Pages

Thursday, November 26, 2009

தேடுகிறோம்...தேடுகிறோம் !!



தேடுகிறோம்...தேடுகிறோம் !! தேடிக்கொண்டே இருக்கிறோம்.

பிறந்தது முதல் இன்று வரை ஏதாவது ஒன்று நமக்கு எட்டாமல் இருக்கிறது. அதை ஈட்டித்தான் ஆகவேண்டும் என்ற‌
மன உந்துதலால் அதை தேடிக்கொண்டே இருக்கிறோம்.

குழந்தைப்பருவத்தில் விளையாட்டுப்பொருள்கள்.. விடலைப்பருவத்தில் மயக்கும் பொருட்கள்.
நடுவயதில் பணம், பணம், பணம், பணம் தரும் இன்பப்பொருட்கள், சுகம் தரும் சாதனங்கள்.
செல்வம் அத்தனையும் கிடைத்தபோதும், பதவி, புகழுக்காக ஆசைப்பட்டு, அவற்றினை எப்படியாவது
அடைந்துதான் தீரவேண்டும் என அறமில்லாப்பாதைகளில் செல்வோரும் நம்மிடத்தில் உளர்.

மக்கட்செல்வம், பொருட்செல்வம், அறிவு, ஆராய்ந்த கல்வி
இத்தனையும் அவ்வப்பொழுது கிடைத்தும், கிடைக்காத ஒன்றுக்கு மனம் ஏங்கிக்கொண்டே
இருக்கிறது. முதிர்வடைந்த காலத்தே, எல்லாம் திகட்டிப்போன பொழுதோ, நிம்மதிக்காக,
மன நிம்மதிக்காக ஏங்குகிறோம்.

கிடைத்த பொருட்களைக் கண்டு திருப்தி அடையாது, இல்லாத பொருளிடத்து நாட்டம் கொண்டு,
இருக்கும் பொருட்களையும் அனுபவிக்காது, வாழ்க்கையை வீணடிக்கும் மாந்தரோ ஏராளம். ஏராளம்.

எதைத் தேடுகிறோமோஈ அது நம்மிடமே இருக்கிறது என்ற ஞானம் தோன்றிய நிலையில் தெளிவு
பிறக்கையிலே, வாழ்க்கையின் கடைசிப்படிகளில் இருக்கிறோம்.

பாரதி பாடுவான்:
" எல்லா மாகிக்கலந்து நிறைந்த பின்
ஏழைமை யுண்டோடா ? மனமே !
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த பின்
புத்தி மயக்கமுண்டோ ? "

தன்னை வென்றவர் தெளிவு பெற்றவர் பெறுவது யாது ? அதையும் பாரதியே கூறுவான்:

" என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ ‍‍
தன்னைவென் றாலவை யாவும் பெறுவது
சத்தியமாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்று முணர்ந்தபின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்குத்
தாழ்வுற்று நிற்போமோ ? "

பதிவாளர் சகோதரி கவி நயா அவர்கள் அற்புதமாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார்கள். அதையும் காண்போம்.

3 comments:

  1. தங்களின் குரலில் கவிநயா அவர்களின் வரிகளைக் கேட்கும் பொழுது அத்தனை இனிமையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது தாத்தா. நீங்கள் கோர்த்திருக்கும் படங்களும் பொருள் மிகுந்தவையாக இருக்கின்றன. மிக்க நன்றி!

    ReplyDelete
  3. சகோதரி கவிநயாவின் கவிதைக்கு ஒரு புது அர்த்தமே கிடைத்தமாதிரி உங்கள் குரலில் அதைக் கேட்ட்தும் உணர்ந்தேன். இது தான் இசைக்கு இருக்கும் தனி மகத்துவம் போலும்.
    அதைப் பாடி பதிய வேண்டும் என்று உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாடு, ஓ.. என்னவென்று அதைச் சொல்வது?.. 'சாலச்சிறந்தது' என்கிற தமிழ் சொற்றொடர் தான் இப்பொழுது சடாரென்று என் நினைவுக்கு வருகிறது.

    மிக்க நன்றி, சூரி சார்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி