Pages

Wednesday, January 14, 2009

யாவருக்கும் இயலும்



சற்று நேரத்திற்கு முன் ( 10.30 இரவு ) விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி கண்டேன்.
பொங்கல் நல் நாளன்று இது போன்ற நிகழ்ச்சிகள் கிடைப்பது அவ்வளவாக கிடையாது.
ஒரு புத்தக விழா அது. ஈரோடு என நினைக்கிறேன்.

நான் டி.வி. பக்கம் வந்து பார்த்தபோது, உரத்த குரலில் பேசுவது அதுவும் தூய இனிய தமிழில்
பேசுவது கண்டு ஈர்க்கப்பட்டு செவி மடுத்துக்கேட்டேன். ( எனது காதுகள் சற்று மந்தம் )

தமிழ் திரையுலகத்து பிரபல நடிகர் திரு. சிவ குமார் அவர்கள் பேசுக்கொண்டிருந்தார். அவர் நடிப்புத்
திறன் மட்டுமன்றி ஓவியத்திறனும் பெற்றவர் என்பர். இன்றோ அவர் அழகிய அருவி ஊற்று நீர்
சல சல வென ப்பெருக்கெடுத்து ஓடும் புனல் போன்று உரையாற்றிக்கொண்டிருந்தார்.

நூறாண்டு காலம் எல்லோரும் வாழ்ந்திட ஒரு சில கருத்துக்களை எடுத்துக் கூறியபோது
மெய் சிலிர்த்தேன். காரணம். தமிழ் மக்களாகிய நாம் யாவரும் அவசியம் 100 ஆண்டுகள் வாழ்ந்திட‌
ஒன்று செய்தால் போதுமென்றார்.

அந்த ஒன்று திருமூலரில் உள்ளதென்று அந்தப்பாடலை மேற்கோளிட்டு நம் முன்னே நிறுத்தினார்.

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை.
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே. (252)

காலையில் எழுந்தவுடன் இறைவனைத் தொழ ஒரு பசும் இலைதனை அவன் காலடியில் வையுங்கள். ஒரு நிமிடம்
இறைவனை நினையுங்கள். நீங்கள் நாத்திகவாதியாயிருப்பினும்
உங்கள் முன்னோரின் படத்தின் முன் ஒரு பசும் இலைதனை வைத்து அவரை நினைவும் கூறுங்கள்.
அடுத்து, பசுமாடு ஒன்றுக்கு ஒரு வாய் சோறு அல்லது ஏதேனும் உணவு தாருங்கள். பசுவைப்போல் மனிதகுலத்திற்கு உதவிடும் விலங்கினம் ஏதும் இல்லை என்றார் திரு சிவகுமார் அவர்கள். பசுமாடு நமக்கு பால் தருகிறது. அது மட்டுமல்ல, மாடு போடும் சாணம் உரமாகிறது. மாடு ஈன்றும் காளை நிலத்தை உழுகிறது. வண்டி இழுக்கிறது. இதுவெல்லாம் போதாது என்று அதன் கொம்புகளும் உபயோகிக்கப்படுகின்றன. இறந்தபின்னும் அதன் தோல் நமக்குப் பயன்படுகிறது.
ஆகவே மாட்டிற்கு அதுவும் பசுமாட்டிற்கு ஒரு கவளம் தருவது அடுத்த நற்செயல் என்றார்.

மூன்றாவதாக, நாம் உண்கையில் ஒரு கைப்பிடி பிறர்க்கும் (வறியோருக்கும், அண்டியோருக்கும்) தருதல் வேண்டும் என்றார்.

நான்காவதாக, பிறரிடம் பேசும்போது இனிய சொற்களையே பேசுங்கள் என்றார்.

இந்த நான்கினையும் தினசரி பழக்கமாக, வழக்கமாகக் கொண்டவன் நீடூழி வாழ்வான், நூறாண்டு வாழ்வான் என்பதில் ஏதேனும் ஐயமுண்டோ ?

தைப்பொங்கல் திரு நாளன்று நல்வார்த்தைகள் கூறி எல்லோரும் இன்புற்றிருக்கவும் நூறாண்டு வாழ்ந்திடவும் வாழ்த்திய திரு சிவகுமார் அவர்கட்கு தமிழ் வலையுலகம் சார்பாக நன்றி கூறுவோம்.

வாழ்க நுமது நற்பணி.


திரு.சிவகுமார் அவர்கள் சங்க காலத்தில் காணப்பட்ட அத்தனைப் பூக்களின் பெயர்களையும் ஒருமித்து சொன்ன செய்தி என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இன்று காலை, அப்பூக்கள் என்னென்ன என்று கூகுளில் தேடிப்பார்த்தேன். ஒரு தமிழன்பர் தனது வலையில் குறிஞ்சிப்பாடல் ஒன்றில் இப்பூக்களின் பெயர்கள் இருப்பதைச் சொல்லியிருக்கிறார்.

http://www.tamiloviam.com/unicode/09220503.asp

இந்நூலின் 61வது வரியில் தொடங்கி, 95வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் வருகிறது :

  • உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்
  • ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
  • தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
  • செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,
  • உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம்,
  • எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
  • வடவனம், வாகை, வான்பூங்குடகம்,
  • எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம்,
  • பயினி, வானி, பல்இனர்க் குரவம்,
  • பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,
  • விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
  • குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
  • குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம்,
  • போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,
  • செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
  • கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
  • தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
  • குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
  • வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
  • தாழை, தளவம், முள்தாட் தாமரை,
  • ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,
  • சேடல், செம்மல், சிறுசெங்குழலி,
  • கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
  • காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
  • பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,
  • ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
  • அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
  • பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
  • வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
  • தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,
  • நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
  • பாரம், பீரம், பைங்குருங்கத்தி,
  • ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
  • நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
  • மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ...."

ஒன்றை அறிய இன்னொன்று ஊக்குவிப்பானாக ( trigger )
இருக்குமென்று நானறிவேன்.

இத்தனை பூக்களுடன் ' சிரிப்பு ' எனும் பூவையும் சேருங்கள் எனச்சொன்னது
சிவகுமாரது மனித நேய உணர்வுகளைப் பிரதிபலிக்க ஒரு சான்று.







13 comments:

  1. //சற்று நேரத்திற்கு முன் ( 10.30 இரவு ) விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி கண்டேன். பொங்கல் நல் நாளன்று இது போன்ற நிகழ்ச்சிகள் கிடைப்பது அவ்வளவாக கிடையாது.
    ஒரு புத்தக விழா அது. ஈரோடு என நினைக்கிறேன். //
    நாங்களும் அந்த நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தோம். அதன் ஒலி/ஒளி வடிவம் கிடைத்தால் பதிவில் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. திரு பாலராஜன் கீதாஅவர்கள் வருகை நல்வரவாகுக.
    விஜய் டி.வியில் இந்த நிகழ்வு எனக்கு பெரிதும் மன நிறைவு தந்தது.
    தனது உரையை முடிக்கும்போது திரு.சிவகுமார் அவர்கள்
    குழுமியிருக்கும் எல்லோரையும் நான் மலர் கொண்டு நூறாண்டு வாழவேண்டும்
    என வாழ்த்துகிறேன் எனக்கூறி சங்க காலத்து இருந்த நூறு மலர்களில் பெயர்களை
    ஒரு கோர்வையாக எடுத்துக்கூறியது பிரமிக்கத்தக்கதாய் இருந்தது.

    சங்க கால 99 மலர்களின் பெயர்களையும் சொல்லி, இந்த 99 பூக்களுக்குடன்
    சிரிப்பு எனும் பூவையும் நூறாவது பூவாக சேர்த்து மணமுடன் வாழுங்களென‌
    அவர் வாழ்த்திய வாழ்த்து நினைவிலே நின்றது.

    மறுமுறையும் தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எனது மற்ற வலைப்பதிவுகளுக்கும்
    http://movieraghas.blogspot.com , http://arthamullavalaipathivugal.blogspot.com
    வாருங்கள் இயன்ற பொழுது.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  3. நானும் பார்த்தேன்,அழகாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
    இப்போது பார்த்துக்கொண்டிருப்பது இது,முடிந்தால் பாருங்கள்.அருமையிலும் அருமை.

    ReplyDelete
  4. சிவக்குமார் அவர்கள் மேற்கோள் காட்டிய பாடலையும் அதன் பொருளையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வடுவூர் குமார் வருகைக்கு எனது நன்றி.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வீடியோவை நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
    திரு. சிவகுமார் பெண்மையின் சிறப்பினைப் பற்றி விரிவாகச் சொல்கிறார்.
    எல்லோரும் பார்க்கவேண்டிய, போற்றவேண்டிய, பின்பற்ற வேண்டிய கருத்துக்களவை.
    அவர்
    பசுவைப்போற்றுபவர், மணம் தரும்
    பூவினைப் போற்றுபவர்,
    பெற்றெடுத்த தாயினையும்
    பெண்மையையும் போற்றுவது
    பிறந்த நம் அனைவரையும் நம்மைச்
    சிறந்தவர்களாகச் செய்கிறது.
    மனம்
    பூரிப்படைகிறது.
    இதற்கான சுட்டிக்கு வழிகாட்டிய‌
    தங்களுக்கு மற்றுமொருமுறை நன்றி.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. திருமதி ராமலக்ஷ்மி வருகைக்கு எனது நன்றி

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. இலக்கியத்தில் சொல்லப்பட்ட மலர்களை அறியச் செய்தீர், நன்றி.

    ReplyDelete
  8. சுப நற்குணன், மலேசியா அவர்களின் வருகைக்கு
    உளமார்ந்த நன்றி

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  9. அய்யா அவர்களுக்கு வணக்கம். நெடுநாட்களாக கபிலரின் குறிஞ்சிப் பாடலைத் தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்த பாடில்லை. அதுபற்றி ஒரு பதிவை வெளியிட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.

    ////இத்தனை பூக்களுடன் ' சிரிப்பு ' எனும் பூவையும் சேருங்கள் ////

    மனிதகுலம் இன்று கடைபிடிக்க வேண்டிய நெறியும் கூட அல்லவா இது.

    ReplyDelete
  10. அருமை அருமை.

    அறியத் தந்ததுக்கு நன்றி.

    அந்த நூறாவது பூ எக்கச்சக்கமா என்னிடம் இருக்கு:-)))))

    மத்தபடி இந்திய தொலைக்காட்சி எதுவும் பார்க்கும் வசதி(??) இங்கே எனக்கு இல்லை.

    ReplyDelete
  11. வடுவூர் குமார் அவர்களுக்கு, மிக அருமையான ஒரு நிகழ்ச்சி. சிவகுமார் உண்மையிலேயே ஒரு அதிசய மனிதர் தான். நன்றி.

    ReplyDelete
  12. வருகை தந்த அகரம் அமுதா அவர்கட்கு உளமாற நன்றி.

    சுப்பு ரத்தினம்.
    தற்சமயம்
    ஸ்டாம்ஃபோர்ட், சிடி.
    வருக:

    ReplyDelete
  13. வருகை தந்த மேடம் துளசி கோபால் அவர்கட்கு உளமாற நன்றி.//

    அந்த நூறாவது பூ எக்கச்சக்கமா என்னிடம் இருக்கு:-)))))//

    அந்த நூறாவது பூ சிரிப்பு என்று நடிகர் திரு சிவகுமார் சொன்னபோது
    என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாட்டு:
    சிரிப்பு, அதன் சிறப்பைச் சிந்தித்துப் பார்ப்பதே நமது பொறுப்பு ( சரியாக நினைவு
    இருக்கிறதா எனத்தெரியவில்லை) நினைவுக்கு வந்தது.

    சிரிப்பு ஒரு இன்ஃப்க்ஷஸ் . அது ஒருவரிடமிருந்து மற்றொருவரை அவர்
    அறியாமலேயே ஒட்டிக்கொள்ளும்.


    உங்களிடமுள்ள அந்த நூறாவது பூவுக்கும் அதே குணம்தான். அதனால்தான்
    என்னவோ உங்கள் வலைப்பூவைச் சுற்றி பல லட்சம் வண்டுகள் சுற்றிய வண்ணம் உள்ளன.

    எனக்கு அந்த டெக்னிக்கைச் கொஞ்சம் சொல்லித்தாருங்களேன்.

    சுப்பு ரத்தினம்.
    தற்சமயம்
    ஸ்டாம்ஃபோர்ட், சிடி.
    வருக:

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி