Pages

Saturday, October 13, 2007

ஏதாவது ஒரு அடைக்கலம்

மனிதராய்ப்பிறந்த எல்லோருக்குமே ஏதோ ஒரு தருணத்தில் ஏதாவது ஓர் பயம் ஏற்படுகிறது. அந்த பயத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டி எதையாவது மனிதன் நாடுகிறான். சிறிது நாள் சென்ற பின்னே மற்றோர் பயம் பற்றுகிறது. முன்னைய அடைக்கலம் இப்போதைய பயத்தினை அகற்றுவதில்லை. புதியதென ஒரு அடைக்கலத்தைத் தேடி நிற்கிறான்.

இவ்வாறாக வாழ் நாள் முழுதுமே ஏதாவதொரு பயம், ஏதாவது ஒரு அடைக்கலம் என்ற சக்கரத்தில் சுழன்று கொண்டே இருக்கிறான். இவனுடைய பயங்களுக்கு என்றுதான் நிரந்தர தீர்வு வருமோ ?

இது என்னுடையது என்ற மன உணர்வு உள்ளவரை, பயம் நீங்காது. இந்த பொருள் நமதல்ல, இந்த உறவு நிலைத்ததல்ல, இந்த தேகம் நிரந்தரமல்ல என்ற உணர்வு ஓங்கி நிலைகொள்ளூம்போதுதான், மனிதன் கவலை ஒழிந்து, பயம் நீங்கி, உண்மையான மெய்யறிவினைப் பெறுகிறான்.

மாணிக்கவாசகர் சொல்லுவார்:

" அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே....."
உடல், பொருள், ஆவி எல்லாமே அந்த ஈசனிடம் அர்ப்பணித்தோருக்கு வேறேதும் அடைக்கலம்தான் தேவையோ ?