்லை.
  மூலர். அவர் மூலவர். அவர் இருக்கும்போது உத்சவர் எதற்கு ?

  வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவார்களா
  எனவா கேட்கிறீர்கள் ? நான் கண்டிப்பாக மாட்டேன்.

  அதே சமயத்தில்
  எல்லோரும் ஒரே குருவை நாடவேண்டுமா என்ன ? என்றால்
  இல்லை. குருவுக்கு இலக்கணம் நன்னூல் கூறும்.
  ஏன் ! திருமூலரின்7ம் தந்திரம் 34 அசற்குரு நெறி 35 சற்குரு நெறி
  விரிவாகவே விளக்குகின்றன.
  அதன்படி ஒரு ஆசானைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஜன நாயக‌
  உரிமை நம் யாருக்குமே உள்ளது. திருமூலர் சொல்லியது
  ஆஸ்த்ரேலியா முதல் ஜிம்பாபவே ( A to Z )
  நாட்டவர் யாராயினும், அவர்தம் மொழி எவ்வாராயினும், அவர்தம்
  பின்படுத்தும் தர்மம் (religious concepts) எதுவாயினும் பொருந்தும்.

  ஒன்று மட்டும் சொல்ல ஆவல். நம்முடைய குரு யாரோ அவர் நம் கண்களுக்குப்
  புலப்பட்டு விடின், உடல் வியர்த்துப்போகுமாம். கண்கள்
  குளமாகுமாம். நெஞ்சம் ஆர்ப்பரிக்குமாம். ஆனந்தம் கிடைத்த‌
  நிலையில் உளம் அமைதி பெறுமாம்.
  நான் சொல்லவில்லை. கபீர் சொல்கிறார்.

  நிற்க.

  குரு என்ற சொல் கு, ரு எனும் இரு எழுத்துக்கள் உள.
  கு என்ற சொல் இருட்டு எனப்பொருள்படும்.
  ரு என்ற சொல் நீக்குவது, அழிப்பது எனும் பொருள்படும்.
  ஆக, குரு என்பவர் இருட்டினை நீக்குபவர்.
  ஒளியினைத் தருபவர். ஆக, இருட்டினை நீக்க வல்லாதவர்
  குருவாக மாட்டார்.

  இதுவும் இங்கேயே நிற்கட்டும். ஒரு சின்ன ஐயம்.

  நீங்கள் தந்த திருமூலர் பாடல் இது:

  //குருடினை நீக்கும் குருவினைக் காணார்
  குருடினை நீக்காக் குருவினைக் காண்பார்
  குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக்
  குருடினில் வீழ்வது குருடது வாமே! //

  என்னிடமுள்ள புத்தகம்.
  திருமூலர் 6ம் தந்திரத்தில் பின்வருமாறு உள்ளது:

  13வது பாடல்.
  ஞானம் அளிக்கும் குருவை நாடாமல் கெடுவர்.

  குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
  குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
  குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
  குருடுங் குருடுங் குழிவிழு மாறே.

  பொருள் ஏறத்தாழ ஒன்று எனினும், பாடபேதம் இருக்கிறதே ? சற்று விளக்கிச்
  சொல்ல முடியுமா ?

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 11. ஜீவா வெங்கடராமன் சொன்னார்:
  //அப்படியா, கர்மாக்களைப்பற்றி திவா சார் இங்கே சொல்லிட்டு இருக்காரு.
  அங்கே வந்தும் கொஞ்சம் சொல்லலாமே!
  http://anmikam4dumbme.blogspot.com //

  பார்த்தேன். ஒரு க்விக் லஞ்ச் நம்ப சரவண பவனிலெ தர மாதிரி
  என்னென்ன நித்ய கர்மாக்கள் செய்யவேண்டும் என்று
  ஒரு சின்ன அட்டவணை கொடுத்திருக்கிறார். மேலும் அதில்
  ஏதும் விட்டுப்போயிருக்கறதா யாரேனும் நினைத்தால் எழுதலாம்
  என்றும் சொல்லியிருக்கிறார். ஓளபாசனம் என்று ஒன்று இருக்கிறது.
  அதை ஒருவன் த்விஜன் ஆன உடனேயே நித்யபடி செய்யவேண்டிய‌
  கர்மா. அந்த ஒளபாசனத்தில் எழுப்பப்பட்ட அக்னி அணையாமல்
  இருக்கவேண்டும் என்பது சாஸ்த்ரம். எது வரை இருக்கவேண்டும் என்றால்
  உயிர் பிரிந்து உடல் தகனம் இந்த அக்னியிலிருந்து தான் எடுத்துச்
  செல்லவேண்டும் என்றும் சொல்கிறது சாஸ்திரம்.

  இதையெல்லாம் நான் அங்கே சொல்லவில்லை. ஏன் எனில் இது
  அவருக்குத் தெரியாமல் இருக்காது. இதுபோன்று இன்னும் எத்தனை
  எத்தனையே தேச கால வர்த்தமானத்திற்குத் தகுந்தாற்போல் இருக்கின்றன்.
  அவையும் அவருக்கு த் தெரியாமல் இருக்காது. ஏதோ ஒரு தருணத்தில்
  விளக்கிச்சொல்வார். ஐயம் வேண்டாம்.

  We are on a different subject altogether. I am focussing on the lead given by Satyakama whose story has been described in depth by you in your blog.I need to add however the following:
  1. நமது பதிவு சாதகன் ஒருவன் ஞானத்தை நோக்கி குருவினை நாடி
  அவர் சொல் கேட்டு நடந்து குருவின் முகமாக ஞானம் பெற்றவன் பற்றியே.
  ஞானம் அடைந்துவிடின் கர்மங்கள் ஏது ? கர்மம் செய்யவேண்டுமென்ற‌
  எண்ணமே அங்கு இல்லையே! ஞானத்தை
  அடைந்தவ‌ன் எல்லாவற்றையும் அடைகிறான் என்பது வேத வாக்கியம்.
  ஞானம் அடைந்த நிலையில் கர்ம வினைகள் விடுபடுகின்றன.

  2. ஆனால், ஞானம் எப்போது வரும் ? கர்மங்களை ஏதோ ஒரு காரணத்தினால்
  செய்யமாட்டேன், எனக்கு ஞானம் வந்தாயிற்று என்று சொல்பவனுக்கு
  ஞானம் வரவில்லை எனவே சொல்லவேண்டும். கர்ம வினைகள் தொடரும்
  வரையில், கர்மங்கள் (கர்மாக்கள் என்று சொன்னாலும் ஆட்சேபணை இல்லை)
  நீங்கா. கர்மாக்களைப்பற்றியே இவனது சிந்தனையும் இருக்கும். எதை
  எப்படி செய்வது என்பது பற்றியே இவன் நினைப்பான். ‌


  3. ஞானம் வேண்டும் என்ற நினைப்பே பழைய கர்ம வினைகள் ஒரு
  முடிவுக்கு வரும் நிலைதான். இந்த நிலை ( ஜிக்ஞாஸா ) வந்தவன்
  கர்மாக்களைப்பற்றி நினைப்பதில்லை.

  ஞானம் பெற்றவன் கர்மாக்களைச் செய்தால் என்ன என்ற கேள்விக்கு
  பிருஹத் ஆரண்யகம் Chapter 1 = IV section = Manthra 10
  க்டைசி 4 வாக்கியங்கள்:: அன்யோஸாவன்யோ அஹம் அஸ்மீதி. ந ஸ் தேவஹ‌
  யதா பசுரேவ ஸ தேவானாம். யதா ஹ வை பஹவஹ பசவோ மனுஷ்ய‌
  புஜ்யுஹு; ஏவமேகைகஹ; புருஷோ தேவான் புனக்க்திஹி; ஏகஸ்மின்னேவ‌
  பசாவாதீயமானே அப்ரியம் பவதி, கிம் பஹுஷு ? தஸ்மா திஷாம்
  தன்ன ப்ரியம் யதேதன்மனுஷ்யா வித்யுஹு
  வேதம் இதுபற்றி தெளிவாக இருக்கிறது. அவித்யா எனச்சொல்லப்படும்
  இதன் பொருளை யாரும்
  வெளிப்படையாகச் சொல்வதில்லை.

  கர்மாக்கள் தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. சத்யகாமன்
  ஞானம் அடைந்தான். எனவே அந்த நிலைக்குச் சென்றவருக்கு கர்மங்கள்
  இல்லை என்றே ஒரு கோடி காட்டினேன்.

  சொற்குற்றம், பொருட்குற்றம் இருப்பின் மன்னிக்கவும்.
  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 12. சத்யகாமன் ஞானத்தை அடைந்ததற்கான ஆதர மூலமே - பசுக்களை மேய்த்து, வருடக்கணக்கில் அந்தப் பணியினை மேற்கொண்டது - குரு சொன்னதையே அவனது கர்மாவாகக் கொண்டது என நினைக்கிறேன் ஐயா. சாத்திரங்கள் சொல்லும் கர்மாவைத்தான் என்றில்லை. அவரவர் தம் சூழ்நிலையில், காலத்தில் எது தனக்கான கர்மா என்பதை வரையுறுத்திக் கொண்டு, அதனை நிறைவேற்றுவதென்பதே, ஞானத்தை அடைவதற்கான முதல் வழி என நினக்கிறேன்.

  ReplyDelete
 13. ஜீவா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
  ஆசிகளும் கூட.
  தாங்கள் இரண்டு கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீகள்.
  1. சத்யகாமன் குரு சொன்னபடி மாடு மேய்த்து கர்மங்களைச்
  செய்தான்.
  இதையே தான் நானும் எனது இதற்கு முந்தைய பதிலில் சொன்னேன்.
  பாரா 1 ஐ கவனிக்கவும்.
  எல்லா கர்மாக்களையும் அனுசரித்தல் வேண்டும். ஏதோ காரணம்
  காட்டி அவற்றைப் புறக்கணிக்கலாகாது. ( நோட்: எனது பதில்
  உங்கள் பதிவில்: சுண்டு விரல் வீக்கம் என்று 50 நாள் சிக் லீவ்
  போட்டுச் செல்லவில்லை )
  2. சத்யகாமன் மாடு மேய்த்துக் கொண்டே இருக்கிறான். இருக்கிறான்.
  இருக்கிறான். இன்னமும் இருக்கிறான். என்று சொல்லிச் சொல்லிக்
  கதை முடிகிறதா ? (கர்மாக்களைச் செய்வதால் ஞானம் பிறக்கறதா ?
  இல்லை. பூர்வ ஜன்ம கர்ம வினைகள் கழிகின்றன. ( There is a moment
  when there is no balance credit or debit in one's account.
  Kindly note that even good karmas result in further births, to enjoy
  the fruits of one's deeds done in prior births )
  கர்மாக்களைச் செய்வதால் " கொஞ்சம் கொஞ்சமாக ஞானம் துலங்கும் "
  என்பதை நோக்குவோம். இப்படி இருந்தால், சத்ய காமன் கதை எப்படி
  இருக்கவேண்டும் ?
  சத்யகாமன் 10 வருஷம் மாடு மேய்த்தான். மாடு ஒன்று அவனிடம் பிரும்மத்தைப்
  பற்றி பேசியது. பேசி முடித்தபின், இன்னும் பத்து வருஷம் மேய்த்துக் கொண்டு
  இரு. உன்னிடம் அக்னி வருவார் என்று சொல்லவில்லை. பத்து வருடம் கழித்து
  அக்னி வந்து அதே சொல்லி இன்னும் பத்து வருடம் மேய். அன்ன பட்சி வந்து
  மேற்கொண்டுசொல்லும் என்று சொல்லவில்லை.
  Vedhas proclaim precisely: Realisation of Gnana is almost instantaneous. This is a revelation not a process.

  3. கர்மத்தை முடிக்க இருக்கையில் ஞான மார்க்க வழி தெரிகிறது.
  எப்படி ? அவன் மேய்த்த மாடுகளிலே ஒன்று அவனுக்கு ப்ரும்மன்
  என்றால் என்ன ? என்பதெல்லாம் சொல்ல துவங்குகிறது. பிறகு
  அக்னி, பிறகு அன்ன பட்சி, பிறகு ஒரு பறவை. இவையெல்லாம்
  ஞான மார்க்கத்தில் மனதைச் செலுத்தி அதிலேயே நிஷ்டையாக‌
  இருப்பவர்கள். ( இவர்கள் இன்னமும் கர்ம காண்டிகளாகவே
  இருக்கிறார்கள். முற்றும் தெளிந்த கைவல்ய நிலை வர இருக்கிறது.
  வரவில்லை )
  4. குரு முன் நிற்கிறார் சத்யகாமன். அவர் கேட்கிறார்: நீ ஞானம்
  பெற்று விட்டாற்போல் தெரிகிறதே !
  (ஞானத்திற்குண்டான பக்குவம் வந்துவிட்டது. ஆயினும் எந்த
  ஞானமும் குருவின் முகம் வழியாகத்தான் வரவேண்டும் என்பதில்
  உறுதியாக இருக்கும் சத்யகாமன் என்ன சொல்கிறான்: ஐயா !
  நான் மனிதரல்லாதவரிடம் இதைப் பெற்றேன் என்பது உண்மை.
  ஆயினும் தங்களிடமிருந்து தான் பெற விரும்புகிறேன் )
  5. இது ஞானம் அடையும் perhaps the final moment, when the
  winner is about to cross the final post.
  6. குரு அவனுக்கு ஞானத்தினை ப்போதிக்கிறார்.
  இப்பொழுது அவன் ஞானம் அடைகிறான்.
  ஞானம் அடைந்தபின்னும் அவன் மாடு மேய்க்கச் செல்கிறானா ?
  மாடு மேய்த்து விட்டு வா எனச் சொல்லப்படுகிறானா ?

  சத்யகாமனின் கதை நீங்கள் துவங்கமட்டும் இல்லை. அக்கதையின்
  கடைசிப்பகுதியும் தெளிவாக அழகாக எடுத்துரைத்து இருக்கிறீர்கள்.
  அதனால்தான் உங்கள் முதல் பின்னோட்டத்திற்கு ,"அப்படியா ?" என வினவினேன்.

  அடுத்த உங்கள் கருத்து:
  // சாத்திரங்கள் சொல்லும் கர்மாவைத்தான் என்றில்லை. அவரவர் தம் சூழ்நிலையில், காலத்தில் எது தனக்கான கர்மா என்பதை வரையுறுத்திக் கொண்டு, ..... " //
  INDEED A pragmatic approach. Equally self - explanatory.
  சரியே.
  ( but back to square no. 1 )

  எனக்குத்தெரிந்தவரை, புரிந்தவரை எழுதுகிறேன்.
  பொருட்குற்றம் இருப்பின் மன்னிக்கவும்.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 14. //" இல்லை . பிரும்மனை அறியும் வித்தையைக் கற்பிக்கும் ஆசான்."

  " எங்கே இருக்கிறார் ?"//

  தேடல் ஆரம்பித்துவிட்டதல்லவா?
  சரியான நேரத்தில் குருவும் வந்து விடுவார்!
  இதோ ஜீவா மூலமாக வழி வந்தாச்சு போல இருக்கே!

  //ஓளபாசனம் என்று ஒன்று இருக்கிறது.
  அதை ஒருவன் த்விஜன் ஆன உடனேயே நித்யபடி செய்யவேண்டிய‌
  கர்மா. அந்த ஒளபாசனத்தில் எழுப்பப்பட்ட அக்னி அணையாமல்
  இருக்கவேண்டும் என்பது சாஸ்த்ரம்.//

  ஐயா சொல்லியாச்சே!
  http://anmikam4dumbme.blogspot.com/2008/06/blog-post_16.html

  ரொம்பவே சுருக்கமா சொல்லி இருக்கேன். ஔபாஸனம் என்கிற வார்த்தையை எழுதலைதான். அக்னி காரியம் என்றே எழுதி இருக்கிறேன்.

  அர்சுனா எனக்கு கர்மாவால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும் நான் கர்மா செய்து கொண்டு இருக்கிறேன் என்று கீதாசாரியன் சொன்ன மாதிரி இருக்கே!
  பெரியவர்கள் எதை செய்கிறார்களோ அதையே மற்றவர்கள் பின் பற்றுகிறார்கள்.
  சொல்வதை அல்ல.
  அதனால் ஞானம் வந்தாலும் இந்த உலகின் தொடர்பு இருக்கிறவரை கர்மா செய்யத்தான் வேண்டும்.
  ஞானிகளில் பிரம்ம வித், வரன், வரீயான், வரிட்டன் என்று 4 விதம் இருப்பது தங்களுக்கு தெரிந்ததுதானே!

  உணர்ச்சியோடு எழுதியிருக்கிறீர்கள். நல்ல பதிவு!

  ReplyDelete
 15. ///////அகரம் அமுதா அவர்கள் "திருவள்ளுவரும்
  திருமூலரும் இருக்கையிலே இன்னொரு குருவும்
  வேண்டுவதோ ? என வினவியிருப்பது போல் தோன்றுகிறது.///////

  நான் உருவகப் படுத்தியது உண்மையே! ஆனால் தாங்கள் காணும் பொருளிலல்ல. நான் எனதாசானைத் தேர்ந்தையே உருவகமாகக் கொடுத்தேன் அவ்வளவே!

  ///////நீங்கள் தந்த திருமூலர் பாடல் இது:

  ஃஃகுருடினை நீக்கும் குருவினைக் காணார்
  குருடினை நீக்காக் குருவினைக் காண்பார்
  குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக்
  குருடினில் வீழ்வது குருடது வாமே!

  என்னிடமுள்ள புத்தகம்.
  திருமூலர் 6ம் தந்திரத்தில் பின்வருமாறு உள்ளது:

  13வது பாடல்.
  ஞானம் அளிக்கும் குருவை நாடாமல் கெடுவர்.

  குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
  குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
  குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
  குருடுங் குருடுங் குழிவிழு மாறே.

  பொருள் ஏறத்தாழ ஒன்று எனினும்இ பாடபேதம் இருக்கிறதே ? சற்று விளக்கிச்
  சொல்ல முடியுமா ? ///////

  கம்பன் தனக்கு இறுதிநேருங்கால் இப்படிப்பாடியதாக ஓர்பாடல் நூலில் உள்ளது.

  வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ரெண்டுண்டு
  வில்லம்பில் சொல்லம்பே மேலதிகம் -வில்லம்புப்
  பட்டதடா என்மார்பில் தார்வேந்தா! நின்குலத்தைச்
  சுட்டதடா என்வாயிற் சொல்!

  என்னிடம் உள்ள தனிப்பாடல் திரட்டில் கீழ்கண்ட வாறுள்ளது.

  வில்லம்பு சொல்லம்பு மேதகவே யானாலும்
  வில்லம்பில் சொல்லம்பே வீறுடைத்து - வில்லம்புப்
  பட்டுறுவிற் றென்னைஎன் பாட்டம்பு நின்குலத்தைச்
  சுட்டுறுவிற் றென்றே துணி!

  இஃதே போல்தான் அப்பாடலும் மாறியிருக்கக் கூடும். பாடலுக்கு உரைகாண வந்தோர் தங்கள் வசதிக்காகப் பாடலை இப்படி மாற்றியிருக்கலாம் என நினைக்கிறேன்.

  இதே திருமூலரின் பாடலை ஒருவர் தன்வலையில் இட்டுள்ளார். அது இப்படி அமைந்துள்ளது.

  குருட்டினை நீக்கும் குருவினைக் காணார்
  குருட்டினை நீக்காக் குருவினைக் காண்பார்
  குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
  குருடுங் குருடுங் குழிவிழு மாறே.

  தங்களின் பாடலிலுள்ள கொள்வர் என்பதைக் காண்பார் என்று அவர் கையாண்டுள்ளார். ஆகையால் நான் கண்ட நூலில் உள்ளதுபோல் குறிப்பிட்டுவிட்டேன். அவ்வளவே.

  பழம்பாடல் என்பதால் இதுபோல் தவறுகள் ஏற்படுகிறதா என்றால் இல்லை. சென்ற நூற்றாண்டின் மாகவியான பாரதி எட்டையபுர அரசகவியைப் பழித்து எழுதியதாக ஓர் வெண்பா உள்ளது. பாடல் இதுதான்.

  ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
  ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் -மாண்பற்ற
  காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
  பாரதி சின்னப் பயல்.

  இதையே வேறோர் நூலில் இப்படிக் கண்டேன்.

  காரதுபோல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
  பாரதி சின்னப் பயல்.

  ஆக இத்தவறுகள் நூலாசிரியர்களால் வருவது.

  ReplyDelete
 16. Dhiva said:
  //அதனால் ஞானம் வந்தாலும் இந்த உலகின் தொடர்பு இருக்கிறவரை
  கர்மா செய்யத்தான் வேண்டும்.//

  திவா சார் முதன் முதலாக இந்த வலைக்கு வந்திருக்கிறீர்கள்.

  ஸ்வாகதம்.
  தாங்கள் வருவதே எனது பாக்யம்.
  ஈஸ்வர ஸங்கல்பம்.

  யான் 'அத்வைதம்' விதித்த எல்லைக்குள் இருக்கிறேன்.

  ஞானாத் மோக்ஷஹ என்பது கெளட ப்ரயோகம் ( gowda prayogam )
  ஞானமேவ மோக்ஷஹ என்று தான் பாஷ்யம்.

  ஞானம் என்பது பிரும்மஞானம்.
  பிரும்மவித் பிரும்மைவ பவதி
  பிரும்மத்தை அறிந்தவன் பிரும்மனாகிறான்.
  அஹம் பிரும்மாஸ்மி இது மஹா வாக்யம்.
  இதன் பொருளும்
  ஸர்வம் அஹம் அபவது.
  There is nothing other than me. Notion of differences just obliterates.
  ( இல்லை, differences Exist என்று சொன்னால் ...we enter possibly into a different frame of discussion. )
  There is absolute liberation at this stage when one gets this
  sarvathmabhava.

  லிபரேஷன்னு வந்தப்புறம்கூடவா .. ? !

  // ஞானிகளில் பிரம்ம வித், வரன், வரீயான், வரிட்டன் என்று 4 விதம் இருப்பது தங்களுக்கு தெரிந்ததுதானே! //
  ததுதான்.
  1. ஸ்வாமி ! ஞானம் அடைந்தவன் ஞானி இல்லையா ?
  ஞானம் மோக்ஷமா ?
  அல்லது ஞானம் மோக்ஷ சாதனமா ?
  ( அப்ப ஞானம் காரணமாகவும் மோக்ஷம் கார்யமாகவும் ஆகும்.)

  All or Most of these enunciation depend on the school of thought that one belongs to.
  2. வ்யவஹாரிக சரீரம் இருக்கிறவரை கர்மா செய்ய வேண்டியது தான், என்கிறீகள்.
  ஒரு நிலையில் நீங்கள் சொல்வது சரியே. நம்முடனே இருந்து சித்தியானவர் ரமணர்.
  அவர் சிஷ்யர் நிலைக்கு இறங்கி வந்து அவர்களது கேள்விகட்கு சமாதானம் கொடுப்பதும்
  ஒரு வகையில் கர்மா தான்.( இன்னொரு விஷயம். மஹா பெரியவா நித்யம் சந்த்ர மெளீச்வர பூஜை செய்து கொண்டிருந்தார். என்னை மாதிரி ஒருவர் அந்தக் காலத்திலே ( 1970 லே என்று நினைக்கிறேன்.) ஸ்வாமிகளிடம், இதே கேள்வியைக் கேட்க, அதற்கு அவர் தந்த பதில் ரா.கணபதி எழுதிய புத்தகத்தில் இருக்கிறது. தெய்வத்தின் குரல் என்பது அந்தப்புத்தகம். )
  இப்படி பேச ஆரம்பித்தால் ' கர்மா ' என்று எதைச் சொல்கிறோம் என்று ஒரு டிஸ்கஷன்
  துவங்கும். யார் யாருக்கு என்னென்ன கர்மான்னு விதிச்சிருக்கு. உண்மைதான்.

  வாசஹ தோஷஹ க்ஷந்தவ்யஹ‌

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 17. தாங்கள் சொன்ன யாவையையும் வழி மொழிகிறேன் ஐயா. குற்றம் கண்டு சொல்லும் அளவிற்கெல்லாம் அடியேன் அறியேன்.

  ReplyDelete
 18. சூரி ஐயா! நான் 3 சிங்கங்கள் முதல் உங்க பதிவுகளை படிக்கிறென்.
  1-2 பின்னூட்டம் கூட போட்டதா நினைவு.
  உங்க பின்னூட்டம் பத்தி நாளை விவாதிக்கிறேன். இன்னிக்கி நேரமாச்சு!

  @ ஜீவா, உங்க பின்னூட்டம் யாருக்கு போட்டது?

  ReplyDelete
 19. கைவைல்லிய நவநீதம்.
  http://groups.google.com/group/illam/browse_thread/thread/39e7af7be4f10f5f/b0e0f552f8a045c1
  88.

  அத்வைத சொரூபத்தை அறிந்த ஞானம் பிரதி பந்தத்தால் நீங்குமோ?

  நீநானென் றிரண்டிலாம னிறைந்தபூ ரணமா யெங்கும்
  நானாகத் தெளிந்த ஞான நழுவுமோ குருவே யென்றான்
  தானாகும் பிரம ரூபஞ் சற்குரு நூலாற் றோன்றும்
  ஆனாலுந் தடைக ளுண்டே லநுபவ முறைத்திடாதே

  நீ [பிரமம்] நான் [கூடஸ்தன்] என்று இரண்டிலாமல் நிறைந்த பூரணமாய் எங்கும் நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே? என்றான். தானாகும் பிரம ரூபம் சற்குரு[வின் உபதேசத்தாலும்] நூலால் (வேத சாஸ்திர விசாரத்தாலும்) தோன்றும். ஆனாலும் (அப்படி பிரம அநுபவம் உண்டானாலும்) தடைகள் உண்டேல் (இருக்குமானால்) அநுபவம் உறைத்திடாதே (ஸ்திரப்படாது).

  ReplyDelete
 20. திவா கூறுகிறார்:

  //(அப்படி பிரம அநுபவம் உண்டானாலும்) தடைகள் உண்டேல் (இருக்குமானால்) அநுபவம் உறைத்திடாதே (ஸ்திரப்படாது).//

  எனது பதில்:

  தடைகள் உண்டேல் (இருக்குமானால் ) என்ற வார்த்தைகள் ஸ்பஷ்டமாக, நிஸ்ஸந்தேகமாக‌
  இருக்கின்றன.
  ஆனால்,
  பிரும்மஞானம் never results with a qualification
  or with a string.
  எனக்குப்புரிந்தவரை இப்பா கூறுவது
  "பிரும்மஞானம் அடைந்தபின்னும் பின் ஏற்படும் சில தடைகளால்
  அது நிலைத்து நில்லாத நிலை ஏற்படும் "
  இது சாத்தியம் இல்லை என்றில்லை.
  ஒரு உதாரணத்திற்கு சொல்லப்போனால் (
  உலகவாழ்க்கையில் துறவிகள் ஆனவர்கள் பின் ஏதோ ஒரு காரணத்திற்காக‌
  திரும்பி சம்சார சக்ரத்திற்குள் வருகிறார்கள்.
  இதனால் இவர்கள் பிரும்ம ஞானம் அடையவில்லை என்றில்லை. அதில்
  நிலைத்து நிற்க இயலவில்லை. I have answered this point quite elaborately in my previous comments or replies.

  இரண்டாவதாக, பிரும்ம ஞானம் பெற இயலும் யோகியின் திறனை பிரும்ம ஸூத்ரம்
  40 முதல் 51 வரை எடுத்து ச் சொல்கிறது.
  ஸூத்ரம் 47 ல் நிர் விசார வைசாரத்யே அத்யாத்ம ப்ரஸாத என்று சொல்லி
  நிரிவிசார சமாதி பெறும்போது தான் ஆத்ம அமைதி கிட்டுகிறது.
  முதலில் சம்ப்ரஞ்ஞாதி சமாதி
  ஸ்தூலப்பொருள் மீது எனின் சவிதர்க்கம் அல்லது நிர்விதர்க்கம்.
  சூக்ஷமப்பொருள் மீது எனின் சவிச்சாரம் அல்லது நிர்விசாரம்.

  இவ்வாறு வாய்த்த நிர்விசார சமாதியிலிருந்து நழுவாது ( கீழ்கோடிட்டு அழுத்தமாக பல‌
  தடவை சொல்லவேண்டும் ) யோகி ஒருவன் மனம் தூய்மைப்படவே ஒளிரும் மனதில்
  தமோ, ரஜோ, குணங்கள் இழந்தமையால், ஆழ்ந்த அமைதி தெளிவாக வருகிறது.
  ஸூத்ரம் : 48: ருதம்பரா தத்ர ப்ரக்ஞா.
  உண்மைத்தெளிவு பெற்ற ஞான நிலை ருதம்பரா எனப்படும்.
  ஸூத்ரம்: 50 : தஜ்ஜ ஸம்ஸ்காரோ அன்ய ஸம்ஸ்கார பிரதி பந்தி.
  ருதம்பரா பிரஞ்ஞையால் வரும் ஸம்ஸ்காரம் இதுவரை இருந்த
  மற்ற ஸம்ஸ்காரங்களைத் தடை செய்யும். PLEASE UNDERLINE THIS.
  இதற்குப் பிறகும் நிர்பீஜ சமாதி
  ஸூத்ரம்: 51: தஸ்யாபி நிரோதே ஸர்வ நிரோதாத்
  நிர்பீஜ சமாதி.
  " இன்னிலையில் தான் ஏகாக்ரமான நிலை. கூத்தாடும் மற்ற விருத்திகளை ஒடுக்கியபடி
  எழுகிறது. சம்ஸ்காரங்களை அழிக்கிறது. தன்னைத் தவிர எதுவுமற்ற ( அஹம் பிரும்மாஸ்மி )
  ஒரு தனியான ஒரு பிரஞ்ஞான நிலையாக இருந்த அதுவும் தானே ஒடுங்கி விட்டதன்
  பயனாக நிர்பீஜ சமாதி நிலைக்கிறது.
  இதுவும் சித்தம் நன்றாக ஒடுக்கப்பட்ட நிலை. முழு சுதந்திரனாகப் புருஷன் பிருகிருதியின்
  பிடியிலிருந்து தப்பித்து விடுகிறான். "
  இந்த விடுதலை நிலை சித்த விருத்தி நிரோத நிலையாகும்.
  இது தான் கைவல்ய நிலையை ஏற்படுத்தும்.
  கைவல்ய நிலையை அடைந்தவன் திரும்புவதில்லை.

  திவா அவர்களுக்கு நன்றி ஒரு விக்ஞாபனும் கூட.

  ஒன்று, நான் ஞானம் அடைந்தவன் இல்லை. அப்படி சொல்லிக்கொள்ளவும் இல்லை.
  ஞான சாதகன் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்குக் கூட நான்இல்லை.
  ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபடலாம் என்று எண்ணுபவனுக்கு எத்தனை எத்தனை
  வாத விவாதங்கள் முன்னே நிற்கின்றன என்று தான் என் பதிவில் சொன்னேன்.
  அத்தனையும் பலித்தனவோ நம் வாதங்களினால் ??

  இந்த வாத சம்வாதங்கள் (எத்துணைதான் அறிவு பூர்வமாக இருந்தபோதிலும் )
  ஒரு முடிவில்லாது போகுமென்பதால்
  அவற்றினையே தான் செய்துகொண்டிருக்கிறோம். Perhaps these discussions prove the purport and inner content of my basic posting.
  தர்க்கங்கள் தொடர்வதும் ஒரு ஜன்ம ஜன்மாந்தர பிரதி பந்தங்கள்தான். (அடுத்த ஜன்மத்திலே ( !! ?? )
  திவா சுப்பு ஆகி சுப்பு திவா நிலைக்கும் வரலாம் )
  whatever it be,
  ஸம்ப்ராதே ஸன்னிஹிதே காலே
  நஹி நஹி ரக்ஷதி டுக்ரங்கரணே
  these arguments (with no finality in sight ) are never going to aid at one's final moment.
  So, therefore,
  எவரோ ஒரு குருவைப் பிடித்துக்கொள்வோம்.
  அவர் சொன்னபடி நடப்போம்.
  தெளிவு பெறுவோம்.
  அமைதி பெறுவோம்.
  இது தான் சத்யகாமன் காட்டிய வழி.

  தாங்கள் ஞான மார்க்கத்தில் பெரியவர்கள்.
  சொற்குற்றம் மன்னித்தருள வேண்டும்.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.
  பின் குறிப்பு: இதெல்லாம் இருக்கட்டும். .
  ஒரு மரத்தின் கீழே பாம்பு இருக்கிறது. கருவேப்பிலை மரம் இருக்கிறது..
  அது கடவுள் என்று நம்புகிற ஒரு கிராமத்து மக்கள் பற்றி அற்புதமாக ஒரு வர்ணனை
  மேடம் க்ருத்திகா அவர்கள் தனது வலையில் செய்திருக்கிறார்கள். அவர்கள்
  விரும்பியவாறு நம்பிக்கையின் ஒரு சில பரிணாமங்களை எனது இன்னொரு தளத்தில்
  இட்டிருக்கிறேன். அங்கும் வரவும்.
  http://arthamullavalaipathivugal.blogspot.com

  ReplyDelete
 21. //1. ஞானம் மோக்ஷமா ?
  அல்லது ஞானம் மோக்ஷ சாதனமா ?
  ( அப்ப ஞானம் காரணமாகவும் மோக்ஷம் கார்யமாகவும் ஆகும்.)//
  ==
  சுப்பு ஐயா, நீங்க இப்படி கேட்டதுக்குதான் பதில் எழுதினேன்.
  --
  திவா கூறுகிறார்:
  ==
  ஐயா நான் மேற்கோள்தான் காட்டினேன். அது கைவைல்லிய நவநீதம் என்கிற நூலில் உள்ளது.
  --
  இதனால் இவர்கள் பிரும்ம ஞானம் அடையவில்லை என்றில்லை. அதில்
  நிலைத்து நிற்க இயலவில்லை. I have answered this point quite elaborately in my previous comments or replies.
  ==
  சரிதான், ஒப்புக்கொள்கிறேன்.
  -
  இரண்டாவதாக, பிரும்ம ஞானம் பெற இயலும் யோகியின் திறனை பிரும்ம ஸூத்ரம்
  .....
  கைவல்ய நிலையை அடைந்தவன் திரும்புவதில்லை.
  ==
  ஆக பிரம்ம அனுபவம் பெற்று திரும்புதல் கூடும். அது ஸ்திரப்பட்டால் திரும்பார். சரிதானே?
  --
  திவா அவர்களுக்கு நன்றி ஒரு விக்ஞாபனும் கூட.

  ஒன்று, நான் ஞானம் அடைந்தவன் இல்லை. அப்படி சொல்லிக்கொள்ளவும் இல்லை.
  ஞான சாதகன் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்குக் கூட நான்இல்லை.
  ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபடலாம் என்று எண்ணுபவனுக்கு எத்தனை எத்தனை
  வாத விவாதங்கள் முன்னே நிற்கின்றன என்று தான் என் பதிவில் சொன்னேன்.
  அத்தனையும் பலித்தனவோ நம் வாதங்களினால் ??
  ==
  பலித்தன ஐயா!
  ஆனால் இது தவறு என்று தோன்றவில்லை.
  கருத்துப்பறிமாற்றங்கள் எப்போதுமே தேவை.
  நாமென்ன மற்ற இடங்களில் நடப்பது போலவா செய்தோம்?

  எழுத ஆரம்பிக்கும்போதுதான் நாமும் யோசனை செய்கிறோம்.
  பல விஷயங்கள் ஸ்திரப்படுகின்றன. இல்லாவிட்டால் அவை ஏட்டு சுரைக்காயாகிவிடலாம்.

  நானும் நிச்சயம் ஞானியில்லை. அதை அடைய முயல்கிறவன் என்று சொல்லலாம். அந்த முயற்சியின் பகுதிதான் இது, என் வலைப்பூ முதலியன.
  ஞான மார்கத்தை தேர்ந்து எடுத்தால் வாத பிரதிவாதங்கள் தவிர்க்க இயலாது. தெளிவு பிறக்க அவை தேவைதான் போலிருக்கு. பக்தி மார்கத்தில்தான் இவை இன்னும் குழப்பத்தை உண்டாக்கும்.
  --
  இந்த வாத சம்வாதங்கள் (எத்துணைதான் அறிவு பூர்வமாக இருந்தபோதிலும் )
  ஒரு முடிவில்லாது போகுமென்பதால்
  அவற்றினையே தான் செய்துகொண்டிருக்கிறோம். Perhaps these discussions prove the purport and inner content of my basic posting.
  தர்க்கங்கள் தொடர்வதும் ஒரு ஜன்ம ஜன்மாந்தர பிரதி பந்தங்கள்தான். (அடுத்த ஜன்மத்திலே ( !! ?? )
  திவா சுப்பு ஆகி சுப்பு திவா நிலைக்கும் வரலாம் )
  ==
  எவ்வளவு உண்மை!
  --
  ...
  எவரோ ஒரு குருவைப் பிடித்துக்கொள்வோம்.
  அவர் சொன்னபடி நடப்போம்.
  தெளிவு பெறுவோம்.
  அமைதி பெறுவோம்.
  இது தான் சத்யகாமன் காட்டிய வழி.
  ==
  அருமை!
  --
  தாங்கள் ஞான மார்க்கத்தில் பெரியவர்கள்.
  ==
  அதெல்லாம் ஒன்றும் இல்லை!
  அப்படி ஒரு மாயையை உண்டாக்கி விட்டேன் போலிருக்கிறது!

  ராம் ராம்!

  ReplyDelete
 22. கபீரன் பதிவில் தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  ///வாருங்கள்:
  http://vazhvuneri.blogspot.com
  பின்னோட்டங்களையும் படித்து ஒரு ஞானியின் நிலையென்ன எனத்
  தாங்கள் சொல்லவேண்டும்
  ///

  தங்கள் அழைப்பை தட்ட முடியுமா? வந்து விட்டேன்.

  கலந்துரையாடலில் அன்பர்கள் அனைவரும் உற்சாகமாக பங்கு கொண்டுள்ளதை படிக்கும்பொழுது பிரமிப்பாக உள்ளது.

  ஞானியின் நிலையென்ன என்பதைப் பற்றி கூறுவதற்கு நான் யார்?

  நான் புரிந்து கொண்ட வரையில் ஆன்மீகத்தில் முன்னேறுவது என்பது பெரிய மலைச் சிகரத்தை எட்டுவது போல. பல மைல் சுற்றுள்ள அடிவாரத்தில் பல திசைகளிலிருந்தும் பல பாதைகள் மேல் நோக்கிச் செல்லுகின்றன. ஒவ்வொரு பாதையிலும் ஒரு சில அனுகூலங்கள், பல சிக்கல்கள். எந்த பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் கண்டிப்பாக சிரமங்கள் இருக்கும். பல மட்டங்களில் பாதைகள் ஒன்று சேரலாம் அல்லது பிரிந்து போகலாம். அப்போது அந்த பாதையில் போய் வந்து பழக்கப்பட்ட ஒருவர் (குரு) முறையாக மேலே போவதற்கு வழி சொல்லுவார். இந்த பயணம் பல ஜன்மாந்திரங்களாக நடப்பது.

  அடிவாரத்தில் அமர்ந்து கொண்டு பாதைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் மலையேறுவது சாத்தியமில்லை. அப்படியே ஏறத் தொடங்கியவர் பிறர் பேச்சைக் கேட்டு பாதையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தால் நேரம்(ஜென்மங்கள்) தான் வீணாகும்.

  குருட்டு குருவே ஆனாலும் பயணத்தைத் தொடர்ந்தால் சிரத்தையை அனுசரித்து இறைவனே அந்த குறையையும் நீக்கி அருளுவான். ”அழுத குழந்தை பால் குடிக்கும்”. சாதகனின் மனதில் ஆழ்ந்த ஏக்கம் உருவாகும் போது அவனே வந்து மலை உச்சிக்கு தூக்கிக் கொண்டு போய் விடவும் சாத்தியம்.

  ஒவ்வொரு ஞானியின் அனுபவமும் ஒவ்வொரு விதம். ”அவரவர் வினைவழி வந்து” அனுபவித்து போயிருப்பர். வெளிப்பார்வைக்கு காணக் கிடைக்கும் அவர்கள் வாழ்க்கை அரசாளும் ஜனகராயிருக்கலாம் அல்லது மாடு மேய்த்த சத்யகாமனாகலாம். ஆனால் அவர்கள் உள்ளில் ஏற்பட்ட ஆத்மதாகம் நம் அறிவுக்கு எட்டாததாகவே இருக்கும். வயறு மந்தமானவனுக்கு பசியின் கோரம் புரியுமா?

  வழி சொல்லும் குரு பூரண ஞானியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆரம்பப் பள்ளி குழந்தைக்கு உயர்நிலைப் பள்ளி மாணவன் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் அல்லவா?

  தூரத்தில் இருந்து பார்க்கும் போது சிகரம் தெரிகிறது. அதை வர்ணிக்க முடிகிறது.
  ஏற ஆரம்பித்த பிறகு கல்லும் முள்ளும் தான். சிகரம் கூட கண்ணில் படுவதில்லை. வர்ணிப்புகளுக்கும் நிஜத்துக்கும் சம்பந்தம் இருப்பதில்லை.

  இந்த உண்மையை சுலபமாக அனுமானிக்க முடிகிறது. அனுபவம் இல்லை.
  ஆகையால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி