Pages

Saturday, April 23, 2011

2011 ல் கம்சன்.


2011 ல் கம்சன். அதுவும் நமது தமிழகத்தில்.

இன்று ஹிந்து பேப்பரில் ஒரு கொடூரமான கம்சனைப்பற்றிய செய்தி வந்திருக்கிறது.

குடித்து வீட்டுக்குள் நுழைந்த கணவன் ( வயது 35) தனது மனைவியிடம் சண்டை போட்டு, அதன் உச்ச கட்டத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாத போதை நிலையில் தூங்கிக்கொண்டு இருக்கும் தனது மூன்று வயதுக்குழந்தையை இரு கால்களையும் பிடித்து அந்தரத்தில் தூக்கி பக்கத்தில் சுவரில் அதை அறைந்து, அக்குழந்தை அக்கணமே உயிரிழந்த செய்தி.

புராணக் கதையில் கம்சன் தனது சகோதரியின் பிறந்த குழந்தையை எடுத்து சுவரில் மோதிக் கொல்கிறான். ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு குழந்தைகள். இன்றோ ஒரு தகப்பன் தனது செல்வத்தையே அடித்து கொன்று இருக்கிறான். இது நிஜ செய்தி.

கோபம் வந்தால் என்ன செய்கிறோம் என்றே தெரியாத அளவுக்கு அந்த மனிதனின் மூளை மதுவின் மயக்கத்தில் செயலிழந்து போயிருக்கிறது.  இவரது கொடுமையான செயலைக் கண்டு நாம் எல்லோரும் கோபபடுவதும் இயல்பே.
எனக்கோ கோபத்தை விட இந்த மனிதர் மீது ஒரு பரிதாபம் தான் ஏற்படுகிறது. 


தன்னைத் தான் காக்கில் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

என்பார் வள்ளுவர்.


எல்லா தீயவைகளும் மற்றவர்களை அழிக்கும் தன்மையுடையது.  ஆனால், கோபம் எனப்படும் சினமோ த்ன்னையே முதற்கண் அழிக்கவல்ல வலிமை பெற்றதாம்.

சினம் சிந்தையை சிதறடிக்கிறது. ஒன்றும் இல்லை. இன்று ஏதோ பேசிக்கொண்டு இருக்கையில் என் மனைவி உங்களுக்கு கோபம் வந்தால் தலை கால் புரிவதில்லை என்றாள். அப்படி உனக்குத் தான் என்றேன். நானும் அவளும் மாற்றி மாற்றி சொல்ல எனக்கு கோபம் அதிகரிக்க, என் தலையில் முன் நெற்றியில், எல்லாம் என் வேளை என சொல்லி  சிறிதே அடித்துக்கொண்டேன். " பார்த்தீர்களா ! ஒரு வார்த்தை எத்தனை வித்தை செய்துவிட்டது ! என்றாள் என் இல்லக்கிழத்தி.  (stage demonstration !!)

சினம் ஏற்பட உந்தும் சொல்லோ செயலோ நம் கண் முன் நிகழ்கையில் அதை பொறுத்துக்கொள்ள, அதை எதிர்கொள்ள ஒரு மன ஒருங்கிணைப்பும் அமைதியும் முதற்கண் தேவை.

சினத்தைத் தடுத்து நிறுத்த இயலுமா ? அது ஒரு இயல்பான உணர்வு. ஆயினும் 
சினம் வருகையில் நாம் செய்ய வேண்டியது என்ன ? வேண்டாதது என்ன என்பது பற்றி இங்கே சென்று படியுங்கள்.

Saturday, April 16, 2011

ஒற்றியூர் அரன்பதம் பற்றியே தொழுதிட

திருவொற்றியூர் அரனின் திருச் சிறப்பை பாடி உள்ளார் தமிழ் வலை உலக மரபு கவிஞர் திருமதி தங்கமணி அவர்கள். அவரது வலையில் உள்ள இப்பாடல் சீருடைத்து. சிறப்புடைத்து.ஒவ்வொரு எழுத்தும் ஒரு லட்சம் பொன் பெறும்.
அப்பாடலின் வரிகள் இங்கு உள்ளன.  பதிவு தேதி  ௧௫ ஏப்ரில் 2011


சிந்து பைரவி ராகத்தில் நான் பாடுவதை பொறுமை இருப்பின் கேட்கவும். 

திருவொற்றியூர் அரனின் கோவில் சிறப்புகளைப் பற்றி அறிய இங்கே கிளிக்கவும். 

பற்றுக பற்றற்றான் பற்றினை = அப்பற்றை 
பற்றுக பற்று விடற்கு .

எனும் வள்ளுவனின் வாய்மொழி கவிஞர் தங்கமணி அவர்கள் கவிதையால் 
நினைவுக்கு வருகிறது.

வள்ளுவரின் குரலுக்கு மேலும் விளக்கம் இங்கே கிடைக்கிறது. அக்னிசிறகு என்னும் வலைப்பதிவிலே இருக்கும் கருத்துக்களை ஊன்றி படிக்க வேண்டுகிறேன். 
பதிவின் ஆசிரியர் அவர்கள் விளக்கம் அருமை.  படியுங்கள். 

இந்த குறளுக்கான மெய்பொருள் விளக்கம்,

உலகப் பொருள்கள் மீது பற்றுள்ள வரையிலும் மெய்ப்பொருளான இறைநிலையை உணர முடியாது. பிறப்பு இறப்பு எனும் வாழ்க்கைக் கடலை கடக்க முடியாது. உடல், உயிர், சீவகாந்தம் மூன்றும் கூடிய சீவனின் உடலுக்கு பிறப்பு முதல் இறப்பு வரையில் பெரும்பாலும் துன்ப அனுபவங்களாகவே இருக்கின்றது. இந்த உண்மையை ஒரு பேரறிஞர் தொகுத்துக் கூறியிருக்கிறார் ஒரு கவியின் மூலம்

வேதநூல் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினைந்தாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநருளானே

இது ஒரு பக்திப் பாடலாக இருந்த போதிலும் மனித வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை விளக்கிக் கூறுகிறது.


Friday, April 01, 2011

அடைவார்வினை அறுமே



தமிழ் வலை உலகில் தனித் தன்மையுடன் திகழும்
திருமதி டி .வீ. தங்கமணி அவர்கள் சிவபெருமான் குறித்து  ஒரு அழகான தோத்திரம் எழுதியிருக்கிறார்கள்.  ஐந்து பாடல்களைக் கொண்ட இத் தோத்திரம் இந்த முதல் பாடலுடன் துவங்குகிறது. 
பாடல் இதோ :
 

மடமாகிய அறியாமையின் பிழையாவையும் மறைய
நடமாடிடு இறையோனினை வாலேயுளம் நயந்தும்
இடமேவிய உமையாளரன் துணைநாடிட இனிதே
அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....1.
இவரது பாடல்களின் சிறப்பு இவரது இசை இலக்கண சுத்தமாக மரபு கவிதையாக விளங்குவதுதான். 

அவரது வலைப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம். 
அரனின் அருள் பெற
அவனடியிலமர்ந்து
ஆனந்தமாய் ஒரு
இசைவெள்ளம்.
ஈசா !
என்னே நின் அருள் !

சுப்பு ரத்தினம்.
இதை விரைவில் காம்போதி ராகத்தில் பாடுவேன்.

அது இதோ :




பாடல் அமைந்த சந்தம். 

('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
1-4 சீர்களில் மோனை) 

எனவும் குறித்து உள்ளார்கள். 



மற்ற ஐந்து பாடல்களையும் அவரது வலைப்பதிவுக்குச் சென்று படிக்க இங்கே சொடுக்குங்கள்.  

இதே காம்போதி ராகத்தில் எல்லோரும் நன்கறிந்த ஒரு பாடல் புலவர் மாரிமுத்தா பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது. 

"நடமாடித் திரிந்த உமது இடது கால் முடமாகி போனது ஏன் எனச் 
சொல்லுவீர்   ஐயா.  " எனத்துவங்கும் பாடல் பரதம் ஆடுவோர் மத்தியிலே வெகு பிரசித்தம். 

ஒரு பரத நிகழ்வு  இங்கே காண்பீர்: