Pages

Thursday, April 02, 2009

நிலையிலா வாழ்க்கையிலே நிலைத்திருப்ப‌து அற‌ம் ஒன்றே




கபீரன்பன் தனது அண்மையில் பதிவு ஒன்றில் அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லிய கருத்து ஒன்று நம் நலம் விழைவார் எப்போதும் இனிமையாக பேசமாட்டார். நம்மை இடிக்கவேண்டிய இடத்தில் இடித்து நமக்கு நல் வழி புகட்டுவார். கசப்பு மருந்தையும் புகட்டுவார்.

அவ்வாறு நம்மிடையே உள்ள குற்றங்களையும், தொய்வு நிலைகளையும் சரியான தருணத்தில் எடுத்துரைப்பதனால், ஏற்படும் நன்மை நமக்குத்தான் எனப்புரிந்து கொண்டு நடத்தல் வேண்டும். "மஹாத்மாக்களின் வாக்குகள் வழிகாட்டும் விளக்குகள் போல. விளக்கை பற்றிக்கொள்வது அவரவர் விருப்பம்".


கபீரன்பனின் கட்டுரையைத் திரும்பத் திரும்ப எத்தனை வாசித்தாலும் தகும். வாசித்தால் மட்டும் போதாது. அவற்றில் சொல்லப்பட்டவைகளை சிந்தித்து செயல் படவேண்டும்.

அண்மையில் யதேச்சையாக, முதல் முறையாக எனது பதிவுக்கு வருகை தந்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வலையின் இடது பக்கத்தில் உள்ள திருக்குறள் தொடர்பு ( விட்ஜெட் ) பற்றி ஒரு செய்தி விட்டுப்போயிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த விட்ஜெட்டைப் பதியும்பொழுது, இதை நான் எப்படியோ காணாது போனேன். திருக்குறள் பற்றிய தகவல்கள், வள்ளுவரின் சிலை பற்றிய தகவல்கள் அழகாக குறிப்பிட்டுள்ளன. ஆயினும் திருக்குறளின் 1330 பாக்களுக்கும் செந்தமிழில் உரை யார் எழுதியது,அவ‌ற்றின் ஆங்கில‌ மொழியாக்க‌ம் யாரால் செய்ய‌ப்ப‌ட்ட‌து என்ற‌ த‌க‌வ‌ல் இல்லை. இதை இப்போது தான் க‌வ‌னித்தேன்.

திரு கிருஷ்ண‌மூர்த்தி அவ‌ர்க‌ள் விட்ஜெட்டில் காண‌ப்ப‌டும் ஆங்கில‌ மொழியாக்க‌ம் த‌வ‌யோகி
சுத்தான‌ந்த பாரதி அவர்களால் செய்யப்பட்டது என்றும் அது ஒரு உலக தமிழ் மா நாட்டில் வெளியிடப்பது என்றும் சொல்லி அத்தகவல்களடங்கிய சுட்டி ஒன்றையும் தந்திருக்கிறார்கள். அவருக்கு எனது நன்றி.
http://maraboorjc.blogspot.com/2006/03/blog-post.html

த‌க‌வ‌லை உரிய‌வாறு விட்ஜெட்டுக்குக் கீழே இணைத்துவிட்டேன். திரு சுத்தான‌ ந‌த‌ பார‌தி அவ‌ர்க‌ளின் பெய‌ர் த‌ர‌ப்ப‌ட‌வில்லையே என்ற‌ அவ‌ர்க‌ள் வ‌ருத்த‌ம் ச‌ற்றேனும் குறையுமென‌ எதிர்பார்க்கிறேன்.

திரு கிருஷ்ண‌மூர்த்தி அவ‌ர்க‌ள் த‌ந்த‌ சுட்டியில் யோகி சுத்தான‌ந்த‌ பார‌தி இய‌ற்றிய‌ த‌மிழ்த்தாய் வாழ்த்து ஒன்று காண‌ப்பெற்றேன்.
அந்த தமிழ்ப் பாடல் இதோ:-
தமிழ்த்தாய் வாழ்த்து (5 பெரும் காப்பியங்களை ஆடை அணிகலனாய் அணிவித்து ஆற்றிய அழகிய பாடல்)
ராகம்: காம்போதி, தாளம்: ஆதி

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்றுஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ


உண்மையில் நான் இதுவ‌ரை இவ்வாழ்த்துப் பாட‌லை அறியேன்.
ஐந்து உய‌ர் காப்பிய‌ங்க‌ளையும் உள்ள‌ட‌க்கிய‌ இவ்வாழ்த்து போற்ற‌த்த‌க்க‌து.

நிற்க‌. திருக்குற‌ளின் 1330 குற‌ட்பாக்க‌ளுக்கும் உரை எழுதிய‌வ‌ர் எண்ணில‌ர். 50 வ‌ருட‌ங்க‌ட்கு முன்பு என‌து த‌மிழாசிரியர்கள், ப‌ள்ளியில் திரு குல‌சேக‌ர‌ன் அவ‌ர்க‌ளும் ( இ.ரெ.உய‌ர் நிலைப்ப‌ள்ளி, திருச்சி) க‌ல்லூரியில் திரு.ஐய்ய‌ம்பெருமாள் கோனார் (செயின்ட் ஜோஸ‌ஃப் க‌ல்லூரி, திருச்சி) இருவ‌ருமே கூறுவ‌ர்:

ஒரு குற‌ளின் க‌ருத்து அத‌னைச் சார் ந்த‌ அதிகார‌த்தின் பொதுக்க‌ருத்தினை ஒட்டியே அமைத‌ல் ந‌ல்ல‌து என‌வும் வ‌லிந்து பொருள் கூறுவ‌து தவிர்க்கப்படவேண்டும். மேலும் ஒரு குறளின் நுண்ணிய கருத்தைக்கண்டறிய‌ பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர் ஆகியவரது உரைகள் அடிப்படையாக அமைய வேண்டும். இக்கருத்தினை எனது தந்தையும் (அவ்ரும் 1920 வாக்கில் தமிழாசிரியராகப்பணியாற்றியவர் ) வலியுறுத்தினார்.

திருக்குறளின் உரைகள் பல உள. சிலவற்றின் தொடர்பு இங்கு தரப்படுகிறது.


http://tamilelibrary.org/teli/thkrl.htmlin Tamil Unicode /utf-8 format

க‌ட‌ந்த‌ 100 வ‌ருட‌ங்க‌ளில் ப‌ல‌ர‌து உரை இணைய‌த்தில் காண‌ப்ப‌டுகிற‌து.

உரைக‌ளில் எது சிற‌ந்த‌து என‌க் கூறுத‌ல் ச‌ரியாகாது. அக்கால‌ம் முத‌ல் இன்று வ‌ரை, திருக்குற‌ளுக்கு விள‌க்க‌ம் எழுதிய‌வ‌ர் அவ‌ர‌வ‌ர் வாழ்ந்த‌ வாழுகின்ற‌ ச‌முதாய‌ கோட்பாடுக‌ளையும், நெறிக‌ளையும் அடிப்ப‌டையாக‌ வைத்த‌து ம‌ட்டும‌ன்றி த‌த்த‌ம் கோட்பாடுக‌ளையும் ஒட்டி எழுதியிருப்ப‌து வெள்ளிடைம‌லை.இரணடாவது, ம‌த‌ச் சார்புள்ளோர் உரையும், ம‌த‌ச் சார்பிலாதோர் உரையும் ச‌ற்றே மாறுப‌ட்ட‌தாக‌ இருக்கும். ம‌த‌ச் சார்புற்றோரிலும்
வெவ்வேறு ம‌த‌ங்க‌ளைச் சார் ந்தோர் வெவ்வேறு வித‌மாக‌ப் பொருள் கூறியிருப்ப‌தும் தெரிகிற‌து. க‌ட‌வுள் உண்டென்பாரும் இல்லையென்பாரும் அவ‌ர‌வ்ர் இல‌க்குக்கேற்ப‌வே அழ‌காக‌ப் பொருள் கூறியுள்ள‌ன‌ர்.
திருக்குற‌ள் கால‌த்தை வென்ற‌ ஒரு மாபெரும் இல‌க்கிய‌ம். ச‌ம‌ய‌க்கோட்பாடுக‌ளை வென்ற‌ ஒரு இல‌க்கிய‌ம். மானுட‌ம் ஒன்றையே மைய‌ப்பொருளாக‌க் கொண்டுள்ள இலக்கியம். ஆகவே உலகத்தே அவ்வப்போது தோன்றும் அறிஞர் பலரும் மொழி வல்லுனர்க‌‌ளும் திருக்குறளுக்குப் பொருள் எழுதித் த‌ம‌க்குப் பெருமை சேர்த்துக் கொண்டார் எனவே சொல்ல‌வேண்டும்.

திருக்குற‌ளை த‌மிழ் ம‌றை என‌க்கூறுவ‌ர். ( ம‌றைந்து இருந்து உணர்த்துவதால்,ம‌றை என‌ வேத‌த்திற்கு பொருள் கூறுவ‌ர். ) பொய்யாமொழி என்ப‌ர்.

நிலையிலா வாழ்க்கையிலே நிலைத்திருப்ப‌து அற‌ம் ஒன்றே.
அதை உண‌ர்த்துவ‌து திருக்குற‌ள்.

அதைப் போற்றுவோம். திருவ‌ள்ளுவ‌ர் பிற‌ந்த‌ மண்ணில் நாமும் தோன்றினோம் என‌ப் பெருமைப்ப‌டுவோம்."தோன்றிற் புக‌ழொடு தோன்றுக‌ " என்றார் வ‌ள்ளுவ‌ர். வள்ளுவம் சுட்டிக்காட்டும் அறனெறிகளில் ஏதேனும் ஒன்றிலாவது அற‌வ‌ழி வாழ்ந்து புக‌ழ் ஈட்டுவோம்.

2 comments:

  1. கவியோகி சுத்தானந்த பாரதியாரைப் பற்றிய தகவல்களை இணைத்ததற்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். ஒரு முப்பது வருடத்திற்கு முன்னால், நடந்ததையே நம்மால் நினைவில் கொள்ள முடியவில்லை, தகுதியானவருக்கு உரிய மரியாதையைத் தர முடியவில்லை என்கிற ஆதங்கமே என்னை எழுத வைத்தது.
    நன்றியும் வணக்கமும்,
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  2. தங்களுடைய இப்பதிவை இன்றுதான் கண்டேன். கபீர் வாக்கிற்கு தங்கள் கட்டுரையில் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்திற்கு நன்றி.

    சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி