Pages

Sunday, October 10, 2010

நவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும்

 உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என வலியுறித்தினார்  வள்ளுவர்.

எதை நினைத்தாலும், சொன்னாலும், செய்தாலும், ஒவ்வொரு நிமிடமும், கடந்த நிமிடத்தைவிட உயர்ந்த தாகவே நமது எண்ணமும், சொல்லும், செயலும்  இருப்பது நன்று. முன்னேற்ற பாதையிலே நாம் வலுவாக இருக்கின்றோம் என்பதற்கு இதுவே ஆதாரம்.

மாணிக்க வாசகரின்" யாத்திரை பத்து"  மனிதனின் பரிணாம  வளர்ச்சியை ஏறத்தாழ டார்வின் தத்துவத்திற்கு மிக அருகே கொண்டு செல்வதை கவனிப்போமா?

"புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்..:"  

    இதததுவத்தை நவராத்திரி கொலுப்படிகள் சொல்லாது சொல்கின்றனவோ என நினைத்த பொழுது எனக்கு இந்த வலையிலே ஒரு பதிவு கிடைத்தது.  நீங்கள் எல்லோரும் அதை படித்து இருக்கலாம் எனினும் திரும்பவும் படிப்பது சரியே .
 நவராத்திரி கொலு

நன்றி:
கொலு‌வி‌ல் ஒன்பது படிகள் அமை‌ப்பத‌ன் நோ‌க்க‌ம்
இங்கே கிளிக்குங்கள்.
    http://tamil.webdunia.com/miscellaneous/webduniaspecial08/navarathiri/0809/30/1080930052_1.htm
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.

* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.
  
     படி என்பது பெயர்ச்சொல் .  அப்போது அது ஒரு ஏணியின் அல்லது மலைக்குச் செல்லும் வழியின் படிகளை குறிக்கும்.  
    படி என்பது வினைச்சொல். நாம் கற்று உணரவேண்டும் எனும் பொருள் அதற்கு. 
எனைத்தானும் நல்லவை கேட்க என்பார் வள்ளுவர்.  படி எனும் சொல் இதனை பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் ஒரே நேரத்தில் புரிதல் நல்லது.

8 comments:

  1. கொலுப்படிகளின் தத்துவம் இப்போதுதான் அறிய வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பொருள் பொதிந்த விளக்கம்,
    நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  3. படியும் பரிணாமமும் பற்றிய விளக்கம் அருமை.

    பிறவிப்பெருங்கடல் நீந்தலில் உள்ள படிகளை மறைபொருளாய்க் குறிக்கவே இப்படி ஒரு வழக்கத்தை உருவாக்கினார் போலும்.

    பிறவிச்சங்கிலியும், இருவினைக் கோட்பாடும் இந்துமதத்தின் அடிப்படை என்றுகூட அடித்துக்கூற முடியும். இங்கு என்னுடைய பலநாள் சந்தேகம் நினைவுக்கு வருகிறது.

    சித்தர் சிவவாக்கியர் மறுபிறவிக்கோட்பாட்டில் நம்பிக்கையில்லாதவரோ என்ற சந்தேகம் அடிக்கடி வருவதுண்டு, காரணம் நான் அடிக்கடி mp3 ஒலி
    வடிவில் கேட்கும் பாடல்தான்.

    "கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே."

    இருந்தும் என்னால் கடைசிவரியைச் சரியாய்ப்புரிந்துகொள்ளவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுவதுன்று.

    அய்யா, இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன எனத்தெரிந்துகொள்ள ஆசை.

    ReplyDelete
  4. திருமதி. ராமலக்ஷ்மி வருகைக்கும் , திரு.ஜீவா அவர்கள் வருகைக்கும் எனது
    உளங்கனிந்த நன்றி.

    ReplyDelete
  5. திரு. முத்து எழுதுகிறார்:
    // இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே."
    இருந்தும் என்னால் கடைசிவரியைச் சரியாய்ப்புரிந்துகொள்ளவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுவதுன்று.
    அய்யா, இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன எனத்தெரிந்துகொள்ள ஆசை.//

    முதற்கண்,
    திரு முத்து அவர்கள் வருகைக்கு நன்றி.

    கறந்த பால் முலைப்புகா என்னும் அற்புதமான் சிவ வாக்கியர் பாடலை மேற்கோள் காட்டி,
    அதில் தங்களுக்கு உள்ள ஐயம் தனையும் சுட்டி இருக்கிறீர்கள்.

    இதன் பொருளை நோக்குவோம்.

    கறந்த பால் திரும்பவும் முலைக்குள் புகாது. அதுபோலவே
    கடைந்தெடுத்த வெண்ணையும் மோராகாது. மோர் ஆனது திரும்பவும் பாலாகாது.
    உடைந்த காய் மறுமுறை காயுமாகாது. காய் பூவாகாது. அது போல மண்ணில் விழுந்த‌
    உடலும் உயிர்கொண்டு எழாது.

    ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் சென்றவை அல்லது சென்ற‌வர் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்ப மாட்டார். இருப்பினும் பழைய நிலையிலிருந்து புது நிலைக்கு முழுமையாக‌ச் சென்றவை அல்லது சென்றவரைப்பற்றியே
    சிவ வாக்கியர் பேசுகிறார் என நினைக்கிறேன்.

    மறுபிறவி பற்றியோ அல்லது இருள்சேர் இருவினை பற்றியோ இங்கு பேச்சில்லை.

    இறந்தவர் பிறப்பதில்லை. உண்மையே. இருப்பினும் அதே உடலைக்கொண்டு பிறப்பதில்லை என்றே பொருள் கொள்ளவேண்டும். மாண்டவர் மீண்டதில்லை. இதுவே இயல்பான பொருளாம்.

    ஆயினும் உண்மையிலே நாம் இறக்கின்றோமா ? அல்லது இவ்வுடலைத்தான் துறக்கின்றோமா ? என்பது அடுத்த கருத்துக்கு வித்து.

    இக்கருத்தினைக் கொண்டு, உங்கள் கேள்விக்கு, மற்றுமொரு கோணத்தில் விரைவில் இன்னொரு பதிவும் எழுதுகிறேன்.
    அதுவரை பொருத்தருள்க.
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. திரு. முத்து எழுதுகிறார்:
    // இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே."
    இருந்தும் என்னால் கடைசிவரியைச் சரியாய்ப்புரிந்துகொள்ளவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுவதுன்று.
    அய்யா, இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன எனத்தெரிந்துகொள்ள ஆசை.//
    முதற்கண், திரு முத்து அவர்கள் வருகைக்கு நன்றி.
    கறந்த பால் முலைப்புகா என்னும் அற்புதமான் சிவ வாக்கியர் பாடலை மேற்கோள் காட்டி, அதில் தங்களுக்கு உள்ள ஐயம் தனையும் சுட்டி இருக்கிறீர்கள்.

    கறந்த பால் திரும்பவும் முலைக்குள் புகாது. அதுபோலவே
    கடைந்தெடுத்த வெண்ணையும் மோராகாது. மோர் ஆனது திரும்பவும் பாலாகாது.
    உடைந்த காய் மறுமுறை காயுமாகாது. காய் பூவாகாது. அது போல மண்ணில் விழுந்த‌
    உடலும் உயிர்கொண்டு எழாது.

    ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் சென்றவை அல்லது சென்ற‌வர் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்ப மாட்டார். இருப்பினும் பழைய நிலையிலிருந்து புது நிலைக்கு முழுமையாக‌ச் சென்றவை அல்லது சென்றவரைப்பற்றியே
    சிவ வாக்கியர் பேசுகிறார் என நினைக்கிறேன்.

    மறுபிறவி பற்றியோ அல்லது இருள்சேர் இருவினை பற்றியோ இங்கு பேச்சில்லை.

    இறந்தவர் பிறப்பதில்லை. உண்மையே. இருப்பினும் அதே உடலைக்கொண்டு பிறப்பதில்லை என்றே பொருள் கொள்ளவேண்டும். மாண்டவர் மீண்டதில்லை. இதுவே இயல்பான பொருளாம்.

    ஆயினும் உண்மையிலே நாம் இறக்கின்றோமா ? அல்லது இவ்வுடலைத்தான் துறக்கின்றோமா ? என்பது அடுத்த கருத்துக்கு வித்து.

    இக்கருத்தினைக் கொண்டு, உங்கள் கேள்விக்கு, மற்றுமொரு கோணத்தில் விரைவில் இன்னொரு பதிவும் எழுதுகிறேன்.
    அதுவரை பொருத்தருள்க.
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. அய்யா தங்கள் மறுமொழிக்கு நன்றி. அடியேனை முத்து என மட்டும் விளித்தால் மிக மகிழ்வேன் :‍).

    ReplyDelete
  8. எங்களை போன்ற இளைய தலைமுறையினர்க்கு மிகவும் பயனுள்ள பதிவு. கொலு வைப்பதில் இவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பது இன்றுதான் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி