Pages

Wednesday, November 04, 2015

யார் முன் வருவாரோ ?

 மஸ்தான் சாகிபு பாடல்கள் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும். 
எந்த ஒரு கூட்டத்திலும் குணங்குடியார் பாடல் ஒன்றினை மேற்கோள் காட்டாது இருக்க மாட்டார்.

அந்த காலத்தில், 1950 1960 களில், திருச்சி பெரிய கடை வீதியின் ஒரு சந்திலே (தங்க மாளிகைக்கு எதிரில் இருக்கும் சந்து. பெயர் சட்டென்று
நினைவுக்கு வரவில்லை )அங்கே ஒரு வீட்டில் ஒரு திண்ணை. தமிழ்த் திண்ணை என்று  சொல்லவேண்டும். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தமிழ்ப் புலவர் கூடுவர். யாரேனும் ஒரு புலவர் அல்லது ஒரு தமிழ் ஆசிரியர் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவர்

.மாலை மூன்று மணி அளவில் துவங்கும் கூட்டம் . இரவு 8 மணி வரை செல்லும்.  அதில் வருகை தந்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு பொருள் பற்றி பேசுவர் அல்லது தாம் இயற்றிய கவிதை (பொதுவாக அந்தக்காலத்திலே எல்லாமே மரபுக் கவிதை தான்) தனை அரங்கேற்றுவர்.  ஆறுமுக நாவலர், பேராசிரியர் ஐயம்பெருமாள் கோனார், பேராசிரியர் இராதாகிருஷ்ணன் எனது உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் குலசேகரன் போன்றவர்கள் பேச்சினை நான் அங்கு கேட்டு இருக்கிறேன்.  திருமூலர் பாடல்கள் பற்றி மாதம் ஒரு முறையாவது சொற்பொழிவு நடக்கும். 

தத்துவப் பாடல்கள் பல அந்தக் காலத்திலே முதல் நிலை வகுத்தன. 

 மஸ்தான் சாகிபு பாடல்கள் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும். 
எந்த ஒரு கூட்டத்திலும் குணங்குடியார் பாடல் ஒன்றினை மேற்கோள் காட்டாது இருக்க மாட்டார். 

சூபி தத்துவங்களை உள்ளடக்கி இருக்கும் இப்பாடல்களில் பல அந்தக் காலத்தில், என் தந்தை படிக்க பாடக்கேட்ட எனக்கு மனப்பாடமாக இருந்தன.  மஸ்தான் சாகிபு பாடல்களை ஒரு தத்துவக்கடல் என்று சொல்லவேண்டும். அதில் முழுகி விட்டால் எழுந்து வரும் எண்ணமே வராது.  

ஒரு உதாரணம். இப்படத்தில் உள்ள கவிதை , பிறந்த எல்லா உயிர்களுமே பொம்மலாட்டத்தில் கயிற்றினால் கட்டப்பட்ட பொம்மைகள் எனவும் அவற்றினை ஆட்டிப்படைப்பவர் யாரெனத் தெரிய, கட்டிய கயிற்றினைப் புரிதல் அவசியம் என்பார். 

கயிற்றை ஆட்டுபவனுக்கும் பொம்மைக்கும் உள்ள உறவு என்ன?
தான் ஆட்டப்படுகிறோம் என பொம்மை உணர்கிறதா?
தனக்கும் தன்னை ஆட்டுவிப்பவனுக்கும் உள்ள இணைப்பு, பந்தம் பற்றி அவன் ஆராய்வது உண்டா?  

கட்டியிருக்கும் கயிறின் வலிமை என்ன? எத்தனை நாள் இந்த ஆட்டம்? ஏன் இந்த பொம்மலாட்டம்? 


குணங்குடி மஸ்தான் சாகிபு

அவர்கள் பேரில்
மகாவித்துவான் திருத்தணிகை
சரவணப்பெருமாளையர் அவர்கள் பாடிய

குணங்குடியார் நான்மணிமாலை

அவற்றில் ஒன்று இங்கே.


மாறுகொண் டென்மன மாகிய பரியை
வீறுகொண் டவாவெனும் வீரனிங் கொருவன்
அழுக்கா றெனுங்கல் கணைமிசை யார்த்தாங்கு
இழுக்கா றுடைசின மெனுங்கலி னஞ்சேர்த்து
அளியறு செருக்குமிக் காகிமே லிவர்ந்து
வளியெனும் வாதுவன் வாய்ந்துடன் தொடர்தரப்
பொற்பெனுங் கொடுவழி புகுந்திடச் செய்தலும்
நெறிபிறழ்ந் தப்பரி நீள்புலக் கான்புகுந்து
அரிவையர் மயக்கெனும் குளத்தினுள் வீழ்ந்துந்
தெரிபொன் னெனும்வனத் தீமிதித் தழுங்கியும்
பகர்மண் ணெனுங்கொடும் பாறைதாக் குற்று
மிகுபெருந் துன்பொடு மெலிந்துழல் கின்றதால்
இன்குணங் குடியான் எனுந்தவர்க் கரசே
நன்குமற் றதனைநீ நல்வழி திருப்பியே
அருளெனும் வாளினவ் வீரனைத் துமித்துக்
கருதமக் கல்லனை யாதிகள் களைந்தொழித்து
என்வசம் ஆக்குவை யெனின்யான்
நின்வச மாக்குவன் நினதியல் புகழ்ந்தே. (16)

நம்மிடையே கவிதை படைக்கும் பலர் இருக்கின்றார்கள். மரபுக் கவிதை மட்டுமன்றி, வசனக் கவிதை அல்லது மரபு சாராக் கவிதையில் மனதை ஈர்ப்பரும் உள்ளார். 

இவர்கள் இந்த குணங்குடியார் கவிதையின் பொருளினைச் சிறப்பினை தனது கவிதையாகச் சொன்னால் எப்படி இருக்கும்?

மேலும், இன்னுமொரு படி எடுத்து வைத்து மஸ்தான் சாகிப் அவர்களின் கருத்துக்களை இக்காலக் கவிதையில் எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் !!

யார் முன் வருவாரோ ? 


4 comments:

  1. அறியாத தகவல் அறியத்தந்தீர்கள் ஐயா!
    மிக அருமை!
    தாங்கள் கேட்டபடி இதன் பொருளைப் பாட முயற்சி செய்கின்றேன். நல்ல பகிர்வு! மிக்க நன்றி ஐயா!

    ஐயா! இன்றைய எனது பதிவில் இசைப்பாடலாக ஒரு கவிதை
    எழுதியுள்ளேன். எழுதும்போதே ஐயா பாடினால் எப்படி இருக்கும் என என்னுள் கற்பனையை ஓடவிட்டே எழுதினேன்.
    உங்கள் குரலில் மெட்டில் இந்தக் கவிதையைக் கேட்க ஆவலாக உள்ளேன்.
    நேரமிருப்பின் பாடித் தாருங்கள் ஐயா! மிக்க நன்றி!

    ReplyDelete
  2. எனது பதிவின் இணைப்பு:
    http://ilayanila16.blogspot.com/2015/11/blog-post.html

    ReplyDelete
  3. அரிய தகவல் அறிந்தேன் தாத்தா நன்றி

    ReplyDelete
  4. அறியாத தகவல் அறியத்தந்தீர்கள் ஐயா!
    மிக அருமை!

    latha

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி