Pages

Wednesday, July 16, 2008

அடக்கம் அமரருள் உய்க்கும்

அடக்கம் அமரருள் உய்க்கும் = அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.


என்பது வள்ளுவம்.

அடக்கத்தைப் பற்றி பல்வேறு நிலைகளில் பல்வேறு பொருட்கள் கூறப்பட்டபோதிலும்
ஒன்று தெளிவாகத் தெரிகிறது.

தெரிந்தவன் தனக்குத் தெரியும் என்பதாலும், தெரிந்தவை மனதிற்கு ஒரு
முழுமையையும் அமைதியும் தருகின்றன என்பதாலும், தாம் தெரிந்தவற்றிற்கு
மாற்றாக ஏதும் சொல்லப்படும்போது, அச்சூழ்னிலை, சொல்வோர், சொல்வோர்
மன நிலை, அவையோர் மன நிலை, ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு
வாளா இருந்து விடுகின்றனர்.

தெரிந்தவர் ' சும்மா இரு' த்தலும் இதனால்தானோ !

மாறாக, தனக்குத் தெரியுமென மற்றவர் மத்தியிலே வாதிடுபவர் ஒரு வகையான‌
வ்யூகத்தில் தன்னை அறியாது சிறைப்படுகிறார்.

ஒன்று, தான் சொல்வது மற்றவர்க்குப் புரிவதில்லை. அதைப் புரிவதற்கான
பக்குவமோ அறிவோ அவர்களிடம் இல்லை.
இரண்டு. மாறாக நிலை எடுத்தவர்களுக்கு ஒரு 'தான் சொல்லிவிட்டோம்' என்றதொரு
ஆணவப்பிரச்னையும் இருக்கலாம். அதை எதிர்த்து ஒரு வார்த்தை வந்து அதற்கு தாம்
கட்டுப்பட்டால் (ஒத்துக்கொண்டால்) உற்றம், சுற்றமதில் தமது மதிப்பு குறைந்து விடும்
என்கிற அச்சமும் காரணமாக இருக்கலாம்.

ஆதலால், தெரிந்தவர் வாளா இருந்துவிடுகிறார். சொல்லித்தான் ஆகவேண்டுமென்ற‌
நிலையிலும் குறிப்பாக உணர்த்துகிறார். காலம் உணர்த்தும், தாமாகவே எதிர்வாதி
புரிவார் என்றும் மெளனம் சாதிக்கிறார். இது அடக்கமா ?

அடக்கம் எனும் சொல்லைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால், அடங்கியிருப்பது
அடக்கமா, அல்ல ! தனது புரிதலை ( understanding ) தனக்குள்ளே
அடக்கிவைத்திருப்பவனது செயல் அடக்கமா ?

அவையிலே தனது புதல்வர்கள் செய்யும் தகாத காரியங்களைப் பார்த்தும் வாளா இருந்த‌
திருதராஷ்டிரன் புத்திர பாசத்தில் அடங்கிப் போய் உறைந்து இருக்கிறான்.

அரச அவையின் குருமார் எனச்சொல்லப்படும் பீஷ்மர் தம்மால் அந்தக் காட்சிகள்
பார்க்கப் பட இயலவில்லை எனினும், அரச விசுவாசம் எனும் தளையில் அடங்கிப்போகிறார்.

அர்ச்சுனனது வில்லும் வீரமும் அடங்கிப் போன காட்சி.

இவர்கள் காட்டிய அடக்கம் சரித்திரத்தில் இடம் பெற்றனவே தவிர இவர்களுக்கு
அழகோ, மாட்சியோ, பெருமையோ தரவில்லை.

அடுத்த காட்சி இதோ !
பாண்டிய அவையில், கண்ணகி தன் கணவன் கள்வன் அல்ல என நிரூபித்துவிடுகிறாள்.
தன் கணவன் உயிரை அவசியமில்லாது ஆராயாது அபகரித்த ஆட்சியாளரைச் சுடுசொல்
சொல்லிடும்பொழுது கண்ணகியின் சினத்தில் உள்ள நியாயம், தருமம் எல்லாம்
புரிந்து, யானோ அரசன் ! யானே கள்வன் எனச் சொல்லித் தன்னையே மாய்த்துக்கொள்கிறான்
பாண்டிய மன்னன்.
இவன் அடக்குவது என்ன ? தனது அரசு தனக்குத் தரும் அதிகார பலத்தை. அதை உபயோகித்து
எதையும் செய்யலாம் என்ற ஆணவத்தை.
இவன் எதில் அடங்குகிறான் ? சட்டத்திற்கு, நியாயத்திற்கு, தருமத்திற்குத் தலை வணங்குகிறான்.
இல்லை! தன்னுயிரையும் துறக்கிறான்.

ஆக, தர்மம் என்ன சொல்கிறதோ அதற்கு அடங்குபவர் பிரதிபலிப்பதுவே அடக்கம்.
தர்மம் என்ன சொல்கிறதோ அதற்கு அடங்கி, தருமமில்லா எல்லா உணர்வுகளையும்,
அவ்வுணர்வுகளைப் பெருக்கும் ஐம்புலன்களை அடக்கி வாழ்வதே அடக்கம்.

இங்ஙனம் வாழ்வாரே அமரருள் உய்வார் என்பது வெள்ளிடைமலை.

எப்படி ? வள்ளுவர் அதையும் கூறுவாரே !

ஒருமையுள், ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

தன் ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனுக்கு ஏழும் பிறவிகளிலும் நன்மை உண்டாம்.


Wednesday, July 02, 2008

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்



இந்த ஒளவை பிராட்டி இருந்தாரே ! அவர் சொல்லாத விஷயம் இல்லை.
ஆத்திசுவடியிலே அத்தனையும் ஒரு சில வார்த்தைகளிலே சொல்லுவதில்
நறுக் தெரித்தாற்போல் சொல்கிறார்.

" அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தந்தை தாய்ப்பேண்
தாயின் சிறந்தது ஒரு கோயிலும் இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. "


குமர குருபரர் இன்னும் ஒரு படி மேலே சென்று

" குலமகட்குத் தெய்வம் கொழுகனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் = அறவோர்க்(கு)
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை "
என்பார்.

( நற்குடிப்பிறந்த கற்புடைய பெண்ணுக்குக் கணவனே தெய்வம்;
பிள்ளைகளுக்கு உறுதியாக தந்தை தாயே தெய்வமாவர்;
இல்லர நெறியை மேற்கொண்டவர்க்கு துறவிகள் தெய்வமாவர்;
எல்லோர்க்கும் இலையினது நுனி போலப் பசும் பொன்னால்
செய்யப்பட்ட அணிகலன்களையுடைய அரசே தெய்வமாவான். )

பெற்ற தாயின் பெருமையை பெருமிதத்துடன் எனது வலையுலக‌
நண்பர் ஜீவா அவர்கள் தனது பதிவிலே அண்மையில் இவ்வாறு
சொல்கிறார்:
http://jeevagv.blogspot.com

"தாயின் பெருமையைச் சொல்லாத இலக்கியம் இல்லை.
"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தெனை காத்திடும்..." எனத் தாயுமானவனைப் பாடுவார், மாணிக்க வாசகர் பெருமான். தாய் பரிந்து கவனிக்காவிட்டால், சேய் தனை காப்பவர் யார்?
தாய்க்குத் தாயாக பேருலகம் தனை ஈன்ற பெருந்தேவி,
அன்னை மகாலட்சுமி அல்லவோ அகில உலகிற்கும்
அருள் சுரக்கும் தாய்! அம்மா, எனைக்காத்து இரட்சிப்பாய்."


ஏன் இதெல்லாம் சொல்கிறீர்கள் ? என்று கேட்பீர்கள்.

சில நாட்கள் முன் எனது வளாகத்தில் இருக்கும் ஒரு பெரியவரிடம்
பேசிக்கொண்டிருந்தேன். அவர் தனக்கு அண்மையில் நிகழ்ந்த
நிகழ்வு ஒன்றை விவரித்தார்.
அவரது ஒரு வயது முதிர்ந்த நண்பர் ஒருவர் இறந்து விட்டார் எனச்
செய்தி கேட்டு அவருக்கு மரியாதை தெரிவிக்க, அந்த வீட்டுக்குச்
சென்றாராம். இறந்தவர் உடல் ஒரு குளிர் சாதனப் பேழையில்
வைக்கப்பட்டு இருந்தது. கூடியிருந்தவர்கள் துக்கம் விசாரித்துக்
கொண்டிருக்கையில் இவர் மட்டும் லேசாகச் சிரித்தாராம். என்ன‌
இந்த இடத்தில் சிரிக்கிறீர்கள் எனப் பக்கத்தில் இருந்தவர்
சீற , இவர் சொன்னாராம்:

பாருங்கள் ! என் நண்பன் உயிருடன் இருந்தபோது ஒரு ஃபேன்
சுற்றினால், கரண்டு செலவு ஆகிவிடுகிறது என்று வாசலில் படுக்கச்
சொல்லி வற்புறுத்தினர் இவரது மகனும் மகனின் மனைவியும்.
செத்தபின் பாருங்கள் இவனுக்கு அடித்த யோகம்.
ஏ.ஸியில் என்ன சுகத்துடன் தூங்குகிறான் பாருங்கள் ! என்றாராம்.

காட்டுக்கு வேட்டையாடச் சென்ற தசரத மஹராஜா அங்கு வெகு தொலைவில்
ஒரு மிருகம் நீர் குடிக்கிறது தடாகத்தில் இறங்கி என நினைத்து, ஓசை வரும்
திசை நோக்கி தன் அம்பைச் செலுத்த, அந்த அம்பினால் ஒரு சிறுவன்
இறந்தான் எனவும், அந்தச் சிறுவன் தனது பார்வையற்ற பெற்றோரைத் தன்
தோள்களில் சுமந்து செல்லும்போது, தந்தை தாய் தாகம் எனச்சொல்ல, அவர்கள்
தாகத்தைத் தீர்க்க, அவர்களைச் சற்று நேரம் அமர வைத்துவிட்டு, ஒரு
பானையில் நீர் மொள்ளும்போது தான் தசரதன் அம்பினை எதிர் கொண்டான்
என்பதும் புராணம்.

புராணங்கள் எல்லாம் கதை கற்பனை. சாத்தியம் இல்லை. நடக்ககூடிய‌
தாகச் சொல்லுங்கள். மாதா மாதம் முதியோர் இல்லத்துக்குப் பணம்
அனுப்பி விட்டால், அவர்கள் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்களாம்.
இறந்தபின், உடனே வர முடியவில்லை, ப்ளேன் டிக்கெட் கிடைக்கவில்லை
என்றாலும், அவரவர் சம்பிரதாயத்திற்கு உகந்த வகையில் இறந்தவரைக்
கரையேற்றி விடுகிறார்களாம்.
இருக்கட்டும்.

வயதான பெற்றோரை வாழும் வரை தவிக்கவிட்டு
அவர் உயிர் நீத்த உடன், பசு மாடு தானம், சுவர்ண தானம்,
குடை தானம். பஞ்ச பாத்ர தானம். என்று பல்வேறு தானங்களைச்
செல்வோரையும் பார்க்கிறோம்.
இந்த தானங்களுக்கு ஏதும் மதிப்பு உண்டா ? தெரியவில்லை.
விஷயம் தெரிந்தவர்கள்தான் சொல்லவேண்டும்.

கர்மாக்களைப் பற்றிப் பேசுகிறோம். பல கர்மாக்களை
பயத்தின் அடிப்படையில்தான் செய்கிறோம் என்று தோன்றுகிறது.
பக்தியோ நம்பிக்கையோ தெரியவில்லை.
( We do more out of FEAR than out of FAITH)

அது பயமோ பக்தியோ எதுவோ அதைப்பற்றி பேசவேண்டாம்.
செய்யவேண்டியதை செய்து தான் தீரவேண்டும்.
இதுவும் ஒரு கட்சி.

இதற்கும் அப்பால் இன்னொரு நியாயம். நியாயமாம் !

உங்கள் கர்ம பலன் எதுவோ அதுதான் நடக்கும். நீங்களே
உங்கள் அம்மா அப்பாவுக்கு கயா ச்ரார்த்தம், நித்ய ச்ரார்த்தம்
செய்யவில்லை. காசி, ராமேச்வரம் செல்லவில்லை. அங்கே
கொடுக்கவேண்டிய தானங்களையும் கொடுக்கவில்லை.

உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு கொடுப்பார்களோ இல்லையோ
என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்.

எல்லாம் நினைத்து ப்பார்த்தால் ஒன்று தான் தோன்றுகிறது.

அறக்கடவுளை நாம் வந்தித்தால், அறக்கடவுள் நம்மைக் காப்பார்.
( தர்மோ ரக்ஷதி, ரக்ஷிதஹ ) ( ரக்ஷகஹ என்றும் சொல்வதுண்டு )

அறம் எத்துணை வலியது என்பதை வள்ளுவர் கூறுவார்:

என்பு இலதனை வெயில் போல் காயுமே
அன்பு இல் அதனை அறம்.


" அன்னையும் தந்தையும் தானே..அண்ட சராசரம்..."
என்று துவங்கிப் பாடுகிறார் பாகவதர்.
ஆம். அமரர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.
அவர் பாடுவதைக் கேளுங்கள்.