Pages

Monday, July 27, 2009

ஆறடி உயரத்திலே அதி யற்புத வடிவத்திலே



தமிழகம் எங்கிலுமே , வீதிக்கு வீதி, முக்குக்கு முக்கு, மூலைக்கு மூலை, சந்திக்கு சந்தி ஒரு ஆலமரம் இருக்கும் இல்லையேல் ஒரு அரசமரம் இருக்கும். அதனடியில் அமர்ந்து அருளும் ஆசியும் தரும் வினாயகப்பெருமான் முன் நின்று ஒரு கணம் அவன் உருவத்தினை நெஞ்சினிலே இருத்தி அவனைத் தொழுவார்க்குத் தீவினை எதுவுமே அண்டிடாது.

இது ஆன்றோர், சான்றோர் உரைத்த நல்வாக்கு.

திருமூலர் கூறுவார்:

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.

சேக்கிழாரோ தமது புராணத்தில்:

வானுலகும் மண்ணுலகும் வாழ்மறை வாழப்
பான்மைதரு செய்ய்தமிழ் பார்மிசை விழங்க‌
ஞானமத ஐந்து கர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுகனைப் பரவி அஞ்சல் செய்கிற்பாம்.

பெருந்தேவனார் எனும் புலவர் சொல்வார்:

புண்ணியம் கோடி வரும் பொய்வாழ்க்கை ஓடிவிடும்
எண்ணியது கைகூடும் ஏற்றதுணை நண்ணிடவே
வாழ்வில் வளர் ஒளியாம் வள்ளல் வி நாயகனை
நாளெல்லாம் வாழ்த்திடுவோம் நன்று.

அந்தத் தும்பிக்கணபதியை நினைத்து வணங்குபவர் நீங்காத செல்வம் அடைந்து
இம்மையிலும் மறுமையிலும் புகழ் பெறுவர்.

" திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்" என்கின்றது விருத்தாசல புராணம்.

என்ன அழகிய எளிய தமிழ்ச் சொற்கள் !

சங்கத்தமிழ் மூன்றும் தா ! எனக்கோரிக்கை வைத்த அவ்வையும்
ஆரம்பிப்பது வி நாயக துதியுடனே.


அக்கணபதிக்கு எதைப் படைப்பது ?
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்.
என்ற பிராட்டி சொல்வார்.
எதைக் கொண்டு அவரை அர்ச்சிப்பது:
கையில் எது இருக்கிறதோ அது போதும்.

இருப்பினும் ஒரு அழகிய தமிழ்ப் பாடல் ஒன்று இருக்கிறது. அது இங்கே:

மேற்கு மாசிப்பச்சை நதுங்கை யாந்தகரை
வில்வமுடன் ஊமத்தை நொச்சி நாயுருவி
யேதமில் கத்தரி வன்னி அலரி காட்டாத்தி
யெருக்கு மருதுடன் மால்பேரி யம்புகாந்தி
மாதுளையே உய்ர் தேவதாரும் அரு நெல்லி
மன்னு சிறு சண்பகமே கெந்தளி பாதிரியே
ஓதரி யவ நுகு இவையோர் இருபத்தொன்று
முயர்வி நாயக சதுர்த்திக் குரைத்த திருபத்திரமே.

இத்தனையும் திரட்டி எடுத்துக்கொண்டு வாழ்வில் எஞ்சிய சில நாட்களில் என்றாவது ஒரு நாள் அந்த பிள்ளையார் பட்டி பிள்ளையாரைப் பார்த்து வழிபட்டு வரலாமென் நினைத்த வேளையில் எனது பேத்தி, அவள்தான், தாத்தா என என்னை அன்புடன் அழைக்கும் கவிதாயினி கவி நயா அவர்கள்
பிள்ளையார்பட்டி பிள்ளையாரைப்போற்றி எழுதிய பாடல் கிடைக்க்ப்பெற்றேன்.

என்னால் அடாணா ராகத்தில் பாடப்படுகிறது.




கற்பக கணபதியே
பிள்ளையார் பட்டியில் உறைநிதியே!
சொற்பதம் கடந்தவனே
உந்தன் பொற்பதம் பணியவந்தோம்!

ஆறடி உயரத்திலே
அதி யற்புத வடிவத்திலே
கோதறு குணத்தினிலே
வளர் பார்புகழ் கணபதியே!

கல்லினால் ஆனவனே
கருணையில் கரும்பென இனிப்பவனே!
புல்லினால் பூஜித்தாலும்
அகம் மிகமகிழ்ந் தருள்பவனே!

உமையவள் திருமகனே
எம்மை இமையென காப்பவனே!
குறைகளை தீர்ப்பவனே
எங்கள் சுமைகளை ஏற்பவனே!

வலம்புரி நாயகனே
பழம்பெற இறைவலம் வந்தவனே!
மறைகளின் அதிபதியே
எங்கள் மனம்அமர் குணநிதியே!


--கவிநயா

கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம்.



கவி நயா அவர்கள் வலைப்பதிவுக்குச் செல்லவும்.
அவர்களுடன் சேர்ந்து அந்த
ஆறுமுகத்தோன் அண்ணனை
துதித்து எல்லா நலமும் பெறவும்.

2 comments:

  1. (அடாணா)ராகம், (விஷய)தானம், (தொடரும்)பல்லவின்னு கலக்கறீங்க, சார்!

    ReplyDelete
  2. மிக்க நன்று

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி