Pages

Saturday, May 23, 2009

நான் செய்வது பாரதியின் சரஸ்வதி பூஜை





Courtesy:
தமிழ்.வெப்துனியா சென்னை, திருனின்றவூர் அருகில் கசுவா கிராமத்தில் நடப்பது

மனித நேயத்திற்கோர் மகத்தான வேள்வி.

சேவாலயா ...

அதுபற்றிய விவரங்களை இங்கு திரு முரளிதரன சொல்லக்கேளுங்கள்.


இதைப் படிக்கும்போது எனக்கு 11 வயதுதான். அப்போது, பள்ளி ஆரம்பிக்க வேண்டும், உணவு போட வேண்டும் என்று சின்ன சின்னதாக எண்ணங்கள் தோன்றின. ஆனால் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு அதற்கான சிந்தனைகள் உதித்தன.

என்னுடன் படிக்கும் மாணவர்கள் 20 பேர் சேர்ந்து விவேகானந்தர் அமைப்பு என்று உருவாக்கி, எங்கள் கையில் கிடைக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்களை ஒன்றாக சேர்த்து வருவோம்.

மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை, ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று இனிப்பு, பிஸ்கேட் போன்றவை வாங்கிக் கொண்டு சென்று அவர்களுக்குக் கொடுத்து, பாடி, ஆடி மகிழ்ந்துவிட்டு வருவோம்.

அப்போது, அந்த ஆதரவற்றோர் இல்லங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது போன்ற பல விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டேன்.

தமிழ்.வெப்துனியா: நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்?

பெங்களூரில் பொறியியல் படித்தேன். எலக்ட்ரானிக்ஸ் துறையில் படித்தேன். அங்கு படிக்கும்போதும், அப்பகுதியில் இருக்கும் குடிசைப் பகுதிக்கு வாரந்தோறும் சென்றுவிடுவேன்.

அ‌ந்த குடிசை‌ப் பகு‌தி‌யி‌ல் வா‌ழ்பவ‌ர்க‌ள் ஊதுபத்தி செய்வார்கள். ஊதுப‌த்‌தி தொ‌ழி‌ற்சாலை‌யி‌ல் இரு‌ந்து ஊதுப‌த்‌தி கு‌ச்‌சிகளையு‌ம், மரு‌ந்துகளையு‌ம் காலையில் வந்து கொடுத்துவிட்டுப் போவார்கள். அந்த குடிசைப் பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஊதுபத்தியை ஒட்டி மாலையில் கொடுத்துவிட வேண்டும். பிள்ளைகள் பள்ளிக்கு எல்லாம் செல்ல மாட்டார்கள். இதையேதான் செய்வார்கள்.

நான் அந்த ஊதுபத்தி கம்பெனிக்குச் சென்று சனிக்கிழமை மாலையில் இவர்களுக்கு விடுமுறை கொடுங்கள். அந்த சமயத்தில் இங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கப் போகிறேன் என்று கூறினேன். அதற்கு சம்மதித்தார்கள்.

அந்த குடிசைப் பகுதியின் ஒரு மூலையில் அங்குள்ள பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கத் துவங்கினேன்.

அந்த சமயத்தில்தான் பள்ளி ஒன்றைத் துவக்க வேண்டும், உணவு அளிக்க வேண்டும். முடியாத முதியவர்கள் தங்க இடமளிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வேரூன்றி வளரத் துவங்கியது.

ஆனால் அதற்கு நிறைய காசு வேண்டும். இப்படி ஒன்றை செய்யப் போகிறேன் என்று சொல்லிக் காசு கேட்டால் யாரும் தர மாட்டார்கள். செய்து காண்பித்தப் பிறகு இப்படி செய்கிறேன், உதவுங்கள் என்று கூறினால் கிடைக்கும். எனவே முதல் 6 மாதத்திற்காவது நமது சேமிப்பில் காசு இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அதனால் வேலைக்குப் போய் ஒரு 3 ஆண்டுகள் காத்திருந்தேன். 3 ஆண்டுகளில் கொஞ்சம் காசு சேமித்து வைத்து, 6 மாதத்திற்கு நன்கொடை எதுவும் வாங்காமல் சமாளிக்க முடியும் என்று முடிவெடுத்தேன்.

தமிழ்.வெப்துனியா: முதலில் என்ன செய்தீர்கள்? இடம் வாங்கினீர்களா?

இல்லை. இடம் வாங்குவதெல்லாம் பல ஆண்டுகள் கழித்துத்தான் செய்தேன். முதலில் ஒரு வாடகை வீட்டைப் பிடித்து தாய் தந்தையை இழந்த 5 பிள்ளைகளைக் கொண்டு வந்து வைத்தேன்.

அவர்களுக்கு சாப்பிட உணவு மட்டும் கொடுத்து, அங்குள்ள பள்ளி ஒன்றுக்கு அனுப்பி வந்தோம். இப்படியே எங்கள் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக இருந்தது.

அந்த சமயத்தில் டி.சி.எஸ்.ஸில் வேலை கிடைத்து நான் ஒரு வருடம் அமெரிக்கா போய் இருந்தேன்.

60 பேர் என் கூட வேலை செய்தார்கள். ஒரு கூட்டம் நடந்தது. வேலை விஷயமாகப் பேசிய பிறகு பொதுவான எதையாவது பேச வேண்டிய நேரத்தில் நான் இந்த அமைப்பு பற்றி எடுத்துச் சொன்னேன். நான் இப்படி ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். இதற்கு சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். நீங்கள் எல்லோரும் உதவி செய்தால் நிச்சயம் வாங்கலாம் என்றதும் அனைவரும் ஆதரவு தெரிவித்து உதவி செய்தார்கள். அதன் பலனாக இங்கு நிலம் வாங்கினேன்.

1991ஆம் ஆண்டில் ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கினேன். அங்கு ஒரு கொட்டகை போட்டு வைத்தேன். அப்போது சுமார் 30 பேர் ஆகிவிட்டனர்.

தமிழ்.வெப்துனியா: இப்போது உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவார்கள் அல்லவா?

1000 பேரில் 160 பேர் மட்டும் பள்ளியில் தங்கும் இடத்தில் தங்கி விடுவார்கள். மற்றவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். 160 பேருக்கு சொந்தமென்று யாரும் இல்லை. மற்றவர்களுக்கு உண்டு. ஆனால் பொருளாதார நிலைமையில் பார்க்கப்போனால் எல்லோருமே ஒரே நிலையில்தான் உள்ளனர்.

பள்ளி அமைக்க நிலம் வாங்கிய பிறகு பள்ளிக் கட்டடம், விடுதிக் கட்டடம் கட்ட பணம் திரட்டினேன். ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு நபர்களைக் கேட்டு உதவி பெற்று கட்டினேன். தற்போது அந்தப் பள்ளியில் 35 வகுப்பறைகள் உள்ளன. இப்படி பல்வேறு உதவிகளைப் பெற்று ஒரு பள்ளி உருவாகியுள்ளது.

பள்ளி ஆரம்பித்து 3 வருடத்திற்கு தொடர்ந்து 10ஆம் வகுப்பில் முழு தேர்ச்சி கிடைத்தது. பத்திரிக்கைகளில் எல்லாம் வந்தது. இது பற்றி கேள்விப்பட்ட ஒரு பெரியவர் பள்ளிக்கு வந்து பார்வையிட்டார். அப்போது பள்ளி பாதிதான் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அந்த பெரியவர், இப்போ உங்களுக்கு எவ்வளவுத் தேவைப்படும் என்று கேட்டார். நாங்கள் கணக்குப் போட்டுப் பார்த்து நாலைந்து லட்சமாகும் என்று சொன்னோம். அதற்கு அவர், நாளைக்கு வந்து செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

முதல் தளம் அமைக்க நிறைய கஷ்டப்பட்டோம். நிறைய நாள் எடுத்துக் கொண்டோம். ஆனால் தேர்வு முடிவுகள் நன்றாக வந்ததால், இரண்டாவது, மூன்றாவது தளங்கள் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டது.

அடுத்தது என்னவென்றால், அங்குள்ளவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். அங்கு படிக்க யாருமே ஆர்வம் காட்டாததால்தான் அங்கு பள்ளியே இல்லை.

அங்கிருப்பவர்களில் இரண்டு ரகம், ஒரு சில மேல்தட்டு குடும்பங்கள் பெரிய பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைத்தனர். மற்றொரு ரகம் கூலி வேலை செய்பவர்கள், அவர்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் எண்ணமே இல்லாதவர்கள்.

நாங்கள் ஒவ்வொரு வீடாகப் போய் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தினோம். அதற்கு பெற்றவர்களோ, அவனை பள்ளிக்கு அனுப்பினால் ஒரு நாள் கூலி போய்விடும். அதை நீங்கள் தருவீர்களா என்று கேட்டார்கள்.

படிப்பு செலவை நீங்கள் செய்ய வேண்டாம். எல்லாமே நாங்கள் இலவசமாக தருகிறோம். பணமெல்லாம் கொடுக்க முடியாது. அவன் படித்து வந்தால் பெரிய வேலையில் சேர்ந்து உங்களை நல்லபடியாக வைத்துக் கொள்வான் என்று சொல்லி ஒவ்வொரு பிள்ளையாக பள்ளிக்கு வரவைத்தோம்.

இங்கு வந்த பிறகு அவர்களுக்கு பிடிக்க ஆரம்பித்தது. ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் தொழிற் கல்வியையும் அளித்து வருகிறோம். மாணவர்களுக்கு ஒழுக்கமும் கற்பிக்கப்படுகிறது.

இதோடு அல்லாமல், அங்கு பொதுப் பிரச்சினைகளிலும் தலையிட்டு தீர்வு கண்டுள்ளோம், சாராயம் காய்ச்சுதலை நிறுத்தினோம், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அங்குள்ள பொதுமக்களே எங்களை நாடி வந்து கூறுகின்றனர். நாங்களும் தலையிட்டு தீர்வு காண்கிறோம்.

தமிழ்.வெப்துனியா: உங்களது துவக்க காலத்தில் உங்களுடன் இருந்த நண்பர்கள் இப்போதும் உங்களுடன் உள்ளார்களா?

பலர் உள்ளனர், சிலர் தொடர்பில் இல்லை. பல புதியவர்கள் இணைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் பள்ளிக்கு வாருங்கள் என்று அழைத்த நிலை மாறி, இப்போது பலர் எங்கள் பள்ளிக்கு வந்து, அது என்ன ஏழைகளுக்கு மட்டும், எங்கள் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் செலுத்துகிறோம் என்று கேட்கிறார்கள்.

எங்கள் கொள்கையே, ஏதும் இல்லாத பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதுதான், எங்கள் இலக்கை மாற்றி விடாதீர்கள் என்று கூறி அனுப்பி விடுகிறோம்.

பணம் கட்டி மாணவர்களை சேர்த்துக் கொண்டால், அவர்கள் அதிகமாகிவிடுவார்கள், இவர்கள் குறைந்துவிடுவார்கள். பணம் கட்ட முடியும் என்றால் வேறு எங்காவது சென்றுவிடுங்கள். முடியாதவர்கள் மட்டும் இங்கு வாருங்கள் என்று கூறுகிறோம்.

தமிழ்.வெப்துனியா: உங்கள் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பற்றி கூறுங்கள்?

கடந்த ஆண்டு உமா மகேஸ்வரி என்பவர் 1160/1200 எடுத்தார், ராமச்சந்திரன் 1082/1200 எடுத்தார். இந்த மாணவர்களின் பெற்றவர்கள் கூலி வேலை செய்பவர்கள். இவர்களுக்கு அண்ணா பல்கலையில் மெரிட்டில் பொறியியல் படிக்க வாய்ப்பு வந்தது. அந்த கட்டணத்தையும் நாங்களேக் கட்டி அவரை படிக்க வைத்து வருகிறோம்.

மேல் படிப்பிற்கு நாங்கள் பணம் கட்டி படிக்க வைக்கிறோம் அல்லது அவர்களுக்கு வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்து விடுகிறோம், படித்து வேலையில் சேர்ந்ததும் அந்தக் கடனை அவர்களே செலுத்திவிடுவார்கள். இதற்காக ஒரு வங்கியில் பேசியுள்ளோம். எங்களது சேவாலயா பள்ளி மாணவர்களுக்கு மேல் படிப்பிற்கு வங்கிக் கடன் அளிக்க உதவுமாறு கூறியுள்ளோம்.

10வது வகுப்பில் 500க்கு 460 மதிப்பெண் பெற்றுள்ளார் ஒரு மாணவர். எங்கள் பள்ளியில் 10வது முடிக்கும் பிள்ளைகள் மீண்டும் எங்கள் பள்ளியிலேயே 11வது வகுப்பில் சேர்ந்து விடுவார்கள்.

இதில் குறிப்பாக ஒரு பையனைக் குறிப்பிட வேண்டும். அவனது அப்பா இவனது சின்ன வயதிலேயே இறந்துவிட்டார். அம்மா திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்பவர்கள். அந்த அம்மா எங்கள் பள்ளிக்கு அந்த பையனை அழைத்து வந்து, இவனை இங்கேயே தங்க வைத்து படிக்க வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவன் நல்லா படிச்சு மேல் படிப்பிற்கும் உதவி செய்தோம். அவன் தற்போது ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியராக உள்ளான். டிசிஎஸ்ஸில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறான்.

தற்போதும் அவன் சனி, ஞாயிறுகளில் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் இருப்பான். அவனது ஆர்வத்தைப் பார்த்து அவனையும் அறக்கட்டளையின் உறுப்பினராக்கியுள்ளேன். பல்வேறு விதங்களில் அங்கிருந்தவன் என்ற முறையில் அவனது ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும் என்பதால் அப்படி செய்துள்ளோம்.

தமிழ்.வெப்துனியா: ஒழுக்கத்தை எப்படிக் கற்றுத்தருகிறீர்கள்?

பாரதி, விவேகானந்தர், மகாத்மாவின் கருத்துக்களை பல்வேறு பாடத் திட்டங்களாக தொகுத்து அதற்காக ஒரு பாடத்திட்டம் வைத்துள்ளோம். அதை வைத்துத்தான் நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருகிறோம்.

பெங்களூருவில் ஒரு அமைப்பு, புதிய முறையில் பாடத்திட்டத்தை புகுத்திய பள்ளிக்கு தேசிய விருது ஒன்றை அறிவித்தது. அதற்கு நாங்கள் இந்த நல்லொழுக்கப் பாடத் திட்டத்தினை விளக்கி விண்ணப்பித்தோம்.

சுமார் 22,000 பள்ளிகள் விண்ணப்பித்திருந்தன. எல்லாமே நகர்ப்புற பள்ளிகள் அனைத்தையும் தாண்டி, எங்களது சேவாலயாப் பள்ளி விருதினை வென்றது.



webdunia photo WD

இந்த பாடத்தை மற்றப் பள்ளிக் கல்லூரிகளிலும் சிறு வகுப்புகள் நடத்தி எடுக்கிறோம். இதனைக் கேள்விப்பட்ட சிறைத்துறை அதிகாரி நடராஜ் எங்களைத் தொடர்பு கொண்டு பேசினார். அந்த அடிப்படையில் தற்போது நல்லொழுக்கப் பாடத்தைப் பற்றி புழல், வேலூர் சிறைகளில் கைதிகளுக்கும் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

அங்கு இதைப்பற்றி சொல்வது மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது. ஒரு சில கைதிகள், எங்கள் தண்டனைக் காலம் முடிந்ததும், நாங்கள் சேவாலயாவிற்கு வந்துவிடுகிறோம், அங்கு சேவையாற்றி எங்கள் காலத்தை கழிக்க விரும்புகிறோம் என்கிறார்கள.
(தொடரும்)







--------------------------------------------------------------------------------

2 comments:

  1. என்ன சேவை!!!
    வாழ்க/வளர்க அவர்கள் பணி.

    ReplyDelete
  2. நான் டி.சி.எஸ்.சில் சேர்ந்த புதிதில் சில வருடங்கள் தொடர்ந்து சேவாலயாவுடன் தொடர்பு இருந்தது; இயன்ற உதவிகளையும் செய்துவந்தேன். இப்போது தொடர்பு இல்லாமல் போய்விட்டது. இந்தப் பேட்டியைப் படிக்கும் போது நினைவிற்கு வந்தது. மீண்டும் தொடர்பு கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி