காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Tuesday, April 08, 2008
சொல் வன்மை
தாம் அறிந்தனவற்றைப் பிறர் அறிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துரைப்பது
சொல் வன்மை எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.
" கல்விக்கழகு கசடற மொழிதல் " என்கிறது நறுந்தொகை. (அதி வீர ராம பாண்டியர் இயற்றியது )
ஆழ்கடலைப் போன்று அறிவு உண்டெனினும், அத்தகைய அறிவின் வெளிப்பாடு சொல் மூலமாகத்தான். எழுத்தாகவோ அல்லது பேச்சாகவோ ஒருவனது அறிவின் அகலம், ஆழம் வெளிப்படுகிறது.
எப்பொழுது பேசத்துவங்கினாலும், யாரிடம் பேசுகிறோம், அவர்தம் அறிவு, ஆற்றல் குறித்துத் தெளிவாக இருப்பது நலம்.
நீங்கள் சொல்லும் சொல்லானது "கேட்டார் பிணிக்கும் தகை அவாய்" இருத்தல் வேண்டும். அதாவது, கேட்டவர் கேட்டதை விரும்பும்படி இருக்கவேண்டும். கேளாதோர் நீங்கள் பேசி தாம் கேட்கவேண்டும் என விரும்பவேண்டும்.
ஆக, ஒவ்வொரு சொல்லும் சொல்கையில் அதன் "திறன் அறிந்து சொல்க" என்பார் வள்ளுவர். சொல் வன்மையின் முதல் பாடமே, நாம் சொல்லும் சொற்களின் வலிமைதனை அறிந்த பின்பு தான் அவற்றை உபயோகித்தல் நலம்.
இன்னமும் சொல்வார் வள்ளூவர்:
"சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல், அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து "
எப்படிப்பட்ட சொற்கள் நாம் சொல்லவேண்டும் ? நாம் சொல்லிய சொற்களை
வெல்லும் தகுதி மாற்றான் பேசும் சொற்களுக்கு இல்லா வண்ணம் இருத்தல் வேண்டும். ஒரு பொருளை விளக்க, இதுதான் சிறந்த சொல் எனத்தீர்மானித்துச்
சொல்வது தான் சொல் வன்மை எனக் கூறலாம்.
அவ்வை தன் மூதுரையில் கல்லாதான் கற்ற கவி பற்றிக் கூறியது நாம் அறியாதது அல்ல.
"கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானும்தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போதுமே
கல்லாதான் கற்ற கவி "
கல்லாதவர் கற்றவர் போல் தமை நினைந்து செயல் படுவது ஒரு வகை.
இன்னொரு வகை, தாம் கற்ற அறிவின் திண்மை அறியாது, முழுவதும்
கற்றவர் போல் செயல்படுவது.
பிறிதோர் வகையும் உண்டு.
ஒருவனுடைய சொல்லுக்கும் சொல் வன்மைக்கும் இத்துணை ஆற்றல் இருப்பினும்,
தன் சொற்களையோ அல்லது சொல் வன்மைதனையோ தவறாக பயன் படுத்துதல் தீது. தமக்குத்தான் வாதிடும் திறமை அதிகம் உள்ளது எனக் கொண்டு, தம் சொற்களை ஆயுதமாகக் கொண்டு, மற்றவரை தமது வாதத்தில் தோற்கடிப்பதுதான் குறிக்கோளாய் கொள்தல் பெரியோர் செயலோ சான்றோர் அழகோ அல்ல.
இவ்வாறு வெற்று வாதத்திற்காகவே அலையும் பலர் நம்மிடையே உளர். வம்புச் சண்டைக்கும் போக இவர்கள் அஞ்சுவது இல்லை. தாம் என்ன சொன்னாலும் அதனைப் பிறர் நம்பும்படி செய்து விடலாம் என இவர் எண்ணுகிறார்கள்.அவர் சாதிப்பது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. தமது நேரத்தையும் அடுத்தவர் நேரத்தையும் வீணாக்குகிறார் என்பதைத் தவிர வேறொன்றும் இவர் செய்வதில்லை. நாளடைவில் இவரது வாதம் வெற்று வாதம், ஏட்டுச் சுரைக்காய் எனத் தெரிந்த பின்பு யாரும் இவர்களை அணுகுவதும் இல்லை. ஒரு அவையில் இவர்கள் சிறிது சிறிதாகத் தனிமைப் படுத்தப் படுவர். கற்றவர் முன்னால் இவர் தோற்று ப்போகிறார். எனினும் தாம் தோற்றுவிடுவோம் என்பதனையும் இவர் அறியார். ஆகவே பயனற்ற பலவற்றினைப் பேசிப் பேசியே வாழ்வினைக் கழிப்பார் இவர்.
பதிணெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் ஒரு பாடல் வருகிறது.
பார்ப்போமா ?
சொற்றாற்றுக் கொண்டு சுனைத் தெழுதல் காமுறுவர்
கற்றாற்றல் வன்மையுந்தாந்தேறார் = கற்ற
செலவுரைக்கும் ஆறறியார், தோற்பதறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.
நமது சொற்கள் நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் நடுவே நின்று
செயல்படும் ஓர் பாலம்.
ஆகவே நமது வாயிலிருந்து வெளிவரும் சொற்களை நமது எண்ணங்களின்
தூதன் எனவும் கொளலாம்.
சொற்களுக்குப் பின் வருவது செயல். (சொற்கள் இல்லாதபடியே எண்ணங்கள்
செயல்களாய் உருவெடுக்கவும் கூடும்)
அறிவுக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தூதனே சொல் வன்மை.
சொல் வன்மை படைத்தவன் பண்பு என்ன ? வள்ளுவர் சொல்லாததும் உண்டோ?
தூய்மை, துணைமை, துணிவுடைமை, இம்மூன்றின்
வாய்மை, வழி உரைப்பான் பண்பு.
ஆக, சொல்லை உதிர்க்குமுன், எண்ணிச் செயல்படுவோம்.
வணக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
//அறிவுக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தூதனே சொல் வன்மை.//
ReplyDeleteஅருமை!
ஜீவாவின் வருகை எனக்குப் பெருமை.
ReplyDeleteதுவங்கும்போது, அறிவு ( knowledge )
ஆற்றல் ( exhibition of one's energy or potential or skill )
மனப்போக்கு மற்றும் ஆர்வம் ( attitude )
இம்மூன்றும் மூன்று பக்கங்களாகக் கொண்ட ஒரு முக்கோணத்தில் , சொல் வன்மையின் பங்கினைச்
சொல்லலாம் என நினைத்தேன். தட்டச்சு செய்கையிலே, "சொல் வன்மைதனைத் தவறாகப்
பயன்படுத்துவோர் பற்றியும் " எழுதவேண்டும் எனத்தோன்றியது.
அதனால் தோன்றியதே நீங்கள் குறிப்பிட்ட வரி.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://paattiennasolkiral.blogspot.com
இப்போது நான் இருக்கும் வீட்டில் ஒரு பையன் சுமார் 16 வயதுதான் இருக்கும்.அவனுடைய கோபத்தையும் மீறி அவன் வார்த்தைகள் வெளிப்படும் நேரத்தில் இதை நான் யோசிப்பதுண்டு.
ReplyDeleteசரி அவன் சின்னப்பையன் என் தற்போதைய ”தல” - அவருக்கு அண்ணனாக இருக்கார்.
இதனாலேயே,கால் கடுதாசி கொடுத்திட்டேன்.
தாங்க முடியலை.
இவர்கள் எல்லாம் பேசிய பிறகே யோசிக்கிறார்கள். :-((
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
ReplyDeleteவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
-என்ற குறட்பாவிற் கிணங்க தங்களுடைய சொல்வன்மையைப் படித்தவுடன் நான் கற்றுக்கொண்ட செய்தியையும் குறட்பாவிலேயே தந்து விடுகிறேனே!
நல்லவையுள் கற்றோரை நாடிக் கருத்துரைக்கின்
சொல்வன்மை ஆராய்ந்துச் சொல்!
-அய்யா! நான் சொன்னது சரிதானே? பிழையிருப்பின் மன்னிக்கவும்!
//நல்லவையுள் கற்றோரை நாடிக் கருத்துரைக்கின்
ReplyDeleteசொல்வன்மை ஆராய்ந்துச் சொல்!//
உங்கள் பின்னூட்டங்கள் என்னைப் பின்னே ஒரு
50,60 ஆண்டுகட்கு முன் இழுத்துச்செல்கின்றன.
1952 என நினைக்கின்றேன். எனது தமிழ் ஆசான் குலசேகரன்
( இ.ரெ. உயர் நிலைப்பள்ளி, திருச்சி)
இலக்கண அறிவின் பெருமைதனைச் சுட்டிக்காட்டும் வகையில்
அவ்வையின் நன்னெறியிலிருந்து ஒரு வெண்பா எடுத்துச்சொல்வார்.
( அது என் நினைவில் பசுமரத்தாணி போல் பதிந்து நிற்கிறது)
ஒரு இலக்கண ஆசிரியரின் பெருமை கூறுவதாக அமைந்திருக்கிறது.
எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் எழுத்தறிவார்
ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில்
வீயுஞ் சுரநீர் மிகை.
' கங்கையின் வேகமெல்லாம் சிவனின் சடையில் அடங்கியது போல
இலக்கணம் கற்றவர் முன் மற்ற எல்லாக் கல்வியும் அடங்கிப்போம்."
அகரத்தின் முன்னே ஆயுதங்கள் நில்லுமா ?
பணிவுடன்
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு.: என் தந்தை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ் ஆசிரியராக
1920ல் பணிபுரிந்திருப்பதாகவும், என் அன்னை, தமிழ்த்தாத்தாவின் (உ.வே.சுவாமினாத அய்யரின்) திண்ணைப் பள்ளி மாணவி என்பது மட்டுமே என்னால் சொல்லிக்கொள்ள இயலும். .
அய்யா! தங்களின் பெருமை தங்களின் எழுத்தில் மிளிர்கிறது. தாங்கள் தங்களைத் தன்னடக்கத்தால் தாழ்த்திக் கொள்கிறீகள் என்றே நினைக்கிறேன். அதே அவ்வை என்னோர் பாடலும் பாடியிருக்கிறார் தங்களுக்குத் தெரியுமல்லவா!
ReplyDeleteமன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன் -மன்னர்க்குத்
தன்றேச மல்லாச் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு!
அத்தனை சிறப்புமிக்கக் கல்வியறிவும் இசையறிவும் தங்களிடம் மிளிர்கிறதே!