Pages

Tuesday, December 31, 2013

புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

Happy New Year 2014

வலை நண்பர்கள் அனைவருக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள். 

படத்தின் மேல் எலியை அமுக்க படம் பெரிசாகும் .
(படத்தை பெரிய அளவில் பார்த்து உங்கள் ரசிகர் மன்றம் எது என்று பாருங்கள். உங்களைத் தொடருபவர் எண்ணிக்கையை வைத்து கண்டு பிடிக்கலாம் )


நான் தினம் சென்று படிக்கும் பல வலைப் பதிவுகளை  குறிப்பாகவும் சிறப்பாகவும் மேலே காணலாம். எங்கே நீங்கள் இருக்கிறீர்கள் ?

கண்டு பிடியுங்கள். 

பலரது வலைகளை அவர்தம் ரசிகர்களைக் கொண்டு காணலாம். அந்த வலையின் எண்ணிக்கையை வைத்து அந்த வலை யாரது என்றும் அறியலாம். குறிப்பால் நான் உணர்த்தும் பாபுலர் வலை பதிவுகள். நான் வழக்கமாக தினசரி பார்க்கும் ஒரு 40 வலைகள் இங்கு சங்கமம். 

இவ்வலைகளில் சிலரது புகைப்படங்கள் கிடைப்பதால் இட்டு இருக்கிறேன். சிலரது அறிமுகப் படங்களும் அவர்கள் யார் என உரைக்கும். 

உதாரணம் : பூனைக்குட்டி. 

நான் தமிழிலும் ஆங்கிலம், மலையாளம், சம்ஸ்க்ருதம்,ஹிந்தி, உருது என்னும் மொழிகளில் படித்தாலும் 70 விழுக்காடு நான் தினம் படிப்பது தமிழ் வலைப்பதிவுகளே. 

ஆயிரத்திற்க்கும் மேலே பதிவுகள் இதுவரை  படித்திருக்கிறேன்.இவற்றில் பலவற்றினை இன்னமும் தொடர்கிறேன்.  ஒரு நாளைக்குஏறக்குறைய 40 முதல் 50 பதிவுகள் படிக்கிறேன். 30 முதல் 40 பாடல்கள் பல்வேறு மொழிகளில் கேட்கிறேன். நல்ல தமிழ் கவிதையாக இருந்தால், அது மரபாக இருந்தாலும் சரி, மரபு சாரா கவிதையாக இருந்தாலும் சரி, 2 பாடல்களாவது இசை வடிவம் கொடுத்து பாடி அதை யூ டயூப் ல் இணைக்கிறேன். 

தினமும் குறைந்தது இரண்டு புது பதிவாளர் வலைக்குச் செல்கிறேன்.

ஒரு வலைப் பதிவரை அவரது ரசிகர்கள் மூலம் அறியலாம்
Tell me your friends and I shall tell you who you are என்பார்கள். 

ஒரு இலக்கிய வலைப் பதிவாளருக்கு இலக்கிய சார்புடையவர் தான் அதிகம் பாலொயார்ஸ் இருப்பார். 

அது போன்று,பல்வேறு துறைகள்:

 சினிமா, சங்கீதம், ஆன்மிகம், நகைச்சுவை, மொழி இலக்கணம், சித்திரம், சரித்திரம், சமையல்,சோதிடம்,  மருத்துவம்,மாந்திரீகம்,  கவிதை, சுற்றுலா, எல்லாமே. இதைத் தவிர வேறு அலைகளிலும் பல பதிவுகள் உள்ளன.

எல்லாப் பதிவாளர்களுக்கும் தனித்தனி ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. 30 முதல் 3000 வரை தொடர்பாளர்கள். ஒவ்வொருவரும் கோ.ப.செ அந்தந்த வலையின் .

சிலர் பதிவுகளில் பாலாபிஷேகமும் நடக்கிறது.  சில வற்றில் விசில் சத்தம் கேட்கிறது. எல்லாமே சுவை சுவை .

அறுசுவை உணவு. என் வயிறு ஆல்வேஸ் புல். 

இவை யாவற்றையும் நான் தினம் தினம் படிக்கிறேன். பல பதிவுகளுடன் நான் பகல் இரவு என்று பாராது தொடர்ந்து வருகிறேன். ஏன் தான் இவன் வந்து பின்னூட்டம் போடுகிறானோ எனக்கு தொல்லை கொடுக்கிறானோ என்று கூட சிலர் நினைக்கலாம். நகைக்காக இடும் பின்னூட்டம் ஒன்று அண்மையில் புகை கிளப்பி விட்டது.

பின்னூட்டம் ஒன்று போட்டு விட்டு அதற்கு எப்படி வலைப்பதிவாளர் பதில் தருகிறார் என்பதில் ஒரு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

நமது பின்னூட்டத்தை முழுவதும் ஒத்துக்கொண்டு போகாதவரும்  நாகரீகம் கருதி நன்றி எனும் மூன்றெழுத்தை பார்த்தபின் தான்  மூச்சு வருகிறது. சில நேரங்களில் என்ன வருமோ என்ன வருமோ என்ற எதிர்பார்ப்பிலேயே நேரத்துக்கு மருந்து சாப்பிட மறந்து போய்  விடுகிறது.

அண்மையில் ஒருவர் ஒரு பதிவில் இது சுப்பு தாத்தா பின்னூட்டம் தானா என ஐயம் கொண்டார்.

எது எப்படி இருந்தாலும், 

உங்கள் பதிவுகளே எனது பொழுது போக்கு என்று நான் சொல்லவில்லை. என் மூச்சே அது தான். 

என்னப்ப்போல இருக்கும் பல மூத்த குடிமகன்களுக்கும் ( ஐ மீன் சீனியர் சிடிசன்ஸ்) இதுபோலத்தான் இருக்கும்.

உங்கள் பதிவுகள் இல்லையெனின், என் வாழ்வு வெறுமை ஆகிவிடும் . நீங்கள் எல்லோரும் தொடர்ந்து எழுத வேண்டும்.


உங்கள்  எல்லோருக்கும் நான் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி பூரிப்பு 
அடைகிறேன். 

உங்கள் மூலம் உங்கள் ரசிகர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

You have a power house inside of you. You are a walking power house. +Sri Sri Ravi Shankar 

இடம் இல்லாமையால், மேலே படத்தில்  விட்டுப்போன பல நல்ல உள்ளங்களுக்கும் குறிப்பாக,

செல்லப்பா யக்ஞசாமி. அவர்கள். வை.கோ. அவர்கள். தி.இளங்கோ அவர்கள், ஜி.எம்.பி. அவர்கள். இராமானுசம் அவர்கள், சென்னை பித்தன் அவர்கள்,
மதுரை இரமணி அவர்கள்,ஆரண்ய விலாஸ் ராம மூர்த்தி,  கௌதமன் போன்ற என் வயதினருக்கும்,

உலகத்தின் மூலை முடுக்கில் இருக்கும் எல்லா
சிறிசுகளுக்கும்  பெரிசுகளுக்கும்,
சின்ன சின்ன குழந்தைகளுக்கும்,
என் வலை நண்பர்களின் பேரன் பேத்திகளுக்கும்,
என் இளம் வலை நண்பர்களின் குடும்பத்தாருக்கும்,


இதில் விட்டுப்போன நூற்றுக்கணக்கான என் பழைய கால நிறுவன மற்றும் என்னுடன் பயிற்சி கல்லூரியில் துணையாக இருந்த ஆசிரியர்கள், நண்பர்கள் , கல்லூரி நண்பர்கள்,

 சீப்ராஸ் பார்க்
காலனி நண்பர்கள், அரட்டையாளர்கள், மட்டுமின்றி,

அவ்வப்போது என்னுடன் பேசிக்கொண்டே வரும், 
ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள்,

 இதயம், மூளை, வயிறு,கல்லீரல், சிறுநீரகம், எலும்பு, பல், காது , கண்  துறை மட்டுமன்றி மற்ற துறைகளிலும்  72 ஆண்டுகளாக என்னை பொறுமையுடன் சோதித்து மருந்து தரும் மருத்துவர்கள், 

எனது பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்(இவர்களில் பலர் இன்னமும் இவ்வுலகத்தில் இருப்பாரோ என்றே தெரியவில்லை.) ,மற்றும், என்னை பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த எனது  மாணவர்கள்,சக ஊழியர்கள், எனக்கு இன்னமும் பென்ஷன் தந்து கொண்டு இருக்கும் எங்கள் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், 

எங்கள் பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய 
ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா அவர்களுக்கும் அவரது சிறந்த சீடர்களுக்கும்

அவர்களிடம் புரிகிறதோ, புரியல்லையோ என்று கவலை படாமல்,வேதம் பாடம் கற்க வரும் என்னைப்போன்ற கிழடுகளுக்கும்,

வாழ்க வளமுடன் என போதிக்கும் பெரியவர்களுக்கும்


நடுச் சந்தியில் ரோடை கடக்க முடியாது தவிக்கும்போது எனை அக்கறையுடன் அக்கரை சேர்க்கும் நல்ல உள்ளங்கள் எல்லோருக்கும் , 

கோவில்களில், குளங்களில் என்னை பிரதோஷ காலங்களில் பார்த்து ஹௌ ஆர் யூ கேட்கும் நண்பர்களுக்கும் , சனிக்கிழமை தோரும் அனுமார் கோவிலில் சிரத்தையுடன் அர்ச்சனை செய்யும் பட்டர்களுக்கும், வெறும் தேங்காயை உடைத்து கற்பூரம் மட்டும் காட்டி விட்டு, அர்ச்சனை செய்ததாக சொல்லும் அர்ச்சக சகோதரருக்கும், 

ஒவ்வொரு நாளும் விடியும்போதே இது நல்ல நாளாக இருக்கவேண்டும் என எங்கள் குல தெய்வம் மாந்துரையானை எண்ணி நான் கணினியைத் திறக்கும்போது எல்லாம் நல்ல துதிகளையும் நல்ல படங்களைபும் இடும் வலைபதிவர் , 

இரண்டு நாட்கள் முன்பு, அந்த மாந்துறை கடவுளை, கருப்பனை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய  என் வலை நண்பர்.

திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும்,  

எங்கள் ஊரு தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் கரந்தை ஜெயகுமார் அவர்களுக்கும் துறை செல்வராஜ் அவர்களுக்கும், 

எனது தஞ்சை வீட்டில் நான் செய்யவேண்டியவற்றை செய்திடும் நண்பர் திரு ஆராவமுதன் அவர்களுக்கும், எங்கள் தஞ்சை வீட்டு காம்பௌண்ட் வாசலில் இருக்கும் வில்வ மரத்தடி பிள்ளையாருக்கு, சிவனுக்கு, தினம் தீபம் ஏற்றி வைக்கும் அம்புஜா பாட்டிக்கும், 

வருடத்திற்கொரு முறை காலண்டர் டைரி கொண்டு வந்து தரும் நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கும் 

மத்தியானம் சாப்பிட்டு கண் அசரும்போது , க்ரெடிட் கார்டு வேண்டுமா என்று என் பிளட் பிரசரை டபிலாக்கும் அனாமத்து பேர்களுக்கும்,

என்னிடம் ஜோதிடம் ஜாதகப் பொருத்தம்  பார்க்க வந்து ஒரு மூணு மணி நேரம் , எனக்கு ஒரு வால்யூ இருப்பதாக நானே நினைத்துக்கொள்ள வகை செய்யும், நன்பர்களுக்கும்,

அவ்வப்போது நல்லா இருக்கியா என்று செல்லடிக்கும் செல்வங்களுக்கும் 


என் உற்றார், சுற்றத்தார், அனைவருக்கும்,

எனது மகன், மகள்கள் ,
எங்களது மாப்பிள்ளை களுக்கும்,
மருமகளுக்கும்
மற்றும்

என் செல்லப் பேரக் குழந்தைகள்
சஞ்சு, அக்ஷயா,பிரணாவ்,தினேஷ், பிரஜ்வல்

இன்னும்,

என் பாடல்களை பொறுமையாக தினசரி கேட்கும்
மதுரை மீனாச்சி மாதிரி என்னை ஆண்டுகொண்டு இருக்கும்
என் தர்ம பத்தினி
மீனாச்சி பாட்டிக்கும்

எங்கள் வீட்டில் எங்களுக்கு துணையாய் இருக்கும் வீட்டு வேலைகள் செய்து எங்களுக்கு உதவி செய்யும் தவமணி அவர்களுக்கும்

அவரது செல்வங்கள் பரமேச்வரி, மற்றும் சீனிவாசன் எனும் எதிர்கால நடசத்திரங்களுக்கும் 

நான் ஒரு இருபது ஆண்டுகளாகத் தேடி கொண்டு இருக்கும் எனது நண்பர் திருச்சியில் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த இராஜகோபால் அவர்களுக்கும் அவரது மனைவி திருமதி பங்கஜம் ராஜ கோபால் அவர்களுக்கும், மற்றும் ஆர்.சங்கரன்,தமிழ் ஆசிரியர் பண்ணைக்காடு  ரமணி அவர்களுக்கும், ஜெயந்திலால் அவர்களுக்கும், 

நான் மறக்க முடியாத நண்பர் திரு ஜபருல்லா அவர்களுக்கும்,

சுப்பு தாத்தாவின் புத்தாண்டு நல வாழ்த்துக்கள். 

ஹாப்பி நியூ இயர் 2014 


14 comments:

  1. Happy New year to all! May you all be blessed with overflowing fortune and success.

    ReplyDelete
  2. இரண்டு நாட்கள் முன்பு, அந்த மாந்துறை கடவுளை, கருப்பனை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய என் வலை நண்பர்.

    திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும், //

    குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. அன்புடையீர்..

    என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி - தளத்தில் என் பெயரினை இணைத்து மகிழ்ச்சியளித்த தங்கள் பெருந் தன்மைக்குத் தலை வணங்குகின்றேன்.

    தங்களின் நல்லாசி - என்னை வழி நடத்துமாக!..

    தங்களுக்கு எல்லா நலன்களையும் வாரி வாரி வழங்க -

    வள்ளி தேவயானை சமேத வடிவேல் முருகனை வேண்டிக் கொள்கின்றேன்!.

    ReplyDelete
  4. ஒவ்வொருநாளும் ஒரு யுத்தியை உங்கள் பதிவில் காண முடிகிறது.

    // பின்னூட்டம் ஒன்று போட்டு விட்டு அதற்கு எப்படி வலைப்பதிவாளர் பதில் தருகிறார் என்பதில் ஒரு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. //

    நீங்கள் மட்டுமல்ல அய்யா! எல்லோருக்கும் அந்த ஆர்வம் உண்டு. எனவேதான், எனது பதிவில் யார் கருத்துரை தந்தாலும் எனது மறுமொழியை எழுதாமல் இருப்பதில்லை.

    நன்றி! அய்யா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!



    ReplyDelete
  5. முதலில் உள்ள படத்தை தயாரிக்க எவ்வளவு சிரமம் என்று தெரியும்... அனைவரையும் ஞாபகம் வைத்து சொன்னது உட்பட அனைத்தும் அருமை ஐயா... வாழ்த்துக்கள் பல... நன்றிகள்...

    வரும் ஆண்டில் அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வலைத்தளம் என்று ஒன்று இல்லாவிட்டால் நான் என்ன ஆகியிருப்பேனோ தெரியாது. என்னைப் போல் தான் பலர் என்பது மகிழ்ச்சியே.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும்., ஆசிகளுக்கும் நன்றிஐயா.
    உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுப்பு ஐயா.

    ReplyDelete
  7. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    மீனாட்சி அக்காவுக்கும், உங்களுக்கும் எங்கள் அன்பான வணக்கங்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  8. அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. / பின்னூட்டம் ஒன்று போட்டு விட்டு அதற்கு எப்படி வலைப்பதிவாளர் பதில் தருகிறார் என்பதில் ஒரு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. //

    இது உங்களுக்குமட்டும் அல்ல அனைவரும் அப்படி தான் இருப்பார்கள்.நானும் அப்படி தான்
    உங்களுக்கு பெரிய மனது தான் தாத்தா. எல்லாமே வெகு சிறப்பு உங்கள் எண்ணம் போல். மிக்க நன்றி நீங்கள் பாடிய பாடல்களுக்கு.
    எனக்கு எப்படி எல்லாம் ஒன்றாய் ஒரே இடத்தில் சேகரிப்பது என்று விளங்கவில்லை. பார்போம் கூடிய சீக்கிரம் செய்வேன் என்று நம்புகின்றேன்.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுப்பு தாத்தா சார்!

    ReplyDelete
  12. வாவ் தாத்தா! இந்த மாதிரி வித்தியாசமான, சிறப்பான வாழ்த்தை இது வரை பார்த்ததில்லை. தனபாலன் அவர்கள் சொன்னது போல அந்தப் படத்தைத் தயாரிப்பதே சிரமம். எத்தகைய சிரத்தையும் நேரமும் செலவிட்டிருப்பீர்கள்! ஒருவரையும் விடாமல் அனைவருக்கும் அருமையாக வாழ்த்து தெரிவித்து விட்டீர்கள்... மிகவும் நன்றி தாத்தா. மீனாட்சி பாட்டிக்கும், உங்களுக்கும் எங்களின் பணிவன்பான வணக்கங்களும் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  13. எனக்கும் உங்கள் மனதில் ஒரு இடம் இருப்பது கண்டு மகிழ்ச்சி சுப்பு தாத்தா....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. சுப்பு தாத்தா நீங்கள் எனது வலை தளத்திற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    அடிக்கடி வந்து என்னைப் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி