Pages

Saturday, December 18, 2010

இது கதை அல்ல.

இது கதை அல்ல.
நாற்பது வருடங்கட்குமுன் தஞ்சையில் நடந்த நிகழ்வு.     அன்று காலை. எழுந்து என் மனைவி கொடுத்த காபியைக் குடித்து கொண்டிருந்தேன்.  அன்றைய  ஹிந்து நாளிதழை  என் கையில் கொடுத்து விட்டு,  என் மனைவி பேசாமல் சென்றாள். அதற்கு  பொருள் என்ன என்று எனக்கு தெரிந்ததுதான். " எனக்கு ஏகப்பட்ட காரியம் இருக்கிறது.  உங்கள் சோலியைப் பார்த்துக்கொண்டு, சிவனே என்றிருங்கள் "   
   ஹிந்து நாளிதழின் தலையங்கத்தைத் திறந்தேன்.  அதற்குள்  வீட்டு வாசற்கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது.   அழைப்பு மணி அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் இல்லை. அழையாது வருபவர்களும் அதிகம். கதவை பெரும்பாலும் பகற்பொழுதில் மூடுவது கிடையாது. அப்படி மூடி இருந்தாலும், தெரிந்தவர்கள்  வாசல்  கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்துவிடுவார்கள்.    அதை சுதந்திரம் என்று சொல்ல முடியாது.  என் மேல் என் நண்பர்களுக்கு இருந்த உரிமை.  வருவது   யாராக இருக்கும்?  என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, என் முன்னே வந்து நின்றவர்களைக் கண்டு திக்கிட்டேன். ஒரு பக்தி, பயம், பரவசம ஆகிய மூன்றும் தோன்ற எழுந்து நின்றேன்.  வாருங்கள், என்ன இந்த அதிகாலையில் !!  என்று கேட்டேன்.
    ஒன்று மில்லை, என்றார்கள்.  அப்போதெல்லாம், பேச்சு துவங்கும்பொழுதெல்லாம் ஒன்றுமில்லை என்று தான்    ஆரம்பிப்பார்கள். 
    வந்தவர்கள், அந்த ஊர் கல்லூரியில் பேராசிரியர்கள். .  கணிதப்பேராசிரியர் ஒருவர்.இன்னொருவர் வேதியல்.   ஒரு கணம் திகைப்பு.     இருப்பினும் ஆவலை அடக்கியவண்ணம் ' என்ன?' என்று கேட்டேன்.
      காபி பாதி குடித்தவண்ணம் இருந்தது.  'நீங்கள் குடியுங்கள். பிறகு பேசுவோம் ' என்றார்கள்.  நான் புரிந்துகொண்டேன்.  கொஞ்சம் பெரிய விஷயம் தான் ( விடயம் என்று சொல்லவேண்டுமோ ? ) உட்பக்கம் திரும்பி, " இங்கு யார்    வந்திருக்கிறார் என்று பார். "  குரல் கொடுத்தேன். .      வந்த விருந்தினருக்குக் காபி கூட கொடுக்காமல், கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தால் கூட,  என் மனைவி, அவர்கள் சென்ற பின்னே என்னை கடிவாள் என்பது தெரியும். .   தஞ்சை விருந்தோம்பலுக்கு அவள் உதாரணம். அதை விட, அவள் போடும் காபிக்காகவே என் நண்பர்கள் என்னைத் தேடி வருகிறார்கள் என்றும் அவள் நினப்பு. ( தப்பு என சொல்லவும் முடியாது.)
     காபி வந்தது.   பிரமாதம் என்றார்கள்.
     என்ன விஷயம் ! சொல்லுங்கள் ! என்றேன்.
     ஒன்றுமில்லை என்றார்கள், திரும்பவும். தொடர்ந்து,
     " இன்று எங்கள் கல்லூரியில் ஒரு  கூட்டம். அதில் நீங்கள்  பேச்சாளராக
இருக்கவேண்டும்" என   நாங்கள் எல்லோரும் ஒருமித்து முடிவு செய்தோம். "
      என் மனதிற்குள் ஒரு முறை ஆகாயத்தைத் தொட்டு வந்தேன்.  மடை திறந்து .  தாவும் நதி அலை தான் என அந்த நிழல்கள் படத்தில் வந்ததே !! நினைவு இருக்கிறதா !! என் மனம் பாடியது.    சரி என்று என் வாய் சொல்லவில்லை. சர்வ அங்கமும் சேர்ந்தே சொன்னது. " மாலை, சரியாக‌  ஒரு நான்கு மணிக்கு வர இயலுமா !  கார் அனுப்பட்டுமா !! "'என்றார்கள். அவர்களிடம் கார் கிடையாது. எனக்குத் தெரியும். இது ஒரு உபசாரம். தஞ்சை வாசிகளுக்குத் தெரியும். 
"  வேண்டாம், வேண்டாம், அருகில் தானே இருக்கிறது. நடக்கிற தூரம் தானே , நானே வந்துவிடுகிறேன்."
   "உங்கள் அலுவலகம் ஐந்து மணிக்குத் தானே முடிகிறது.?"
  " இல்லை, நான் மதியம் லீவு போட்டுவிட்டு வந்துவிடுகிறேன். நீங்கள்
கவலைப்படாதீர்கள்"
  ' அது சரி, என்ன தலைப்பு, ?" நான்.
   ஒரு தினுசான புன்னகையுடன், " நீங்கள் அதை ரசிப்பீர்கள் " அந்த நேரத்தில், கூட்ட துவக்கத்தில் சொல்லலாம் என்று இருந்தோம். ஒரு எக்ஸ் டேம்போர் ஆக இருந்தால் நல்லதல்லவா " என்றார்கள்.  இருப்பினும் தொடர்ந்து,
   ' பரவாயில்லை. இப்போதே சொல்லிவிடுகிறோம் !"
      " ஜீரோ "  (zero ) !!
   பலவிதமான உணர்வுகள்  ஓரே நேரத்தில்.   கஷ்டப்பட்டு வெளிக்காட்டாது,   'செய்துவிடுகிறேன்'. என்றேன்.     அவர்கள் நன்றி தெரிவித்துவிட்டபின் சென்றார்கள். 
   மனைவி பிரசன்னம் ஆனாள்.
   ' அடடா!  என்ன அப்படி உங்களை வைச்சே , உங்களுக்காகவே ஒரு தலைப்பு !! என் தம்பி கோபு அப்பவே சொன்னான். " என்றாள்.  . அவள்  தம்பி பி.ஹெச். எல்லில் மெகானிகல் எஞ்சினீர்.   ஒரு நிமிஷத்திற்கு பத்து தடவை சொல்வாள். ' எல்லாம் தெரியும். ஆனால் பேசவே மாட்டான்" என்பாள்
மனமே சினம் கொள்ளாதே.  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

செல்லிடத்துக் காப்பான் சினங் காப்பான்,
அல்லிடத்து காக்கின் என் காவாக்கால் என்.
      இப்பொழுது கோபப்பட்டு நேரத்தை வீண்டிக்கக்கூடாது. இன்னும் ஒரு நாலு மணி நேரத்திற்குள் மனதிலே    "ஜீரோ " தலைப்பிற்கான பேச்சு வடிவத்தைத் தயார் செய்துகொள்ளவேண்டும்.  அலுவலகத்தில் மற்ற வேலை எதுவுமே ஓடவில்லை.

    மாலை மூணரை மணிக்கே கிளம்பினேன். கல்லூரியை அடைந்தேன். இன்றைக்கு மீட்டிங் என்று வாசலில் கூட்டமாக இருக்கும்.மனம் அசை போட்டது.   நான் பேச்சாளர் என்று தெரியுமோ தெரியாதோ ? நேராக கூட்ட அறைக்குச் சென்றேன்.    ஒருவருமே இல்லை. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. நேரமாகவில்லை போல் இருக்கிறது !  பேராசிரியர் அறைக்குச் சென்றேன். அவர் இருந்தார்.     ' வாருங்கள். சரியாக ஐந்து மணிக்கு நிகழ்ச்சி துவங்கி விடுவோம்  ! என்றார். மனதில் பேச வேண்டியதை அசை
போட்டுக்கொண்டேன்.  அவர் சொன்னாற்போல், கூட்டம் துவங்கியது. மேடையில என்னையும் சேர்த்து இருவர்.   கூட்டத்தில் ஒரு பதினைந்து பேர் இருந்தார்கள்.  நேரம் போகப்போக ஆடியன்ஸ் வரும் போலிருக்கறது என நினைத்துக்கொண்டேன். பேராசிரியர் என்னைப்பற்றி அறிமுகம் தேவையில்லை எனச்சொல்லிவிட்டுத் தன்னைப்பற்றி ஒரு பத்து நிமிடம் பேசினார்.
    இப்பொழுது சூரிய நாராயணன் ஸார் அவர்கள்,
    zero  என்னும் தலைப்பில் பேசுவார்கள், என்று அறிவித்தார்கள்.
    " நான் ஒரு zero.   எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பும்  zero " என்றேன். சன்னமாகக் கை தட்டினார்கள்.
   நான் அசரவில்லை. போகப்போக பெரிய கை தட்டுக்கள் வரும் என்று மனதிற்குள் சொல்லிகொண்டேன். , ஜீரோ எப்போது கண்டுபிடிக்கப்பட்டது, யார் கண்டுபிடித்தார்கள் என்று கணிதத்தில் துவங்கி, பிறகு புவி இயல், வேதியல் போன்ற வற்றில் சைபரின் ஆதிக்கத்தை உணர்த்தி, இறுதியில் தத்துவத்தில் "இல்லை" என்பது இருக்கிறதா இல்லையா ? என கேள்வி கேட்டு, அதற்கு பதிலாக நானே கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை, நானும் நீயும்  சேர்த்துவைப்பது எல்லாமே ஒன்றுமில்லை, உலகமே ஒரு சைபர் தான். வெங்காயம் போல். உரித்துப்பார்த்தால், பிரித்துபார்த்தால் ஒன்றும் இல்லையே எனவும் சைபரை மாயையுடன் ஒப்பிட்டுச்  சொல்லி,    zero  இல்லாது உலகமே , ஏன் ! அண்டமே இயங்காது என்று விவரித்தேன். கணினி உலகத்திற்குள் நுழைந்தால், எல்லாமே 0 அல்லது 1   ,  ஆக எல்லாவற்றையுமே பைனரி மொழி 0 மற்றும் 1 ல் அடக்கி விடுகிறதே.  0 அதாவது சைபர்  இல்லையேல் கணினி இல்லை.  ஆன்மீகத்திற்கு செல்வோம் என்றேன். .உண்மையிலே பார்க்கப்போனால், அந்த ஒரு   பூஜியதுக்குள்ளே ஒரு ராஜ்யமே இருக்கிறது இல்லையா என்றேன்.பூஜியதுக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆள வந்து புரியாமலே இருப்பான் ஒருவன். அவனை புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன் என்று பாடினேன்.  கூட்டம்  நிமிர்ந்து உட்கார்ந்தது.  இப்படியும் அப்படியுமாக  ஒரு இருபது நிமிடம் பேசியிருப்பேன்.  ( நாம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஆடியன்ஸ் தூங்குவது போல் இருந்தால் ஒரு பாட்டு அல்லது ஜோக் சொல்லணும். இது ஒரு டெக்னிக். தூங்காத பத்து பேர் கை தட்டும் சத்தத்தில் தூங்கி வழிபவர்கள் முழித்துக்கொள்வார். ஆனா இப்ப பட்டி மன்றம் எல்லாமே இப்படிதான் இருக்கிறது.)    


கூட்டம் ஒரு சுவாரசியமான கட்டத்திற்கு வரும்போல இருக்கையிலே ..
ஒரு சோதனை வந்தது. 
    திடீரென், தட, தட, தட என்று ஒரு கூட்டமாக ஒரு ஐம்பது அறுபது பேர் கூட்டத்திற்குள்
நுழைந்தார்கள்.      ஆஹா !  லேட்டாக இருந்தாலும் லேட்டஸ்டாக எனது ரசிகர்கள் இவரே என என் மனம் ஆர்ப்பரித்தது.  இன்னமும் ஒரு ஐம்பது பேர் வந்தார்கள்.  லேசாக ஒரு சந்தேகம். நமக்காகவா ? இல்லை வேறு     யாரோ ஒரு கனவான் வருகிறார் என நினைத்தேன். சரிதான். என் அருகில் இருந்த பேராசிரியர்,  ஒரு நிமிடம், நீங்கள் உங்கள் பேச்சைத் தொடருங்கள். நான் வந்துவிட்டேன்  என்று சொல்லிவிட்டு கூட்டம்  நடக்கும் ஹாலின்  வாசலுக்குச் சென்று ஒருவரை அழைத்து வந்தார். அவர் அருகில் வந்தார்.     நான் அயர்ந்து போனேன். 
    அவர் நான் படித்த  கல்லூரியில், எனக்கு கணித விரிவுரையாளராக இருந்தவர்.
    கணித மேதை.      அவருக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை, பெயர் ஒன்று தான்.
    அவரை மேடைக்கு அழைத்து உட்கார வைத்தார் பேராசிரியர்.
    எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் துவங்கியது.
    கூட்டத்தின் பிரதான முக்கிய பேச்சாளர் அவரே.  அவர் வரும் வரைக்கு கூட்டத்தை நிறுத்தி வைக்க ஒருவர் வேண்டும்.     அது நான். எனக்குப்புரியாமல் இல்லை. இப்போது கூட்டத்தின் எண்ணிக்கை இரு நூற்றுக்குமேல் இருந்தது.  அரங்கத்தில் இருப்பவர் யாவருமே வந்த பெரியவர் என்ன பேசப்போகிறார் என்றே நினைக்கிறார்கள் எனப்பட்டது.   ஒருவாறாக  நான் பேசி முடித்தேன்.
    கை தட்டுக்கள் விழாமல் இல்லை.  இருந்தாலும்,  அடுத்து, இவர் பேசுவார் என்று வந்தவரை அறிமுகப்படுத்தியபொழுது கேட்ட ஒலி   பல மடங்கு அதிகம்.
 அவைத் தலைவர்,  திருவாளர் பேராசிரியர் ............அவர்கள் இப்பொழுது  பேசுவார்கள் என்று அறிவித்தார்.      என்ன தலைப்பு என்று கவனித்தேன்.       infinity !! எதைப் பெரிதாக எண்ணுகிறோமோ அதைவிடப் பெரியது இன்பினிட்டி.
ஆளுக்குத் தகுந்தாற்போலத்தானே தலைப்பும் இருக்கும் என்று முதற்கண்
நினைக்கதோன்றியது.      என்னைச் சமாதானப்படுத்திக்கொள்ளவும் முடிந்தது.
அடுத்த கணம் தோன்றியது.      இந்த  zero  என்ற ஒன்றின் தெளிவு இல்லை என்றால்,   infinity  என்றதை ப்புரியவும் முடியுமோ ?
 நான் zero  இல்லை.  அதே சமயம்  infinity  யும் இல்லை.
இரண்டிற்கும் மத்தியில் ஏதோ ஒரு இடத்தில் !!
 நான் ஒரு கிணற்று தவளை அல்ல.     இருந்தாலும் கடலின் பரிமாணம் எனக்குத் தெரியாது.

 குறுந்தொகையில் பாட்டு ஒன்று வருகிறது.

"  கூவல் ஆமை குரைகடல் ஆமையை,
கூவலோடு ஒக்குமோ, கடல்? என்றல் போல்,
பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்,
தேவதேவன்சிவன் பெருந்தன்மையே. "

     ஒரு கிணற்று ஆமை கடல் ஆமையைப்பார்த்து,  நீ இருக்கும் கடல், இந்த
கிண்ற்றினைப்போல்  இருக்குமோ என்று கேட்டதாம்.

          இன்ஃபினிடி பற்றி அவர் பேசியது உண்மையிலேயே இன்ஃபினிடியாக,
அண்டத்தினை மனக்கண்களை விரித்துப் பார்ப்பது போல் இருந்தது.  அதன் முன் நான் ஒன்று மில்லை. நான் என்பதும் இல்லை.  இன்னொரு கோணத்தில் பார்க்கப்போனால், அந்தமும் ஆதியும் இல்லாதது சைபர்.  எங்கே துவங்குகிறது ? எங்கே முடிகிறது? ஒரு பிரும்மாண்டமான சைபரை கற்பனை செய்துகொள்ளுங்கள், அந்த கட்டத்தில் cipher ,cyber ஆகிவிடுகிறது.   அந்த அந்தமும் ஆதியும் இல்லாத அருட்பெருஞ்சோதி இன்பினிட்டி.

     இதுவும்  கதை அல்ல.  
   
     கபீர் எனும் இலக்கிய ஆன்மீக சிந்தனையாளர். கவிஞர். சில நூற்றாண்டுகளுக்கு முன் நமது நாட்டில் அவதரித்து, மத நல்லிணக்கத்தை மக்களிடையே பரப்பினார்.   தேவன் ஒருவனே அது அன்புதான் என்றார்.  அவரது  சிந்தனைகளை, ஆன்மீக உணர்வுகளை  ஒரு ஒப்புதலுக்குச் சொல்லப்போனால், நமது வள்ளல் இராமலிங்க அடிகளார் அவர்களின் சிந்தனைகளை கிட்டத்தட்ட கண் முன்னே வந்து நிறுத்தும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர். சமூக சீர்திருத்த வாதி. வெவ்வேறு மதங்கள், சாதிகள், இவையிடையே துண்டு பட்டிருந்த சமூகத்தை ஒன்று படுத்த அவர் மிகவும் பாடு பட்டார். 

அவரது கருத்துக்களை தொட்டனைத்து ஊறும் மணற்கேணி போல், உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துச் சொல்பவர் என் நண்பர் கபீரன்பன் அவர்கள்.
     கபீரன்பன் தனது வலையில் கபீர் பற்றி  என்னை எழுதச்சொன்னார். இதுவும் தேவ தேவன் சிவன் பெருந்தன்மை என உணர்ந்தேன்.  கபீர்  ஒரு கடல் . நான் கிணற்று வாசி. இருப்பினும்   நான் அங்கு சென்றேன். எழுதவும் செய்தேன்.
     இந்த எழுபது வயதில், மற்றவர்க்குத் தெரியாதது எதுவும்  எனக்குத் தெரிவதாகத் தெரியவில்லை.
     எழுதியது எதுவோ, அதுவும் புதிதும் அல்ல.  ஒரு வேளை நான்  ஒரு ஜீரோ என்பதையும் அது காட்டலாம். 
     நானறியேன்.
     நீங்களே சென்று வாருங்கள் அவரது வலைக்கு.

   


16 comments:

  1. சுவையான கதை ஐயா.

    ReplyDelete
  2. இது கதை அல்ல என்று தலைப்பிட்டும் கதை என்றால் சொல்கிறீர்கள்.
    பரவாயில்லை.
    கபீரன்பன் பதிவுக்குச் செல்லுங்கள்.
    http://kabeeran.blogspot.com
    அதையாவது கதை அல்ல என்று சொல்லுங்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  3. ஓ. சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லவில்லை போல. சுவையான நிஜக்கதை ஐயா என்று சொல்ல நினைத்தேன். :-)

    ReplyDelete
  4. //கொஞ்சம் பெரிய விஷயம் தான் ( விடயம் என்று சொல்லவேண்டுமோ ?//

    மஹாலெஷ்மி ஞாபகம் இருக்கா, சார்?
    அவர் என்னிடம்,"'நான் சொன்னதைச் சரியாச் சொல்லலையோ?" என்று ஆதங்கப் பட்டார்கள்.
    "என்ன விஷயம்?"
    "சூரி சார் பதிவுக்குப் போய்ப் பாருங்கள்" என்று சொல்லி, இந்த
    'இது கதை அல்ல' பதிவைப் பார்க்கச் சொன்னார்கள்.
    பார்த்தேன். படித்தேன். புரிந்தேன்.
    ரொம்பவும் சரி. அவர் ஆதங்கப் பட்டதில் நிரம்ப நியாயம் இருக்கிறது.
    "இது விஷயத்தை சூரி சாரிடம் தெரியப் படுத்துகிறேன்" என்றேன்.
    "நீங்கள் தெரியப்படுத்தறது இருக்கட்டும். நீங்கள் அதைப்படித்து விட்டு என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
    'என்னத்தை இவர்களிடம் சொல்றது?' என்று மனத்தில் நினைத்துக் கொண்டு,
    "நீங்கள் சொன்னதின் ஞாபகமாகவே இருந்திருக்கிறார்!" என்று சொல்லி விட்டேன், ஜூட்! (சூட்டோ?..)

    ReplyDelete
  5. //இறுதியில் தத்துவத்தில் "இல்லை" என்பது இருக்கிறதா இல்லையா ? என கேள்வி கேட்டு...//

    அட! நமக்குப் பிடித்த சப்ஜெக்ட்!

    ReplyDelete
  6. நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

    நமது குமரன் 'ஓ, சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லவில்லை போல' என்று அவரது மின்னிசோட்டா நேரத்து (10:19 A.M) பதிந்து இங்கு சூரி சார் பதிந்த கிட்டதட்ட அதே நேரத்து "நான் சொன்னதைச் சரியாச் சொல்லலையோ?" என்று மஹாலெஷ்மி சென்னையில் ஆதங்கப்பட்டதின் பதிந்த நேரமாகவும் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    இதைக் கூட சரியாகச் சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. பல உணர்வுகளை மனம் நினைக்கிற மாதிரி உணர்த்துவதற்கு வார்த்தைகள் வரவில்லை என்பது உண்மைதான்.
    சரியாகச் சொல்லப் போனால் மனத்தின் வேகமும் உணர்வும் வார்த்தைகளின் வேகத்தை விட பன்மடங்கு அதிகமே.

    ReplyDelete
  7. //ஏதோ தமிழ்லே இதுக்குப் பொருத்தமான வார்த்தையே இல்லாத மாதிரி, விஷயம்ங்கறதை அப்படி 'விசயம்' 'விடயம்'ன்னு சொல்லியானும் உபயோகப்படுத்தணும்ங்கற அவசியம் இல்லை. அதுக்கு பதிலா, தகவல், செய்தி-அப்படின்னு சொல்லலாம். அந்த வடமொழி வார்த்தையையே தான் சொல்லணும்னா, 'விசயம்' விட 'விதயம்' சரி. ஆனா, என்னவோ அந்த நல்ல சொல்லாக்கம் புழக்கத்து வராமயே போச்சு.. அதே மாதிரி, 'விஷம்னுங்கறதை,'விடம்' ன்னு எழுதறதை விட பேசாம 'நஞ்சு'ன்னு எழுதிடலாம்."//

    //நான் சொன்னதைச் சரியாச் சொல்லலையோ?" என்று மஹாலெஷ்மி //

    பெருஞ்செல்வி சொல்வது சரியே. ஆயினும்
    ஆதங்கம் என்றால் புரியலயே !!
    சினத்திற்கும் சின்ன ஒரு மன வருத்ததிற்கும்
    இடையிலே ஓர்
    இனம் தெரியா மன நிலையோ !!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  8. jeevi said:
    // இல்லை" என்பது இருக்கிறதா இல்லையா ? //

    இது 18ம் நூற்றாண்டு துவக்கத்திலிருந்தே தத்துவ சிந்தனையாளர்களை, முக்கியமாக (குறிப்பாக், சிறப்பாக, முதன்மையாக, மூத்ததாக.......சரி..முக்கியமாக என்றே இருக்க்ட்டும்) ஐரோப்பிய தத்வார்த்திகளை த்வம்சப்படுத்தியது.
    (இம்சித்தது, புரட்டி எடுத்தது, தலையை பிராண்டிக்கொள்ள வைத்தது.... )

    The theory of negation , the problem of nothingness, என்பதெல்லாம் படித்தது தானே !
    The sound of silence என அண்மையில் படித்தேன்.
    ஒலி இல்லை என்பதுதானே மெளனம்.
    மெளனமும் இல்லை, ஒலியும் இல்லை என்ற ஒரு நிலை உண்டா !
    அண்மையில் பெரியவரது உரை ஒன்று கல்கியில் வந்திருக்கிறது. படிக்கவும்.

    இங்கேயும் நேதி, நேதி ( இதுவல்ல, இதுவல்ல என்று ஒவ்வொன்றாக்த் தள்ளிக்கொண்டே போய், இறுதியில்,
    இதுதானோ என்று ஒரு நிலைக்குத் தள்ளப்படும் நிலையில், இல்லை என்று இல்லை. இருப்பவன் ஒருவன்
    எங்கெங்கிலும் இருக்கிறான் என்றால், அவன் இல்லாத இடமொன்று எங்கே இருக்கும் ? அது இல்லை. )
    பற்றிய வியாக்கியானங்கள் ( விளக்கங்கள் ) விரவியே உள்ளன. ஜீவா எப்பவோ இதுபற்றி எழுதியிருக்கிறார்
    என ஞாபகம் ( நினைவு ).

    இருப்பதை வைத்து இல்லை என உணர்கிறோமா , அல்லது
    இல்லையென்பது தான் இருப்பதன் முன்னோடியா !!

    தெரியவில்லை.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  9. பெரியவரின் உரையை நானும் படித்தேன்.
    தொடர்ந்து பதிவாக எழுதி பூவனத்தில் பதிக்க வேண்டும்.
    ஆமாம்..

    இருப்பது தெரிவது போலவே
    இல்லாததும் தெரிகிறது
    தெரிதலுக்கு ஸ்தூலமாய்
    இருக்க வேண்டும்
    என்கிற அவசியம்
    இல்லை என்று தெரிகிறது.

    ReplyDelete
  10. இது கதை இல்லன்னு சொல்லிப் பெரிய கதையே சொல்லியிருக்கீங்க !

    ReplyDelete
  11. //
    இது கதை இல்லன்னு சொல்லிப் பெரிய கதையே சொல்லியிருக்கீங்க !//

    இது நிஜமா நடந்ததுதாங்க.
    நம்ப மாட்டீங்க போலே இருக்கே !!

    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  12. சுவையான நிகழ்வு பதிவு!
    (கதைன்னு சொல்ல்லை பாத்தீங்களா!)

    ReplyDelete
  13. புரிந்து கொண்ட அந்த சமயத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது :(

    ReplyDelete
  14. கதை அல்ல என்றாலும் கதைக்கான சுவாரஸ்யத்துடன் பகிர்ந்த விதம் அழகு.

    //பேராசிரியர் என்னைப்பற்றி அறிமுகம் தேவையில்லை எனச்சொல்லிவிட்டுத் தன்னைப்பற்றி ஒரு பத்து நிமிடம் பேசினார்.//

    தொடர்ந்து நிகழ்ந்தவற்றை நகைச்சுவையோடு சொல்லியிருந்தாலும் அதிலிருக்கும் பாடத்தையும் உணர்த்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  15. //கபீரன்பன் தனது வலையில் என்னை எழுதச்சொன்னார்.//

    படித்து விட்டேன் சார். இங்கே தந்த சுட்டிக்கு நன்றி.

    ReplyDelete
  16. சூரி ஐயா..அற்புதமான அனுபவம்...இந்த சுவாரஸ்ய அனுபத்தில் நானும் நனைந்தேன்..நான் தஞ்சை காப்பி குடித்ததை உணர்ந்தேன்....நானும் ஜீரோ விளக்கங்களை கேட்டாதாய் உணர்ந்தேன்.....ஜீரோ இல்லாமல் ஏது இன்பினிட்டி கணிதத்தில்...ஜீரோ வே ஆக்கம்...அதுவே முதல் பொருள் ..படைக்கும் தேவன் போலே...கணிதத்துடன் ...அழகாய் இயற்கையின் கூறுகளையும் பொருத்திய சூட்சுமம் வெகுவாய் ரசித்தேன்...தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி