Pages

Friday, April 25, 2014

வன தோகை மயிலே

வனத் தோகை மயிலே !!
உன் மேலமர்ந்த
மால் மருகன் முருகன்
புகழ் பாட
வந்திடுவாய் . என் நெஞ்சில்
நின்றிடுவாய். மயிலே..

ஆறாத துயரத்திலே அமிழ்ந்திருந்தேன்.
ஆறு படை வீடு எல்லாம் சுற்றி வந்தேன்.
ஏறாத மலை எல்லாம் ஏறி நின்றேன்.
ஏங்கி நின்றேன் என் முருகன் எங்கு என்றேன் .

வனத் தோகை மயிலே !!

வயலுர் விராலிமலை வலம் வந்தேன்.
வழியிலே மயிலே !! உனைக் கண்டு நின்றேன்.
உன் மேல் அமர்ந்து சென்ற முருகன் அவன்
உலகம் சுற்றியபின் எங்கு சென்றான் ?

வனத் தோகை மயிலே !!

சூரனை வதைத்திடவே  செந்தூர் சென்றானோ ?
ஊர் உலகம் சுற்றியபின் பழனி சென்று   அமர்ந்தானோ
வள்ளிதனைக் காணவே வனப் பக்கம் சென்றானோ ?
வேதப்பொருள் சொல்லிடவே வேரகம்  நின்றானோ. '.

..வனத் தோகை மயிலே !!

தனக்கெனவே காத்திருக்கும் தெய்வானை மணமுடிக்க
தாலிச் சரடுடனே பரங்குன்றம் பறந்தானோ ?
காடு மலை சுற்றியபின்  தணிகை மலை அடைந்தானோ
காவடிகள் கூடச் சென்று கதிர்காமம் கண்டானோ

 வனத் தோகை மயிலே !!

கண்டி வழி செல்கையிலே கண்பட்ட காட்சிகள்
கண்டிரா கொடுமைகள், கண்டு மனம் நொந்தானோ ?
தனக்கென தேசம் இல்லா தமிழருக்கோர் வாழ்வளிக்க
வேலுடனே வந்து அவன் வழி ஒன்று சொல்வானோ ?

வனத் தோகை மயிலே !!

**********************************************************************************

இந்தப் பாடலை சுப்பு தாத்தா பாடுவதை
நீங்கள் அவரது இன்னொரு தமிழ்  வலையான

கந்தனைத் துதி


  இவ்விடத்திலே கேட்கலாம்.

*********************************************************************************

பாட்டு எழுதி நானும் பல காலம் ஆயிற்றே.
என நினைத்தேன்.
அடுத்து மனதில் தோன்றிய வரிகள்

தமிழ்க் கடவுள் முருகன் மேல் அமைந்தன.

2 comments:

  1. அழகான அருமையான வரிகள் ஐயா...

    ரசிக்க செல்கிறேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உங்க வரிகளை முதலில் நான் பாடிப் பார்த்தேன்.. அவ்வளவு அருமையாய் சொற்கள் அமைத்திருக்கிறீர்கள் தாத்தா.!

    நீங்க பாடியதையும் கேட்டேன்.. அற்புதம்!!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி