Pages

Thursday, March 26, 2009

ஈன்றாள் பசி காண்பானாயினும்



அண்மையில் நான் புதுப்பதிவு ஏதும் எழுத இயலவில்லை. தமிழ் மண்ணுக்கு மிகத்தொலைவில் அமெரிக்க மண்ணில் ஒரு கிழ்க்குக்கோடியில் ஒரு கொசு போல ஒட்டியிருக்கும் ஒரு மா நிலத்தில் ஒரு ஐந்து மாதம் இருக்கவேண்டிய சூழ்னிலையில் இருக்கும் எனக்கு எப்போது தமிழகத்திற்குத் திரும்புவோம் என்றிருக்கிறது.

இங்கு நிலவும் வெட்ப தட்ப நிலை நான் எனது 67 வருட வாழ்விலே அனுபவித்திராத ஒன்று. குளிர் காலம் விலகும் நிலை. வசந்த காலம் வந்துவிட்டது என்கிறார்கள். ஜூன் வரையில் வசந்தமாம். கதிரவன் ஒளி பிரகாசிக்கிறான், இருப்பினும் வீட்டிற்கு வெளியே பூஜயம் டிகிரி இருக்கிறது. காற்று வேறு. அதற்கான உடைகளை ஒரு வின் வெளி பிரயாணி போன்று அணிந்து செல்கிறோம்.

அமெரிக்க மக்கள் கலாசாரம் நான் இதுவரை கண்டவரை ஒரு அவியலாக இருக்கிறது. பல்வேறு நாட்டு மக்கள், அவரவர் தத்தம் கலாசாரங்கள், உடை, அணுகும் முறை எல்லாம் கலந்து காணப்படுவதால், அமெரிக்க சமுதாயம் உலக மக்கள் யாவ்ரையும் ஒரே இடத்தில் பார்க்க வகை செய்கிறது.

இம்மானிலம் ஒரு பணக்கார மானிலம் என்று தொலைக்காட்சியில் சொன்னார்கள். அமெரிக்க சராசரி ஆண்டு வருமானம் சுமார் 35000 டாலராம். இங்கு 45000 டாலருக்கு மேலாம். சாலைகளில் நடந்து போகும் நபர்கள் வெகு குறைவு.காரில் இல்லாமல் வாழ்க்கை நடத்த இயலாது என்கிறார்கள். பால், மோர், காய்கறி எல்லாம் மொத்தம் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.

அமெரிக்க பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வேலை இல்லாதோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி பொருளாதாரத்தைச் சீர் செய்யும் நோக்குடன் துவக்கியிருக்கும் 780 பிலியன்
தொகையில் பெரும் பகுதி சாலைகள் சீரமைப்பு, கல்விக்கூடங்கள் சீரமைப்பு ஆகியவற்றிற்கு உதவுமாம். இருப்பினும்
வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகமாகும்போது குற்றங்கள் புரிவோரின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்று
நினைப்பதால் ஒரு 50000 காவலர் புதியதாக நியமிக்கப்படவும் இருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன.

குற்றங்கள் என்று சொல்லும்போது, எல்லா நாட்டிலும் அவை ஒன்று போலத்தான் இருக்கும்போல இருக்கிறது.
ஒரு வளப்பமான நாடு, பெரும்பாலானோர் கல்வியறிவு பெற்றவர்கள், ஒரு குறிப்பிடத்தக்க சிறப்புடைய காவல், நீதி அலுவலகங்கள், பாரபட்ச மில்லாத தொலைக்காட்சிகள் இவ்வளவும் பெற்றிருந்தும் குற்றங்களும் மலிந்தே காணப்படுவது போலத் தெரிகிறது. ஒரு பெரிய கடையில் 150 மின்ட் ( மிட்டாய்) திருடியதாக குற்றம் பற்றிய தகவல், , தன் மனைவி தன்னைத் துன்புறுத்துவதாய் காவலர் அலுவலகத்தில் உதவி கேட்கும் கணவர் பற்றிய செய்தி, திடீரென்று தனது பள்ளி மாணவரையே துப்பாக்கியால் சுட்ட நிகழ்ச்சி, தனது மகளையே ஒரு 25 ஆண்டுகள் சிறைப்படுத்தி அவளிடம் 7 குழந்தைகள் பெற்ற செய்தி எல்லாமே இருக்கின்றன. இதெல்லாம் ஏதோ சிறிய சங்கதி என்பது போல, போதைப் பொருள் கடத்தல் மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கு இடையே என்ற தகவல்களும் உண்டு.


ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க‌
சான்றோர் பழிக்கும் வினை
.
என்பார் வள்ளுவர்.

ஆயினும் பசி மேலிடக்குற்றங்கள் அதிகரிக்கும் என்பதும் உண்மை தான்.
நல்வழியில் சொல்லப்படுவது போல: பசி வந்திடப் பத்தும் பறந்து போம் .

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.




ஆனால், பசியின் மேலீட்டால் செய்யப்படும் தவறுகளைக் காட்டிலும், மனிதன் தனது பேராசையால், ஆணவ மேலீட்டால் செய்திடும் குற்றங்கள் மனித நேயத்திற்கு புறமபானவை. மேட் ஆஃப் என்ற ஒரு கனவான் கிட்டத்தட்ட‌
65 மிலியன் ( பிலியனா மிலியனா சரியாகத் தெரியவில்லை ) மக்கள் பணத்தை மோசடி செய்துவிட்டு, நீதிமன்றத்தில்
அவன் மீது சாட்டப்பட்ட 11 குற்றங்களையும் ஒப்புக்கொண்டு சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறான். 75 வயதான்
இவன் மொத்தம் 150 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க குற்றவியலில் வ்கையிருக்கிறதாம்.

இது ஒரு புறமிருக்க, தனி மனிதர் மட்டுமல்ல, மாபெரும் நிறுவனங்களும் பேராசையினால், தாம் மட்டுமல்ல, தமது
நாட்டின் பொருளாதாரத்தையும் சீர் குலைக்க வழி செய்து இருப்பதாக்த் தெரிகிறதாம். பொருளாதார திட்டத்தில் உதவி
பெற்ற இந்த நிறுவனங்களின் அதிகாரிகள், அரசாங்கத்திலிருந்து பெற்ற உதவியில் ஒரு கணிசமான தொகையைத்
தங்களுக்கு போனசாகப் பெற்றார்களாம். மக்கள் கோபம் கொண்டு எழ, அவற்றில் சிலவர் வாங்கிய தொகையைத் திருப்பத்தந்திருக்கிறார்கள்.

கடந்த 25 முதல் 30 ஆண்டுகளில் சராசரி அமெரிக்க குடிமகனின் சேமிப்பு 11 விழுக்காடிலிருந்து
1 விழுக்காடு ஆக குறைந்துள்ளது, என பிரபல டைம் பத்திரிகை கூறுகிறது. எதிர்கால
வருமானத்திலேயே வாழ அமெரிக்க மக்கள் தம்மை பழக்கியிருக்கின்றனர். தேவை இருக்கிறதோ
இல்லையோ அதை க்ரெடிட் கார்டு வழியே வாங்க முடிவதால், இவரில் பெரும்பாலானோர்
தமது வருமானத்தில் பெரும் பகுதியை வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்துவதிலேயே
செல்வழிக்கின்றனர் எனச் சொல்கிறார்கள்.

ஆகாறு அளவீட்டிய‌தாயினும் கேடில்லை
போகாறு அகலாக்கடை


என்னும் வள்ளுவனின் வாய்மொழியில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
வரவுக்குத் தகுந்த செலவு என்பதற்கும் சராசரி அமெரிக்க குடிமகனுக்கும் ச்மபந்தம் இல்லை. ஒவ்வொரு நபரும் ஒரு ஐந்து முதல் 7 க்ரெடிட் கார்டுகள் வைத்திருக்கின்றனர் என நினைக்கிறேன்.

இந்த க்ரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் திவாலாக துவங்கும் நிலையில் இவர்களது வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களுக்குக் கொடுக்கும் மாத உதவித்தொகையும் அதிகரிக்கிறது. இதை சமாளிக்க வேண்டும் எனின் வேலை வாய்ப்புக்களை அதிகப்படுத்தவேண்டும்.
ஆகவே தான் ஓபாவின் பொருளாதாரத்திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு ல்டசத்திற்கு மேல் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் என நம்பப்படுகிறது.அதே சமயம் ஓபாவின் 780 பிலியன் பட்ஜெட் எதிர்கால அமெரிக்க பிரஜைகளைக் கடனாளியாக ஆக்கிவிடும் என்று ரிபப்ளிகன் கட்சி கதறுகிறது.

ஓபாவின் கட்சியோ பொருளாதாரம் மிக மோசமான நிலையில் ஏதேனும் செய்தாக வேண்டும், ஒன்றுமே செய்யாது இருப்பது இன்னமும் பாதாளத்திற்குக் கொண்டு செல்லும் எனச் சொல்லி அதற்கான ஆதரவையும் பெற்றிருக்கிறது.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிரவருவதோர் நோய் என்றார் வள்ளுவர்.
பொருளாதாரச் சீர்கேடு சென்ற வருடமே வருவதற்கான முன்குறிகள் தெரிந்தபோதிலும் போதிய‌ முயற்சிகள் செய்யப்படவில்லை என்பது ஒரு சாரார் வாதம். ஆகவே செய்வதை துரிதமாகச் செய்து எப்படியும் அமெரிக்க பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள். உண்மைதான்.

தூங்குக தூங்கிச் செயற்பால, தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. என்பார் வள்ளுவர்.

செய்யவேண்டிய காரியங்கள் பல வகைப்படும்.
ஒன்று முக்கியமானவை. இன்னொன்று அவசரமாகச் செயல்படவேண்டியவை.

எந்த காரியங்களில் நேரம் ஒரு பொருட்டோ அதனை உடனே செய்து முடிக்கவேண்டும். அவற்றைதான் தூங்காது செய்யும் பணிகள் என்பார் வள்ளுவர்.

எப்படியோ ஓபாமா வெற்றி பெற வாழ்த்துவோம்.

அமெரிக்காவை சொர்க்கம் என்பார்கள்.
சொர்க்கம் போலத் தெரியவில்லை.

அது சொர்க்கமாக இருந்தாலும்

சொர்க்கமே என்றாலும் அந்த நம்ம ஊரு போல ஆகுமா என்று பாடிய இளைய ராஜாவின் குரல் கேட்கிறது.

எப்போது திரும்புவோம் என எதிர் நோக்கி இருக்கிறேன்.

5 comments:

  1. நல்ல ஆய்வு.

    விரைவில் திரும்பி வாருங்கள்:)!

    ReplyDelete
  2. நன்றாக அனுபவித்து சொல்லியுள்ளீர்கள் ஐயா

    ReplyDelete
  3. இடப்பக்கம், திருக்குறளை, ஆங்கிலத்தில் குரல் போலவே ஈரடியாக மொழிபெயர்த்து தமிழன்னை காலடியில் மலர்களாகத் தொடுத்து வைத்த கவியோகி சுத்தானந்த பாரதியை சுத்தமாக மறந்து விட்டு, அவர் படைப்பை மட்டும் தங்களுடைய சிலை வைத்த வரலாற்றைச் சேர்த்து எழுதிக் கொண்ட முன்னுரையைப் பார்த்து விட்டு அதிர்ந்து போனேன்.
    நீங்கள் எடுத்தாண்டிருக்கிற திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பைச் செய்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார் என்பதை அறிந்து வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  4. திருமதி ராமலக்ஷ்மி மற்றும் திரு ஞானசேகரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வருகைக்கும் நன்றி.
    தகவலுக்கு நன்றி.

    திருக்குறள் பதிவு ஒரு தொடர்பு. ( லிங்க் ) . எனது வலையிலிருந்த் அங்கே செல்ல ஒரு வழி
    அவ்வளவே.


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. இப்போது கொஞ்சம் குளிர் குறைந்திருக்குமே ஐயா. குறைந்துள்ளதா?

    எங்கள் குழந்தைகள் இருவரும் (இப்போது அவர்களுக்கு முறையே ஆறு, இரண்டு வயதுகள்) பிறந்த போது என் மாமனார் மாமியார் வந்து இருந்தார்கள். முதல் முறை மார்ச்சில் வந்து ஆகஸ்டில் திரும்பினார்கள். இரண்டாவது முறை டிசம்பரில் வந்து மேயில் திரும்பினார்கள். இந்த ஊரில் மே முதல் ஆகஸ்ட் வரை சொர்க்கம் போல் இருக்கும் என்பதால் இந்த முறை அவர்களை மே மாதம் வரச் சொல்லியிருக்கிறோம். இருவரும் இன்னும் இரு வாரத்தில் வருகிறார்கள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி