Pages

Wednesday, December 31, 2008

புத்தாண்டு சபதம் என்ன எடுத்துக்கொள்வோம் ?

2009
புத்தாண்டு உறுதிமொழி
என்ன எடுத்துக்கொள்வோம் ?

புத்தாண்டு 2009 ஜனவரி திங்கள் முதல் நாள்
எல்லோரும் எல்லோரையும் வாழ்த்தும், வாழ்த்தி வணங்கும் ஆசி பெறும் திரு நாள்.

இனியதோர் புத்தாண்டு பிறக்கும் நல்வேளையில் உலகத்து தமிழர்களுக்கெல்லாம் புத்தாண்டு நல் வாழ்த்துக்களும்
எனது ஆசிகளையும் கூறும் அதே தருணம் அவர்தமக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கலாம் என நினைத்தேன்.

எல்லோரும் புத்தாண்டு பிறந்த உடனே, ஒரு உறுதி எடுத்துக் கொள்வர். அதைக் கடைப்பிடிப்போமென‌
இன்னொரு உறுதியும் கொள்வர்.

இந்த வருடம் என்ன உறுதி எடுத்துக் கொள்வது ?

முக்காலத்துக்கும் பொதுவாம் தமிழ் மறையாம் திருக்குறளிலிருந்து ஒரு பத்து குறட்பாக்களை ஈண்டு தந்து
அவற்றினில் ஏதேனும் ஒன்றில் புதைந்திருக்கும் கருத்தினை அறிவுறைதனை இவ்வருடம் முழுவதும் இம்மி குறையாது கடைப்பிடிப்போமென‌ உறுதி கொள்ளலாமா ?

முதலாவது:
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ' இவன் தந்தை
என் நோற்றான் கொல்" எனும் சொல்.

இரண்டாவது:
கற்க கசடுஅறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.

மூன்றாவது:
தேறற்க யாரையும் தேராது, தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

நான்காவது:

ஆக்கம் கருதி,முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடையார்.

(லாபமே குறிக்கோளாகக் கொண்டு தமது முதலையும் இழக்கும் காரியத்தை
அறிவுள்ளோர் செய்ய மாட்டார்.)


ஐந்தாவது:
நெடு நீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடு நீரார் காமக் கலன்.

ஆறாவது.:
ஒல்வது, அறிவது அறிந்து, அதன் கண் தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

ஏழாவது:
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவது ஓர் நோய்.

எட்டாவது:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.

ஒன்பதாவது:
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

பத்தாவது:
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன்:
ஆகுல நீர பிற.

நன்றே செய் அதை இன்றே செய் என்பார்கள்.
நமக்கு நல்லது என்று தோன்றுவதை இன்னொரு கணத்துக்கு ஒத்திப்போடவும் கூடுமோ ?

யார் எதை எடுத்துக்கொள்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தப் பத்துக்குறட்பாக்கள் மட்டும்தான் என்றில்லை. எந்த ஒரு குறளையும் எடுத்து
அது புகட்டும் பண்பினையும் நன்னெறிதனையும் மனதில் இறுத்தி வாழ்வினை
வளம் பெறச்செய்வோமாக.

8 comments:

  1. ரொம்ப நாளாச்சே பாத்து, நல்லா இருக்கீங்களா? உடம்பு சுகமா?

    சாதாரணமா இப்படி ¨புத்தாண்டு சபதம்¨ எல்லாம் எடுக்கறதில்லை. இருந்தாலும் உங்க பட்டியலை பாத்தா அஞ்சாவதுல கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கு! கவனிக்கிறேன்!

    ReplyDelete
  2. ரொம்ப நாளாச்சே பாத்து, நல்லா இருக்கீங்களா? உடம்பு சுகமா?

    சாதாரணமா இப்படி ¨புத்தாண்டு சபதம்¨ எல்லாம் எடுக்கறதில்லை. இருந்தாலும் உங்க பட்டியலை பாத்தா அஞ்சாவதுல கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கு! கவனிக்கிறேன்!

    ReplyDelete
  3. அன்புள்ள மீனாட்சி அக்கா & சுப்புரெத்தினம் ஐயா,

    புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    யார் மனசையும் நோகடிக்காம இன் சொல் பேசணுமுன்னு சபதம் எடுத்துக்கறேன்.

    என்றும் அன்புடன்,
    துளசி

    ReplyDelete
  4. வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள், உங்களுக்கும், மீனாட்சி அம்மாவுக்கும்.

    சபதம் என்று ஏதும் எடுத்துக் கொள்வதில்லை. நீங்க சொல்லியிருக்கும் பட்டியல் மனதில் இருத்திச் செயலில் கொள்கிறேன். :)

    ReplyDelete
  5. நல்ல பதிவு!
    பள்ளி, கல்லூரி நாட்களில் மட்டுமே திருக்குறளை படித்துவிட்டு பின் மறந்து தான் விடுகிறோம்..மீண்டும் படித்து அதை கடைபிடிக்க வேண்டும்..சிரமம் தான் ஆனால் முயன்றால் முடியாதது உண்டா?

    ReplyDelete
  6. ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அய்யா!

    பத்துக் குறட்பாக்களை வழங்கி அவற்றிலொன்றையோ மற்றவற்றில் ஒன்றையோ கடைபிடிக்கக் கூறிய தன்மை அருமை.

    இவ்வாங்கில ஆண்டுத்துவக்க நாளில் நானும் ஓர் குறளை முன்னெடுத்துக் கடைப்பிடிக்க உறுதிகொண்டேன். அக்குறள் இக்குறளே!

    தொட்டனைத்(து) ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத்(து) ஊறும் அறிவு!

    என்னிடம் இருப்பதிலேயே மிகக்குறைவாக இருப்பது அறிவே. அதன் அளவைப் பெருக்கிக்கொள்ள நாளும் இரண்டிலிருந்து மூன்றுமணி நேரம் கற்பதற்குச் செலவிட உறுதிகொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  7. திவா, மதுரையம்பதி, இசக்கிமுத்து, அகரம் அமுதா, துளசி கோபால் அனைவரின் வருகைக்கும்
    கருத்துக்களுக்கும் உளமார்ந்த நன்றி .

    // யார் மனசையும் நோகடிக்காம இன் சொல் பேசணுமுன்னு சபதம் எடுத்துக்கறேன்// அப்படின்னு
    துளசி கோபால் சொல்லியிருப்பது நெஞ்சுக்கு இதமாக இருக்கிறது. அவர்களுடைய எழுத்தின் வலிமை
    வியக்கத்தக்கதாய் இருக்கிறது.

    உடம்பு நலமா என திவா கவலையுடன் விசாரித்திருக்கிறார்கள். ஒரு நாற்பது நாள் உடல் உபாதைக்குப்பின்
    உடல் சற்றே தேவலை. அந்தத் தொல்லையை மறக்கத்தான் வலைப்பக்கமே இருக்கிறேன்.

    அகரம் அமுதா சொல்கிறார்கள் " என்னிடம் மிகக்குறைவாக இருப்பது அறிவே " . இது ஒன்று போதும்
    உங்கள் அடக்கத்திற்குச் சான்று.
    அறிவை வெளி்க் காண்பித்திடும் சுடர் அடக்கமே.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  8. கண்டிப்பாகக் கடைப் பிடிக்கிறோம். மிக நல்ல அறிவுரை.

    உடல் நலம் தற்போது எப்படி உள்ளது?
    //அந்தத் தொல்லையை மறக்கத்தான் வலைப்பக்கமே இருக்கிறேன்.//

    தொல்லை மறக்க வலை உதவுவது மகிழ்ச்சிக்கு உரியது. பலருக்கும் அப்படித்தான் வலை இதம் தந்து கொண்டிருக்கிறது.

    தங்கள் கவனத்துக்கு இந்த குறள் வங்கியைக் கொண்டு வருகிறேன்.
    http://parentsclub08.blogspot.com/

    இந்த வலைப்பூ முகப்பின் இடது பக்கம் குறள் கதைகளைக் காணுங்கள். தாங்களும் முடியுமானால் ஒரு கதை படைத்து இங்கு சேர்த்திடுங்கள். இது ஒரு தாழ்மையான விண்ணப்பம். தங்கள் வலைப்பூவிலேயே கதையினைப் பதிந்திடலாம். அதன் சுட்டி அங்கு சேர்க்கப் பட்டு விடும். அங்கே எனது கதை ‘ஊக்கமது கைவிடேல்’!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி