Pages

Tuesday, December 29, 2009

இறைவா ! ஆர் யூ ஹியரிங் !!


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் = எங்கள்
இறைவா ! இறைவா !! இறைவா !!

என உற்சாகக்குரல் கொடுப்பார் பாரதி.

மேலும் பாடுவார்:

சித்தினை அசித்துடன் இணைத்தாய் = அங்கு
சேரும் ஐம் பூதத்து வியனுலகு சமைத்தாய்.
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பல பல நல் லழகுகள் சமைத்தாய்.

ஆகா ! உலகே வண்ணக்களஞ்சியமாய்ப் பரிணமிக்கிறதே 1 எனக் குதூகலிப்பார் பாரதி.

பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா = நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையா... நந்தலாலா..

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா = நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா ...

என உலகை ஒரு வண்ணப்பூங்காவிலே இசையின் சிகரமாகக் காண்பான் பாரதி.

பாரதி தன் வாழ் நாளில் படாத துன்பம் இல்லை. இருப்பினும் துன்பத்தை துன்பமாக நினையாது தன் வாழ்க்கைக்கு அதில் இன்பம் சுரக்கும் ஊற்றுக்களைத் தேடித் தன் மனம் நிறைவு கண்டான்.

வள்ளுவர் தெளிவாகச் சொல்வார்:

இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்,
துன்பம் உறுதல் இலன்.

இன்பமும் துன்பமும் இயல்பே எனும் மன நிலை கொண்டவன் துன்பமடைய மாட்டான் எனும் கருத்தை வள்ளுவர் சுட்டிக்காட்டுவதை கவனிக்க.

இன்பமும் துன்பமும் நமது நோக்கைப் பொறுத்ததே. மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் பகலிரவு போன்றல்லவா உள்ளது.

இரவு வரும். இருப்பினும் இரவு போய் பகலவன் உதிக்கத்தான் செய்வான்.

நிற்க.

பல்வேறு இன்ப துன்பங்களுக்கிடையே வருடா வருடம் வருவது தவறாது வருவது புத்தாண்டு தினம். அது இன்று.

உலகெங்கும் மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி, பரிசுகளை அனுப்பி,
மன மகிழ்வர்.

அன்றாட வாழ்க்கையில் தாம் படும் அல்லல்களுக்கிடையேயும் ஒரு நாள், ஒரு கண நேரம் மாந்தரெல்லாம் மகிழ்ச்சி அலைகளில் நீந்துவது மன நிறைவைத் தருகின்றது.

எல்லா இனத்தவர்க்கும், எல்லா மதத்தோருக்கும், எல்லா நாட்டினர்க்கும் பொதுவான ஒரு சொல்
உண்டு என்றால் அது ஹாப்பி ந்யூ இயர்.

இயர் என்றால் வருடம். ஹியர் என்றால் கேள்.

இந்த இயர் எப்போதுமே ஹாப்பி ஆகவே இருக்க, இறைவா ! நாங்கள் உன்னை வேண்டுகிறோம்.


எல்லோரும் புத்தாண்டு தினத்தில் ஒரு உறுதி எடுத்துக்கொள்வார்கள்.
சிலர் இன்ன இன்ன வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள்.

உலகம் அனைத்துமே வளமுற்று, சிறப்புற்று செழிக்கவேண்டும் உலகத்தார் யாவருமே அன்பு மழையில் திளைக்கவேண்டும் என வேண்டுபவரில் மேடம் கவி நயா அவர்களும் இருக்கிறார்கள்.

அவரது சூப்பர் பாடல் ஒன்று இங்கே !!!

அவர்கள் வலையில் இட்டதை, என்னால் இயன்றவரை ஹம்ஸ்த்வனி ராகத்தில் பாட முயன்றிருக்கிறேன்.

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்.இறைவா ! ஆர் யூ ஹியரிங் !! ???
Monday, December 14, 2009

எங்க ஊர்லே இத ஜூ அப்படின்னு சொல்லுவாங்க !எங்க ஊர்லே இத ஜூ அப்படின்னு சொல்லுவாங்க ! உங்க ஊர்லே டெம்பிள் அப்படின்னு சொல்றீங்க ..இல்லயா ?

நான் அசந்து போனேன். எனது ஆறு வயது பேரனின் கேள்விகளுக்கு சரியான பதில் தெரியவில்லை.
தனது கின்டர் கார்டன் ஸ்கூலிங்கை அமெரிக்காவில் செய்த என் பேரன், இப்பொழுது தமிழகத்தின் சிங்காரச்
சென்னையில் ஒரு துவக்கப்பள்ளியில் படிக்கிறான்.

நமது கடவுள் சிலைகளை எல்லாம் பார்க்கும்பொழுது அவன் கேட்கும் கேள்விகள் ஏராளம். எனது பூஜை அறையில் இருக்கும் சாமிகளைப் பார்த்து அவனது முகத்தில் ஏகப்பட்ட வினாக்கள் !

ஏன் இத்தனை கைகள் ! இத்தனை ஆயுதங்கள் ஏன் அவர்களிடம் ?
ஒவ்வொரு கைக்கும் என்ன பணி அப்படின்னு சொல்லிமுடிப்பதற்குள் எனக்கு மூச்சு முட்டிவிடுகிறது.
அறுபத்தி எட்டு வரை எனக்கு வராத ஐயங்கள் இந்த ஆறு வயது சிறுவனுக்கு வருகிறது.

எல்லா சாமியும் நம்ம மாதிரி மூஞ்சி இருக்கும்பொழுது, ஏன் பிள்ளையாருக்கு மட்டும் யானை மூஞ்சி ?
திடிரென வந்ததா ? புறக்கும்பொழுதே அப்படித்தான் இருந்ததா ?

இதெல்லாம் போதாதென்று, ஒரு போடு போட்டான் பாருங்கள். நான் அசந்து போய்விட்டேன்.

தாத்தா ! இந்தியாவிலே டெம்பிள்லே யானை, சிங்கம், குரங்கு, சேவல், காளை மாடு, பசு மாடு, கிளி, மயில், எலி, காக்கா எல்லாம் இருக்கு. அமெரிக்காவிலே இதெல்லாம் இருக்கற இடத்த நாங்க ஜூ அப்படின்னு சொல்லுவோம்.

நம்ம டெம்பிள்லே இதெல்லாம் இருக்கா ? என்னடா சொல்றே அப்படின்னு கேட்டேன்.

"இங்க வந்து பாரு. ஒரு யானை பிள்ளையாரா இருக்கு. இங்க ஒரு குரங்கு.. கேட்டா அனுமார் அப்படிங்கற் நீ.. ஒரு சிங்க மூஞ்சியோட இந்த நரசிம்மர் இருக்காரு.
ஒரு பாம்பு சிவன் கழுத்துலே இருக்கு. ஒரு காளை மாடு வேற அவர் வாசல்லே இருக்கு. இங்க பாரு ஒரு சிங்கத்து மேல இந்த துர்கை சாமி இருக்கு. ஒரு சேவலும், மயிலும் முருகன் கோவில்லே இருக்கு. ஒரு கருடன் கூட இங்க இருக்கு. விஸ்னு பாம்பு மேலே படுத்துக்கிட்டு இருக்கார். அடடே ! ஒரு காக்கா மேல இந்த சனி சாமி இருக்கு. இங்க பாரு. பைரவர் சாமி நாய் மேலே உட்கார்ந்துகினு இருக்குதே ! மூஞ்சூர் மேல
பிள்ளையார் இருக்கார்... புலி மேல அய்யப்பன் வர்றாரு... "

"மிருகங்கள், பறவைகள் எல்லாமே ஜூவிலே தானெ இருக்கணும் !

இத்தன இருக்கற இடம் ஜூ தானே !! நீயே சொல்லு தாத்தா..." என்றான்.

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

இந்த வாகனங்களுக்குப் பின்னால் இருக்கும் தத்துவங்களை விளக்கினால், அச்சிறுவன் புரிந்து கொள்வானா என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.

எளியதாக யாரேனும் விளக்க இயலுமா ?

ஒன்று மட்டும் தோன்றியது. மனுசங்க நாம மனுசங்களா இல்லாம போடற
சண்டையெல்லாம் கவனிச்சா உலகமே ஒரு ஜூ என்று தான் நினைத்தேன்.

இந்த ஜூவை பொறுமையுடன் மேய்க்கறானே அவனைத் தான் ஆண்டவன் எனவும் சொல்கிறோமோ ?

Thursday, November 26, 2009

தேடுகிறோம்...தேடுகிறோம் !!தேடுகிறோம்...தேடுகிறோம் !! தேடிக்கொண்டே இருக்கிறோம்.

பிறந்தது முதல் இன்று வரை ஏதாவது ஒன்று நமக்கு எட்டாமல் இருக்கிறது. அதை ஈட்டித்தான் ஆகவேண்டும் என்ற‌
மன உந்துதலால் அதை தேடிக்கொண்டே இருக்கிறோம்.

குழந்தைப்பருவத்தில் விளையாட்டுப்பொருள்கள்.. விடலைப்பருவத்தில் மயக்கும் பொருட்கள்.
நடுவயதில் பணம், பணம், பணம், பணம் தரும் இன்பப்பொருட்கள், சுகம் தரும் சாதனங்கள்.
செல்வம் அத்தனையும் கிடைத்தபோதும், பதவி, புகழுக்காக ஆசைப்பட்டு, அவற்றினை எப்படியாவது
அடைந்துதான் தீரவேண்டும் என அறமில்லாப்பாதைகளில் செல்வோரும் நம்மிடத்தில் உளர்.

மக்கட்செல்வம், பொருட்செல்வம், அறிவு, ஆராய்ந்த கல்வி
இத்தனையும் அவ்வப்பொழுது கிடைத்தும், கிடைக்காத ஒன்றுக்கு மனம் ஏங்கிக்கொண்டே
இருக்கிறது. முதிர்வடைந்த காலத்தே, எல்லாம் திகட்டிப்போன பொழுதோ, நிம்மதிக்காக,
மன நிம்மதிக்காக ஏங்குகிறோம்.

கிடைத்த பொருட்களைக் கண்டு திருப்தி அடையாது, இல்லாத பொருளிடத்து நாட்டம் கொண்டு,
இருக்கும் பொருட்களையும் அனுபவிக்காது, வாழ்க்கையை வீணடிக்கும் மாந்தரோ ஏராளம். ஏராளம்.

எதைத் தேடுகிறோமோஈ அது நம்மிடமே இருக்கிறது என்ற ஞானம் தோன்றிய நிலையில் தெளிவு
பிறக்கையிலே, வாழ்க்கையின் கடைசிப்படிகளில் இருக்கிறோம்.

பாரதி பாடுவான்:
" எல்லா மாகிக்கலந்து நிறைந்த பின்
ஏழைமை யுண்டோடா ? மனமே !
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த பின்
புத்தி மயக்கமுண்டோ ? "

தன்னை வென்றவர் தெளிவு பெற்றவர் பெறுவது யாது ? அதையும் பாரதியே கூறுவான்:

" என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ ‍‍
தன்னைவென் றாலவை யாவும் பெறுவது
சத்தியமாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்று முணர்ந்தபின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்குத்
தாழ்வுற்று நிற்போமோ ? "

பதிவாளர் சகோதரி கவி நயா அவர்கள் அற்புதமாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார்கள். அதையும் காண்போம்.

Sunday, October 04, 2009

மனம் வேண்டும்

ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலா என்று சர வெடிகளும், பூ வானங்களும் சங்கு சக்கரங்களும், வானத்தில் பூ மழை பொழிந்து பின் வெடிக்கும் மத்தாப்புகளும் லட்சக்கணக்கிலே விற்கத்துவங்கி விட்டன.

ஆம். இந்த வருடம் தீபாவளி வந்து விட்டது. புத்தம் புதிய ஆடைகள், புதிய ஆபரணங்கள், புதிய வீட்டு சாதனங்கள், இனிப்பு வகைகள் ஏராளம் . எங்கு பார்த்தாலும் ஜன நெரிசல்.மக்கள் ஆயிரக்கணக்கில் ரூபாய்கள் செலவழித்து வெடிகள் வாங்குகிறார்கள். எங்கள் வீட்டு வளாகத்தில் 200 க்கும் அதிகமான ஃப்ளாட்டுகள். ஒவ்வொன்றிலும் 5000 முதல் 25000 வரை வெடிகள் தீபாவளிக்கென வாங்கி அந்த நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

மக்கள் மகிழ்ச்சியாக எந்த பண்டிகை தினத்தை கொண்டாடினாலும் அது எல்லோருக்கும் மகிழ்வையே தரும்.
ஐயமில்லை.

இருப்பினும், ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது.

ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய்கள், ஏன் ! சில வீடுகளில் 50000 ரூபாய்க்கும் மேலாக பட்டாசுகள் வாங்கி ஒரு சில மணி நேரத்தில் கரியாக்குகிறார்கள்.

கண் முன்னே இப்பட்டாசுகள் கரியாகும் நேரத்தில், பற்பல அனாதை சிறுவர்கள் காப்பகங்களில்,அனாதை முதியோர் இல்லங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் போதிய உணவு, இருக்கை, உடை இல்லாது இருக்கின்றனர்.
அவர்களது நலம் கருதி பணிபுரியும் என்.ஜி.ஓ. நிறுவனங்கள் பொது மக்களின் நன்கொடைகளை எதிர்பார்த்தே இயங்குகின்றன.

தீபாவளி நல் நாளில் இந்த ஏழைச் சிறுவர்களுக்காக, அனாதையான முதியோர் நலனுக்காக, நாம் பட்டாசுக்காக செலவழிக்கும் பணத்தில் ஒரு பத்து விழுக்காடு ஆவது தந்து உதவக்கூடாதா ?

ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்குபவர் ஒரு நூறு ரூபாய் இது போன்ற நிறுவனங்களுக்கு நன்கொடையாகத்தந்து உதவிடவேண்டும். பத்தாயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்குபவர் ஒரு ஆயிரம் இந்த ஏழை மக்கள் நல்வாழ்வுக்காக‌ ஈதால், குறைந்தா போய்விடுவர் ?

மனம் வேண்டும். அவ்வளவு தான்.

கொடுக்கவேண்டும் என்று ஒரு மன நிலை வந்து விட்டால், கொடுப்பதற்கு நம்மிடம் நிறையவே இருக்கிறது
எனத் தெரிய வரும்.

நீங்கள் கொடுக்கும் நன்கொடைக்கு வருமான விதிவிலக்கு 80 ஜி படி தர, ஒரு சான்றிதழும் இந்த நிறுவனங்கள்
தருகின்றன.

இந்த நிறுவனத்திற்குத்தான் தர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏராளமான என்.ஜி.ஓ. நிறுவனங்கள்
செயல்படுகின்றன. உதவும் கரங்கள், சேவாலயா ( திருனின்றவூர்) , ஹெல்பேஜ், போன்ற பல தொண்டு அமைப்புகள்
இருக்கின்றன. மன நோயால், காச நோயால், ஹெச். ஐ.வி. நோயால் வாடும் மக்களுக்காக பணி புரியும் தொண்டு நிறுவனங்கள் பல இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுங்கள்.

உதவி செய்யுங்கள். நீங்கள் நீட்டும் உதவிக்கரம் ஒரு ஏழைச் சிறுவனின் கண்களில் அந்த தீபாவளி தினத்தன்று
மகிழ்ச்சியைத் தரும் எனின், நீங்கள் செய்யும் புண்ணிய காரியத்தில் எல்லாவற்றிலும் சாலச்சிறந்தது அதுவே.

உதவி செய்யுங்கள். மன நிறைவு தருவது அது ஒன்றே. மகிழ்ச்சி தருவது அது ஒன்றே.

Friday, October 02, 2009

காந்தியைக் காணோமே !!


காந்தியைக் காணோமே !!
2 october
இன்று நமது தேச பிதா மஹாத்மா காந்தியின் பிறந்த நாள்.

பல்வேறு பத்திரிகைகளில், தொலை காட்சிகளில், காந்தியின் வாழ்க்கை குறிப்புகள்,
அவரது கொள்கைகள், பல்வேறு பொருட்களில் அவரது நிலைப்பாடுகள் எல்லாவற்றினையும்
பற்றி எழுதியிருக்கிறார்கள், ஒலி, ஒளி பரப்புகிறார்கள்.

காந்திஜியை நினைவு கூர்வதற்கு இந்த ஒரு நாள் அவசியம் தேவைப்படத்தான் செய்கிறது.

நம் நினைவிலே மட்டுமே அவரது கொள்கைகளும், சத்திய சோதனைகளும், அஹிம்சா தர்மமும்
இன்று இருக்கின்றன.

நமது நாடு இந்திய தேசத்திலே இன்று ஜனத்தொகை 110 கோடிக்கும் மேலே இருக்கும் .
இத்தனை ஜனப்பெருக்கத்தின் நடுவிலே எங்கேயாவது ஒரு காந்தி தென்படுவாரா என்று
யோசித்துப் பார்த்தேன். தேடிப்பார்த்தேன்.

காந்தி போன்ற ஒரு அற நெறியாளர், வாய்மை எனும் சொல்லுக்கு உதாரணமாக விளங்கியவர்,
மனித நேயத்தின் பரிணாமமாக விளங்கிய அந்த மஹாத்மா போல் இன்னொருவர் எங்கேயாகிலும்
எத்துறையாயிலும், எத்திசையாயிலும் இருப்பாரோ எனத் தேடிப்பார்த்தேன்.

இல்லையே !

உங்கள் கண்களுக்குப் பட்டிருந்தால் சொல்லுங்களேன்.

Saturday, September 26, 2009

இன்றைக்கு சனிப்பெயர்ச்சி !!!இன்றைக்கு சனிப்பெயர்ச்சி. ஆம். தமிழ்கம் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் நம்புபவர்கள்
நன்மைக்காக, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலோ, அல்லது, எச்சரிக்கும் விதத்திலோ பல்வேறு பலன்கள் பல வலைப்பதிவுகளில், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் ,சனிப்பெயர்ச்சியின் பலன்கள், மேட ராசி முதல் மீன ராசி முடிய பிறந்தவர்களுக்காக‌ தரப்பட்டுள்ளது.

சூரிய மணடலத்தில் இருக்கும் கோள்கள் புதன், சுக்ரன், செவ்வாய், பூமி, குரு, சனி இவையெல்லாமே தாம் பாதையில் சுற்றிக்கொண்டே தான் இருக்கின்றன. சூரியன் ஒரு ந்ட்சத்திரம். இதுபோன்று லட்சக்கணக்கான நட்சத்திரங்களும், அவற்றின் மண்டலங்களிலே அவற்றின் ஈர்ப்புச் சக்தியினால் உந்தப்பட்டு சுற்றும் கோள்களும் கோடிக்கணக்கானவை.

நாம் நமது சூரிய மண்டலத்தில் பூமி என்னும் ஒரு கோளில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். பிரமிக்கத்தக்கவாறு இந்த கிரகங்கள் சுற்றுவதை நாம் வானில் காண இயல்கிறது. சுக்ரன், செவ்வாய், புதன்,
குரு நம் கண்களுக்கே தெரியும். சனி கிரகத்தை வானியல் ஸ்டெல்லார் ஸ்கோப் வழியே பார்க்கலாம்.

புதன் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால் பார்ப்பது கடினம். இருப்பினும் அதை ஸ்டெல்லார்ஸ்கோப் வழியே பார்க்க இயலும்.

இந்த கிரகங்கள் எல்லாம் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கின்றன என்ற ஒரு நம்பிக்கை மனிதன் தோன்றிய காலம் முதல் இருந்து வருகிறது. மேடராசி முதல் மீன ராசிவரை அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடுத்த இரண்டரை வருடங்கள் ( அதுதான் சனி கன்னி ராசியில் இருக்கப்போகும் காலம்) எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

காலம் என்னவோ ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. புதியன தோன்றுவதும் பழையன மறைவதும் இயற்கையே. நல்லவையும் தீதும் சக்கரம் போல் சுழன்று கொண்டே தான் வருகின்றன.

அருணகிரி நாதர் "நாள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், எனை நாடிவந்த கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும்" என்கிறார்

மனித‌ வாழ்வில் பிச்சையெடுப்பவனும் மனம் விட்டு ஒரு நாள் சிரிக்கிறான். கோடியதிபதியும், மன உளைச்சல் தாங்காமல், மருந்துகள் சாப்பிடுகிறான்.

இவற்றிற்கெல்லாம் கிரகங்களைக் காரணமாக்கிக்கொள்வது அறிவு பூர்வமானதா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல துவங்கவில்லை. எனது கோட்பாடு, நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும் என்பதே.

இருப்பினும், சனி பிடிப்பது, இருப்பது, விடுவது எல்லாமே நமது மனத்தில் தான் இருக்கிறது.

இறைவனை இதயத்தில் நிறுத்தி, தான், தனது என்ற எண்ணங்களைத் துறந்து, உலகில் வாழும் எல்லா உயிரினங்களையும் தாமாகவே நினைத்து அன்பு பூண்டவருக்கு எந்த தீமையும் அணுகுவதில்லை.

இது திண்ணம்.

ஆக, சனிப்பெயர்ச்சி நாளன்று ஒரு உறுதி எடுப்போமா !

தீய எண்ணங்களைத் தொலைப்போம்.

அவை தொலைந்தாலே சனி விட்டவாறு தான்.

வாழ்க நலமுடன்.

Friday, September 11, 2009

இங்கே யார் சொல்வார்கள் ?
courtesy: images.google.co.in


யார் சொல்வார்கள் ?

இவ்வாண்டு அமெரிக்க நாட்டில் பல ஆண்டுகளுக்குப்பின் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அமெரிக்க பள்ளிகள் எல்லாம்
துவங்கும் நாளான 9 செப்டம்பர் 2009 அன்று தாமே பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே நேரடியே
விடியோ மூலமாக பேசுவது என முடிவெடுத்தார் பிரசிடென்ட் ஓபாமா அவர்கள்.

இவர் மாணவர்களுக்கு என்ன பேசப்போகிறார் எனத் தெரிந்து கொள்வதற்கு முன்னமேயே அதற்கு பல்வேறு விதமான‌ எதிர்ப்புகள், எதிர்கட்சியிடமிருந்து, சில பல கல்வி நிறுவனங்கள் உரிமையாளர்களிடமிருந்து, அம்பு போல் வீறிப்பாய்ந்தன.

ஒரு சில மானிலங்கள் அவரது நேரடிப் பேச்சினை ஒலிபரப்ப, அல்லது ஓளிபரப்ப இயலாது எனவும் தெரிவித்தன.

அவர் பேசினார்.

நாடெங்கிலும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கோ, அல்லது அவர்களின் ஆசிரியர்களுக்கோ தெரியாதது இல்லை. மாணவர்களின் கடமைகள் என்ன என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது சொல்லவும் செய்கிறார்கள்.

இருப்பினும், ஒரு நாட்டின் முதற்குடிமகன் நேரடியாக மாணவ சமுதாயத்தை நோக்கி, மாணவர்களே ! உங்கள் கடமை என்ன ? பொறுப்பு என்ன ? எனத் தெளிவாகப் பேசும்பொழுது கேட்கும் இளம் இதயங்கள் பூரிப்படைகின்றன. தங்கள் எதிர்காலம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலம் எல்லாமே அவர்கள் படிப்பின் பெருமையை உணர்ந்து தமது பொன்னான‌ காலத்தை வீணாக்காது படிப்பினையே இலக்காகக் கொண்டு நடப்பதே, அவர்களது கடமை என உணர்த்துகிறார் பிரசிடென்ட் ஓபாமா.

அவரது ஆங்கில பேச்சின் தொகுப்பினை இங்கே காணலாம்.
Please click below:ப்ரசிடென்ட் ஓபாமா சொல்வது போல,

நாடெங்கிலும் கல்விக்கூடங்க்ள் பிரும்மாண்டமாக அமைக்கலாம். அவற்றில் பணிபுரியும் பேராசிரியர்கள் தத்தம் கடமைகளை பொறுப்பினை நன்கு உணர்ந்து செயல்படலாம். மாணவர்களின் பெற்றோர்களும் தத்தம் சேய்களின் எதிர்காலத்திற்கு பொறுப்பேற்று ஆசிரியர் பெருமக்கள் பணிக்கு உறு துணையாய் நிற்கலாம்.

இத்தனை இருப்பினும் படிக்கும் மாணவனின் எண்ணங்கள் படிப்பினில் இருக்கவேண்டும். எத்துறை ஆயினும் அவனது தேர்ச்சி முழுமையாக இருக்கவேண்டும்.

அறிவு, திறன், ஈடுபாடு மூன்றிலுமே மாணவர்கள் கண்ணையும் கருத்தையும் வைத்திடல் வேண்டும்.

கல்வி கற்போர் வழியெங்கிலும் தடைக்கற்கள் பல.அவற்றினை மனம் தளராது கடந்து இலக்கு ஒன்றை மட்டிலுமே சிந்தையில் வைத்து முன்னேறுவது மாணவர் கடமை.

அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா அமெரிக்க மாணவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் அவர் பேச்சு ஒரு அறை கூவலாக அமைந்திருக்கிறது.
PLEASE CUT AND PASTE THE URL THAT FOLLOWS TO LISTEN TO PRESIDENT OBAMA.
http://www.youtube.com/watch?v=3iqsxCWjCvI&feature=popular


கல்விக் கூடங்களில் பல்வேறு கட்டங்களில் படிக்கும் மாணவர்கள் இன்று திசை திரும்பிப்போய், பின் பல காலத்திற்குப்பின்னே நொந்து நூலாகிப்போவது இன்றைய இந்திய சூழ்னிலை.
அரசியலுக்கும் சினிமாவுக்கும் அடிமையாகி, தம் பெற்றோரையும் நோகவைக்கும் மாணவர்கள் கணிசமான விழுக்காட்டிலே இன்று இருப்பது வெள்ளிடைமலை.

திடீர் புகழுக்கும் பணத்துக்கும் பேராசைப்படும் இன்றைய சமூக சூழ்னிலையில் மாணவர்களை சரியான நேர் கோட்டில் நடத்திடும் பொறுப்பு யாரைச்சேர்ந்தது ? ஆட்சியாளர்களையா ? ஆன்மீகவாதிகளையா ? கல்வி போதிக்கும் ஆசிரியர்களையா?
பெற்றோர்களையா ?

இவர்களெல்லாம் உண்டு. ஆனால், இந்தப்பொறுப்பு முழுக்க முழுக்க, மாணவர்களுக்கே உள்ளது. ஒவ்வொரு மாணவனும் இதை உணரும்போது, அவனும் உயர்வான், அவன் சார்ந்த குடியும் உயரும், நாடும் உயரும்.

நீர் உயர, வரப்புயரும். வரப்புயர நெல் உயரும் என்பதுண்டு.

இவர்களுக்கு இன்னதான் இன்றைக்கு நீ செய்யவேண்டும் என்பதை இங்கே யார் சொல்வார்கள் ?

Saturday, August 15, 2009

பட்டம்மாள் பாடிய ஜன கண மன ...சுதந்திரத் திரு நாளாம் ஆகஸ்ட் திங்கள் 15.

சென்ற வருடம் இதே நன்னாளில் பாடிய அதே குரலை இன்னொரு தரம் கேட்போமா ?

T.K. பட்டம்மாள் பாடிய ஜன கண மன ...
பாட்டுக்கொரு புலவன் பாரதி. அந்த சுப்பிரமணிய பாரதி
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என
ஆடுவோமே பாடுவோமே என ஆனந்தக்கூத்தாடினான்.

பாரதி எழுதிய அற்புதமான் கவிதை " தாயின் மணிக்கொடி பாரீர்."
அக்கவிதையைத் தன் வெண்கலக்குரலால்
பாட்டம்மாளாம் பட்ட்ம்மாள் பாடுவதைக் கேட்போம்.

vanthe matharam..vandhe matharam ... Ragha malikai.


Vande Matharam

Monday, July 27, 2009

ஆறடி உயரத்திலே அதி யற்புத வடிவத்திலேதமிழகம் எங்கிலுமே , வீதிக்கு வீதி, முக்குக்கு முக்கு, மூலைக்கு மூலை, சந்திக்கு சந்தி ஒரு ஆலமரம் இருக்கும் இல்லையேல் ஒரு அரசமரம் இருக்கும். அதனடியில் அமர்ந்து அருளும் ஆசியும் தரும் வினாயகப்பெருமான் முன் நின்று ஒரு கணம் அவன் உருவத்தினை நெஞ்சினிலே இருத்தி அவனைத் தொழுவார்க்குத் தீவினை எதுவுமே அண்டிடாது.

இது ஆன்றோர், சான்றோர் உரைத்த நல்வாக்கு.

திருமூலர் கூறுவார்:

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.

சேக்கிழாரோ தமது புராணத்தில்:

வானுலகும் மண்ணுலகும் வாழ்மறை வாழப்
பான்மைதரு செய்ய்தமிழ் பார்மிசை விழங்க‌
ஞானமத ஐந்து கர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுகனைப் பரவி அஞ்சல் செய்கிற்பாம்.

பெருந்தேவனார் எனும் புலவர் சொல்வார்:

புண்ணியம் கோடி வரும் பொய்வாழ்க்கை ஓடிவிடும்
எண்ணியது கைகூடும் ஏற்றதுணை நண்ணிடவே
வாழ்வில் வளர் ஒளியாம் வள்ளல் வி நாயகனை
நாளெல்லாம் வாழ்த்திடுவோம் நன்று.

அந்தத் தும்பிக்கணபதியை நினைத்து வணங்குபவர் நீங்காத செல்வம் அடைந்து
இம்மையிலும் மறுமையிலும் புகழ் பெறுவர்.

" திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்" என்கின்றது விருத்தாசல புராணம்.

என்ன அழகிய எளிய தமிழ்ச் சொற்கள் !

சங்கத்தமிழ் மூன்றும் தா ! எனக்கோரிக்கை வைத்த அவ்வையும்
ஆரம்பிப்பது வி நாயக துதியுடனே.


அக்கணபதிக்கு எதைப் படைப்பது ?
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்.
என்ற பிராட்டி சொல்வார்.
எதைக் கொண்டு அவரை அர்ச்சிப்பது:
கையில் எது இருக்கிறதோ அது போதும்.

இருப்பினும் ஒரு அழகிய தமிழ்ப் பாடல் ஒன்று இருக்கிறது. அது இங்கே:

மேற்கு மாசிப்பச்சை நதுங்கை யாந்தகரை
வில்வமுடன் ஊமத்தை நொச்சி நாயுருவி
யேதமில் கத்தரி வன்னி அலரி காட்டாத்தி
யெருக்கு மருதுடன் மால்பேரி யம்புகாந்தி
மாதுளையே உய்ர் தேவதாரும் அரு நெல்லி
மன்னு சிறு சண்பகமே கெந்தளி பாதிரியே
ஓதரி யவ நுகு இவையோர் இருபத்தொன்று
முயர்வி நாயக சதுர்த்திக் குரைத்த திருபத்திரமே.

இத்தனையும் திரட்டி எடுத்துக்கொண்டு வாழ்வில் எஞ்சிய சில நாட்களில் என்றாவது ஒரு நாள் அந்த பிள்ளையார் பட்டி பிள்ளையாரைப் பார்த்து வழிபட்டு வரலாமென் நினைத்த வேளையில் எனது பேத்தி, அவள்தான், தாத்தா என என்னை அன்புடன் அழைக்கும் கவிதாயினி கவி நயா அவர்கள்
பிள்ளையார்பட்டி பிள்ளையாரைப்போற்றி எழுதிய பாடல் கிடைக்க்ப்பெற்றேன்.

என்னால் அடாணா ராகத்தில் பாடப்படுகிறது.
கற்பக கணபதியே
பிள்ளையார் பட்டியில் உறைநிதியே!
சொற்பதம் கடந்தவனே
உந்தன் பொற்பதம் பணியவந்தோம்!

ஆறடி உயரத்திலே
அதி யற்புத வடிவத்திலே
கோதறு குணத்தினிலே
வளர் பார்புகழ் கணபதியே!

கல்லினால் ஆனவனே
கருணையில் கரும்பென இனிப்பவனே!
புல்லினால் பூஜித்தாலும்
அகம் மிகமகிழ்ந் தருள்பவனே!

உமையவள் திருமகனே
எம்மை இமையென காப்பவனே!
குறைகளை தீர்ப்பவனே
எங்கள் சுமைகளை ஏற்பவனே!

வலம்புரி நாயகனே
பழம்பெற இறைவலம் வந்தவனே!
மறைகளின் அதிபதியே
எங்கள் மனம்அமர் குணநிதியே!


--கவிநயா

கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம்.கவி நயா அவர்கள் வலைப்பதிவுக்குச் செல்லவும்.
அவர்களுடன் சேர்ந்து அந்த
ஆறுமுகத்தோன் அண்ணனை
துதித்து எல்லா நலமும் பெறவும்.

Saturday, July 25, 2009

"அய்யா ! தெரியாதைய்யா ! சொல்லிட்டேன் !!


அய்யா ! தெரியாதைய்யா ! சொல்லிட்டேன் !!

என்று ஒரு தமிழ்ப் படத்தில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு நகைச் சுவை கலைஞர்
அடிக்கடி சொல்வது நினைவுக்கு வருகிறது.
நினைவு கூற வைத்த நிகழ்வு அண்மையில் நடந்தது அமெரிக்க மண்ணில்.
ஆம்.
இந்த நிகழ்வு நமது நாட்டில் நடந்தது அல்ல. அமெரிக்காவில் நடந்துள்ள நிகழ்ச்சி.

அது நடந்த உடனேயே அதுபற்றிய தனது கருத்துக்களை, முழுமையான தகவல்கள்
இல்லாத நேரத்திலேயே, பொறுப்பில் உள்ள ஒருவர் தமது கருத்துக்களைச்சொன்னதினால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றிய‌ செய்தி இது.

http://www.cnn.com/2009/US/07/24/officer.gates.arrest/index.html?eref=rss_topstories


ஆங்கிலத்தில் உள்ள இச்செய்தி சி.என்.என். எனும் செய்தித்தாளில் உள்ளது. அதை முதற்கண் படிக்கவேண்டும். பின் மேற்கொண்டு படிக்கவும்.

இந்த நிகழ்ச்சியை விவரிப்பதோ அல்லது விவாதிப்பதோ இப்பதிவின் மையக்கருத்து அல்ல.

இருப்பினும், இந்த நிகழ்ச்சியையும், இந்த நிகழ்ச்சிக்குப் பின் நடக்கும் விவாதங்களையும் நோக்குகையில், ஒன்று தெளிவாகக் காணப்படுகிறது. இச்செய்தியே ஒரு பாடம் கற்பிப்பதாகத் தோன்றுகிறது.


முதற்கண், எந்த ஒரு பொருளைப்பற்றியும் அதைப்பற்றிய முழுத் தகவல்கள் அறிந்தபின்னே கருத்துக்கள் வெளியிடுவது நல்லது.

உடனடியாகத் தானே அதற்கு பதிலைத் தரவேண்டுமா ? எனவும் சிந்திக்கவேண்டும்.

அக்கருத்துக்களை வெளியிடும்பொழுது, கருத்துக்களுக்கான விளைவு நிகழ்ச்சியின் விளைவினை விட, அதைக் கேட்பவர் மனதிற்க்கு ஏதோ ஒரு வகையில் துன்பம் விளைவதாக இருக்கக்கூடும். என்பதையும் கவனத்தில் கொண்டு, தாம் சொல்வது நிகழ்வுக்குத் தீர்வு காண்பதாக இருக்குபொழுதே சொல்லவேண்டும்.

முன்னமேயே ஒரு பதிவில் சொல்லியது போல, சொல்லாத சொல்லுக்கு நாம் எஜமானன். சொல்லிய‌ சொல்லுக்கு நாம் அடிமை ஆகிவிடுகிறோம். அதை ஏன் சொன்னோம், எதற்கு சொன்னோம் எனப்பல்வேறு வகையில் விளக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டு, கடைசியில் பல சமயம், இச்சொற்களை நாம் தவிர்த்திருக்கலாமே என்று தோன்றும் மன நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

வள்ளுவர் அறிவுரை இதோ !

யா காவாராயினும் நா காக்க .. காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.


மனிதன் மனிதனாய் வாழ் முதற்கண் அடக்கம் தேவை. அடக்கம் எண்ணங்களிலும் பின் சொற்களிலும் பின் செயல்களிலும் பரிணமிக்கும்.

வள்ளுவரின் அறிவுரை மனித குலத்துதித்த யாவருக்குமே என்றாலும், ஒருவன் பதவி, அந்தஸ்து, செல்வம் ஆகிய ஏணிகளில் ஏறுகையில் , ஏறி நிற்கையில் வழுவாது கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றாம். உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் வாயிற்காப்போன் சொல்வதற்கும் அலுவலக அதிகாரி சொல்வதற்கும், பல்வேறு நேரங்களில், பொருள் ஒன்றாயினும், அவர்கள் சொல்லும் சொற்கள் ஒன்றாயினும், அவற்றினை கேட்பவர், அருகாமையில் இருப்பவர் புரிந்துகொள்ளும் தன்மை வேறு, நிலை வேறு. அவர்தமக்கு ஏற்படும் பாதிப்புகளும் அவ்வாறே. ஒன்று தெளிவு. மேலே செல்லச் செல்லப் பொறுப்புகள் அதிகரிக்கின்றன அல்லவா ?

ஆகவே தான், செங்கோன்மை எனும் அதிகாரத்தில், வள்ளுவர் சொல்வார்:

ஓர்ந்து கண்ணோடாது, இறைபுரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை.


நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர்
முதற்கண் குற்றம் என்ன என அறியவேண்டும்.
குற்றம் புரிந்தவரை, எந்த ஒரு தயவு தாட்சணியமும் இல்லாது,
நடு நிலையில் அமைந்து நின்று,
நீதி செய்வதே செங்கோலாகும்.

Friday, July 10, 2009

எழு ! என்னவெனக் கேளு. !!

அண்மையில் தமிழ் வலையுலகத்தில் ஒரு கேள்வி மழை பொழிந்தது. முப்பத்திரண்டு கேள்விகளும் அதற்கான வலைப்பதிவாளரின் பதில்களும்.
எனக்கும் வந்தது . நானும் என் பதிவில் பதில்கள் எழுதியிருந்தேன்.
என்ன கேள்விகள் ! உனக்கு ஏன் இந்தப் பெயர் ? உனக்கு என்ன சாப்பாடு புடிக்கும் ? யார் பக்கத்தில் இருக்கிறார்கள் ? இது போல்
உப்பு சப்பு இல்லாத கேள்விகள். பல நபர்களின் பதில்கள் பல்வேறு விதமாக இருந்தன.

கேள்விகள் என்றால் அதில் ஒரு பஞ்ச் இருக்கவேண்டும். பதில் சொல்பவரின் மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்கவேண்டும்.
பதிலளிப்பவர் கொஞ்சமாவது யோசிக்கவேண்டும். அந்தக் கேள்வியினால், கேட்பவருக்கு சிறிதாவது புதிய தெளிவு பிறக்கவேண்டும்
பதிலளிப்பவருக்கு புதிய வழி காண்பதற்குப் பயனாய் அமைய வேண்டும். இது எதுவுமே இல்லாத ஒரு கேள்விக்கணையினால்
என்ன பயன் !!

கேள்விகள் வேள்விகளாக இருக்கவேண்டும். அவ்வேள்வித்தீயில் பதிலளிப்பவன் புகுந்து வெளிவரவேண்டும். புது உணர்வும் புது நிலையும் அடையவேண்டும். பதிலளிப்பவருக்கும் அப்பதிலைப்படிப்பவருக்கும் அவை பயன் தரும் வகையாக இருக்கவேண்டும்.

"கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்
வேட்ப, மொழிவதாம் சொல்."
நாம் பேசும் சொல் எவ்வாறு இருக்கவேண்டும் என வலியுறுத்திச்சொல்லுகையில் வள்ளுவர் கூறுவார்: நாம் கேட்பவற்றை கேட்பவரும் கேளாதாரும் விரும்பும் வண்ணம் நாம் பேசவேண்டும்.

இவ்வகையில் யோசித்துப் பார்த்தபொழுது, தமிழ் வலையுலகில் இன்றைய தேதியில் ஏறத்தாழ பத்தாயிரம் பதிவாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் தமிழ் வலை தோன்றிய‌கால முதலே செயல்படுபவர், பலர் இடைக்காலத்தே வந்தவர், மற்றும் பலரோ வலையுலகத்தை விட்டு ஏதோ காரணங்களுக்காக விட்டுச் சென்றுவிட்டனர்.

தொடர்ந்து செயல் படுவோர் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் என சில எனக்குத் தோன்றின.
இவற்றிற்கான பதில்களை நான் எதிர்பார்க்கவில்லை. எல்லோருமே தன்னைத்தானே கேட்டு பதிலை அறிய வேண்டும். ஆங்கிலத்தில் இதை ஒரு செல்ஃப் இன்ட்ராஸ்பெக்ஷன் எனச் சொல்லலாம்.


முதல் கேள்வி: தமிழ் வலை உலகில் முதலடி நீங்கள் வைத்தபோதும், முதற்பதிவு என்று ஒன்று நீங்கள் எழுதியபோதும், சாதிக்கவேண்டும் என ஏதாவது நினைத்தீர்களா ? அது எந்த அளவிற்கு இப்போது சாத்தியமாயிருக்கிறது ? இல்லை எனின் நீங்கள் அடுத்து செய்யவேண்டியது என்ன ?

இரண்டாவது கேள்வி: உங்கள் வாசகர் வட்டம் தரும் கர ஒலி உங்களை மேலும் மேலும் எழுதத் தூண்டும் வகையில் உள்ளதா ? மேன்மேலும் தெரியாதனவற்றைத்தெரிந்துகொள்ளவேண்டுமென ஒரு ஆவலைத் தூண்டி, உங்கள் "அறிந்தவற்றின்" எல்லைகளைக் கடக்கத்தூண்டுகின்றனவா ? குட்டுப்படும்போது குனிந்து போவீர்களா ? வாசகரது கருத்து உங்களிடையே ஒரு சுய சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறதா ? மாற்றுக்கருத்துக்களையும் கவனமாகக் கேட்டு அதற்குத் தக்க பதிலைத் தரும் பண்பினையும் ( empathetical listening ) பொறுமையையும் (patience ) வளர்த்திருக்கிறதா ?

மூன்றாவது கேள்வி: தமிழ் வலைப்பதிவு உலகத்தை மற்ற மொழிகளில் வரும் வலைப்பதிவுகளோடு ஒப்பிட்டு இருக்கிறீர்களா ? ஆம் எனின், மற்ற மொழிகளில் வரும் வலைப்பதிவுகளில் உங்களைக் கவர்ந்து, இது போல தமிழ் வலையுலகத்தில் இல்லையே என வருத்தப்பட நேர்ந்ததுண்டா ?

நான்காவது கேள்வி: இன்றைய தேதியில் தமிழ் வலைப்பதிவுகள் தமிழரது சிந்தனை வளத்தை செம்மைப்படுத்துகின்றனவா ? தமிழரை ஆக்கவழிகளில் அழைத்துச் செல்ல அவை முயல்கின்றனவா ? ஆம் எனின் எப்படி ? இல்லை எனின் அவை எவ்வாறு இருக்கவேண்டும் ?

ஐந்தாவது கேள்வி: வாசகர், முகம், பெயர் கூட தெரியாத நிலையிலே நபர்கள் பலர் உங்களுக்கு வலை மூலமாக அறிமுகம் ஆகியிருக்கக்கூடும். அவர்களின் அன்பான. ஆரோக்கியமான பின்னூட்டம் சுவையாக இருந்திருக்ககூடும். அவர்களில் எத்தனை நபர்களுடன் நீங்கள் நட்பினைத் தொடர விரும்புவீர்கள் ?

ஆறாவது கேள்வி: தமிழ் வலைப்பதிவு உலகத்தில் நிகழும் கருத்து சுதந்திரம் ஆரோக்கியமானதாகத் தான் உள்ளதா ? இந்த சுதந்திரத்திற்கு ஒரு நாள் தடை வரும் என நினைப்பதுண்டா ? (ஒரு சில நாடுகளில் வருகிறது என்பது தங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்காது ) இல்லை. பத்திரிகை உலகத்திற்கு இது பரவாயில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா ?

ஏழாவது கேள்வி: வலையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாகவோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ, இது போன்ற இலவச வசதிகளை எதிர்காலத்தில் கூகுள், வேர்டுப்ரஸ், யாஹூ, ஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள் தொடர வில்லை எனின் எந்த அளவிற்கு நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் ?

கேள் என்பதற்கு இரு பொருள். கேள்வி கேள் (ASK) ஒரு பொருள். அதற்கு பதில் வரும்போது கேள் (HEAR, LISTEN). இது இரண்டாவது பொருள். நாம் கேட்கும் கேள்விக்கு ஒரு பொருள் இருக்கவேண்டும். யாரிடம் கேட்கிறோமோ அவருக்கு பயன் தரவேண்டும்.
அவர் பதில் அளிக்கும்போது அதைக்கேட்டிட பொறுமை வேண்டும். அதனால் நாம் பயன் அடைய வேண்டும்.

ன்ன பயன் ? இன்று தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் தலை சிறந்த வலைப்பதிவாளர் (பிளாக்கர்) என்று
ஒரு நோபெல் பரிசு கூட கிடைக்கலாம். அதற்கான தகுதியை இளைய சமுதாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும் .


இக்கேள்விகள் நம்மை நாமே கேட்டுக் கொள்பவை. ஆகவே, பொறுமையுடன நம் உள் மனம் என்ன சொல்கிறது என்பதைக் கேட்போம். பயனடைவோம்.
Friday, July 03, 2009

ஆண்டவன் எழுதிய எழுத்து


ஆண்டவன் எழுதிய எழுத்து
இரு நூறு வருடங்களுக்கு முன்பே ஜெஃபர்ஸன் அவர்களுக்கு அவரது நண்பர் ராபர்ட் பேட்டர்சன்(கணிதப் பேராசிரியர், பென்சில்வேனியா பல்கலைக்கழகம்) அனுப்பிய ஒரு தகவல் அடங்கிய ரகசிய மடல் இன்னமும் இன்னது என புரியாமல் இருந்தது, தற்பொழுது அதன் ரகசியப்பேழை எண்கள் பற்றிய விவரம்
கண்டுபிடிக்கப்பட்டு, மிகப்பெரிய செய்தியாக பேசப்படுகிறது. இந்த ரகசியத்தை உடைப்பது அவ்வளவு எளிதான
காரியம் அல்ல. ஒவ்வொரு எண் அல்லது எழுத்துக்கும் ஒரு மதிப்பு இருக்கும். அது இடத்திற்குத்தகுந்தாற்போலவும்
மாறிவிடும். அது அதை எழுதியவர்க்கும் அதை உரியவர்க்கும் மட்டுமே புரியும். இது பற்றி சுவையான தகவல்
அறிய இங்கே செல்லவும். (What is CRYPTOGRAPHY? )
http://online.wsj.com/article/SB124648494429082661.html#mod=whats_news_free?mod=igoogle_wsj_gadgv1


நிற்க.
நமது வீடுகளில் இன்னும் 'க' ந சங்கேத பேச்சு பிரபலம். கசி கனி கமா கவு கக் ககு கபோ கக கலா கமா என்றால் சினிமாவுக்கு ப் போகலாமா ? வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கோ அல்லது வீட்டில் உள்ளவருக்குக் கூட புரியாத, தமக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் பேசிக்கொள்வது கணவன் மனைவி மார்களுக்குக் கை வந்த கலை ஆகும்.

உதாரணமாக,

வந்திருக்கும் விருந்தினர்களிடையே அல்லது கணவன் வீட்டு உறவினர்களிடையே
கணவன் இடைவிடாது பேசிக்கொண்டே இருக்கிறார். மனைவிக்கு அது பிடிக்கவில்லை.
என்ன அப்படி வாய் ஓயாம பேசுறாரு ? இருந்தாலும் அத்தனை பேர் மத்தியிலே
என்னங்க பேசிக்கிட்டே இருக்கீங்க..கொஞ்சம் வாய் மூடிட்டு இருங்களே ! அப்படி
சொல்ல முடியுமோ ? !!! முடியாது தானே !!
ஆனால் எப்படி சொல்கிறாள் பாருங்கள்:
வாசற்கதவை திறந்தே வச்சுருக்கீகளே !!
கணவனுக்குப் புரிகிறது. கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பிக்கிறார்.

இன்னும் ஒரு உதாரணம்.
க ந பாஷை.
உதாரணமாக:

கது கள கசி கத கல கம் கவ கலை கப கதி கவு கதா கன் கஎ கன கக் ககு கபி கடி கக் ககு கம்.கஏ கனெ கனி கன்
கஅ கது களி கய கத கமி கழி கல் க இ கரு கக் ககி கற கது.
க வை நீக்கிவிடுங்கள். உடனடியாகப் புரிந்துவிடுகிறது

துளசிதலம் வலை பதிவு தான் எனக்குப் பிடிக்கும். ஏனெனின் அது எளிய தமிழில் இருக்கிறது.


இதையே அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். முதல் வரி மட்டும்.

கது காள கிசி கீத குல கூம் கெவ கேலை கைப கொதி கோவு கெளதா கெளன் கோஎ கொன கைக் கேகு
கெபி கூடி குக் காகு கம்.

இதன் இரண்டாவது பகுதி முதற்பகுதியின் வரும் வழி.

இருந்தாலும் இந்த வரியில் காணப்படும் வார்த்தைகளின் முதல் எழுத்தை நீக்கிவிட்டால் உடன் செய்தி
கிடைத்துவிடுகிறது.

ஆனால், சங்கேத மொழி அவ்வளவு எளிதில் அறியக்கூடியதோ அல்லது ஆக்கப்படுவதோ அல்ல. இன்னமும்
சற்று கடினமாக்கப்படுகிறது. எண்கள் புகுத்தப்படுகின்றன. அந்த எண் ஒரு பாஸ் வேர்டு போல . அதை
சரியாக உபயோகிக்கும்பொழுது தான் செய்தி தெரிய வரும்.

இப்போது இதே உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
துளசிதளம் வலை பதிவு எளிய தமிழில் இருக்கிறது.
இதை எப்படி மாற்றலாம் ?
1த4ள1ச30த்1ள்1ம்00 2வ்1ல்9 3ப்1த்3வ்5000 4எள்3ய்10000 5த்1ம்3ழில்00000 6இர்3க்க்3ற்1த்300000.
இதில் முதல் எண், வரியில் இவ்வார்த்தை இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. அடுத்த எழுத்துக்கள் மெய் எழுத்து
வரிசையின் இடத்தில் காணப்படும் எழுத்து. உதாரணமாக , த4 என்பது து.
முதல் எண், வரியிலே இவ்வார்த்தை இருக்கும் இடத்தைக் குறிப்பது என்று சொன்னவுடனே, இந்தக்குறியீட்டை எப்படியும் மாற்றலாம்.

இதை ஆக்குவது கடினமல்ல. இதை ஒரு கணினி வழியாக ப்ரொக்ராம் செய்து விடலாம். அது எந்த கோப்பில் இருக்கிறது என்கிற தகவலையும் உள்ளடக்கலாம்.

அது சரி ! இதெல்லாம் எழுதுவதற்குள் போதும் போதும் என்று ஆகி உடம்பு வியர்த்துப்போயிடுமே !
அதற்குப் பதிலாக யாருக்கு எழுதுகிறோமோ அவருக்கே ஒரு ஃபோன் போட்டு சொல்லிவிடலாமே என்று
கேட்கிறீர்கள். சரிதான்.
ஆனால், உங்கள் தகவல், இன்னமும் ஒரு 200 வருடங்களுக்குப் பிறகு வரும் உங்கள் கொள்ளுப்பேரர்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என நீங்கள் விரும்பினால் ?

மற்றும், குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே தெரியவேண்டும் என நீங்கள் நினைக்கும்போதும் இதுபோன்ற‌
சங்கேத மொழிகள் பயன்படும்.

இதெல்லாம் இருக்கட்டும். ரகசிய மொழிகள், சங்கேதக்குறிப்புகள் இவற்றையெல்லாம் படித்து நாம்
என்ன செய்யப்போகிறோம். இந்த எழுத்துக்கள் என்னவாயிருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன
என நம்மில் பலர் நொந்துகொள்ளாமல் இல்லை.

உண்மைதான். எந்த ஒரு லிபி அதாவது எழுத்தையும் டி கோட் செய்துவிடலாம். ஆண்டவன் எழுதிய‌
தலை எழுத்தை மட்டும் முன்னமேயே டி கோட் செய்து அறிய இயலாது.
என்னதான் ஜாதகம், எண் கணிதம்,கை ரேகை சாத்திரம், நாடி ஜோசியம், குறி பார்த்தல் ஆகியவை இருந்தாலும் அவற்றின் வரம்பு
ஒன்று இருக்கிறது.

ஆண்டவன் எழுதிய எழுத்து அந்த வரம்புகட்குமேல் அப்பாற்பட்டது. அவ்வெழுத்து அவரவர் செய்த‌
அறன்பால் உடைத்து.
அதனால் தானோ என்னவோ வள்ளுவர் எழுதினார்:

அறத்து ஆறு இது என வேண்டா , சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

Monday, May 25, 2009

நடப்பதெல்லாம் நடந்தே தீரும்.
எதையுமே நீ செய்ய வில்லை. நடப்பதெல்லாம் நடந்தே தீரும்.
நடப்பதற்கெல்லாம் நீ ஒரு சாட்சி தான்.
நீ வருத்தப்பட்டோ அல்லது கோபப்பட்டோ என்ன ஆகப்போகிறது !
ஆக, நீ உன் கடமையைச் செய்.

பாரதப்போரில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்ன உபதேசத்தின் உட்கருத்து இதுவே.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.
நடந்ததையே நினைத்துவிட்டால்....?

என அன்று பாடினார் நம் தமிழ் மண்ணின் இணையற்ற கவியரசன் கண்ணதாசன்.

அவன் இன்று இருந்தால் என்ன பாடி இருப்பார் ?

இருக்கட்டும். அது அது அவரவர் தலைவிதி என விட்டுவிடவா ?? !!

என்றோ நடந்த நிகழ்ச்சி ஒன்று ஏனோ நினைவுக்கு வருகிறது.

பல ஆண்டுகட்குமுன் (1970ம் வருடங்களில் இருக்கலாம் !) நடந்த ஒரு நிகழ்ச்சி இன்றும் நினைவில் இருக்கிறது.

எனது நண்பர் எனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர், அவர் திடீரென் இறந்து போனார்.
முற்றிலும் எதிர்பாராத இறப்பு. அவரது மனைவி (30) இரு பெண் குழந்தைகள் ( 5, 2 )
அல்றிக்கொண்டிருந்த காட்சி அங்கு வந்திருந்த நண்பர்கள் கண்களைக் குளமாக்கியது.

அக்குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்ன நடக்கிறது என்ன நடக்க இருக்கிறது என ப்புரியவில்லை. புரிந்துகொள்ளும் வயதும் அவர்களுக்கு இல்லை. குழந்தைகள் வீரிட்டு அழுதுகொண்டிருந்தன. அவர்களுக்கு ஒரு கவளம் சோறு கொடுக்க வேண்டும். சின்னக்க்குழந்தைக்கு யாரேனும் பால் தரவேண்டுமே ? ஒருவரையுமே கண்ணில் காணோமே ? இறந்தவரின் சொந்தக்காரர்கள், இறந்தவரின் மனைவியின் சொந்தக்காரர்கள்
எங்கே சென்றார்கள் /

தேடின‌தில் அதே வீட்டில் ஒரு அறையில் மிக‌ப்பெரிய‌ வாக்குவாத‌மும் உர‌த்த‌ குர‌லில் ச‌ண்டையும் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து.

இற‌ந்த‌வ‌ரின் தாயார் இற‌ந்த‌வ‌ரின் ம‌னைவியின் கைகள் மற்றும் க‌ழுத்திலிருந்த‌ ஒரு ப‌த்து ப‌வுன் ந‌கை த‌ன‌க்குச்சேர‌‌ வேண்டும் என்ப‌தில் குறியாக‌ இருந்தார் என்ப‌து அவ‌ர‌து செய‌ல்க‌ளிலிருந்து புல‌ப்ப‌ட்ட‌து.இறந்து போன எனது நண்பர் தனக்குத் தம்பி எனச் சொன்ன ஒருவர், ஒரு ஓரத்தில் ஏதோ வரவு செலவு கணக்கு போட்டுக்கொண்டு இருந்தார்

ம‌ற்ற‌ உற‌வின‌ர், இற‌ந்த‌வ‌ருக்கு இறந்தவரின் வாரிசுகளுக்கு இற‌ப்புக்குப்பின் அவ‌ர் வேலை புரியும் நிர்வாக‌த்திலிருந்து என்னென்ன‌ கிடைக்கும் என்ப‌தை ஆராய்ந்து அதில் எது எது யார் யாருக்கு என‌ க‌ண‌க்கிட்டுக்கொண்டிருந்த‌‌ன‌ர்.

ந‌ண்ப‌ரின் ச‌வ‌ம் அப்ப‌டியே இருந்த‌து.இறந்தவரின் மனைவி கதறிக்கொண்டிருந்தார்
குழந்தைக‌ள் க‌த‌றிய‌ வ‌ண்ண‌மே இருந்த‌ன‌ர்
.

துக்க‌த்தில் ப‌ங்கு கொள்ள‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் செய்வ‌த‌றியாது திகைத்து அதிர்ச்சியுற்று
இருந்த‌ காட்சி இன்னமும் நினைவில் உள்ளது.

அங்கு யாருக்கும் வெட்கம் இல்லை.

Saturday, May 23, 2009

நான் செய்வது பாரதியின் சரஸ்வதி பூஜை

Courtesy:
தமிழ்.வெப்துனியா சென்னை, திருனின்றவூர் அருகில் கசுவா கிராமத்தில் நடப்பது

மனித நேயத்திற்கோர் மகத்தான வேள்வி.

சேவாலயா ...

அதுபற்றிய விவரங்களை இங்கு திரு முரளிதரன சொல்லக்கேளுங்கள்.


இதைப் படிக்கும்போது எனக்கு 11 வயதுதான். அப்போது, பள்ளி ஆரம்பிக்க வேண்டும், உணவு போட வேண்டும் என்று சின்ன சின்னதாக எண்ணங்கள் தோன்றின. ஆனால் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு அதற்கான சிந்தனைகள் உதித்தன.

என்னுடன் படிக்கும் மாணவர்கள் 20 பேர் சேர்ந்து விவேகானந்தர் அமைப்பு என்று உருவாக்கி, எங்கள் கையில் கிடைக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்களை ஒன்றாக சேர்த்து வருவோம்.

மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை, ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று இனிப்பு, பிஸ்கேட் போன்றவை வாங்கிக் கொண்டு சென்று அவர்களுக்குக் கொடுத்து, பாடி, ஆடி மகிழ்ந்துவிட்டு வருவோம்.

அப்போது, அந்த ஆதரவற்றோர் இல்லங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது போன்ற பல விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டேன்.

தமிழ்.வெப்துனியா: நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்?

பெங்களூரில் பொறியியல் படித்தேன். எலக்ட்ரானிக்ஸ் துறையில் படித்தேன். அங்கு படிக்கும்போதும், அப்பகுதியில் இருக்கும் குடிசைப் பகுதிக்கு வாரந்தோறும் சென்றுவிடுவேன்.

அ‌ந்த குடிசை‌ப் பகு‌தி‌யி‌ல் வா‌ழ்பவ‌ர்க‌ள் ஊதுபத்தி செய்வார்கள். ஊதுப‌த்‌தி தொ‌ழி‌ற்சாலை‌யி‌ல் இரு‌ந்து ஊதுப‌த்‌தி கு‌ச்‌சிகளையு‌ம், மரு‌ந்துகளையு‌ம் காலையில் வந்து கொடுத்துவிட்டுப் போவார்கள். அந்த குடிசைப் பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஊதுபத்தியை ஒட்டி மாலையில் கொடுத்துவிட வேண்டும். பிள்ளைகள் பள்ளிக்கு எல்லாம் செல்ல மாட்டார்கள். இதையேதான் செய்வார்கள்.

நான் அந்த ஊதுபத்தி கம்பெனிக்குச் சென்று சனிக்கிழமை மாலையில் இவர்களுக்கு விடுமுறை கொடுங்கள். அந்த சமயத்தில் இங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கப் போகிறேன் என்று கூறினேன். அதற்கு சம்மதித்தார்கள்.

அந்த குடிசைப் பகுதியின் ஒரு மூலையில் அங்குள்ள பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கத் துவங்கினேன்.

அந்த சமயத்தில்தான் பள்ளி ஒன்றைத் துவக்க வேண்டும், உணவு அளிக்க வேண்டும். முடியாத முதியவர்கள் தங்க இடமளிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வேரூன்றி வளரத் துவங்கியது.

ஆனால் அதற்கு நிறைய காசு வேண்டும். இப்படி ஒன்றை செய்யப் போகிறேன் என்று சொல்லிக் காசு கேட்டால் யாரும் தர மாட்டார்கள். செய்து காண்பித்தப் பிறகு இப்படி செய்கிறேன், உதவுங்கள் என்று கூறினால் கிடைக்கும். எனவே முதல் 6 மாதத்திற்காவது நமது சேமிப்பில் காசு இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அதனால் வேலைக்குப் போய் ஒரு 3 ஆண்டுகள் காத்திருந்தேன். 3 ஆண்டுகளில் கொஞ்சம் காசு சேமித்து வைத்து, 6 மாதத்திற்கு நன்கொடை எதுவும் வாங்காமல் சமாளிக்க முடியும் என்று முடிவெடுத்தேன்.

தமிழ்.வெப்துனியா: முதலில் என்ன செய்தீர்கள்? இடம் வாங்கினீர்களா?

இல்லை. இடம் வாங்குவதெல்லாம் பல ஆண்டுகள் கழித்துத்தான் செய்தேன். முதலில் ஒரு வாடகை வீட்டைப் பிடித்து தாய் தந்தையை இழந்த 5 பிள்ளைகளைக் கொண்டு வந்து வைத்தேன்.

அவர்களுக்கு சாப்பிட உணவு மட்டும் கொடுத்து, அங்குள்ள பள்ளி ஒன்றுக்கு அனுப்பி வந்தோம். இப்படியே எங்கள் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக இருந்தது.

அந்த சமயத்தில் டி.சி.எஸ்.ஸில் வேலை கிடைத்து நான் ஒரு வருடம் அமெரிக்கா போய் இருந்தேன்.

60 பேர் என் கூட வேலை செய்தார்கள். ஒரு கூட்டம் நடந்தது. வேலை விஷயமாகப் பேசிய பிறகு பொதுவான எதையாவது பேச வேண்டிய நேரத்தில் நான் இந்த அமைப்பு பற்றி எடுத்துச் சொன்னேன். நான் இப்படி ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். இதற்கு சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். நீங்கள் எல்லோரும் உதவி செய்தால் நிச்சயம் வாங்கலாம் என்றதும் அனைவரும் ஆதரவு தெரிவித்து உதவி செய்தார்கள். அதன் பலனாக இங்கு நிலம் வாங்கினேன்.

1991ஆம் ஆண்டில் ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கினேன். அங்கு ஒரு கொட்டகை போட்டு வைத்தேன். அப்போது சுமார் 30 பேர் ஆகிவிட்டனர்.

தமிழ்.வெப்துனியா: இப்போது உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவார்கள் அல்லவா?

1000 பேரில் 160 பேர் மட்டும் பள்ளியில் தங்கும் இடத்தில் தங்கி விடுவார்கள். மற்றவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். 160 பேருக்கு சொந்தமென்று யாரும் இல்லை. மற்றவர்களுக்கு உண்டு. ஆனால் பொருளாதார நிலைமையில் பார்க்கப்போனால் எல்லோருமே ஒரே நிலையில்தான் உள்ளனர்.

பள்ளி அமைக்க நிலம் வாங்கிய பிறகு பள்ளிக் கட்டடம், விடுதிக் கட்டடம் கட்ட பணம் திரட்டினேன். ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு நபர்களைக் கேட்டு உதவி பெற்று கட்டினேன். தற்போது அந்தப் பள்ளியில் 35 வகுப்பறைகள் உள்ளன. இப்படி பல்வேறு உதவிகளைப் பெற்று ஒரு பள்ளி உருவாகியுள்ளது.

பள்ளி ஆரம்பித்து 3 வருடத்திற்கு தொடர்ந்து 10ஆம் வகுப்பில் முழு தேர்ச்சி கிடைத்தது. பத்திரிக்கைகளில் எல்லாம் வந்தது. இது பற்றி கேள்விப்பட்ட ஒரு பெரியவர் பள்ளிக்கு வந்து பார்வையிட்டார். அப்போது பள்ளி பாதிதான் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அந்த பெரியவர், இப்போ உங்களுக்கு எவ்வளவுத் தேவைப்படும் என்று கேட்டார். நாங்கள் கணக்குப் போட்டுப் பார்த்து நாலைந்து லட்சமாகும் என்று சொன்னோம். அதற்கு அவர், நாளைக்கு வந்து செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

முதல் தளம் அமைக்க நிறைய கஷ்டப்பட்டோம். நிறைய நாள் எடுத்துக் கொண்டோம். ஆனால் தேர்வு முடிவுகள் நன்றாக வந்ததால், இரண்டாவது, மூன்றாவது தளங்கள் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டது.

அடுத்தது என்னவென்றால், அங்குள்ளவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். அங்கு படிக்க யாருமே ஆர்வம் காட்டாததால்தான் அங்கு பள்ளியே இல்லை.

அங்கிருப்பவர்களில் இரண்டு ரகம், ஒரு சில மேல்தட்டு குடும்பங்கள் பெரிய பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைத்தனர். மற்றொரு ரகம் கூலி வேலை செய்பவர்கள், அவர்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் எண்ணமே இல்லாதவர்கள்.

நாங்கள் ஒவ்வொரு வீடாகப் போய் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தினோம். அதற்கு பெற்றவர்களோ, அவனை பள்ளிக்கு அனுப்பினால் ஒரு நாள் கூலி போய்விடும். அதை நீங்கள் தருவீர்களா என்று கேட்டார்கள்.

படிப்பு செலவை நீங்கள் செய்ய வேண்டாம். எல்லாமே நாங்கள் இலவசமாக தருகிறோம். பணமெல்லாம் கொடுக்க முடியாது. அவன் படித்து வந்தால் பெரிய வேலையில் சேர்ந்து உங்களை நல்லபடியாக வைத்துக் கொள்வான் என்று சொல்லி ஒவ்வொரு பிள்ளையாக பள்ளிக்கு வரவைத்தோம்.

இங்கு வந்த பிறகு அவர்களுக்கு பிடிக்க ஆரம்பித்தது. ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் தொழிற் கல்வியையும் அளித்து வருகிறோம். மாணவர்களுக்கு ஒழுக்கமும் கற்பிக்கப்படுகிறது.

இதோடு அல்லாமல், அங்கு பொதுப் பிரச்சினைகளிலும் தலையிட்டு தீர்வு கண்டுள்ளோம், சாராயம் காய்ச்சுதலை நிறுத்தினோம், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அங்குள்ள பொதுமக்களே எங்களை நாடி வந்து கூறுகின்றனர். நாங்களும் தலையிட்டு தீர்வு காண்கிறோம்.

தமிழ்.வெப்துனியா: உங்களது துவக்க காலத்தில் உங்களுடன் இருந்த நண்பர்கள் இப்போதும் உங்களுடன் உள்ளார்களா?

பலர் உள்ளனர், சிலர் தொடர்பில் இல்லை. பல புதியவர்கள் இணைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் பள்ளிக்கு வாருங்கள் என்று அழைத்த நிலை மாறி, இப்போது பலர் எங்கள் பள்ளிக்கு வந்து, அது என்ன ஏழைகளுக்கு மட்டும், எங்கள் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் செலுத்துகிறோம் என்று கேட்கிறார்கள்.

எங்கள் கொள்கையே, ஏதும் இல்லாத பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதுதான், எங்கள் இலக்கை மாற்றி விடாதீர்கள் என்று கூறி அனுப்பி விடுகிறோம்.

பணம் கட்டி மாணவர்களை சேர்த்துக் கொண்டால், அவர்கள் அதிகமாகிவிடுவார்கள், இவர்கள் குறைந்துவிடுவார்கள். பணம் கட்ட முடியும் என்றால் வேறு எங்காவது சென்றுவிடுங்கள். முடியாதவர்கள் மட்டும் இங்கு வாருங்கள் என்று கூறுகிறோம்.

தமிழ்.வெப்துனியா: உங்கள் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பற்றி கூறுங்கள்?

கடந்த ஆண்டு உமா மகேஸ்வரி என்பவர் 1160/1200 எடுத்தார், ராமச்சந்திரன் 1082/1200 எடுத்தார். இந்த மாணவர்களின் பெற்றவர்கள் கூலி வேலை செய்பவர்கள். இவர்களுக்கு அண்ணா பல்கலையில் மெரிட்டில் பொறியியல் படிக்க வாய்ப்பு வந்தது. அந்த கட்டணத்தையும் நாங்களேக் கட்டி அவரை படிக்க வைத்து வருகிறோம்.

மேல் படிப்பிற்கு நாங்கள் பணம் கட்டி படிக்க வைக்கிறோம் அல்லது அவர்களுக்கு வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்து விடுகிறோம், படித்து வேலையில் சேர்ந்ததும் அந்தக் கடனை அவர்களே செலுத்திவிடுவார்கள். இதற்காக ஒரு வங்கியில் பேசியுள்ளோம். எங்களது சேவாலயா பள்ளி மாணவர்களுக்கு மேல் படிப்பிற்கு வங்கிக் கடன் அளிக்க உதவுமாறு கூறியுள்ளோம்.

10வது வகுப்பில் 500க்கு 460 மதிப்பெண் பெற்றுள்ளார் ஒரு மாணவர். எங்கள் பள்ளியில் 10வது முடிக்கும் பிள்ளைகள் மீண்டும் எங்கள் பள்ளியிலேயே 11வது வகுப்பில் சேர்ந்து விடுவார்கள்.

இதில் குறிப்பாக ஒரு பையனைக் குறிப்பிட வேண்டும். அவனது அப்பா இவனது சின்ன வயதிலேயே இறந்துவிட்டார். அம்மா திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்பவர்கள். அந்த அம்மா எங்கள் பள்ளிக்கு அந்த பையனை அழைத்து வந்து, இவனை இங்கேயே தங்க வைத்து படிக்க வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவன் நல்லா படிச்சு மேல் படிப்பிற்கும் உதவி செய்தோம். அவன் தற்போது ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியராக உள்ளான். டிசிஎஸ்ஸில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறான்.

தற்போதும் அவன் சனி, ஞாயிறுகளில் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் இருப்பான். அவனது ஆர்வத்தைப் பார்த்து அவனையும் அறக்கட்டளையின் உறுப்பினராக்கியுள்ளேன். பல்வேறு விதங்களில் அங்கிருந்தவன் என்ற முறையில் அவனது ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும் என்பதால் அப்படி செய்துள்ளோம்.

தமிழ்.வெப்துனியா: ஒழுக்கத்தை எப்படிக் கற்றுத்தருகிறீர்கள்?

பாரதி, விவேகானந்தர், மகாத்மாவின் கருத்துக்களை பல்வேறு பாடத் திட்டங்களாக தொகுத்து அதற்காக ஒரு பாடத்திட்டம் வைத்துள்ளோம். அதை வைத்துத்தான் நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருகிறோம்.

பெங்களூருவில் ஒரு அமைப்பு, புதிய முறையில் பாடத்திட்டத்தை புகுத்திய பள்ளிக்கு தேசிய விருது ஒன்றை அறிவித்தது. அதற்கு நாங்கள் இந்த நல்லொழுக்கப் பாடத் திட்டத்தினை விளக்கி விண்ணப்பித்தோம்.

சுமார் 22,000 பள்ளிகள் விண்ணப்பித்திருந்தன. எல்லாமே நகர்ப்புற பள்ளிகள் அனைத்தையும் தாண்டி, எங்களது சேவாலயாப் பள்ளி விருதினை வென்றது.webdunia photo WD

இந்த பாடத்தை மற்றப் பள்ளிக் கல்லூரிகளிலும் சிறு வகுப்புகள் நடத்தி எடுக்கிறோம். இதனைக் கேள்விப்பட்ட சிறைத்துறை அதிகாரி நடராஜ் எங்களைத் தொடர்பு கொண்டு பேசினார். அந்த அடிப்படையில் தற்போது நல்லொழுக்கப் பாடத்தைப் பற்றி புழல், வேலூர் சிறைகளில் கைதிகளுக்கும் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

அங்கு இதைப்பற்றி சொல்வது மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது. ஒரு சில கைதிகள், எங்கள் தண்டனைக் காலம் முடிந்ததும், நாங்கள் சேவாலயாவிற்கு வந்துவிடுகிறோம், அங்கு சேவையாற்றி எங்கள் காலத்தை கழிக்க விரும்புகிறோம் என்கிறார்கள.
(தொடரும்)--------------------------------------------------------------------------------

Wednesday, May 20, 2009

பட்டாம் பூச்சி விருதும் பக்க விளைவுகளும்.


பட்டாம் பூச்சி விருதும் பக்க விளைவுகளும்.

" வாங்க ! மன்மோஹன் சிங்க் ஸாரா ! ஆச்சரியமா இருக்கே ! குட் மார்னிங்க்.
என்ன இவ்வளவு தூரம்."

"என்னது ! பிரசிடென்டை பார்க்கிரதுக்கு முன்னாடி என்ன பார்த்துட்டு பேசிட்டுப் போலாம்னு வந்தீகளா !"

" அடடே ! எனக்கா ! காபினட் மந்திரி போஸ்டா ! அட வேணாம்க !"

" அதுக்குல்லேங்க.. ரொம்ப வயசாச்சுல்லே ! ஏதோ எனக்குத்தெரிஞ்ச விசயத்துலே
ஒன்னு ரண்டு உளரிட்டு இருக்கேன். இதுக்கு ஒரு ரிகக்னிஷன் மாதிரி ஒரு
காபினட் போஸ்ட்னா ரொம்ப ஜாஸ்திங்க.."

" அப்படி என்னதான் போஸ்ட்ங்க..? அட ! மினிஸ்டர் ஆஃப் கல்சுரல் அஃபேர்ஸா ! அதுவும்
அட்டேச்டு டு ஃபாரின் மினிஸ்டிரியா ! தேவலாமே !"


(( மன்மோஹன் சிங்க் சாரிடம் பேசிக்கொண்டிருக்கையிலே
நடுவிலே உள் மனசு கரடி புகுந்தாற்போல் புகுந்து " அடே சுப்பு ரத்தினம் !

வள்ளுவர் என்ன சொன்னார் நினைவு இருக்கிறதா ?

அன்பறிவு, தேற்றம், அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

உன்னிடம் இந்த நான்கில் எது இருக்கிறது என்று நினைத்துப்பார். அவசரப்படாதே என்றது.

அதே சமயம் மனசோ " இதெல்லாம் ஒன்னும் வேண்டாம். குபேரன் கண்ணைத்திறந்து
பார்த்துவிட்ட்டான். விட்டுவிடாதே சந்தர்ப்பத்தை." என நப்பாசையை மேலும் கிளறியது.))" அது சரி, நன்னா யோசிச்சு இருப்பீங்க .. அதுதான் வந்து இருக்கீங்க..
இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க.. முடியாதுன்னா நன்னா இருக்காதுல்லா.. "

" சோனியா அம்மாவும் சரின்னு சொல்லிட்டாகளா ! அட ! ரொம்ப தாங்க்ஸுங்க..!"

" நாளைக்கு ஸ்வேரிங்க் செரிமனியா !" வந்துட்டேன். வந்துக்கினே இருக்கேன். "

" அப்ப உத்தரவு வாங்கீக்கீகளா ! சரிங்க.. போயிட்டு வாங்க. நல்லபடியா அரசு நடத்தி
எல்லாருக்கும் நல்லது செய்யனும்னு ஒரே லட்சியத்தோட இருக்கர நீங்க . கடவுள்
உங்களுக்கு எல்லா வரத்தையும் தருவாங்க.. ! "

எங்கோ பாட்டு கேட்கிறது. " எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா ! "

" என்னது ! இந்தக் கிழவிய இப்பன்னு காணோம் ! வந்த சிங்க் ஸாருக்கு ஒரு தஞ்சாவூர்
டிகிரி காபிய் குடுத்து இருக்கக்கூடாதா ! இந்த கிழவியே அப்படித்தான்.!

" மீனாட்சி ! ஏ மீனாட்சி ! ஏ மீனாட்சி ! "

" என்னங்க தூக்கத்துலே மீனாட்சி மீனாட்சின்னு கத்தறீங்க .. என்ன விசயம். ? எதுனாச்சும்
கனவாங்க. "

" ஆமாம் ! கனவுதான் போல இருக்கு ! அப்ப மன்மோஹன் சிங்க் ஸார் வந்து மினிஸ்டர் போஸ்ட்
அப்படின்னு சொன்னதெல்லாம் கனவா ! "

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, அத்தைனையும் சொப்பனந்தான் " என்று
சும்மாவா பாடினார் பாரதியார் !


" சரிதான் ! காலைலே நெட்லே உங்களுக்கு யாரோ தெரியாத்தனமா பட்டாம்பூச்சி விருது கொடுக்கப்போய் எனக்குத் தூக்கம் கெட்டு ப்போயிடுச்சு. ! பேசாம சாமி பேர மூணு தரம் சொல்லிப்போட்டு
தூங்குங்க
.. இன்னும் பத்து நாள்லே இந்தியாவுக்கு திரும்பிப்போயி ஜயசந்திரன் டாக்டர்ட்டே
கன்சல்ட் பண்ணிப்போடணும். அமெரிக்கா வந்தது தான் வந்தோம். மனுசனுக்கு உளரல் ஜாஸ்தி
ஆகிடுத்து. ! "

ஆஹா ! பட்டாம் பூச்சி விருது கொடுத்தாரே அந்த புண்ணியவான் கைலாசி முருகானந்தம் !
அவ்ருக்கு முதல்லே நன்னி சொல்லணும். அது சரி, ஜீவாவுக்கு கொடுத்தீக.. ரொம்ப சரி.

கவினயா மேடத்துக்கு கொடுத்தீக. அதுவும் சரி. எனக்கு எதுக்கு !

ஏதோ அப்பப்ப மனசுலே தோணரது எல்லாம் உளறதுக்கு ஒரு இடம் வேணும்லே ! அது தான்
நான் எழுதறது. பின்னூட்டம், முன்னூட்டம் எல்லாம். இதுக்குப்போய் ஒரு விருதா ! "

சரி, சரி, நன்றிங்க. நீங்க சொன்னபடி மூணு பேர் யார் யார்னு தேட ஆரம்பிக்கரேன்.கொஞ்சம் வைட் பண்ணுங்க

Friday, May 01, 2009

கனியிருப்பக்காய் !!!அண்மையில் ரசனைக்காரி அவர்களின் வலைப்பதிவு காணும் வாய்ப்பு கிடைத்தது. மொழியின் தோற்றமும் தன் பரிணாம வளர்ச்சியும் அம்மொழியினை செப்பிடுபவர்தம் கடமையினைப்பற்றியும் அழகாக விளக்கியுள்ளனர்.

மனிதர் யாவரும் ஒருவருக்கொருவர் தம் எண்ணக்கதிர்களை மற்றோர் பால் செலுத்தும் கருவியாக மட்டும் மொழியை நினைத்திடாது, மனித சமூகமிடையே அன்பும், ஆதரவும், பண்பும் பெருக உதவிடுவதே மொழி என எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று
.

என்பார் வள்ளுவப்பெருந்தகை.

அக்கனியிலும் சுவைத்து இன்புறும் கனியாக மொழி அமைதல் வேண்டும் என வலியுறுத்துகிறார் ரசனைக்காரி அவர்கள்.

அவர்களது சொற்களிலே:

//நம்முடைய மொழி வன்னொலி எழுப்ப அல்ல..இன்னொலியை அலைவரிசையாக்க..நம்முடைய பாஷை அசைவ சொற்களை உபயோகிக்க அல்ல..அன்பு நெறியை வலியுறுத்த..சமூகத்திற்கும்,வரும் சந்ததியருக்கும் நம்மால் முடிந்த உதவி இதுவாகட்டும்.


அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்”. //


ஒரு சொல்லைச் சொல்லிடில் அது பயனளிப்பதாக அமைதல் வேண்டும்.


சொல்லுக சொல்லைப் பயனடைய, சொல்லற்க,
சொல்லிற் பயனிலாச் சொல்

உலகம் இன்றுள்ள நிலையிலே அன்பில்லாத எந்த சொல்லுமே அது யார் பேசினாலும் எந்தச் சூழ்னிலையில் பேசப்படினும் பயனிலாச் சொல்லே.

அந்த அன்பு எப்படி தானாகவே விளையுமா ?

விளைச்சல் பூமியின் வளத்தைப் பொருத்ததன்றோ ? விதையின் தரத்தைப் பொருத்ததன்றோ ? பாய்ச்சப்படும் நீரின் தன்மையைப் பொருத்ததன்றோ ?

ஆகவே சொற்கள் அன்புவயப்பட்டதாக அமையவேண்டின், மனம் தூய்மைப்படுதல் தேவை. எந்த வித‌ எதிர்பார்ப்புமன்றி பிறர் நலம் பேணுவதே கடமையாகவும், தம் பிறப்பின் நோக்கமாகக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.

வள்ளலார் அதுபோல் திகழ்ந்தார்.

எல்லோரும் வள்ளலாராக இயலுமா?

இயலாது எனினும் அதில் ஒரு விழுக்காடு மனமாவது நமக்கு வேண்டும் என நாம் விரும்பினால், அந்த விருப்பு வெறுப்பு யாவையும் கடந்த இறைவன் மேல் நமக்கு பற்று வேண்டும்.

வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு
யாண்டும் இடுமபை இல.


இவ்வுலகத்தே காணுறும் இடும்பை யாவையும் அகன்றிட, நற்சிந்தனைகள் தோன்ற, நல்ல எண்ணங்கள் வழியே நல்ல வார்த்தைகள் சொல்லிட, ஆண்டவனே துணை புரியவேண்டும்.

இறைவனைப் போற்று முகத்தான், வாழ்த்தி நல்வழி பெற நமக்கு, தங்கமணி அவர்களின் வலைப்பதிவு துணையாக நிற்கிறது.


மேலும் தமது மார்ச் 24 பதிவில் எழுதுகிறார்:
வாழுகின்ற எல்லா உயிர்க்ளிடத்துமே மானிடம்தான் உயர்பிறப்பு.
ஆகவே, மானுடனாகப் பிறந்த யாவரும் இவ்வுலகில்
எவ்வுயிர்க்கும் நன்று செய்வோம் என சூளுரைக்கவேண்டும்.
இதற்கு வழி இறைவனடி சேர்வது தான் என்பார்.

அவர் எழுதிய பா இதோ !


ஊழின் வலிமையிது;உற்றிடும் பல்பிறப்பில்
வாழும் உயர்பிறப்பு மானிடம்தான்!---தாழுமோ?
நல்லுலகில் எவ்வுயிர்க்கும் நன்றுசெய்வோம்!என்றென்றும்
வல்லவன்சீர்ப் பாதம் மருந்து.
அங்கே செல்வோம். இறைவனை துதிப்போம். நல்ல எண்ணங்கள் பெறுவோம்.

மேடம் தங்கமணி இயற்றிய பாடல்கள் மூன்றினை நான் என்னால் இயன்றவரை பாட
முயன்றிருப்பதை காண்க

http://kavidhaithuligal.blogspot.com/

Sunday, April 19, 2009

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

உண்மைதான். மனதிலே ஏற்படும் பல உணர்வுகளை அப்படியே பளிங்குக் கண்ணாடி போல் காட்டிவிடும்
அற்புதம் தான் முகம்.

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.


அன்பு, காதல், பிரிவு, சோகம், கருணை, வீரம், கோபம், மதம், பொறாமை, ஆகிய பல உணர்வுகளையும் உடனடியாக பிரதிபலிப்பது நமது முகமே.

உவத்தலையும் காய்தலையும் தான் முன்னின்று உரைத்துவிடுவது முகமே என்பார் வள்ளுவர்.

இருப்பினும், நெஞ்சிலே தோன்றும் எண்ணங்களை மிகவும் சாமர்த்தியமாக முகத்தில் தோன்றாதவாறு சமாளித்துக்கொள்வோரும் பலர் உண்டு. ஒருவன் சொல்வது பொய்யா, உண்மையா என்பதை அவன் முகத்தில் ஏற்படும் அசைவுகள், நெளிவு சுளிவுகளிலே கண்டு கொள்ளலாம் எனினும், தீய நடவடிக்கைகளிலே தேர்ந்த பலர் தம் முகத்தை ஒரு இறுக்கமாகவோ அல்லது மனதில் ஏற்படும் விகாரங்கள் தெரியாதவண்ணம்
ஒரு தேர்ந்தெடுத்த புன்முறுவலையோ அலங்கரித்துக்கொண்டும் காணப்படுவர்.

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரையார் உடைத்து
என்பார் வள்ளுவர்.

வெளித்தோற்றத்தில் குன்றுமணிபோல் சிவப்பாக இருப்பினும், அதே
குன்றுமணியின் நுனியில் இருக்கும் கரு நிற மனதை உடையோரும்
உளர்.


இருந்தாலும், பொதுவாக‌,

அடுத்த‌து காட்டும் ப‌ளிங்கு போல் நெஞ்ச‌ம்
க‌டுத்த‌து காட்டும் முக‌ம்


என்பார் வ‌ள்ளுவ‌ர்.

அப்படியானால், ஒருவன் பொய் சொல்கிறான் என எப்படி கண்டுபிடிக்க இயலும் ?
அமெரிக்காவில் வெளியான ஒரு கட்டுரையில் ஒரு பொய்யனைக் கண்டுபிடிக்க பத்து வழிகள் என்ன எனத் தெளிவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் திருமதி ஹெதர் ஹாட்ஃபீல்டு.

பேச்சில் முரண்பாடு, வழ்க்கமான் மனித இயல்புகளினின்றும் மாறுபட்டு செயல்படுவது,இவைகள் முதன் முறை பொய சொல்பவர்கல். முகத்தில் ஒரு பொய்யான் ( செயற்கையான ) புன்னகை, திடுக்க‌வைக்கும் நிக‌ழ்ச்சிக‌ளை ந‌ட‌ந்த உட‌னேயே முக‌த்தில் அச்ச‌மோ ப‌ய‌மோ இல்லாது நிதான‌மான‌ வ‌ர்ண‌னை இவையெல்லாம் தேர்ந்த‌ பொய்ய‌ர்க‌ளாலே ம‌ட்டும் இய‌லும் என்கிறார் க‌ட்டுரையாசிரிய‌ர்.‌

மேற்கொண்டு இக்க‌ட்டுரையை இத்தொட‌ர்பில் காண்க‌:
http://www.scribd.com/doc/8545736/10-Ways-to-Catch-a-Liar


கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பொய் தோன்றுவதற்கு முதல் காரணம் உலகப்பொருட்களின் பால் நமக்குள்ள பற்றே. எப்படியேனும் நாம் விரும்பியவற்றை, விரும்பியவாறு, விரும்பிய நேரத்தில் அடைந்து தான் தீர வேண்டும் என்ற ஒருவித வெறியே பொய்யான எண்ணங்களையும், பொய்யான் வார்த்தைகளையும், பொய்யான செயலகளையும் தோற்றுவிக்கின்றன.

இதுவும் ஒரு அறியாமைதானோ !

ஏதோ நாம் விரும்பியதை உடன் எப்படியாவது அடைந்துவிடின், அதன்பின் அழிவுறா மகிழ்வுலகத்தில் திளைத்துவிடலாமென்ற கனவு காண்பதால்தான், பொய்யான் எண்ணங்கள் தோன்றி, பொய் வார்த்தைகள் புறப்பட்டு, பொய்ச்செயல்களுக்கும் காரணமாகின்றன.

இந்த அறியாமைதனைக் களையவேண்டும். கதிரவன் ஒளி பட, இருள் நீங்குவது போல, உண்மை எது என்ற அறிவு தான் நம்மை பொய் உலகத்திலிருந்து அகற்றிட இயலும்.

ஜீவா அவர்கள் தனது ஆத்ம போத விளக்கத்திலே மனத்தை லயிக்கச் செய்யலாமா ?

வாருங்கள். ஜீவா அவர்கள் பதிவுக்குச் செல்வோம்.

Tuesday, April 14, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழ் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள்
சித்திரைத்திங்கள் உதிக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எல்லா நலமும் பெற்று வாழ்வீர் என வாழ்த்தி மகிழ்கிறேன்.


சுப்பு ரத்தினம்.

Thursday, April 02, 2009

நிலையிலா வாழ்க்கையிலே நிலைத்திருப்ப‌து அற‌ம் ஒன்றே
கபீரன்பன் தனது அண்மையில் பதிவு ஒன்றில் அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லிய கருத்து ஒன்று நம் நலம் விழைவார் எப்போதும் இனிமையாக பேசமாட்டார். நம்மை இடிக்கவேண்டிய இடத்தில் இடித்து நமக்கு நல் வழி புகட்டுவார். கசப்பு மருந்தையும் புகட்டுவார்.

அவ்வாறு நம்மிடையே உள்ள குற்றங்களையும், தொய்வு நிலைகளையும் சரியான தருணத்தில் எடுத்துரைப்பதனால், ஏற்படும் நன்மை நமக்குத்தான் எனப்புரிந்து கொண்டு நடத்தல் வேண்டும். "மஹாத்மாக்களின் வாக்குகள் வழிகாட்டும் விளக்குகள் போல. விளக்கை பற்றிக்கொள்வது அவரவர் விருப்பம்".


கபீரன்பனின் கட்டுரையைத் திரும்பத் திரும்ப எத்தனை வாசித்தாலும் தகும். வாசித்தால் மட்டும் போதாது. அவற்றில் சொல்லப்பட்டவைகளை சிந்தித்து செயல் படவேண்டும்.

அண்மையில் யதேச்சையாக, முதல் முறையாக எனது பதிவுக்கு வருகை தந்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வலையின் இடது பக்கத்தில் உள்ள திருக்குறள் தொடர்பு ( விட்ஜெட் ) பற்றி ஒரு செய்தி விட்டுப்போயிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த விட்ஜெட்டைப் பதியும்பொழுது, இதை நான் எப்படியோ காணாது போனேன். திருக்குறள் பற்றிய தகவல்கள், வள்ளுவரின் சிலை பற்றிய தகவல்கள் அழகாக குறிப்பிட்டுள்ளன. ஆயினும் திருக்குறளின் 1330 பாக்களுக்கும் செந்தமிழில் உரை யார் எழுதியது,அவ‌ற்றின் ஆங்கில‌ மொழியாக்க‌ம் யாரால் செய்ய‌ப்ப‌ட்ட‌து என்ற‌ த‌க‌வ‌ல் இல்லை. இதை இப்போது தான் க‌வ‌னித்தேன்.

திரு கிருஷ்ண‌மூர்த்தி அவ‌ர்க‌ள் விட்ஜெட்டில் காண‌ப்ப‌டும் ஆங்கில‌ மொழியாக்க‌ம் த‌வ‌யோகி
சுத்தான‌ந்த பாரதி அவர்களால் செய்யப்பட்டது என்றும் அது ஒரு உலக தமிழ் மா நாட்டில் வெளியிடப்பது என்றும் சொல்லி அத்தகவல்களடங்கிய சுட்டி ஒன்றையும் தந்திருக்கிறார்கள். அவருக்கு எனது நன்றி.
http://maraboorjc.blogspot.com/2006/03/blog-post.html

த‌க‌வ‌லை உரிய‌வாறு விட்ஜெட்டுக்குக் கீழே இணைத்துவிட்டேன். திரு சுத்தான‌ ந‌த‌ பார‌தி அவ‌ர்க‌ளின் பெய‌ர் த‌ர‌ப்ப‌ட‌வில்லையே என்ற‌ அவ‌ர்க‌ள் வ‌ருத்த‌ம் ச‌ற்றேனும் குறையுமென‌ எதிர்பார்க்கிறேன்.

திரு கிருஷ்ண‌மூர்த்தி அவ‌ர்க‌ள் த‌ந்த‌ சுட்டியில் யோகி சுத்தான‌ந்த‌ பார‌தி இய‌ற்றிய‌ த‌மிழ்த்தாய் வாழ்த்து ஒன்று காண‌ப்பெற்றேன்.
அந்த தமிழ்ப் பாடல் இதோ:-
தமிழ்த்தாய் வாழ்த்து (5 பெரும் காப்பியங்களை ஆடை அணிகலனாய் அணிவித்து ஆற்றிய அழகிய பாடல்)
ராகம்: காம்போதி, தாளம்: ஆதி

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்றுஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ


உண்மையில் நான் இதுவ‌ரை இவ்வாழ்த்துப் பாட‌லை அறியேன்.
ஐந்து உய‌ர் காப்பிய‌ங்க‌ளையும் உள்ள‌ட‌க்கிய‌ இவ்வாழ்த்து போற்ற‌த்த‌க்க‌து.

நிற்க‌. திருக்குற‌ளின் 1330 குற‌ட்பாக்க‌ளுக்கும் உரை எழுதிய‌வ‌ர் எண்ணில‌ர். 50 வ‌ருட‌ங்க‌ட்கு முன்பு என‌து த‌மிழாசிரியர்கள், ப‌ள்ளியில் திரு குல‌சேக‌ர‌ன் அவ‌ர்க‌ளும் ( இ.ரெ.உய‌ர் நிலைப்ப‌ள்ளி, திருச்சி) க‌ல்லூரியில் திரு.ஐய்ய‌ம்பெருமாள் கோனார் (செயின்ட் ஜோஸ‌ஃப் க‌ல்லூரி, திருச்சி) இருவ‌ருமே கூறுவ‌ர்:

ஒரு குற‌ளின் க‌ருத்து அத‌னைச் சார் ந்த‌ அதிகார‌த்தின் பொதுக்க‌ருத்தினை ஒட்டியே அமைத‌ல் ந‌ல்ல‌து என‌வும் வ‌லிந்து பொருள் கூறுவ‌து தவிர்க்கப்படவேண்டும். மேலும் ஒரு குறளின் நுண்ணிய கருத்தைக்கண்டறிய‌ பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர் ஆகியவரது உரைகள் அடிப்படையாக அமைய வேண்டும். இக்கருத்தினை எனது தந்தையும் (அவ்ரும் 1920 வாக்கில் தமிழாசிரியராகப்பணியாற்றியவர் ) வலியுறுத்தினார்.

திருக்குறளின் உரைகள் பல உள. சிலவற்றின் தொடர்பு இங்கு தரப்படுகிறது.


http://tamilelibrary.org/teli/thkrl.htmlin Tamil Unicode /utf-8 format

க‌ட‌ந்த‌ 100 வ‌ருட‌ங்க‌ளில் ப‌ல‌ர‌து உரை இணைய‌த்தில் காண‌ப்ப‌டுகிற‌து.

உரைக‌ளில் எது சிற‌ந்த‌து என‌க் கூறுத‌ல் ச‌ரியாகாது. அக்கால‌ம் முத‌ல் இன்று வ‌ரை, திருக்குற‌ளுக்கு விள‌க்க‌ம் எழுதிய‌வ‌ர் அவ‌ர‌வ‌ர் வாழ்ந்த‌ வாழுகின்ற‌ ச‌முதாய‌ கோட்பாடுக‌ளையும், நெறிக‌ளையும் அடிப்ப‌டையாக‌ வைத்த‌து ம‌ட்டும‌ன்றி த‌த்த‌ம் கோட்பாடுக‌ளையும் ஒட்டி எழுதியிருப்ப‌து வெள்ளிடைம‌லை.இரணடாவது, ம‌த‌ச் சார்புள்ளோர் உரையும், ம‌த‌ச் சார்பிலாதோர் உரையும் ச‌ற்றே மாறுப‌ட்ட‌தாக‌ இருக்கும். ம‌த‌ச் சார்புற்றோரிலும்
வெவ்வேறு ம‌த‌ங்க‌ளைச் சார் ந்தோர் வெவ்வேறு வித‌மாக‌ப் பொருள் கூறியிருப்ப‌தும் தெரிகிற‌து. க‌ட‌வுள் உண்டென்பாரும் இல்லையென்பாரும் அவ‌ர‌வ்ர் இல‌க்குக்கேற்ப‌வே அழ‌காக‌ப் பொருள் கூறியுள்ள‌ன‌ர்.
திருக்குற‌ள் கால‌த்தை வென்ற‌ ஒரு மாபெரும் இல‌க்கிய‌ம். ச‌ம‌ய‌க்கோட்பாடுக‌ளை வென்ற‌ ஒரு இல‌க்கிய‌ம். மானுட‌ம் ஒன்றையே மைய‌ப்பொருளாக‌க் கொண்டுள்ள இலக்கியம். ஆகவே உலகத்தே அவ்வப்போது தோன்றும் அறிஞர் பலரும் மொழி வல்லுனர்க‌‌ளும் திருக்குறளுக்குப் பொருள் எழுதித் த‌ம‌க்குப் பெருமை சேர்த்துக் கொண்டார் எனவே சொல்ல‌வேண்டும்.

திருக்குற‌ளை த‌மிழ் ம‌றை என‌க்கூறுவ‌ர். ( ம‌றைந்து இருந்து உணர்த்துவதால்,ம‌றை என‌ வேத‌த்திற்கு பொருள் கூறுவ‌ர். ) பொய்யாமொழி என்ப‌ர்.

நிலையிலா வாழ்க்கையிலே நிலைத்திருப்ப‌து அற‌ம் ஒன்றே.
அதை உண‌ர்த்துவ‌து திருக்குற‌ள்.

அதைப் போற்றுவோம். திருவ‌ள்ளுவ‌ர் பிற‌ந்த‌ மண்ணில் நாமும் தோன்றினோம் என‌ப் பெருமைப்ப‌டுவோம்."தோன்றிற் புக‌ழொடு தோன்றுக‌ " என்றார் வ‌ள்ளுவ‌ர். வள்ளுவம் சுட்டிக்காட்டும் அறனெறிகளில் ஏதேனும் ஒன்றிலாவது அற‌வ‌ழி வாழ்ந்து புக‌ழ் ஈட்டுவோம்.

Thursday, March 26, 2009

ஈன்றாள் பசி காண்பானாயினும்அண்மையில் நான் புதுப்பதிவு ஏதும் எழுத இயலவில்லை. தமிழ் மண்ணுக்கு மிகத்தொலைவில் அமெரிக்க மண்ணில் ஒரு கிழ்க்குக்கோடியில் ஒரு கொசு போல ஒட்டியிருக்கும் ஒரு மா நிலத்தில் ஒரு ஐந்து மாதம் இருக்கவேண்டிய சூழ்னிலையில் இருக்கும் எனக்கு எப்போது தமிழகத்திற்குத் திரும்புவோம் என்றிருக்கிறது.

இங்கு நிலவும் வெட்ப தட்ப நிலை நான் எனது 67 வருட வாழ்விலே அனுபவித்திராத ஒன்று. குளிர் காலம் விலகும் நிலை. வசந்த காலம் வந்துவிட்டது என்கிறார்கள். ஜூன் வரையில் வசந்தமாம். கதிரவன் ஒளி பிரகாசிக்கிறான், இருப்பினும் வீட்டிற்கு வெளியே பூஜயம் டிகிரி இருக்கிறது. காற்று வேறு. அதற்கான உடைகளை ஒரு வின் வெளி பிரயாணி போன்று அணிந்து செல்கிறோம்.

அமெரிக்க மக்கள் கலாசாரம் நான் இதுவரை கண்டவரை ஒரு அவியலாக இருக்கிறது. பல்வேறு நாட்டு மக்கள், அவரவர் தத்தம் கலாசாரங்கள், உடை, அணுகும் முறை எல்லாம் கலந்து காணப்படுவதால், அமெரிக்க சமுதாயம் உலக மக்கள் யாவ்ரையும் ஒரே இடத்தில் பார்க்க வகை செய்கிறது.

இம்மானிலம் ஒரு பணக்கார மானிலம் என்று தொலைக்காட்சியில் சொன்னார்கள். அமெரிக்க சராசரி ஆண்டு வருமானம் சுமார் 35000 டாலராம். இங்கு 45000 டாலருக்கு மேலாம். சாலைகளில் நடந்து போகும் நபர்கள் வெகு குறைவு.காரில் இல்லாமல் வாழ்க்கை நடத்த இயலாது என்கிறார்கள். பால், மோர், காய்கறி எல்லாம் மொத்தம் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.

அமெரிக்க பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வேலை இல்லாதோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி பொருளாதாரத்தைச் சீர் செய்யும் நோக்குடன் துவக்கியிருக்கும் 780 பிலியன்
தொகையில் பெரும் பகுதி சாலைகள் சீரமைப்பு, கல்விக்கூடங்கள் சீரமைப்பு ஆகியவற்றிற்கு உதவுமாம். இருப்பினும்
வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகமாகும்போது குற்றங்கள் புரிவோரின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்று
நினைப்பதால் ஒரு 50000 காவலர் புதியதாக நியமிக்கப்படவும் இருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன.

குற்றங்கள் என்று சொல்லும்போது, எல்லா நாட்டிலும் அவை ஒன்று போலத்தான் இருக்கும்போல இருக்கிறது.
ஒரு வளப்பமான நாடு, பெரும்பாலானோர் கல்வியறிவு பெற்றவர்கள், ஒரு குறிப்பிடத்தக்க சிறப்புடைய காவல், நீதி அலுவலகங்கள், பாரபட்ச மில்லாத தொலைக்காட்சிகள் இவ்வளவும் பெற்றிருந்தும் குற்றங்களும் மலிந்தே காணப்படுவது போலத் தெரிகிறது. ஒரு பெரிய கடையில் 150 மின்ட் ( மிட்டாய்) திருடியதாக குற்றம் பற்றிய தகவல், , தன் மனைவி தன்னைத் துன்புறுத்துவதாய் காவலர் அலுவலகத்தில் உதவி கேட்கும் கணவர் பற்றிய செய்தி, திடீரென்று தனது பள்ளி மாணவரையே துப்பாக்கியால் சுட்ட நிகழ்ச்சி, தனது மகளையே ஒரு 25 ஆண்டுகள் சிறைப்படுத்தி அவளிடம் 7 குழந்தைகள் பெற்ற செய்தி எல்லாமே இருக்கின்றன. இதெல்லாம் ஏதோ சிறிய சங்கதி என்பது போல, போதைப் பொருள் கடத்தல் மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கு இடையே என்ற தகவல்களும் உண்டு.


ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க‌
சான்றோர் பழிக்கும் வினை
.
என்பார் வள்ளுவர்.

ஆயினும் பசி மேலிடக்குற்றங்கள் அதிகரிக்கும் என்பதும் உண்மை தான்.
நல்வழியில் சொல்லப்படுவது போல: பசி வந்திடப் பத்தும் பறந்து போம் .

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.
ஆனால், பசியின் மேலீட்டால் செய்யப்படும் தவறுகளைக் காட்டிலும், மனிதன் தனது பேராசையால், ஆணவ மேலீட்டால் செய்திடும் குற்றங்கள் மனித நேயத்திற்கு புறமபானவை. மேட் ஆஃப் என்ற ஒரு கனவான் கிட்டத்தட்ட‌
65 மிலியன் ( பிலியனா மிலியனா சரியாகத் தெரியவில்லை ) மக்கள் பணத்தை மோசடி செய்துவிட்டு, நீதிமன்றத்தில்
அவன் மீது சாட்டப்பட்ட 11 குற்றங்களையும் ஒப்புக்கொண்டு சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறான். 75 வயதான்
இவன் மொத்தம் 150 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க குற்றவியலில் வ்கையிருக்கிறதாம்.

இது ஒரு புறமிருக்க, தனி மனிதர் மட்டுமல்ல, மாபெரும் நிறுவனங்களும் பேராசையினால், தாம் மட்டுமல்ல, தமது
நாட்டின் பொருளாதாரத்தையும் சீர் குலைக்க வழி செய்து இருப்பதாக்த் தெரிகிறதாம். பொருளாதார திட்டத்தில் உதவி
பெற்ற இந்த நிறுவனங்களின் அதிகாரிகள், அரசாங்கத்திலிருந்து பெற்ற உதவியில் ஒரு கணிசமான தொகையைத்
தங்களுக்கு போனசாகப் பெற்றார்களாம். மக்கள் கோபம் கொண்டு எழ, அவற்றில் சிலவர் வாங்கிய தொகையைத் திருப்பத்தந்திருக்கிறார்கள்.

கடந்த 25 முதல் 30 ஆண்டுகளில் சராசரி அமெரிக்க குடிமகனின் சேமிப்பு 11 விழுக்காடிலிருந்து
1 விழுக்காடு ஆக குறைந்துள்ளது, என பிரபல டைம் பத்திரிகை கூறுகிறது. எதிர்கால
வருமானத்திலேயே வாழ அமெரிக்க மக்கள் தம்மை பழக்கியிருக்கின்றனர். தேவை இருக்கிறதோ
இல்லையோ அதை க்ரெடிட் கார்டு வழியே வாங்க முடிவதால், இவரில் பெரும்பாலானோர்
தமது வருமானத்தில் பெரும் பகுதியை வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்துவதிலேயே
செல்வழிக்கின்றனர் எனச் சொல்கிறார்கள்.

ஆகாறு அளவீட்டிய‌தாயினும் கேடில்லை
போகாறு அகலாக்கடை


என்னும் வள்ளுவனின் வாய்மொழியில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
வரவுக்குத் தகுந்த செலவு என்பதற்கும் சராசரி அமெரிக்க குடிமகனுக்கும் ச்மபந்தம் இல்லை. ஒவ்வொரு நபரும் ஒரு ஐந்து முதல் 7 க்ரெடிட் கார்டுகள் வைத்திருக்கின்றனர் என நினைக்கிறேன்.

இந்த க்ரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் திவாலாக துவங்கும் நிலையில் இவர்களது வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களுக்குக் கொடுக்கும் மாத உதவித்தொகையும் அதிகரிக்கிறது. இதை சமாளிக்க வேண்டும் எனின் வேலை வாய்ப்புக்களை அதிகப்படுத்தவேண்டும்.
ஆகவே தான் ஓபாவின் பொருளாதாரத்திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு ல்டசத்திற்கு மேல் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் என நம்பப்படுகிறது.அதே சமயம் ஓபாவின் 780 பிலியன் பட்ஜெட் எதிர்கால அமெரிக்க பிரஜைகளைக் கடனாளியாக ஆக்கிவிடும் என்று ரிபப்ளிகன் கட்சி கதறுகிறது.

ஓபாவின் கட்சியோ பொருளாதாரம் மிக மோசமான நிலையில் ஏதேனும் செய்தாக வேண்டும், ஒன்றுமே செய்யாது இருப்பது இன்னமும் பாதாளத்திற்குக் கொண்டு செல்லும் எனச் சொல்லி அதற்கான ஆதரவையும் பெற்றிருக்கிறது.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிரவருவதோர் நோய் என்றார் வள்ளுவர்.
பொருளாதாரச் சீர்கேடு சென்ற வருடமே வருவதற்கான முன்குறிகள் தெரிந்தபோதிலும் போதிய‌ முயற்சிகள் செய்யப்படவில்லை என்பது ஒரு சாரார் வாதம். ஆகவே செய்வதை துரிதமாகச் செய்து எப்படியும் அமெரிக்க பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள். உண்மைதான்.

தூங்குக தூங்கிச் செயற்பால, தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. என்பார் வள்ளுவர்.

செய்யவேண்டிய காரியங்கள் பல வகைப்படும்.
ஒன்று முக்கியமானவை. இன்னொன்று அவசரமாகச் செயல்படவேண்டியவை.

எந்த காரியங்களில் நேரம் ஒரு பொருட்டோ அதனை உடனே செய்து முடிக்கவேண்டும். அவற்றைதான் தூங்காது செய்யும் பணிகள் என்பார் வள்ளுவர்.

எப்படியோ ஓபாமா வெற்றி பெற வாழ்த்துவோம்.

அமெரிக்காவை சொர்க்கம் என்பார்கள்.
சொர்க்கம் போலத் தெரியவில்லை.

அது சொர்க்கமாக இருந்தாலும்

சொர்க்கமே என்றாலும் அந்த நம்ம ஊரு போல ஆகுமா என்று பாடிய இளைய ராஜாவின் குரல் கேட்கிறது.

எப்போது திரும்புவோம் என எதிர் நோக்கி இருக்கிறேன்.

Thursday, January 29, 2009

எனது எனது என்றிருப்பவன் பொருளை யானும் ......
இன்றைக்கு துளசி டீச்சரின் வலைப்பதிவினில் படித்தேன்.
பழைய பழமொழிதான். இருப்பினும் அதை ஒரு கட்டுரையின் முடிவாக‌
எல்லோரும் உணரக்கூடிய வகையில் எடுத்துச் சொல்லியிருக்கிறாகள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது தான் அந்த முது மொழி.


உலகத்திலே பார்க்கப்படும், கேட்கப்படும், நுகரப்படும், உணரப்படும், சுவைக்கப்படும் சுருக்கமாகச் சொல்லப்போனால் ஐம்புலனகளால் அனுபவிக்கப்படும் எல்லாவற்றிற்குமே இது பொருந்தும்.

இனிப்பு பிடிக்கும் என்று ஒருவன் இனிப்பாகவே சாப்பிட்டுக்கொண்டே இருக்க இயலுமா? ஒரு அளவுக்கு மேல் திகட்டி விடுகிறது. இதை பொருளாதார ஆரம்ப பாடங்களில் தியரி ஆஃப் மார்ஜினல் யுடிலிடி என்கிறார்கள். எனக்கு அவல் பாயசம் பிடிக்கும் என்றால் ( நாரதாவின் பின்னூட்டம் நினைவுக்கு வருகிறது) ஒரு இரண்டு கப் சாப்பிடுகிறோம். மூன்றாவது ஓ.கே. நான்காவது ஏதோ வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக சாப்பிடலாம். ஐந்தாவது கப் : ஐயா ! என்னை விட்டு விடுங்கள். நாளை வந்து சாப்பிடுகிறேன். இப்போதைக்கு போதும் என்கிறோம்.

எந்த ஒரு பொருளுமே ஒரு அளவிற்கு மேலே அதன் முதற்கண் தந்திட்ட‌ அனுபவத்தைத்தருவதில்லை. திகட்டிப்போய் விடுகிறது. அலுத்துப்போய் போதும், என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி விடுகிறோம். இதற்கு விதிவிலக்கு ஒன்றே ஒன்று தான் என்கிறார்கள். அது பணம். ஹார்டு கரன்சி. எத்தனை வந்தாலும், சேர்த்தாலும்,மேலும் மேலும் என்றோ ஒன்று மனதை அரித்திக் கொண்டே இருக்கிறது. ஒரு அளவிற்கு மேல் அப்பணத்தினால் எந்த வித அதிக லாபமோ பிரயோசனமோ இல்லை எனினும் அதை மேன்மேலும் சேகரிக்க வேண்டும் என்கிற பேராசை அதிகரிக்கிறது.

ப‌ழைய‌ த‌மிழ்ப்பாட‌ல் ஒன்று ப‌ள்ளிக்கால‌த்தில் ப‌டித்தேன். வ‌ட்டிக்கு ப‌ண‌ம் கொடுத்து பொருள் ஈட்டும் ஒரு வ‌ணிக‌ன் த‌ன‌து க‌டையில் க‌ல்ல‌ப்பெட்டி முன் அம‌ர் ந்து இருக்கிறான். அப்பொழுது வ‌ழிப்போக்க‌ன் ஒருவ‌ன் அக்க‌டை முன் வ‌ ந்து நிற்கிறான். க‌ல்ல‌ப்பெட்டியைப் பார்க்கிறான். பார்த்துக் கொண்டே நிற்கிறான். உன‌க்கு என்ன‌ வேண்டும் ? ஏன் என் கல்லாப்பெட்டியைப் பார்க்கிறாய் ? என‌ வ‌ணிக‌ன் கேட்கிறான்.
வ‌ழிப்போக்க‌ன் ப‌தில‌ளிக்காது சென்று விடுகிறான். அடுத்த‌ நாள் அதே நேர‌ம் அதே வ‌ழிப்போக்க‌ன் அதே போல் அக்க‌டைக்கு முன் வ‌ ந்து ச‌ற்று நேர‌ம் க‌ல்லாப்பெட்டியை பார்க்கிறான். வ‌ணிக‌ன் வ‌யிற்றில் ஏதோ ப‌ய‌ம் பீரிடுகிற‌து. வ‌ழிப்போக்க‌ன் போய்விடுகிறான். அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறான் வ‌ணிக‌ன். இத்த‌னைக்கும் அவ்வ‌ழிப்போக்க‌ன் அப்பெட்டி ப‌க்க‌ம் வ‌ர‌க்கூட‌ இல்லை. க‌டைக்கு வெளியே நின்றுதான் க‌வ‌னிக்கிறான்.

மூன்றாவ‌து நாள். அ ந்த‌ வ‌ழிப்போக்க‌ன் எங்கே வ‌ ந்து விடுவானோ என்று அஞ்சி அஞ்சி சாகிறான் வ‌ணிக‌ன். ச‌ற்று தாம‌தமானாலும் வ‌ழிப்போக்க‌ன் வ‌ருகிறான். அதே இட‌த்தில் அதே போல் க‌ல்லாப்பெட்டியைக் குறி வைத்தாற் போல் பார்க்கிறான். வ‌ணிக‌னால் வாளா இருக்க‌ இய‌ல‌வில்லை.

என்ன‌ இது ! இது என்னுடைய‌ க‌ல்லாப்பெட்டி. இதில் இருப்ப‌து என்னுடைய‌ ப‌ண‌ம். நீ ஏன் தின‌மும் இதை உற்று உற்று பார்க்கிறாய் என்கிறான் வ‌ணிக‌ன்.
அத‌ற்கு வ‌ழிப்போக்க‌ன், " ஐயா ! இது உங்க‌ள் ப‌ண‌மா ! என் ப‌ண‌மென்று அல்ல‌வா நினைத்தேன் !" என்றான். வணிகன் திடுக்கிட்டான். " என்ன உன் பணமா ! உன் பெட்டியா ? என்ன உளறுகிறாய் ! " என கோபமுற்று இரைகிறான். அப்பொழுது அமைதியாக அந்த வழிப்போக்கன் சொல்லுவான்: " ஐயா ! நானும் மூன்று நாட்களாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இது உங்கள் பணமாக இருந்தால், ஒன்று அதை உங்களுக்காக செலவிடவேண்டும், இல்லை, பிறருக்கு தானமாகத்தரவேண்டும்.இரண்டுமே நீங்கள் செய்ய வில்லை. நானும் இந்த ப்பெட்டியிலுள்ள பணத்தை எனக்காகவும் செலவிடவில்லை. தானமும் செய்ய ல்லை.அப்படியிருக்கையில் இது உங்கள் பணமாக இருந்தால் என்ன , என் பணமாக இருந்தால் என்ன ! இரண்டும் ஒன்று தானே என்றான். " எனது எனது என்றிருப்பவன் பொருளை யானும் எனது எனது என்றிருப்பேன் " என்று துவங்குகிறது அப்பாடல். நாலே வரிகள் தான். இருப்பினும் நாள் முழுவதும் அமைதியுடன் வாழ ஒரு வகை, வழி, சொல்கிறது.
Wednesday, January 14, 2009

யாவருக்கும் இயலும்சற்று நேரத்திற்கு முன் ( 10.30 இரவு ) விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி கண்டேன்.
பொங்கல் நல் நாளன்று இது போன்ற நிகழ்ச்சிகள் கிடைப்பது அவ்வளவாக கிடையாது.
ஒரு புத்தக விழா அது. ஈரோடு என நினைக்கிறேன்.

நான் டி.வி. பக்கம் வந்து பார்த்தபோது, உரத்த குரலில் பேசுவது அதுவும் தூய இனிய தமிழில்
பேசுவது கண்டு ஈர்க்கப்பட்டு செவி மடுத்துக்கேட்டேன். ( எனது காதுகள் சற்று மந்தம் )

தமிழ் திரையுலகத்து பிரபல நடிகர் திரு. சிவ குமார் அவர்கள் பேசுக்கொண்டிருந்தார். அவர் நடிப்புத்
திறன் மட்டுமன்றி ஓவியத்திறனும் பெற்றவர் என்பர். இன்றோ அவர் அழகிய அருவி ஊற்று நீர்
சல சல வென ப்பெருக்கெடுத்து ஓடும் புனல் போன்று உரையாற்றிக்கொண்டிருந்தார்.

நூறாண்டு காலம் எல்லோரும் வாழ்ந்திட ஒரு சில கருத்துக்களை எடுத்துக் கூறியபோது
மெய் சிலிர்த்தேன். காரணம். தமிழ் மக்களாகிய நாம் யாவரும் அவசியம் 100 ஆண்டுகள் வாழ்ந்திட‌
ஒன்று செய்தால் போதுமென்றார்.

அந்த ஒன்று திருமூலரில் உள்ளதென்று அந்தப்பாடலை மேற்கோளிட்டு நம் முன்னே நிறுத்தினார்.

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை.
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே. (252)

காலையில் எழுந்தவுடன் இறைவனைத் தொழ ஒரு பசும் இலைதனை அவன் காலடியில் வையுங்கள். ஒரு நிமிடம்
இறைவனை நினையுங்கள். நீங்கள் நாத்திகவாதியாயிருப்பினும்
உங்கள் முன்னோரின் படத்தின் முன் ஒரு பசும் இலைதனை வைத்து அவரை நினைவும் கூறுங்கள்.
அடுத்து, பசுமாடு ஒன்றுக்கு ஒரு வாய் சோறு அல்லது ஏதேனும் உணவு தாருங்கள். பசுவைப்போல் மனிதகுலத்திற்கு உதவிடும் விலங்கினம் ஏதும் இல்லை என்றார் திரு சிவகுமார் அவர்கள். பசுமாடு நமக்கு பால் தருகிறது. அது மட்டுமல்ல, மாடு போடும் சாணம் உரமாகிறது. மாடு ஈன்றும் காளை நிலத்தை உழுகிறது. வண்டி இழுக்கிறது. இதுவெல்லாம் போதாது என்று அதன் கொம்புகளும் உபயோகிக்கப்படுகின்றன. இறந்தபின்னும் அதன் தோல் நமக்குப் பயன்படுகிறது.
ஆகவே மாட்டிற்கு அதுவும் பசுமாட்டிற்கு ஒரு கவளம் தருவது அடுத்த நற்செயல் என்றார்.

மூன்றாவதாக, நாம் உண்கையில் ஒரு கைப்பிடி பிறர்க்கும் (வறியோருக்கும், அண்டியோருக்கும்) தருதல் வேண்டும் என்றார்.

நான்காவதாக, பிறரிடம் பேசும்போது இனிய சொற்களையே பேசுங்கள் என்றார்.

இந்த நான்கினையும் தினசரி பழக்கமாக, வழக்கமாகக் கொண்டவன் நீடூழி வாழ்வான், நூறாண்டு வாழ்வான் என்பதில் ஏதேனும் ஐயமுண்டோ ?

தைப்பொங்கல் திரு நாளன்று நல்வார்த்தைகள் கூறி எல்லோரும் இன்புற்றிருக்கவும் நூறாண்டு வாழ்ந்திடவும் வாழ்த்திய திரு சிவகுமார் அவர்கட்கு தமிழ் வலையுலகம் சார்பாக நன்றி கூறுவோம்.

வாழ்க நுமது நற்பணி.


திரு.சிவகுமார் அவர்கள் சங்க காலத்தில் காணப்பட்ட அத்தனைப் பூக்களின் பெயர்களையும் ஒருமித்து சொன்ன செய்தி என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இன்று காலை, அப்பூக்கள் என்னென்ன என்று கூகுளில் தேடிப்பார்த்தேன். ஒரு தமிழன்பர் தனது வலையில் குறிஞ்சிப்பாடல் ஒன்றில் இப்பூக்களின் பெயர்கள் இருப்பதைச் சொல்லியிருக்கிறார்.

http://www.tamiloviam.com/unicode/09220503.asp

இந்நூலின் 61வது வரியில் தொடங்கி, 95வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் வருகிறது :

 • உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்
 • ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
 • தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
 • செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,
 • உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம்,
 • எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
 • வடவனம், வாகை, வான்பூங்குடகம்,
 • எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம்,
 • பயினி, வானி, பல்இனர்க் குரவம்,
 • பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,
 • விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
 • குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
 • குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம்,
 • போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,
 • செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
 • கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
 • தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
 • குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
 • வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
 • தாழை, தளவம், முள்தாட் தாமரை,
 • ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,
 • சேடல், செம்மல், சிறுசெங்குழலி,
 • கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
 • காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
 • பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,
 • ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
 • அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
 • பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
 • வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
 • தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,
 • நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
 • பாரம், பீரம், பைங்குருங்கத்தி,
 • ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
 • நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
 • மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ...."

ஒன்றை அறிய இன்னொன்று ஊக்குவிப்பானாக ( trigger )
இருக்குமென்று நானறிவேன்.

இத்தனை பூக்களுடன் ' சிரிப்பு ' எனும் பூவையும் சேருங்கள் எனச்சொன்னது
சிவகுமாரது மனித நேய உணர்வுகளைப் பிரதிபலிக்க ஒரு சான்று.Thursday, January 08, 2009

நெஞ்சு என்பதில் ஒற்றைக் கொம்பு எழுத்தை நீக்கிவிட்டால் ?
நஞ்சு இல்லாத நெஞ்சம்

வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளார் உலகில் தோன்றிய மனித குல மக்களுக்கு நெஞ்சகத்தின் உயர்ந்த பண்பு, நன்மைகள் பற்றி எடுத்துக்கூறுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனின் பெருமைப்பாடும் அவரவரது நெஞ்சத்தில் எழும் நல்ல எண்ணம் செயல் இவைகளைப் பொருத்தே அமைகிறது என்று சொல்கிறார்கள்.

உதாரணமாக,

" நன்று செய்வதற்கு உடன் படுவீரேல் நல்ல நெஞ்சம் பெற்றவர் ஆவீர்."

" மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல். "

" வஞ்சமற நெஞ்சினிடை எஞ்சலற விஞ்சுதிறன் மஞ்சுற விளங்கும் புகழ்."

என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள்.

இத்தகைய நல்லதையே நினைப்பதற்கான நெஞ்சகம் நல்லதை விடுத்து அல்லதை = தீயதை, கெடுதலை நினைக்குமேயானால், அது " நெஞ்சு " அல்ல " நஞ்சு " என்கிறார்கள்.

நெஞ்சு என்பதில் ஒற்றைக் கொம்பு எழுத்தை நீக்கிவிட்டால் அது எப்படி நஞ்சாகிறதோ, அதுபோல், நல்லதை நினைக்கும்போது நெஞ்சு. அல்லதை நினைக்கும்போது அது ' நஞ்சு ' ஆகிவிடுகிறது.

எனவே ஒவ்வொரு ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் அமைந்த நெஞ்சு நன்மையான எண்ணங்களை நினைப்பதற்காகத்தானே அன்றி, தீயதை நினைப்பதற்கு அல்ல. எனவே நல்ல நெஞ்சகம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் அதன் இயல்பான, இயற்கையான குணமாகிய சத்துவ‌ குணத்தையே தழுவி, நல்லதை நினைத்து நல்லதையே சொல்லி, நல்லதையே செய்து நன்மைகளைப் பெற்று நலமும் வளமும் மேலோங்கி வாழவேண்டும்.

== குரு பக்கிரிசுவாமி " அருட்சுடர்" மாத இதழ்.

நன்றி: மஞ்சரி மாத இதழ்.

Posted by Picasa