காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Thursday, March 26, 2009
ஈன்றாள் பசி காண்பானாயினும்
அண்மையில் நான் புதுப்பதிவு ஏதும் எழுத இயலவில்லை. தமிழ் மண்ணுக்கு மிகத்தொலைவில் அமெரிக்க மண்ணில் ஒரு கிழ்க்குக்கோடியில் ஒரு கொசு போல ஒட்டியிருக்கும் ஒரு மா நிலத்தில் ஒரு ஐந்து மாதம் இருக்கவேண்டிய சூழ்னிலையில் இருக்கும் எனக்கு எப்போது தமிழகத்திற்குத் திரும்புவோம் என்றிருக்கிறது.
இங்கு நிலவும் வெட்ப தட்ப நிலை நான் எனது 67 வருட வாழ்விலே அனுபவித்திராத ஒன்று. குளிர் காலம் விலகும் நிலை. வசந்த காலம் வந்துவிட்டது என்கிறார்கள். ஜூன் வரையில் வசந்தமாம். கதிரவன் ஒளி பிரகாசிக்கிறான், இருப்பினும் வீட்டிற்கு வெளியே பூஜயம் டிகிரி இருக்கிறது. காற்று வேறு. அதற்கான உடைகளை ஒரு வின் வெளி பிரயாணி போன்று அணிந்து செல்கிறோம்.
அமெரிக்க மக்கள் கலாசாரம் நான் இதுவரை கண்டவரை ஒரு அவியலாக இருக்கிறது. பல்வேறு நாட்டு மக்கள், அவரவர் தத்தம் கலாசாரங்கள், உடை, அணுகும் முறை எல்லாம் கலந்து காணப்படுவதால், அமெரிக்க சமுதாயம் உலக மக்கள் யாவ்ரையும் ஒரே இடத்தில் பார்க்க வகை செய்கிறது.
இம்மானிலம் ஒரு பணக்கார மானிலம் என்று தொலைக்காட்சியில் சொன்னார்கள். அமெரிக்க சராசரி ஆண்டு வருமானம் சுமார் 35000 டாலராம். இங்கு 45000 டாலருக்கு மேலாம். சாலைகளில் நடந்து போகும் நபர்கள் வெகு குறைவு.காரில் இல்லாமல் வாழ்க்கை நடத்த இயலாது என்கிறார்கள். பால், மோர், காய்கறி எல்லாம் மொத்தம் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.
அமெரிக்க பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வேலை இல்லாதோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி பொருளாதாரத்தைச் சீர் செய்யும் நோக்குடன் துவக்கியிருக்கும் 780 பிலியன்
தொகையில் பெரும் பகுதி சாலைகள் சீரமைப்பு, கல்விக்கூடங்கள் சீரமைப்பு ஆகியவற்றிற்கு உதவுமாம். இருப்பினும்
வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகமாகும்போது குற்றங்கள் புரிவோரின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்று
நினைப்பதால் ஒரு 50000 காவலர் புதியதாக நியமிக்கப்படவும் இருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன.
குற்றங்கள் என்று சொல்லும்போது, எல்லா நாட்டிலும் அவை ஒன்று போலத்தான் இருக்கும்போல இருக்கிறது.
ஒரு வளப்பமான நாடு, பெரும்பாலானோர் கல்வியறிவு பெற்றவர்கள், ஒரு குறிப்பிடத்தக்க சிறப்புடைய காவல், நீதி அலுவலகங்கள், பாரபட்ச மில்லாத தொலைக்காட்சிகள் இவ்வளவும் பெற்றிருந்தும் குற்றங்களும் மலிந்தே காணப்படுவது போலத் தெரிகிறது. ஒரு பெரிய கடையில் 150 மின்ட் ( மிட்டாய்) திருடியதாக குற்றம் பற்றிய தகவல், , தன் மனைவி தன்னைத் துன்புறுத்துவதாய் காவலர் அலுவலகத்தில் உதவி கேட்கும் கணவர் பற்றிய செய்தி, திடீரென்று தனது பள்ளி மாணவரையே துப்பாக்கியால் சுட்ட நிகழ்ச்சி, தனது மகளையே ஒரு 25 ஆண்டுகள் சிறைப்படுத்தி அவளிடம் 7 குழந்தைகள் பெற்ற செய்தி எல்லாமே இருக்கின்றன. இதெல்லாம் ஏதோ சிறிய சங்கதி என்பது போல, போதைப் பொருள் கடத்தல் மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கு இடையே என்ற தகவல்களும் உண்டு.
ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை .
என்பார் வள்ளுவர்.
ஆயினும் பசி மேலிடக்குற்றங்கள் அதிகரிக்கும் என்பதும் உண்மை தான்.
நல்வழியில் சொல்லப்படுவது போல: பசி வந்திடப் பத்தும் பறந்து போம் .
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.
ஆனால், பசியின் மேலீட்டால் செய்யப்படும் தவறுகளைக் காட்டிலும், மனிதன் தனது பேராசையால், ஆணவ மேலீட்டால் செய்திடும் குற்றங்கள் மனித நேயத்திற்கு புறமபானவை. மேட் ஆஃப் என்ற ஒரு கனவான் கிட்டத்தட்ட
65 மிலியன் ( பிலியனா மிலியனா சரியாகத் தெரியவில்லை ) மக்கள் பணத்தை மோசடி செய்துவிட்டு, நீதிமன்றத்தில்
அவன் மீது சாட்டப்பட்ட 11 குற்றங்களையும் ஒப்புக்கொண்டு சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறான். 75 வயதான்
இவன் மொத்தம் 150 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க குற்றவியலில் வ்கையிருக்கிறதாம்.
இது ஒரு புறமிருக்க, தனி மனிதர் மட்டுமல்ல, மாபெரும் நிறுவனங்களும் பேராசையினால், தாம் மட்டுமல்ல, தமது
நாட்டின் பொருளாதாரத்தையும் சீர் குலைக்க வழி செய்து இருப்பதாக்த் தெரிகிறதாம். பொருளாதார திட்டத்தில் உதவி
பெற்ற இந்த நிறுவனங்களின் அதிகாரிகள், அரசாங்கத்திலிருந்து பெற்ற உதவியில் ஒரு கணிசமான தொகையைத்
தங்களுக்கு போனசாகப் பெற்றார்களாம். மக்கள் கோபம் கொண்டு எழ, அவற்றில் சிலவர் வாங்கிய தொகையைத் திருப்பத்தந்திருக்கிறார்கள்.
கடந்த 25 முதல் 30 ஆண்டுகளில் சராசரி அமெரிக்க குடிமகனின் சேமிப்பு 11 விழுக்காடிலிருந்து
1 விழுக்காடு ஆக குறைந்துள்ளது, என பிரபல டைம் பத்திரிகை கூறுகிறது. எதிர்கால
வருமானத்திலேயே வாழ அமெரிக்க மக்கள் தம்மை பழக்கியிருக்கின்றனர். தேவை இருக்கிறதோ
இல்லையோ அதை க்ரெடிட் கார்டு வழியே வாங்க முடிவதால், இவரில் பெரும்பாலானோர்
தமது வருமானத்தில் பெரும் பகுதியை வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்துவதிலேயே
செல்வழிக்கின்றனர் எனச் சொல்கிறார்கள்.
ஆகாறு அளவீட்டியதாயினும் கேடில்லை
போகாறு அகலாக்கடை
என்னும் வள்ளுவனின் வாய்மொழியில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
வரவுக்குத் தகுந்த செலவு என்பதற்கும் சராசரி அமெரிக்க குடிமகனுக்கும் ச்மபந்தம் இல்லை. ஒவ்வொரு நபரும் ஒரு ஐந்து முதல் 7 க்ரெடிட் கார்டுகள் வைத்திருக்கின்றனர் என நினைக்கிறேன்.
இந்த க்ரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் திவாலாக துவங்கும் நிலையில் இவர்களது வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களுக்குக் கொடுக்கும் மாத உதவித்தொகையும் அதிகரிக்கிறது. இதை சமாளிக்க வேண்டும் எனின் வேலை வாய்ப்புக்களை அதிகப்படுத்தவேண்டும்.
ஆகவே தான் ஓபாவின் பொருளாதாரத்திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு ல்டசத்திற்கு மேல் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் என நம்பப்படுகிறது.அதே சமயம் ஓபாவின் 780 பிலியன் பட்ஜெட் எதிர்கால அமெரிக்க பிரஜைகளைக் கடனாளியாக ஆக்கிவிடும் என்று ரிபப்ளிகன் கட்சி கதறுகிறது.
ஓபாவின் கட்சியோ பொருளாதாரம் மிக மோசமான நிலையில் ஏதேனும் செய்தாக வேண்டும், ஒன்றுமே செய்யாது இருப்பது இன்னமும் பாதாளத்திற்குக் கொண்டு செல்லும் எனச் சொல்லி அதற்கான ஆதரவையும் பெற்றிருக்கிறது.
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிரவருவதோர் நோய் என்றார் வள்ளுவர். பொருளாதாரச் சீர்கேடு சென்ற வருடமே வருவதற்கான முன்குறிகள் தெரிந்தபோதிலும் போதிய முயற்சிகள் செய்யப்படவில்லை என்பது ஒரு சாரார் வாதம். ஆகவே செய்வதை துரிதமாகச் செய்து எப்படியும் அமெரிக்க பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள். உண்மைதான்.
தூங்குக தூங்கிச் செயற்பால, தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. என்பார் வள்ளுவர்.
செய்யவேண்டிய காரியங்கள் பல வகைப்படும்.
ஒன்று முக்கியமானவை. இன்னொன்று அவசரமாகச் செயல்படவேண்டியவை.
எந்த காரியங்களில் நேரம் ஒரு பொருட்டோ அதனை உடனே செய்து முடிக்கவேண்டும். அவற்றைதான் தூங்காது செய்யும் பணிகள் என்பார் வள்ளுவர்.
எப்படியோ ஓபாமா வெற்றி பெற வாழ்த்துவோம்.
அமெரிக்காவை சொர்க்கம் என்பார்கள்.
சொர்க்கம் போலத் தெரியவில்லை.
அது சொர்க்கமாக இருந்தாலும்
சொர்க்கமே என்றாலும் அந்த நம்ம ஊரு போல ஆகுமா என்று பாடிய இளைய ராஜாவின் குரல் கேட்கிறது.
எப்போது திரும்புவோம் என எதிர் நோக்கி இருக்கிறேன்.
Thursday, January 29, 2009
எனது எனது என்றிருப்பவன் பொருளை யானும் ......
இன்றைக்கு துளசி டீச்சரின் வலைப்பதிவினில் படித்தேன்.
பழைய பழமொழிதான். இருப்பினும் அதை ஒரு கட்டுரையின் முடிவாக
எல்லோரும் உணரக்கூடிய வகையில் எடுத்துச் சொல்லியிருக்கிறாகள்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது தான் அந்த முது மொழி.
உலகத்திலே பார்க்கப்படும், கேட்கப்படும், நுகரப்படும், உணரப்படும், சுவைக்கப்படும் சுருக்கமாகச் சொல்லப்போனால் ஐம்புலனகளால் அனுபவிக்கப்படும் எல்லாவற்றிற்குமே இது பொருந்தும்.
இனிப்பு பிடிக்கும் என்று ஒருவன் இனிப்பாகவே சாப்பிட்டுக்கொண்டே இருக்க இயலுமா? ஒரு அளவுக்கு மேல் திகட்டி விடுகிறது. இதை பொருளாதார ஆரம்ப பாடங்களில் தியரி ஆஃப் மார்ஜினல் யுடிலிடி என்கிறார்கள். எனக்கு அவல் பாயசம் பிடிக்கும் என்றால் ( நாரதாவின் பின்னூட்டம் நினைவுக்கு வருகிறது) ஒரு இரண்டு கப் சாப்பிடுகிறோம். மூன்றாவது ஓ.கே. நான்காவது ஏதோ வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக சாப்பிடலாம். ஐந்தாவது கப் : ஐயா ! என்னை விட்டு விடுங்கள். நாளை வந்து சாப்பிடுகிறேன். இப்போதைக்கு போதும் என்கிறோம்.
எந்த ஒரு பொருளுமே ஒரு அளவிற்கு மேலே அதன் முதற்கண் தந்திட்ட அனுபவத்தைத்தருவதில்லை. திகட்டிப்போய் விடுகிறது. அலுத்துப்போய் போதும், என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி விடுகிறோம். இதற்கு விதிவிலக்கு ஒன்றே ஒன்று தான் என்கிறார்கள். அது பணம். ஹார்டு கரன்சி. எத்தனை வந்தாலும், சேர்த்தாலும்,மேலும் மேலும் என்றோ ஒன்று மனதை அரித்திக் கொண்டே இருக்கிறது. ஒரு அளவிற்கு மேல் அப்பணத்தினால் எந்த வித அதிக லாபமோ பிரயோசனமோ இல்லை எனினும் அதை மேன்மேலும் சேகரிக்க வேண்டும் என்கிற பேராசை அதிகரிக்கிறது.
பழைய தமிழ்ப்பாடல் ஒன்று பள்ளிக்காலத்தில் படித்தேன். வட்டிக்கு பணம் கொடுத்து பொருள் ஈட்டும் ஒரு வணிகன் தனது கடையில் கல்லப்பெட்டி முன் அமர் ந்து இருக்கிறான். அப்பொழுது வழிப்போக்கன் ஒருவன் அக்கடை முன் வ ந்து நிற்கிறான். கல்லப்பெட்டியைப் பார்க்கிறான். பார்த்துக் கொண்டே நிற்கிறான். உனக்கு என்ன வேண்டும் ? ஏன் என் கல்லாப்பெட்டியைப் பார்க்கிறாய் ? என வணிகன் கேட்கிறான்.
வழிப்போக்கன் பதிலளிக்காது சென்று விடுகிறான். அடுத்த நாள் அதே நேரம் அதே வழிப்போக்கன் அதே போல் அக்கடைக்கு முன் வ ந்து சற்று நேரம் கல்லாப்பெட்டியை பார்க்கிறான். வணிகன் வயிற்றில் ஏதோ பயம் பீரிடுகிறது. வழிப்போக்கன் போய்விடுகிறான். அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறான் வணிகன். இத்தனைக்கும் அவ்வழிப்போக்கன் அப்பெட்டி பக்கம் வரக்கூட இல்லை. கடைக்கு வெளியே நின்றுதான் கவனிக்கிறான்.
மூன்றாவது நாள். அ ந்த வழிப்போக்கன் எங்கே வ ந்து விடுவானோ என்று அஞ்சி அஞ்சி சாகிறான் வணிகன். சற்று தாமதமானாலும் வழிப்போக்கன் வருகிறான். அதே இடத்தில் அதே போல் கல்லாப்பெட்டியைக் குறி வைத்தாற் போல் பார்க்கிறான். வணிகனால் வாளா இருக்க இயலவில்லை.
என்ன இது ! இது என்னுடைய கல்லாப்பெட்டி. இதில் இருப்பது என்னுடைய பணம். நீ ஏன் தினமும் இதை உற்று உற்று பார்க்கிறாய் என்கிறான் வணிகன்.
அதற்கு வழிப்போக்கன், " ஐயா ! இது உங்கள் பணமா ! என் பணமென்று அல்லவா நினைத்தேன் !" என்றான். வணிகன் திடுக்கிட்டான். " என்ன உன் பணமா ! உன் பெட்டியா ? என்ன உளறுகிறாய் ! " என கோபமுற்று இரைகிறான். அப்பொழுது அமைதியாக அந்த வழிப்போக்கன் சொல்லுவான்: " ஐயா ! நானும் மூன்று நாட்களாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இது உங்கள் பணமாக இருந்தால், ஒன்று அதை உங்களுக்காக செலவிடவேண்டும், இல்லை, பிறருக்கு தானமாகத்தரவேண்டும்.இரண்டுமே நீங்கள் செய்ய வில்லை. நானும் இந்த ப்பெட்டியிலுள்ள பணத்தை எனக்காகவும் செலவிடவில்லை. தானமும் செய்ய ல்லை.அப்படியிருக்கையில் இது உங்கள் பணமாக இருந்தால் என்ன , என் பணமாக இருந்தால் என்ன ! இரண்டும் ஒன்று தானே என்றான். " எனது எனது என்றிருப்பவன் பொருளை யானும் எனது எனது என்றிருப்பேன் " என்று துவங்குகிறது அப்பாடல். நாலே வரிகள் தான். இருப்பினும் நாள் முழுவதும் அமைதியுடன் வாழ ஒரு வகை, வழி, சொல்கிறது.
Wednesday, January 14, 2009
யாவருக்கும் இயலும்
சற்று நேரத்திற்கு முன் ( 10.30 இரவு ) விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி கண்டேன்.
பொங்கல் நல் நாளன்று இது போன்ற நிகழ்ச்சிகள் கிடைப்பது அவ்வளவாக கிடையாது.
ஒரு புத்தக விழா அது. ஈரோடு என நினைக்கிறேன்.
நான் டி.வி. பக்கம் வந்து பார்த்தபோது, உரத்த குரலில் பேசுவது அதுவும் தூய இனிய தமிழில்
பேசுவது கண்டு ஈர்க்கப்பட்டு செவி மடுத்துக்கேட்டேன். ( எனது காதுகள் சற்று மந்தம் )
தமிழ் திரையுலகத்து பிரபல நடிகர் திரு. சிவ குமார் அவர்கள் பேசுக்கொண்டிருந்தார். அவர் நடிப்புத்
திறன் மட்டுமன்றி ஓவியத்திறனும் பெற்றவர் என்பர். இன்றோ அவர் அழகிய அருவி ஊற்று நீர்
சல சல வென ப்பெருக்கெடுத்து ஓடும் புனல் போன்று உரையாற்றிக்கொண்டிருந்தார்.
நூறாண்டு காலம் எல்லோரும் வாழ்ந்திட ஒரு சில கருத்துக்களை எடுத்துக் கூறியபோது
மெய் சிலிர்த்தேன். காரணம். தமிழ் மக்களாகிய நாம் யாவரும் அவசியம் 100 ஆண்டுகள் வாழ்ந்திட
ஒன்று செய்தால் போதுமென்றார்.
அந்த ஒன்று திருமூலரில் உள்ளதென்று அந்தப்பாடலை மேற்கோளிட்டு நம் முன்னே நிறுத்தினார்.
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை.
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே. (252)
காலையில் எழுந்தவுடன் இறைவனைத் தொழ ஒரு பசும் இலைதனை அவன் காலடியில் வையுங்கள். ஒரு நிமிடம்
இறைவனை நினையுங்கள். நீங்கள் நாத்திகவாதியாயிருப்பினும்
உங்கள் முன்னோரின் படத்தின் முன் ஒரு பசும் இலைதனை வைத்து அவரை நினைவும் கூறுங்கள்.
அடுத்து, பசுமாடு ஒன்றுக்கு ஒரு வாய் சோறு அல்லது ஏதேனும் உணவு தாருங்கள். பசுவைப்போல் மனிதகுலத்திற்கு உதவிடும் விலங்கினம் ஏதும் இல்லை என்றார் திரு சிவகுமார் அவர்கள். பசுமாடு நமக்கு பால் தருகிறது. அது மட்டுமல்ல, மாடு போடும் சாணம் உரமாகிறது. மாடு ஈன்றும் காளை நிலத்தை உழுகிறது. வண்டி இழுக்கிறது. இதுவெல்லாம் போதாது என்று அதன் கொம்புகளும் உபயோகிக்கப்படுகின்றன. இறந்தபின்னும் அதன் தோல் நமக்குப் பயன்படுகிறது.
ஆகவே மாட்டிற்கு அதுவும் பசுமாட்டிற்கு ஒரு கவளம் தருவது அடுத்த நற்செயல் என்றார்.
மூன்றாவதாக, நாம் உண்கையில் ஒரு கைப்பிடி பிறர்க்கும் (வறியோருக்கும், அண்டியோருக்கும்) தருதல் வேண்டும் என்றார்.
நான்காவதாக, பிறரிடம் பேசும்போது இனிய சொற்களையே பேசுங்கள் என்றார்.
இந்த நான்கினையும் தினசரி பழக்கமாக, வழக்கமாகக் கொண்டவன் நீடூழி வாழ்வான், நூறாண்டு வாழ்வான் என்பதில் ஏதேனும் ஐயமுண்டோ ?
தைப்பொங்கல் திரு நாளன்று நல்வார்த்தைகள் கூறி எல்லோரும் இன்புற்றிருக்கவும் நூறாண்டு வாழ்ந்திடவும் வாழ்த்திய திரு சிவகுமார் அவர்கட்கு தமிழ் வலையுலகம் சார்பாக நன்றி கூறுவோம்.
வாழ்க நுமது நற்பணி.
திரு.சிவகுமார் அவர்கள் சங்க காலத்தில் காணப்பட்ட அத்தனைப் பூக்களின் பெயர்களையும் ஒருமித்து சொன்ன செய்தி என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இன்று காலை, அப்பூக்கள் என்னென்ன என்று கூகுளில் தேடிப்பார்த்தேன். ஒரு தமிழன்பர் தனது வலையில் குறிஞ்சிப்பாடல் ஒன்றில் இப்பூக்களின் பெயர்கள் இருப்பதைச் சொல்லியிருக்கிறார்.
http://www.tamiloviam.com/unicode/09220503.asp
இந்நூலின் 61வது வரியில் தொடங்கி, 95வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் வருகிறது :
- உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்
- ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
- தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
- செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,
- உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம்,
- எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
- வடவனம், வாகை, வான்பூங்குடகம்,
- எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம்,
- பயினி, வானி, பல்இனர்க் குரவம்,
- பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,
- விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
- குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
- குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம்,
- போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,
- செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
- கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
- தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
- குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
- வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
- தாழை, தளவம், முள்தாட் தாமரை,
- ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,
- சேடல், செம்மல், சிறுசெங்குழலி,
- கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
- காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
- பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,
- ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
- அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
- பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
- வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
- தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,
- நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
- பாரம், பீரம், பைங்குருங்கத்தி,
- ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
- நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
- மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ...."
ஒன்றை அறிய இன்னொன்று ஊக்குவிப்பானாக ( trigger )
இருக்குமென்று நானறிவேன்.
இத்தனை பூக்களுடன் ' சிரிப்பு ' எனும் பூவையும் சேருங்கள் எனச்சொன்னது
சிவகுமாரது மனித நேய உணர்வுகளைப் பிரதிபலிக்க ஒரு சான்று.
Subscribe to:
Posts (Atom)