Pages

Wednesday, April 24, 2013

அவனிடத்தே செல்வோம்.




இது நடந்து ஒரு 35 வருடமா இல்லை 40 வருடங்கள் கூட இருக்கலாம். 

நான் எனது குடும்ப மருத்துவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.  அவரது இரு பெண் குழந்தைகளுக்கும் மாலை நேரத்தில் மொழி ஒன்று கற்றுத் தரும் பணி எனக்கு.  ஒவ்வொரு நாளும் அலுவலகம் முடிந்தபின்னே தெற்கு ராஜ வீதியில் உள்ள அவர்கள் வீட்டுக்கு செல்வேன் 

அவர் தஞ்சை ராஜா மிராஸ்தார் அரசு மருத்துவகத்தின் முக்கிய அறுவை நிபுணர் . அது மட்டுமல்ல, மனித நேயமிக்க ஒரு மருத்துவர்  

நான் சென்றகாலை யாரும் அவரது அறையில் இல்லை.  ஆகவே அவருடன் ஓர் இரண்டு வார்த்தைகள் பேசலாம் என அழைத்தார் 

என்ன விசேடம் இன்று ? நெற்றியில் ஏதேதோ இருக்கிறது என்றார். 

ஆம்..டாக்டர் சார் இன்று என்னுடைய தந்தையின் திதி. அதற்கான சடங்குகள் இப்பொழுதுதான் முடிந்தன அதனால் தான் வருவதிலும் தாமதம். என்றேன் 

என்னது உங்கள் தந்தை  இறந்துவிட்டார் என்றா சொல்லுகிறீர்கள் ? என்று 
கேட்டார் 

ஆம். அதற்குத்தானே சடங்குகள் செய்தேன் என்றேன். 

உன் அப்பா இறந்து விட்டார் என்றா நினைக்கிறாய் என்றார் மறுபடியும்.

ஆம். அவர் நினைவுகள் இன்று இருக்கின்றன. ஆயினும் அவர் இவ்வுலகு விட்டு நீங்கிவிட்டார் என்றேன். 

நான் சொல்கிறேன். உன் அப்பா இறக்கவில்லை .. என்றார். 

என்ன டாக்டர் ஜோக் அடிக்கிறீர்கள். என்றேன். 

இல்லை. நீ என் கண் முன்னே இருக்கும் வரை உன் தந்தை இல்லை என்பதை என்னால் ஒரு பயலாஜிகல் ரீதியாகக் கூட ஒத்துக்கொள்ள இயலாது 

ஏன் ?

நீ எப்படி இவ்வுலக்குக்குள் வந்தாய் ?   உடல் இயல் படி பதில் கூறு.  
Tell me biologically. no sentiments please. 

எந்தையும் தாயும் கூடி .....என துவங்குவதற்குள் என் மனதில் ...தோன்றியது.

விழுந்தது லிங்கம். விரிந்தது யோனி. 
ஒழிந்த முதல் ஐந்து ஈரைந்தோடு ஏறிப் 
பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம் 
ஒழிந்த நுதல் உச்சி உள்ளம் ஒழித்ததே.     ( திரு மந்திரம். 455)

ஐயா , எனது தந்தையின் ஒரு துளி திரவம் என் அன்னையின் கருப்பையில் 
புகுந்து நான் ஆனேன்.

அந்த துளியினால் தானே நீ தோன்றினாய்.   
you agree you are from that drop of his sperm.

ஆம்.

அந்தத்துளி தன்னைத்தானே பெருக்கிகொண்டது. ஒன்று இரண்டாக இரண்டு நான்காக நான்கு எட்டாக எட்டு பதினாறாக பதினாறு முப்பத்தி இரண்டாக, 
இது போல, 
அந்தத்துளி விழுந்த ஒன்பதாம் மாதம் ஒரு கோடி க்குமேல்  செல்களுடன் நீ பிறந்தாய் என்பது தானே உண்மை.23 அம்மைக்கு சொந்தம் 23அச்சனுடயது. 

(மேலும் படிக்க இந்த தொடர்புக்குச் செல்லவும்.) ( இன்னமும் படிக்க இங்கு செல்லவும்.)

அந்தத்துளி இன்னமும் ஏதோ ஒரு உருவத்தில் உன்னிடத்தில் தொடர்ந்து  இருக்கிறதல்லவா ?

சட் என என் மண்டையில் உதித்தது. 
நான் இன்று இருக்கிறேன் .  அதே தருணத்தில் என் தந்தையும் என்னுள் 
இக்கணம் இருக்கிறார் . அது மட்டுமல்ல .தொடர்ந்து என்னுடன் பயணிக்கிறார் 

அவர் இறந்துவிட்டார். இல்லை எனச் சொல்ல வில்லை. ஆயினும் அவர் தனது உயிரின் ஒரு பகுதியை, அது எத்துனை சிறிதாக அன்று இருந்தாலும் 
இன்றும் அது உயிருடனே இருக்குமாறு செய்து இருக்கிறார்.

அவரின் ஒன்று இன்னும் உயிருடன் இருக்கிறது. 
ஆம். உன்னில் இருக்கிறது. 
உன்னில் உன் தந்தை இருக்கிறார். 
இந்த லாஜிக்கை தொடர்ந்து சொல்லிக்கொண்டு போனால், 
உன்னில், 
உன் தந்தை மட்டு மல்ல , அவர் தந்தையும் இருக்கிறார். 
ஏன் ...அவருக்குத் தந்தையும் இருக்கிறார். 

ஆக, ஏதோ ஒரு கணத்தில் இப்புவியில் தோன்றிய ஒரு மனித  உயிர்த்துளி இன்னும் உறங்காது இன்னும் இன்னொரு உயிரிலே அதுவும் தான் காரணமாய் இருக்கும் ஒரு உயிரிலே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த கணத்தில் அந்த முதல் துளி யார் என்ற கேள்விக்கு நான் செல்லவில்லை. 

What I am telling you is not fiction, nor fantasy.  It is a realistic assessment of our biological process which follows an order.

நான் வியந்தேன்  அப்படி நம்மில் யாவருமே சொல்லலாமே..என்றேன் 

ஆம். நீங்களும் சொல்லலாம். நானும் சொல்லலாம். என்னைப் பார்க்க 
வந்து இருக்கும் அனைத்து பேருமே சொல்லலாம்.  சொல்லவேண்டும். புரிந்தால் உலகம் முழுவதுமே சொல்லுவார்கள். ஒத்துக்கொள்ளவும் செய்வார்கள். 

நான் வெளியே பார்த்தேன். அறைக்கு வெளியே பத்து பேருக்கு மேல் வந்து விட்டார்கள். இனி டாக்டரின் நேரத்தை நாம் எடுத்துகொள்வது சரியல்ல 

டாக்டர், நீங்கள் சொல்வது புரிந்தது போல் தான் இருக்கிறது. 

ஓ. எஸ்.  என்றார் சிரித்துக்கொண்டே 

எதற்கும் இந்த படத்தையும் வீட்டுக்குபோய் பாருங்கள். 

பை தா வே, கலாவுக்கு நாளை அந்த மொழியில் பரீட்சை.  

அவர் கொடுத்த படம்.
என் நினைவுக்கு வந்தவாறு. 
நான் வரைந்து இருக்கிறேன்

அடித்தளத்தில் நாம்.
மேலே மேலே ஒவ்வொரு
தளத்திலும் நம் முன்னோர்.
இந்த கூம்பு குறுகிக்கொண்டே போகிறது.
ஒன்றில் முடிகிறது.
வேறு விதமாகச் சொன்னால்
ஒரு புள்ளியில் துவங்கியது இன்று உலகாக விரிந்து கிடக்கிறது.

உச்சியில் ஓங்கி ஒலிதிகழ் நாதத்தை 
நச்சியே இன்பம் கொள்வாற்கு நமன் இல்லை 
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் 
தச்சும் அவனே சமைக்க வல்லானே.          திருமந்திரம் 442

எங்கிருந்து வந்தோம் !! ?
எங்கே இருக்கிறோம் ?
எங்கே செல்லப்போகிறோம். !!??

அவனிடம் இருந்து வந்தோம் . அவனிடத்தே செல்வோம்.
"Surely we belong to Him  and to Him shall we return'." 
என்ன ஒரு நுட்பமான கருத்து.!!
இதுவும் அவன் விதித்த விதி.


*********************************************************************************
இதெல்லாம் இருக்கட்டும்  

இந்தப்பதிவை  எழுத எனைத் தூண்டியது 
திருமதி சுடர் விழி எழுதியிருக்கும் கட்டுரை .விழியின் ஓவியம். 
வலைச்சரம் வழியே அவரது பதிவுக்கு முதல் தடவையாக செல்கிறேன் .
இறந்த பின் மனித உயிர் எங்கே செல்கிறது ? அவருக்கு எனது நன்றி 

மனித மனத்தில் ஏற்படும் உண்மையான கேள்வி இது. அவரும் விடை தேடுகிறேன் என்கிறார். அவர் மட்டும் இல்லை. 
எல்லோருமே தேடுகிறோம். 
அதே சமயம் 
மனித உயிர் இறக்கவே இல்லையே என்கிறார் ராபர்ட் லாசா என்னும் 
சயன்டிஸ்ட் அட்வான்ஸ்ட் செல் டெக்னாலஜி நிபுணர். 
அவரது கட்டுரை இங்கே 

எச்சரிக்கை. 
முதலில் சொல்வது. 
அவரது கட்டுரை ஆன்மீக வழியில் அல்ல.  
அறிவியல் வழிப்பட்டது. 

அடுத்த சொல். 
இதுதான் வழி என நான் சொல்லவில்லை. 
இதுவும் ஒரு வழியாக இருக்கலாம் என்று பட்டது. 

உறங்காது தேடுங்கள். 
உய்ய ஒரு வழி பிறக்கும்.