Pages

Sunday, September 19, 2010

நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

      சென்னையை அடுத்துள்ள திருனின்றவூர் அருகில் கசுவா என்னும் கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனம்  கடந்த பதினைந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.   அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஏழை எளியவர்,  அனாதைகள், முதியோர் இவர்களுக்காக ஒரு இலவச பள்ளியும் ( ப்ளஸ் டூ வரை) , ஒரு மருத்துவ முகாமும்,  முதியவர்களுக்காக இடம், உணவு, உடை போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் மருத்துவ வசதியும் தருகிறது.

      இது பரவி இருக்கும் உலகின்  நல்ல உள்ளங்களால் பொருள் ஆதரவு தரப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்திற்கு    நாம் தரும் நன்கொடைக்கு வருவாய் வரியிலிருந்தும் ஐம்பது விழுக்காடு விலக்கு பெற ஒரு சான்றிதழ் தருகிறது.

      இவர்களின் தன்னலமற்ற தொண்டை பாராட்டுவோர் பலர், பொருள் உதவி செய்வோரும் பலர். 

      கடந்த சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இவர்களில் ஒரு சிலருக்கு மேற்படிப்பு,  தொழில் நுட்பம் மற்றும் மருத்துவ கல்விக்கான உதவியும் செய்யப்படுகிறது.

      இதன் மேல் விவரங்களை இங்கே காண்க.

      இப்பொழுது தலைப்புக்கு வருவோம்.

      அண்மையில், இவர்களிடமிருந்து எனக்கு மாதந்தோறும் வரும் பத்திரிகை   (  LOVE ALL SERVE ALL )
       ஏப்ரல் 2010    இதழில் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றல்ல, இரண்டினை ஒரு மன வருத்தத்துடன் குறிப்பிட்டு    இருக்கிறார்கள்.   அதன் சிற்றுரை இங்கே:

      இவர்கள் நடத்தும் முதியோர் இல்லத்தில் அனாதைகளும், மிகவும் வயதானவர்களுமே அனுமதிக்கப்படுவர்.
      என்னதான் உணவு, உடை, இருக்க இடம் இருப்பினும், அவ்வப்பொழுது மருத்துவ வசதிகளும் போதிய அளவிற்கு     இருந்தாலும்,  மனிதனின் வயதுக்கு ஒரு உச்ச வரம்பு இருக்கிறதல்லவா ?

      மிகவும் முதியவர்களில் அவ்வப்போது இறப்புகள் ஏற்படுவதும் இயற்கையாகவே இருக்கிறது.  இதற்கும் இந்த‌   நிறுவனம் ஆயத்தமாகி இருப்பதால், யார் இறந்தாலும், தங்களுடைய கோப்புகளை உடன் கவனித்து, அவர்களை  கொண்டு சேர்த்தவர்கள் சொந்தக்காரர், நண்பர் எவரேனும் இருப்பின் அவர்களுக்கு உடனடியாக தகவலைச்   சேர்த்து விடுகிறார்கள். 

       அது போலவே ஒரு இறப்பு  ஒரு நாள் காலை 11.30க்கு ஏற்பட, உடனேயே,   இறந்தவரது உற்ற்ம், சுற்றத்தாரின்  விலாசம், தொலைபேசி எண் இவற்றை தேடியதில், இறந்தவருக்கு சொந்தத்தில் பிள்ளையோ, பெண்ணோ இல்லை     எனினும் சில உறவினர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்தனர், எனத் தெரியவர , .  அவர்களுக்கு உடனடியாக தொலைபேசி    மூலமாகச் சொல்லியதுடன், நிறுவன ஊழியர் ஒருவரையும் அனுப்பி செய்தி சொல்லப்பட்டதாம். அவர்கள்  வருவதாக வாக்களித்திருந்தபோதிலும்,  மாலை நான்கு மணியான போதிலும் யாரும் வரவில்லை. ஒவ்வொரு  மணிக்கும் ஒரு அழைப்பு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் வருவதாகத் தெரியவில்லை. வந்து விடுகிறோம் என்றார்களே தவிர வருகிற வழியாய் காணோம்.
    இத்தனைக்கும் அவர்களது இருப்பிடத்திற்கு இந்த முதியவர் இல்லம் கால் நடையாய் நடந்தாலும் ஒரு சில நிமிட தூரத்தில் தான் இருக்கிறது . 

     இல்லத்தில் மற்ற முதியவர்கள் இருப்பதாலும், சவத்தை இராப்பொழுதுக்கும்  இல்லத்தில் வைத்திருப்பது சரியல்ல‌  என்பதால், ஈமக்கடன்களைச் செய்ய, நிறுவனத்தார் அந்த முதியோனின் உடலை, கிராமத்தின் வழியே எடுத்துச் சென்றபொழுது ,  அந்த உறவினர் ஏன் நாங்கள் வரும்வரை காத்திருக்கவில்லை என்று ஊழியர்களுடன் சண்டை     போட்டனராம். ஒரு ஐந்து நிமிட நேரத்தில் வரக்கூடியவர்கள் ஐந்து மணி காலத்திருகுப்பிறகும் வரவில்லை என்றால் என்ன காரணம் இருக்கக்கூடும்? அவர்கள் அந்த ஈமச்சடங்களுக்கு தங்களிடம் பணம் கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தின்   காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.  அதே சமயம், ஈமச்சடங்களுகளில் கலந்துகொள்ளவில்லை என்றால்,   உள்ளூர் வாசிகள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என நினைத்தார்களோ என்னவோ ? 

      நிறுவனப் பத்திரிகை சொல்கிறது:  நாங்கள் தகவல் கொடுப்பது , உயிர் பிரிந்த ஆன்மாவுக்கான ஒரு மரியாதை   செய்யவே அன்றி , ஈமச்சடங்குகளுக்கான பணத்திற்காக அல்ல. 

       யாருமே வராத நிலையில், நிறுவன ஊழியர் ஒருவர் கடைசி காரியங்களை, இறந்தவரின் மகனாக தன்னை  நியமித்துக்கொண்டு, கருத்தாகச் செய்கிறார்.  அது மட்டுமல்ல, இறந்தவரது மதக்கோட்பாடுகளைக் கவனித்து    அதன் படியே செய்கிறோம் என்றும் சொல்கிறார்கள். 

      இந்த நிகழ்வினை ஒரு மன வருத்தத்துடன் எழுதியிருக்கிறார்கள் அந்த இதழின்   ஆசிரியர் எனது அக்கால முதல்  நண்பர்.  இப்பொழுது அவருக்கு 75 வயதிருக்கலாம். 

      'நாம் இவ்வளவு செய்கிறோமே !  யாருக்காக செய்கிறோமோ , அவர்கள் உறவினர்கள், அல்லது சுற்றத்தார்  போற்றவேண்டும் என எதிர்பார்ப்புடன் செய்யவில்லை. இருந்தாலும் தூற்றாமல, சண்டை போடாமல் இருக்கலாமே !!'

      என்ற ஆதங்கம் இவரது எழுத்தில் தெரிகிறது.

      அவருக்கு ஒரு சிறிய செய்தி சொல்ல அவாவுற்றேன்.

      அவருக்குத் தெரியாத வள்ளுவம் இல்லை.   உண்மையிலே அவரது பள்ளியின் கொள்கைகளும், கோட்பாடுகளுமே  மனித நேய வழியில் அமைந்தவை.  வள்ளுவர், அண்ணல் காந்தி, பாரதி, விவேகானந்தர் இவர்களின் வழிகாட்டுதலில்
இயங்குகிறது இ ந் நிறுவனம்( www. sevalaya. org )

       இருப்பினும் ஒரு குறள் மேற்கோள் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

       ஒருவர் செய்த உதவியை நாம் எக்காலத்தும் மறப்பது நன்றன்று.  அது அறிந்ததே .
       இரண்டாவதாக, நன்று அல்லது எதுவோ அதை அன்றே மறப்பது நன்று.

       மனித வாழ்வியலில்  ethics      என்ன  என்பதை ஒரு ஒண்ணே முக்கால் அடியில் தருகிறார் வள்ளுவப்பெருந்தகை.

       நன்றி மறப்பது நன்றன்று   =   நன்றல்லது
       அன்றே மறப்பது நன்று.

      மக்களுக்குத் தொண்டு செய்யும்பொழுது,  அதை நாம் செய்கிறோம் என்ற எண்ணம் வரும்பொழுது தான்  உண்மையான, தன்னலமற்ற தொண்டிற்குக் கூட நன்றி இல்லையே என வருத்தம் மேலிடுகிறது.

      தொண்டை நான் செய்யவேண்டும் என்பது இறைவன் விதித்த கட்டளை.  அதை நான் நிறைவேற்றுகின்றேன்.  இன்று நான்/ நாம் செய்கின்ற பணிகள் உதவிகள் எல்லாமே நாம் செய்வதல்ல.இவை அனைத்துமே ஆண்டவன் செய்வது. நான் ஒரு மீடியம் அல்லது கருவி என்ற மனப் பாங்கு வரின் இந்த வருத்தம் மேலோங்கிடாதோ ?

      கீதையிலும் இதுதான் சொல்லப்படுவதாக சொல்கிறார்கள்.
      நடப்பன எல்லாமே நடக்கும். நடந்தே தீரும்.
      நாம் ஒரு சாட்சிதான்.
      நம்மால் எதும நடக்கவில்லை. நாமும் ஏதும் செய்வதில்லை. 
     நாம் ஒரு கருவிதான்.
      இறைவன் நம் பெயரிலே செய்கிறான்.
      அவனை வாழ்த்துவோம்.வணங்குவோம்.
   இவர்கள் தம்  நற்பணிகளை தொடர்ந்து சோர்விலாது தொய்விலாது  செய்ய இந்த நிறுவனத்திற்கு வித்திட்ட இறைவன் என்றும் அருள் புரிவான்.அது அவன் செயல் .4 comments:

 1. ஹூம்! என்னத்தை சொல்வது!!
  மறப்பது நன்று தான் ஆனால் நாம் சொல்வதை மனம் கேட்கமாட்டேன் என்று நடந்ததையே சூறாவளி மாதிரி சுழற்றி அடிக்குதே??

  ReplyDelete
 2. தொண்டை நான் செய்யவேண்டும் என்பது இறைவன் விதித்த கட்டளை. அதை நான் நிறைவேற்றுகின்றேன். இன்று நான்/ நாம் செய்கின்ற பணிகள் உதவிகள் எல்லாமே நாம் செய்வதல்ல.இவை அனைத்துமே ஆண்டவன் செய்வது.

  ]

  -------------
  அருமையான வரிகள்

  ReplyDelete
 3. நாம் ஒரு சாட்சிதான்.நம்மால் எதும் நடக்கவில்லை. நாமும் ஏதும் செய்வதில்லை. நாம் ஒரு கருவிதான்.இறைவன் நம் பெயரிலே செய்கிறான்.//
  புரிஞ்சுடுத்துன்னா எங்கேயோ போயிடலாமே!

  ReplyDelete
 4. "தொண்டை நான் செய்யவேண்டும் என்பது இறைவன் விதித்த கட்டளை. அதை நான் நிறைவேற்றுகின்றேன்".
  அருமையான கருத்து. எப்படி இர்ப்பினும் அவர்களுடைய ஆதங்கம் யாரிடமாவது சொல்ல நினைப்பதில் தவறில்லையே!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி