Pages

Saturday, September 26, 2009

இன்றைக்கு சனிப்பெயர்ச்சி !!!



இன்றைக்கு சனிப்பெயர்ச்சி. ஆம். தமிழ்கம் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் நம்புபவர்கள்
நன்மைக்காக, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலோ, அல்லது, எச்சரிக்கும் விதத்திலோ பல்வேறு பலன்கள் பல வலைப்பதிவுகளில், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் ,சனிப்பெயர்ச்சியின் பலன்கள், மேட ராசி முதல் மீன ராசி முடிய பிறந்தவர்களுக்காக‌ தரப்பட்டுள்ளது.

சூரிய மணடலத்தில் இருக்கும் கோள்கள் புதன், சுக்ரன், செவ்வாய், பூமி, குரு, சனி இவையெல்லாமே தாம் பாதையில் சுற்றிக்கொண்டே தான் இருக்கின்றன. சூரியன் ஒரு ந்ட்சத்திரம். இதுபோன்று லட்சக்கணக்கான நட்சத்திரங்களும், அவற்றின் மண்டலங்களிலே அவற்றின் ஈர்ப்புச் சக்தியினால் உந்தப்பட்டு சுற்றும் கோள்களும் கோடிக்கணக்கானவை.

நாம் நமது சூரிய மண்டலத்தில் பூமி என்னும் ஒரு கோளில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். பிரமிக்கத்தக்கவாறு இந்த கிரகங்கள் சுற்றுவதை நாம் வானில் காண இயல்கிறது. சுக்ரன், செவ்வாய், புதன்,
குரு நம் கண்களுக்கே தெரியும். சனி கிரகத்தை வானியல் ஸ்டெல்லார் ஸ்கோப் வழியே பார்க்கலாம்.

புதன் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால் பார்ப்பது கடினம். இருப்பினும் அதை ஸ்டெல்லார்ஸ்கோப் வழியே பார்க்க இயலும்.

இந்த கிரகங்கள் எல்லாம் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கின்றன என்ற ஒரு நம்பிக்கை மனிதன் தோன்றிய காலம் முதல் இருந்து வருகிறது. மேடராசி முதல் மீன ராசிவரை அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடுத்த இரண்டரை வருடங்கள் ( அதுதான் சனி கன்னி ராசியில் இருக்கப்போகும் காலம்) எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

காலம் என்னவோ ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. புதியன தோன்றுவதும் பழையன மறைவதும் இயற்கையே. நல்லவையும் தீதும் சக்கரம் போல் சுழன்று கொண்டே தான் வருகின்றன.

அருணகிரி நாதர் "நாள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், எனை நாடிவந்த கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும்" என்கிறார்

மனித‌ வாழ்வில் பிச்சையெடுப்பவனும் மனம் விட்டு ஒரு நாள் சிரிக்கிறான். கோடியதிபதியும், மன உளைச்சல் தாங்காமல், மருந்துகள் சாப்பிடுகிறான்.

இவற்றிற்கெல்லாம் கிரகங்களைக் காரணமாக்கிக்கொள்வது அறிவு பூர்வமானதா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல துவங்கவில்லை. எனது கோட்பாடு, நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும் என்பதே.

இருப்பினும், சனி பிடிப்பது, இருப்பது, விடுவது எல்லாமே நமது மனத்தில் தான் இருக்கிறது.

இறைவனை இதயத்தில் நிறுத்தி, தான், தனது என்ற எண்ணங்களைத் துறந்து, உலகில் வாழும் எல்லா உயிரினங்களையும் தாமாகவே நினைத்து அன்பு பூண்டவருக்கு எந்த தீமையும் அணுகுவதில்லை.

இது திண்ணம்.

ஆக, சனிப்பெயர்ச்சி நாளன்று ஒரு உறுதி எடுப்போமா !

தீய எண்ணங்களைத் தொலைப்போம்.

அவை தொலைந்தாலே சனி விட்டவாறு தான்.

வாழ்க நலமுடன்.

1 comment:

  1. நறுக்கெண்ணு நாலு வார்த்தைசொன்னீங்க சார்......
    தமிழ்சித்தன்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி