Pages

Thursday, January 29, 2009

எனது எனது என்றிருப்பவன் பொருளை யானும் ......




இன்றைக்கு துளசி டீச்சரின் வலைப்பதிவினில் படித்தேன்.
பழைய பழமொழிதான். இருப்பினும் அதை ஒரு கட்டுரையின் முடிவாக‌
எல்லோரும் உணரக்கூடிய வகையில் எடுத்துச் சொல்லியிருக்கிறாகள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது தான் அந்த முது மொழி.


உலகத்திலே பார்க்கப்படும், கேட்கப்படும், நுகரப்படும், உணரப்படும், சுவைக்கப்படும் சுருக்கமாகச் சொல்லப்போனால் ஐம்புலனகளால் அனுபவிக்கப்படும் எல்லாவற்றிற்குமே இது பொருந்தும்.

இனிப்பு பிடிக்கும் என்று ஒருவன் இனிப்பாகவே சாப்பிட்டுக்கொண்டே இருக்க இயலுமா? ஒரு அளவுக்கு மேல் திகட்டி விடுகிறது. இதை பொருளாதார ஆரம்ப பாடங்களில் தியரி ஆஃப் மார்ஜினல் யுடிலிடி என்கிறார்கள். எனக்கு அவல் பாயசம் பிடிக்கும் என்றால் ( நாரதாவின் பின்னூட்டம் நினைவுக்கு வருகிறது) ஒரு இரண்டு கப் சாப்பிடுகிறோம். மூன்றாவது ஓ.கே. நான்காவது ஏதோ வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக சாப்பிடலாம். ஐந்தாவது கப் : ஐயா ! என்னை விட்டு விடுங்கள். நாளை வந்து சாப்பிடுகிறேன். இப்போதைக்கு போதும் என்கிறோம்.

எந்த ஒரு பொருளுமே ஒரு அளவிற்கு மேலே அதன் முதற்கண் தந்திட்ட‌ அனுபவத்தைத்தருவதில்லை. திகட்டிப்போய் விடுகிறது. அலுத்துப்போய் போதும், என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி விடுகிறோம். இதற்கு விதிவிலக்கு ஒன்றே ஒன்று தான் என்கிறார்கள். அது பணம். ஹார்டு கரன்சி. எத்தனை வந்தாலும், சேர்த்தாலும்,மேலும் மேலும் என்றோ ஒன்று மனதை அரித்திக் கொண்டே இருக்கிறது. ஒரு அளவிற்கு மேல் அப்பணத்தினால் எந்த வித அதிக லாபமோ பிரயோசனமோ இல்லை எனினும் அதை மேன்மேலும் சேகரிக்க வேண்டும் என்கிற பேராசை அதிகரிக்கிறது.

ப‌ழைய‌ த‌மிழ்ப்பாட‌ல் ஒன்று ப‌ள்ளிக்கால‌த்தில் ப‌டித்தேன். வ‌ட்டிக்கு ப‌ண‌ம் கொடுத்து பொருள் ஈட்டும் ஒரு வ‌ணிக‌ன் த‌ன‌து க‌டையில் க‌ல்ல‌ப்பெட்டி முன் அம‌ர் ந்து இருக்கிறான். அப்பொழுது வ‌ழிப்போக்க‌ன் ஒருவ‌ன் அக்க‌டை முன் வ‌ ந்து நிற்கிறான். க‌ல்ல‌ப்பெட்டியைப் பார்க்கிறான். பார்த்துக் கொண்டே நிற்கிறான். உன‌க்கு என்ன‌ வேண்டும் ? ஏன் என் கல்லாப்பெட்டியைப் பார்க்கிறாய் ? என‌ வ‌ணிக‌ன் கேட்கிறான்.
வ‌ழிப்போக்க‌ன் ப‌தில‌ளிக்காது சென்று விடுகிறான். அடுத்த‌ நாள் அதே நேர‌ம் அதே வ‌ழிப்போக்க‌ன் அதே போல் அக்க‌டைக்கு முன் வ‌ ந்து ச‌ற்று நேர‌ம் க‌ல்லாப்பெட்டியை பார்க்கிறான். வ‌ணிக‌ன் வ‌யிற்றில் ஏதோ ப‌ய‌ம் பீரிடுகிற‌து. வ‌ழிப்போக்க‌ன் போய்விடுகிறான். அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறான் வ‌ணிக‌ன். இத்த‌னைக்கும் அவ்வ‌ழிப்போக்க‌ன் அப்பெட்டி ப‌க்க‌ம் வ‌ர‌க்கூட‌ இல்லை. க‌டைக்கு வெளியே நின்றுதான் க‌வ‌னிக்கிறான்.

மூன்றாவ‌து நாள். அ ந்த‌ வ‌ழிப்போக்க‌ன் எங்கே வ‌ ந்து விடுவானோ என்று அஞ்சி அஞ்சி சாகிறான் வ‌ணிக‌ன். ச‌ற்று தாம‌தமானாலும் வ‌ழிப்போக்க‌ன் வ‌ருகிறான். அதே இட‌த்தில் அதே போல் க‌ல்லாப்பெட்டியைக் குறி வைத்தாற் போல் பார்க்கிறான். வ‌ணிக‌னால் வாளா இருக்க‌ இய‌ல‌வில்லை.

என்ன‌ இது ! இது என்னுடைய‌ க‌ல்லாப்பெட்டி. இதில் இருப்ப‌து என்னுடைய‌ ப‌ண‌ம். நீ ஏன் தின‌மும் இதை உற்று உற்று பார்க்கிறாய் என்கிறான் வ‌ணிக‌ன்.
அத‌ற்கு வ‌ழிப்போக்க‌ன், " ஐயா ! இது உங்க‌ள் ப‌ண‌மா ! என் ப‌ண‌மென்று அல்ல‌வா நினைத்தேன் !" என்றான். வணிகன் திடுக்கிட்டான். " என்ன உன் பணமா ! உன் பெட்டியா ? என்ன உளறுகிறாய் ! " என கோபமுற்று இரைகிறான். அப்பொழுது அமைதியாக அந்த வழிப்போக்கன் சொல்லுவான்: " ஐயா ! நானும் மூன்று நாட்களாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இது உங்கள் பணமாக இருந்தால், ஒன்று அதை உங்களுக்காக செலவிடவேண்டும், இல்லை, பிறருக்கு தானமாகத்தரவேண்டும்.இரண்டுமே நீங்கள் செய்ய வில்லை. நானும் இந்த ப்பெட்டியிலுள்ள பணத்தை எனக்காகவும் செலவிடவில்லை. தானமும் செய்ய ல்லை.அப்படியிருக்கையில் இது உங்கள் பணமாக இருந்தால் என்ன , என் பணமாக இருந்தால் என்ன ! இரண்டும் ஒன்று தானே என்றான். " எனது எனது என்றிருப்பவன் பொருளை யானும் எனது எனது என்றிருப்பேன் " என்று துவங்குகிறது அப்பாடல். நாலே வரிகள் தான். இருப்பினும் நாள் முழுவதும் அமைதியுடன் வாழ ஒரு வகை, வழி, சொல்கிறது.




3 comments:

  1. நல்ல மலரும் நினைவுகள் :))

    நன்றி

    ReplyDelete
  2. நல்ல கருத்துள்ள சுவரசியமான பதிவு!! படிக்கையில் அலுப்பே தெரியல போங்க!!!

    ReplyDelete
  3. வாவ்!அருமையாக இருக்கு.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி