காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Saturday, July 25, 2009
"அய்யா ! தெரியாதைய்யா ! சொல்லிட்டேன் !!
அய்யா ! தெரியாதைய்யா ! சொல்லிட்டேன் !!
என்று ஒரு தமிழ்ப் படத்தில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு நகைச் சுவை கலைஞர்
அடிக்கடி சொல்வது நினைவுக்கு வருகிறது.
நினைவு கூற வைத்த நிகழ்வு அண்மையில் நடந்தது அமெரிக்க மண்ணில்.
ஆம்.
இந்த நிகழ்வு நமது நாட்டில் நடந்தது அல்ல. அமெரிக்காவில் நடந்துள்ள நிகழ்ச்சி.
அது நடந்த உடனேயே அதுபற்றிய தனது கருத்துக்களை, முழுமையான தகவல்கள்
இல்லாத நேரத்திலேயே, பொறுப்பில் உள்ள ஒருவர் தமது கருத்துக்களைச்சொன்னதினால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றிய செய்தி இது.
http://www.cnn.com/2009/US/07/24/officer.gates.arrest/index.html?eref=rss_topstories
ஆங்கிலத்தில் உள்ள இச்செய்தி சி.என்.என். எனும் செய்தித்தாளில் உள்ளது. அதை முதற்கண் படிக்கவேண்டும். பின் மேற்கொண்டு படிக்கவும்.
இந்த நிகழ்ச்சியை விவரிப்பதோ அல்லது விவாதிப்பதோ இப்பதிவின் மையக்கருத்து அல்ல.
இருப்பினும், இந்த நிகழ்ச்சியையும், இந்த நிகழ்ச்சிக்குப் பின் நடக்கும் விவாதங்களையும் நோக்குகையில், ஒன்று தெளிவாகக் காணப்படுகிறது. இச்செய்தியே ஒரு பாடம் கற்பிப்பதாகத் தோன்றுகிறது.
முதற்கண், எந்த ஒரு பொருளைப்பற்றியும் அதைப்பற்றிய முழுத் தகவல்கள் அறிந்தபின்னே கருத்துக்கள் வெளியிடுவது நல்லது.
உடனடியாகத் தானே அதற்கு பதிலைத் தரவேண்டுமா ? எனவும் சிந்திக்கவேண்டும்.
அக்கருத்துக்களை வெளியிடும்பொழுது, கருத்துக்களுக்கான விளைவு நிகழ்ச்சியின் விளைவினை விட, அதைக் கேட்பவர் மனதிற்க்கு ஏதோ ஒரு வகையில் துன்பம் விளைவதாக இருக்கக்கூடும். என்பதையும் கவனத்தில் கொண்டு, தாம் சொல்வது நிகழ்வுக்குத் தீர்வு காண்பதாக இருக்குபொழுதே சொல்லவேண்டும்.
முன்னமேயே ஒரு பதிவில் சொல்லியது போல, சொல்லாத சொல்லுக்கு நாம் எஜமானன். சொல்லிய சொல்லுக்கு நாம் அடிமை ஆகிவிடுகிறோம். அதை ஏன் சொன்னோம், எதற்கு சொன்னோம் எனப்பல்வேறு வகையில் விளக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டு, கடைசியில் பல சமயம், இச்சொற்களை நாம் தவிர்த்திருக்கலாமே என்று தோன்றும் மன நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
வள்ளுவர் அறிவுரை இதோ !
யா காவாராயினும் நா காக்க .. காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.
மனிதன் மனிதனாய் வாழ் முதற்கண் அடக்கம் தேவை. அடக்கம் எண்ணங்களிலும் பின் சொற்களிலும் பின் செயல்களிலும் பரிணமிக்கும்.
வள்ளுவரின் அறிவுரை மனித குலத்துதித்த யாவருக்குமே என்றாலும், ஒருவன் பதவி, அந்தஸ்து, செல்வம் ஆகிய ஏணிகளில் ஏறுகையில் , ஏறி நிற்கையில் வழுவாது கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றாம். உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் வாயிற்காப்போன் சொல்வதற்கும் அலுவலக அதிகாரி சொல்வதற்கும், பல்வேறு நேரங்களில், பொருள் ஒன்றாயினும், அவர்கள் சொல்லும் சொற்கள் ஒன்றாயினும், அவற்றினை கேட்பவர், அருகாமையில் இருப்பவர் புரிந்துகொள்ளும் தன்மை வேறு, நிலை வேறு. அவர்தமக்கு ஏற்படும் பாதிப்புகளும் அவ்வாறே. ஒன்று தெளிவு. மேலே செல்லச் செல்லப் பொறுப்புகள் அதிகரிக்கின்றன அல்லவா ?
ஆகவே தான், செங்கோன்மை எனும் அதிகாரத்தில், வள்ளுவர் சொல்வார்:
ஓர்ந்து கண்ணோடாது, இறைபுரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை.
நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர்
முதற்கண் குற்றம் என்ன என அறியவேண்டும்.
குற்றம் புரிந்தவரை, எந்த ஒரு தயவு தாட்சணியமும் இல்லாது,
நடு நிலையில் அமைந்து நின்று,
நீதி செய்வதே செங்கோலாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
என்ன பண்ணுவது வாயில் இருந்து விழுந்த வார்த்தையை மறைக்கமுடியுமா? அவர்கள் இருவரையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்திருப்பது நல்ல ஆரம்பம்.தனது தவறை ஒத்துக்கொண்டது அதைவிட நன்றாக இருந்தது.
ReplyDeleteவடுவூர் குமார் அவர்கள் வருகைக்கு நன்றி.
ReplyDeleteநீங்கள் சொல்லியது போல, அவர்கள் இருவரையும் வெள்ளை மாளிகைக்கு அழைக்க
முற்பட்டது ஒரு டாமேஜ் கன்ட்ரோல் எக்ஸர்ஸைஸ் என்று சொன்னாலும் ஒரு
பெருந்தன்மையும் தெரிகிறது.
நான் சொல்ல முற்பட்டது, ஒரு வழிப்போக்கன் பேசுபவது போல, ஒரு வழி நடத்துபவன்
பேசுவதைத் தவிர்க்கவேண்டும் என்பதே.
மீண்டும் ஒரு முறை தங்களுக்கு நன்றி.
சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com