Pages

Thursday, December 09, 2010

இது ஒரு கதை.

    ஏதோ கெட்டுப்போகி விட்டதான உணர்வு.  பல நாட்களாக‌ ஒரு வாடை. ஏதோ வாடை அடிக்கிறதே என என் மனைவியிடம் கேட்டேன். ஒரு வாடையுமில்லை. உங்கள் மூக்கு தான் வாடை . அதை முதலில்மருத்துவரிடம் போய் என்ன என்று பாருங்கள் என்றாள்.  இருந்தாலும், எனக்கு காது அவ்வளவு கேட்காதே தவிர, மூக்கு வாசனை நன்றாகவே தெரியும். எங்கு எது நடந்தாலும், அதை என் மூக்காலேயே தெரிந்துகொண்டுவிடுவேன்.
உண்மையாக சொல்லப்போனால், மூக்கு ஒன்று தான் என் உடம்பில் உருப்படியாக இருக்கிறது.

    ஒரு நாள், இதை துர் நாற்றத்தை,  இன்னமும் விட்டுவைக்கமுடியாது என்ற அளவுக்கு, அந்த நாற்றம்  மூக்கைத் துளைக்க  ஆரம்பித்தபின், இனி என் மனைவியையோ, அல்லது வீட்டு வேலை செய்யும் உதவியையோ நம்ப முடியாது, நானே செய்வோம், என்று மதியம், ஒரு துடப்பத்தைக் கையில் எடுத்து வீட்டு ச்சுவர்கள் ஓரங்கள், அலமாரி இடுக்குகள், பீரோக்கள் கால்கள் இவையெல்லாம் வேர்க்க வேர்க்க செய்ய  ஆரம்பித்தேன். 

    ஒரு மூலையில் சுத்தம் செய்யும்பொழுது நாற்றம் பலமாக அடித்தது.  பொறி தட்டினால் போல் மனைவியைக்கூப்பிட்டுக் காண்பித்தேன்.  ஆமாம், வாடை பலமாகத்தான் இருக்கிறது என்றாள்.  அந்த இடத்தை நன்றாகக் கழுவும்பொழுது, ஏதோ ஒரு ஓட்டை தெரிந்தது.  என்னது ஒரு ஓட்டை நம் வீட்டில் சுவரில் என்று ஆச்சரியம், பயம் கலந்த உணர்வுகளுடன், அதை இன்னும் நன்றாக சுரண்டினேன்.  ஒரு பெரிய ஓட்டை தெரிந்தது.  சுவரில் கீழ் பாகத்தில் ஒரு பெரிய ஓட்டை பொலிவானது. என்ன என்றுகுனிந்து பார்த்தேன்.  அது அடுத்த வீட்டுக்கும் ஒரு பாதாள் குகை வழியே செல்கிறது என்று தெரிந்தது. 

     வீடு கட்டி 35 வருஷங்கள் ஆகிவிட்டது. அப்பப்ப மராமத்து செய்யவேண்டாம் என்று யார் சொன்னார்கள் ? அப்படியே  வைத்துவிட்டால், இந்த கதி தான் என்று என் மனைவி அலுத்துக்கொண்டாள்.

    இப்பொழுது தான் நினைவு வந்தது.  அடுத்த வீடு வெகு நாட்களாகப் பூட்டி இருக்கிறதே !  அதிலிருந்து  தான் வருகிறதோ என்று நினைத்து அந்த நபர் ஊரில் இல்லை அவருடைய ஸெல் நம்பரைக்கண்டு பிடித்து விஷயத்தைச் சொன்னேன். அலறி  அடித்துக்கொண்டு சென்னையிலிருந்து அடுத்த நாள் ஓடிவந்தார்.  வந்து எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, எனக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.  அப்படி ஏதாவது பொந்துகள் இருந்தால், அதை அடைக்கும் ஆள் நான் தான் முதலில் இருப்பேன் என்று உஷ்ணமாகச் சொல்லிவிட்டு, இனிமேல் தேவையில்லாமல் என்னைத் தொந்தரவு செய்யாதீர், இல்லையேல், நீர் காலி செய்யவேண்டி இருக்கும் என்று மறைமுகமாக உணர்த்திவிட்டுச் சென்றார்.

    வாடை நின்றபாடில்லை.  பொந்துக்குள் இருந்து தான் வருகிறது.  ஆனால், அந்த பொந்தின் மூலம் எங்கு இருக்கிறது ? நகராட்சி அலுவலகம் சென்று முறையிடுங்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். அங்கு சென்று முறையிட்டேன். உடனே ஒருநகராட்சி அலுவலர் வந்து பார்வையிட்டார்.  ஒருவேளை பாதாளச்சாக்கடையிலிருந்து வருகின்றதோ என்னவோ ?  என்றார்.அதை கொஞ்சம் பார்க்கக்கூடாதா என்று பரிதாபமாகக் கேட்டேன். குரல் கெஞ்சினது போல் இருந்திருக்குமோ என்னவோ, என் மனைவி மறைவில் இருந்து என்னை முறைத்தாள்.  நீங்கள் அந்த செலவுக்கு ஒத்துக்கொள்ளவேண்டும் , ஏன் என்றால், உங்கள் வீட்டு ட்ரைனேஜிலிருந்து தான் வாடை வருகிறது. நகராட்சியில் இந்த வருஷம் பட்ஜெட்மிச்சம்  இல்லை. மேலும் அதற்கு அரசாங்கத்திடம் இருந்து நகராட்சி ஒப்புதல் பெற வேண்டும் இதெல்லாம் நடந்து முடிய ஒரு இரண்டு வருடம் ஆனாலும் ஆகலாம்  என்றார்.  எத்தனை ஆகும் என்று கேட்டேன். கிட்டத்தட்ட  ஒரு லட்சம் வரை ஆகலாம். என்றார்.  வாயைப் பொத்திக்கொண்டேன்.  ஒரு இரண்டு  வருடம் பென்ஷன் ஆ !

என் பென்ஷன் இப்போது  இப்போதைக்கு கறிகாய் வாங்குவதற்கே மாத பென்ஷன் போதவில்லையே! இதற்கு எங்கே போவது என நினைத்துக்கொண்டேன்.

     இதற்கிடையில் என் வீட்டு வாசலில் ஏதோ நாற்றம் வருகிறது என்ற செய்தி பரவியது.  தெருவில் போகிறவர்கள் எல்லோரும் வீட்டைக்கடக்கும்பொழுது வாயை நன்றாகப்பொத்திக்கொண்டு சென்றார்கள்.    பால்காரன் காலையில் சொன்னார்:  ஐயா ! நீங்கள் பூத்தில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்.  இங்கே என்னமோ என்று எங்க வீட்டு அம்ம சொல்றாங்க.  வழக்கமாக சைக்கிளில் வரும் காய் கறி விற்பனைக்காரரும் வருவதில்லை.

      சென்னையிலிருந்த எனது நண்பர் சொன்னார்:  இந்த வீட்டை வைத்துக்கொண்டு ஏன் கஷ்டப்படுகிறீர்கள் !! யாரேனும் அகப்பட்டால் அவர்கள் தலையில் கட்டிவிட்டு சுகமாக சென்னைக்கு வந்து விடக்கூடாதா ?    என் மனைவி அதைக்கேட்டுவிட்டு, இந்த மனுஷனுக்கு நல்ல புத்தி எப்ப வந்தது என்று அவரிடம் கேட்டார்.

    நான் இருக்கும் நகரில் ஒரு அசோஷியேஷன். பெயர் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது. திடீரென் அதில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.  என்ன செய்தி எனக் கேட்டு வரச் சென்றேன்.  " என்ன இது ? உங்கள வீட்டில் நாற்றம் வருகிறதாமே !
எங்களிடம் நீங்கள் சொல்லவில்லையே ! என்று ஆதங்கமாக சொன்னார்களா அல்லது வேறுவிதமாகவா என்று உடன் புரியவில்லை.  ஆஹா ! நமக்கு உதவிக்கு பகவான் வந்து விட்டார் என ஒரு கணம் நினைத்தேன்.  அந்த நினைப்பு ஒரு கணம் தான் இருந்தது. " நீங்கள் உடன் அதை சரி செய்யாவிட்டால், மேற்கொண்டு உங்களை பகிஷ்கரிப்போம் என்று சொன்னார்கள்.  அதற்கு என்ன பொருள் என்று புரியவில்லை.   எல்லாம் நீங்கள் அனாவசியமாக அந்த சுவரைச் சுரண்டுவானேன் ! வேலில போற ஓணான மிதிப்பானேன் ! இப்படி அவஸ்தை படுவானேன் ! என்று என் மனைவி அங்கலாய்த்தாள்.

     திடீரென்று ஒரு பெரிய தொடர் மழை.  தொடர்ந்து பத்து நாட்களுக்கு பிரளயம் போல.  ஊர் முழுவதும் தண்ணீர், வெள்ளம். வீதிகளில் ஆறாகப் பெருகியது.  குடிசை வாழ் மக்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் குடியேற்றப்பட்டனர்.வெள்ள நிவாரணம் தரப்பட்டது.    வீட்டின் நாலா பக்கங்களிலும் மூன்று அடி தண்ணீர் தேங்கி இருந்தது.  எப்ப வடியும் என்று தெரியவில்லை.

     என் விதியை நொந்துகொண்டு இருந்தேன். புத்தருக்கு ஞானம் பிறந்தது போல் எனக்கும் ஒன்று தோன்றியது. வாழ்க்கையில் பல விஷயங்கள் விடவும் முடியாது. வைத்துக்கொண்டும் இருக்க முடியாது.  பந்தங்கள் என்று வந்துவிட்டால், அதில் லாபமோ நஷ்டமோ எல்லோருக்கும் தான்.  எனக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது என்று உதறி விடமுடியாது.

    இந்த தெரு சாக்கடை, அதை வீட்டோடு இணைக்கும் இற்றுப்போன குழாய், அந்தப்பொந்து , வீட்டுச்சுவர், நாற்றம் எல்லாம் நான் இருக்கும்வரையிலும் இருக்கும். 

   உலகமே நாற்றம் .ஒரு தினுசான சாக்கடை தான்.   என் வீடு மட்டும் மணக்கவேண்டுமென்றால் முடியுமா என்ன ? மனதைத் தேற்றிக்கொண்டேன்.

    தெருவில் ஏதோ சத்தம் கேட்கிறதே என்று பார்த்தேன்.  ஒரு மின்சார பம்ப் வைத்து தேங்கி இருந்த தண்ணீரை இறைத்துக்கொண்டிருந்தார்கள். ஓயாது மூன்று மணி நேரமாக ஓடிக்கொண்டிருந்த பம்ப் திடிரென நின்று போனது.பக்கத்தில் இருந்த தொழிலாளிகள் எல்லோரும் ஒரு மணி நேரம் அந்த பம்ப் ஸெட், தண்ணீர் வருகின்ற வழி எல்லா இடத்திலேயும் போராடினார்கள்.  என்ன என்று புரியவில்லையே என்று திகைத்து இருக்கும் வேளையிலே,

     திடிரென் ஒரு பெருச்சாளி நீருக்குள் இருந்து குதித்து ஓடிச்சென்றது.  திரும்பவும் தண்ணீர் பம்ப் செட் ஓட ஆரம்பித்தது.கொஞ்சம் கொஞசமாக தரை தெரிய ஆரம்பித்தது.  சாக்க்டை சுத்தமானது.

    மறு நாள் வெயில் சுள் என அடிக்கத் துவங்கியது.  தெரு மண் ஈரமெல்லாம் காய்ந்து போய் இருந்தது. இன்னும்  இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன.  பொழுது போகாமல்     வாசலுக்கு வந்து நின்றேன். ஏதோ அந்த நாற்றம்  நினைவுக்கு வர, மனைவியைக் கூப்பிட்டு கேட்டேன், இங்க வந்து பாரேன்.அந்த‌ நாற்றம் வருகிறதோ !

    மனைவி வந்தாள். சொன்னாள்:   நாற்றம் சுத்தமாக இல்லையே  !  எல்லாம் மழை வந்து அடித்துக்கொண்டு போய்விட்டது போல் இருக்கிறது.  "நான் நினைத்தேன். ஒரு பிரள்யம் வந்தால் தான் சரியாக இருக்கும்."  என்றாள்.

   ரொம்ப காலம் கழித்து, மனைவி சொல்லுக்கு ஆம் போட்டேன்.
7 comments:

 1. //ஒரு பிரள்யம் வந்தால் தான் சரியாக இருக்கும்//

  கரெக்ட்! இது தான் விஷயமே. திண்டாட்டத்திலும் ஒரு நன்மை.
  ஊர் பூராவும் அடைத்துக் கொண்ட போது ஓரிடத்து அடைப்பு போயே போச்! 'சென்னையிலிருந்து பக்கத்து வீட்டுக்காரர் வந்தார்' என்ற போது, தஞ்சாவூர் வீடாக்கும் என்று நினைத்தேன். பிறகு தான் 'இது ஒரு கதை' என்கிற தலைப்பைப் பார்த்தேன். இப்பொழுதும் கதை போன்ற உண்மை நிகழ்ச்சியா என்கிற சந்தேகம் தான்! அவ்வளவு தத்ரூபம்!

  ReplyDelete
 2. நடப்பெதெல்லாம் நல்லதுக்குத் தான். இப்பவே பாருங்களேன், பெருச்சாளி போய் நாற்றமும் போயாச்சு. அதே மாதிரி, ஒரு வழியா, பெண்டாட்டிக்கு ஆமாம் போடறதுல தப்பே இல்லைன்னு உங்களுக்குத் தெரிய வந்துதா, இல்லியா!

  :-)

  ReplyDelete
 3. மீனாட்சி அக்கா சொன்னதை கேக்கணும் என்ற ஞானம் வந்ததுக்கு பாராட்டுகள்!

  ReplyDelete
 4. உண்மையான நிகழ்ச்சி போல எழுதிய உங்கள் எழுத்து நடைக்கு பாராட்டுக்கள்!
  எல்லாவற்றிலும் நன்மை ஒன்றை காண கற்று கொடுக்கும் கதை.

  ReplyDelete
 5. // என் விதியை நொந்துகொண்டு இருந்தேன். புத்தருக்கு ஞானம் பிறந்தது போல் எனக்கும் ஒன்று தோன்றியது. வாழ்க்கையில் பல விஷயங்கள் விடவும் முடியாது. வைத்துக்கொண்டும் இருக்க முடியாது. பந்தங்கள் என்று வந்துவிட்டால், அதில் லாபமோ நஷ்டமோ எல்லோருக்கும் தான். எனக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது என்று உதறி விடமுடியாது.//

  உண்மைதான்.

  அனுபவத்தைப் பகிர்ந்த விதம் அருமை.

  //ரொம்ப காலம் கழித்து, மனைவி சொல்லுக்கு ஆம் போட்டேன்.//

  ஆஹா:)! அடிக்கடி போட்டால் பிரச்சனையே வராது பாருங்கள்.

  ReplyDelete
 6. ஐயா...கதை ஒரே நாத்தமா இருந்தாலும் சுவாரஸ்யம்.மனை சொல்லை எப்பவுமே கேக்கணும்.
  வாழ்க்கையும் நாத்தமில்லாம வாசனையாவே இருக்கும்.
  உங்க அனுபவம் என் வயசு !

  ReplyDelete
 7. சொன்ன விதம் அருமை :)

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி