Pages

Friday, July 10, 2009

எழு ! என்னவெனக் கேளு. !!

அண்மையில் தமிழ் வலையுலகத்தில் ஒரு கேள்வி மழை பொழிந்தது. முப்பத்திரண்டு கேள்விகளும் அதற்கான வலைப்பதிவாளரின் பதில்களும்.
எனக்கும் வந்தது . நானும் என் பதிவில் பதில்கள் எழுதியிருந்தேன்.
என்ன கேள்விகள் ! உனக்கு ஏன் இந்தப் பெயர் ? உனக்கு என்ன சாப்பாடு புடிக்கும் ? யார் பக்கத்தில் இருக்கிறார்கள் ? இது போல்
உப்பு சப்பு இல்லாத கேள்விகள். பல நபர்களின் பதில்கள் பல்வேறு விதமாக இருந்தன.

கேள்விகள் என்றால் அதில் ஒரு பஞ்ச் இருக்கவேண்டும். பதில் சொல்பவரின் மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்கவேண்டும்.
பதிலளிப்பவர் கொஞ்சமாவது யோசிக்கவேண்டும். அந்தக் கேள்வியினால், கேட்பவருக்கு சிறிதாவது புதிய தெளிவு பிறக்கவேண்டும்
பதிலளிப்பவருக்கு புதிய வழி காண்பதற்குப் பயனாய் அமைய வேண்டும். இது எதுவுமே இல்லாத ஒரு கேள்விக்கணையினால்
என்ன பயன் !!

கேள்விகள் வேள்விகளாக இருக்கவேண்டும். அவ்வேள்வித்தீயில் பதிலளிப்பவன் புகுந்து வெளிவரவேண்டும். புது உணர்வும் புது நிலையும் அடையவேண்டும். பதிலளிப்பவருக்கும் அப்பதிலைப்படிப்பவருக்கும் அவை பயன் தரும் வகையாக இருக்கவேண்டும்.

"கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்
வேட்ப, மொழிவதாம் சொல்."
நாம் பேசும் சொல் எவ்வாறு இருக்கவேண்டும் என வலியுறுத்திச்சொல்லுகையில் வள்ளுவர் கூறுவார்: நாம் கேட்பவற்றை கேட்பவரும் கேளாதாரும் விரும்பும் வண்ணம் நாம் பேசவேண்டும்.

இவ்வகையில் யோசித்துப் பார்த்தபொழுது, தமிழ் வலையுலகில் இன்றைய தேதியில் ஏறத்தாழ பத்தாயிரம் பதிவாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் தமிழ் வலை தோன்றிய‌கால முதலே செயல்படுபவர், பலர் இடைக்காலத்தே வந்தவர், மற்றும் பலரோ வலையுலகத்தை விட்டு ஏதோ காரணங்களுக்காக விட்டுச் சென்றுவிட்டனர்.

தொடர்ந்து செயல் படுவோர் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் என சில எனக்குத் தோன்றின.
இவற்றிற்கான பதில்களை நான் எதிர்பார்க்கவில்லை. எல்லோருமே தன்னைத்தானே கேட்டு பதிலை அறிய வேண்டும். ஆங்கிலத்தில் இதை ஒரு செல்ஃப் இன்ட்ராஸ்பெக்ஷன் எனச் சொல்லலாம்.


முதல் கேள்வி: தமிழ் வலை உலகில் முதலடி நீங்கள் வைத்தபோதும், முதற்பதிவு என்று ஒன்று நீங்கள் எழுதியபோதும், சாதிக்கவேண்டும் என ஏதாவது நினைத்தீர்களா ? அது எந்த அளவிற்கு இப்போது சாத்தியமாயிருக்கிறது ? இல்லை எனின் நீங்கள் அடுத்து செய்யவேண்டியது என்ன ?

இரண்டாவது கேள்வி: உங்கள் வாசகர் வட்டம் தரும் கர ஒலி உங்களை மேலும் மேலும் எழுதத் தூண்டும் வகையில் உள்ளதா ? மேன்மேலும் தெரியாதனவற்றைத்தெரிந்துகொள்ளவேண்டுமென ஒரு ஆவலைத் தூண்டி, உங்கள் "அறிந்தவற்றின்" எல்லைகளைக் கடக்கத்தூண்டுகின்றனவா ? குட்டுப்படும்போது குனிந்து போவீர்களா ? வாசகரது கருத்து உங்களிடையே ஒரு சுய சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறதா ? மாற்றுக்கருத்துக்களையும் கவனமாகக் கேட்டு அதற்குத் தக்க பதிலைத் தரும் பண்பினையும் ( empathetical listening ) பொறுமையையும் (patience ) வளர்த்திருக்கிறதா ?

மூன்றாவது கேள்வி: தமிழ் வலைப்பதிவு உலகத்தை மற்ற மொழிகளில் வரும் வலைப்பதிவுகளோடு ஒப்பிட்டு இருக்கிறீர்களா ? ஆம் எனின், மற்ற மொழிகளில் வரும் வலைப்பதிவுகளில் உங்களைக் கவர்ந்து, இது போல தமிழ் வலையுலகத்தில் இல்லையே என வருத்தப்பட நேர்ந்ததுண்டா ?

நான்காவது கேள்வி: இன்றைய தேதியில் தமிழ் வலைப்பதிவுகள் தமிழரது சிந்தனை வளத்தை செம்மைப்படுத்துகின்றனவா ? தமிழரை ஆக்கவழிகளில் அழைத்துச் செல்ல அவை முயல்கின்றனவா ? ஆம் எனின் எப்படி ? இல்லை எனின் அவை எவ்வாறு இருக்கவேண்டும் ?

ஐந்தாவது கேள்வி: வாசகர், முகம், பெயர் கூட தெரியாத நிலையிலே நபர்கள் பலர் உங்களுக்கு வலை மூலமாக அறிமுகம் ஆகியிருக்கக்கூடும். அவர்களின் அன்பான. ஆரோக்கியமான பின்னூட்டம் சுவையாக இருந்திருக்ககூடும். அவர்களில் எத்தனை நபர்களுடன் நீங்கள் நட்பினைத் தொடர விரும்புவீர்கள் ?

ஆறாவது கேள்வி: தமிழ் வலைப்பதிவு உலகத்தில் நிகழும் கருத்து சுதந்திரம் ஆரோக்கியமானதாகத் தான் உள்ளதா ? இந்த சுதந்திரத்திற்கு ஒரு நாள் தடை வரும் என நினைப்பதுண்டா ? (ஒரு சில நாடுகளில் வருகிறது என்பது தங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்காது ) இல்லை. பத்திரிகை உலகத்திற்கு இது பரவாயில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா ?

ஏழாவது கேள்வி: வலையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாகவோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ, இது போன்ற இலவச வசதிகளை எதிர்காலத்தில் கூகுள், வேர்டுப்ரஸ், யாஹூ, ஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள் தொடர வில்லை எனின் எந்த அளவிற்கு நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் ?

கேள் என்பதற்கு இரு பொருள். கேள்வி கேள் (ASK) ஒரு பொருள். அதற்கு பதில் வரும்போது கேள் (HEAR, LISTEN). இது இரண்டாவது பொருள். நாம் கேட்கும் கேள்விக்கு ஒரு பொருள் இருக்கவேண்டும். யாரிடம் கேட்கிறோமோ அவருக்கு பயன் தரவேண்டும்.
அவர் பதில் அளிக்கும்போது அதைக்கேட்டிட பொறுமை வேண்டும். அதனால் நாம் பயன் அடைய வேண்டும்.

ன்ன பயன் ? இன்று தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் தலை சிறந்த வலைப்பதிவாளர் (பிளாக்கர்) என்று
ஒரு நோபெல் பரிசு கூட கிடைக்கலாம். அதற்கான தகுதியை இளைய சமுதாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும் .


இக்கேள்விகள் நம்மை நாமே கேட்டுக் கொள்பவை. ஆகவே, பொறுமையுடன நம் உள் மனம் என்ன சொல்கிறது என்பதைக் கேட்போம். பயனடைவோம்.




6 comments:

  1. ஆழ சிந்தித்து நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அதே ஆழத்துடன் அனைவரையும் பதில் தேடி சிந்திக்க வைக்கும். இதோ நானும் மூழ்கி விட்டேன் இக்கேள்விகளில். பயனாகக் கிடைக்கும் முத்துக்களை பதிவிலே கோர்த்தபடி இருப்பேன். மெருகேறப் போகும் என் பதிவுகளுக்கு வழிகாட்டியாய இப்பதிவு இருக்கும். நன்றி சூரி சார்!

    ReplyDelete
  2. அருமை.

    இதுவும் ஒரு தொடர் விளையாட்டுதான் மக்கள்ஸ்.

    ஆரம்பிங்க பார்க்கலாம்.

    ஸ்டார்ட் ம்யூஸிக்.......

    ReplyDelete
  3. நீங்க மட்டும் யோசிக்கலை எங்களையும் யோசிக்கவைத்திட்டீங்க.

    ReplyDelete
  4. திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் வருகைக்கு நன்றி.

    வெப் ரத்னா பட்டம் அளிப்பது பற்றி தற்பொழுதைய இந்திய அரசாங்க முடிவு பற்றி இங்கே அறியவும்.
    http://webratna.india.gov.in/
    தற்பொழுது இது அரசு மற்றும் அரசு சார்புள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
    ஆயினும் எதிர்பார்க்ககூடிய எதிர் காலத்தில் சிறப்பாக வலையில் பரிணமிக்கும் எல்லோருக்குமே
    இந்த பட்டம் மற்ற விருதுகள் பாரத ரத்னா பத்ம ஸ்ரீ போன்று கெளரவிக்கும் மேலும் ஊக்குவிக்கும் என நினைக்கிறேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. துளசி கோபால் அவர்கள் வருகைக்கு நன்றி

    வடுவூர் குமார் அவர்கள் வருகைக்கு நன்றி.
    தங்கள் கருத்து பயனுள்ளதாக அமைந்துள்ளது.
    எந்த ஒரு செயலையும் யோசித்து செய்பவன் அதன் இலக்கை விரைவில் அடைவது திண்ணம்.
    யோசிக்காது, சிந்திக்காது, சும்மா இருப்பதற்கு ஏதோ செயல்படவேன்டுமென செயல்படுபவனோ நாளடைவில்
    இலக்கு இன்மையால் சீர் குலைந்து
    சிதறிப்போகிறான்.
    வரை படமில்லா கட்டிடம் இல்லை. நன்றே
    வாழவும் ஒரு வரை படம் தேவையே !

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. நமது இலக்கியத்தில் காதல் - காமம் பற்றி இத்துணை அழகுற; பண்பாட்டியல் நெறியுடன் சொல்லியிருக்கும் வேளையில், நவின இலக்கியம் என்ற பெயரில் இதே விடயங்களை மிகப் பச்சையாகவும் கொச்சையாகவும் எழுதிவருகின்றனர்.

    இதன் தொடர்பில், என் திருத்தமிழ் வலைப்பதிவில் எழுதிவருகிறேன். அன்புகூர்ந்து பார்க்கவும்.

    தங்களின் கருத்தறிய விழைகிறேன்.

    நன்றி.

    சுப.நற்குணன் - மலேசியா.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி