Pages

Sunday, June 26, 2011

காலனின் காலனே!

தமிழ் வலை உலகில் அண்மையில் காணும் சில் புலவர்களின் படைப்புகள் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளன.  சங்க காலப் புலவர்களின் படைப்புகளுக்குத் தமது படைப்புகளும் ஒக்கும் என்பதை எடுத்துக் கட்டும் வண்ணம் வகையில் திருமதி தங்கமணி அவர்களும் திரு சிவகுமார் அவர்கள் கவிதைகளும் இருப்பதை பார்த்தோம். 
எனது நண்பர் திரு குமரன் அவர்கள் அச்சுதனைத் தேடப்போய் தில்லை நடராசனைக் கண்டார். அவன் புகழ் பாடும் அஷ்டகத்தின் சொல் வலிமை, பொருள் வலிமை இலக்கண உயர்வு கண்டு மகிழ்ந்து தனது வலையில் எடுத்துக் கட்டியிருக்கிறார்.  அதைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. உண்மையில் இதயம் பூரித்தது.
5 மாத்திரை உள்ள 4கூவிளச் சீர்கள் கொண்ட) என்னும் சந்தத்தில் இயற்றப்பட்ட இந்த எட்டு செய்யுள்கள் உள்ள இந்த அட்டகம் இலக்கண இலக்கிய நயம் வாய்ந்தது. இதை நமது பாட புத்தகங்களில், தற்கால தமிழ் இசை இலக்கியத்தில் ஆன்மீக உணர்வு எவ்வாறு கலந்துள்ளது என்பதற்கு உதாரணமாகவும் இடத் தகுந்தது.

அதை இங்கே மறுமுறை இடும்பொழுது திரு வேட்டை அனந்த நாராயணன் ( முனைவர் அனந்த் ) அவர்களுக்கும் அதை தனது வலையில் இட்ட திரு குமரன் அவர்களுக்கும் எனது நன்றிதனை தெரிவித்து மகிழ்கிறேன்.

தில்லை நலலோன் அட்டகம்.

திருச்சிற்றம்பலம்அந்தமோ டாதியில் லாததோர் வத்துவாய்
விந்தையாய்த் தோன்றிடும் வித்தகா! நர்த்தனம்
தந்திமித் தாமெனத் தில்லையில் ஆடுவாய்
வந்தெனை ஆட்கொள வாய்ப்புமிங் குள்ளதோ? (1)

நிர்மலன் நிர்ப்பயன் நிர்க்குணன் என்பதாய்
வர்ணனைக் கெட்டிடா மாமறை நாயகா!
கர்மமோ யோகமோ ஞானமோ கற்றிலாத்
துர்ச்சனன் மூடனேன் தோத்திரம் செய்யுமோ? (2)

குற்றமே செய்வதைக் கொள்கையாய்க் கொண்டநான்
பற்றுதற் காகுமோ பங்கயத் தாளினை?
கற்றவர் போற்றிடும் சிற்பரா நற்றவா
எற்குமே கிட்டுமோ ஈடிலா இன்னருள்? (3)

புல்லியர் செய்பிழை போற்றிடா நல்லவன்
தில்லையில் உள்ளதாய்ச் செம்மையோர் பன்முறை
சொல்லுதல் கேட்டுனைத் தோத்திரம் செய்குவேன்
ஒல்லையென் தொல்வினை ஓட்டுதல் உன்கடன் (4)

ஏற்றிடும் ஐயனென் றெண்ணியே உன்புகழ்
போற்றிநான் சார்ந்துளேன் பொற்கழல் நீழலில்;
கூற்றினை அன்றுநீ கொன்றவா! இன்றுநான்
தோற்கிலோ உன்னையே தூற்றுவார் யாவரும்! (5)

பிஞ்சிளம் சந்திரன் செஞ்சடை சூடுவோய்
நஞ்சினை உண்ணுவோய் நர்த்தனம் ஆடுவோய்
தஞ்சமாய்ச் சார்ந்தவர் தம்வினை சாடுவோய்
அஞ்சலென் றெண்னையும் ஆதரித் தாளுவாய் (6)

விண்ணிலுள் நீயுளாய் வேண்டுவோர் தம்மகக்
கண்ணிலும் நீயுளாய் காண்பவை யாவிலும்
நுண்ணியே நீயுளாய் நோக்கிடில் ஐயவோ!
என்னிலும் நீயுளாய் என்னவோர் மாயமே (7)

கூத்திடும் நாத!உன் கோதிலா நாட்டியம்
பார்த்திடும் அன்பரைப் பார்த்துநான் உய்குவேன்
மூத்துநான் வீழ்கையில் முந்தியே வந்தெனைக்
காத்துநீ ஆளுவாய் காலனின் காலனே! (8)
திருச் சிற்றம்பலம்.
வாழ்க திரு அனந்த்
https://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/a8e5102fbf34e2d4?hl=es&pli=௧
அவர்கள் வலையில் இருந்து சில வரிகள் :

"பிறிதொரு இழையில் சிவசிவா சுப்பிரமணியன் ’ஸ்த்ரக்விணீ’ (  உள்ள சங்கர பகவத் பாதரின் ’அச்யுதாஷ்டகம்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எட்டுச் செய்யுள்களைக் கொண்ட அதன் சந்த ஓசையின் அழகு. வாய்விட்டுப் படிக்கையில் புலப்படும். காட்டாக::

அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
க்ருஷ்ணதா மோதரம் வாசுதே வம்ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகீ நாயகம் ராமசந்த் ரம்பஜே

இச்சந்தத்தையொட்டி, தில்லை நடராஜனை முன்னிறுத்தி அமைத்த எட்டுச் செய்யுள்கள்:"

வழக்கம்போல் சுப்பு தாத்தா இதை பாடுவதில் சுகம் காண்கிறார். தில்லை நல்லோன் அட்டகம்