Pages

Friday, April 25, 2014

வன தோகை மயிலே

வனத் தோகை மயிலே !!
உன் மேலமர்ந்த
மால் மருகன் முருகன்
புகழ் பாட
வந்திடுவாய் . என் நெஞ்சில்
நின்றிடுவாய். மயிலே..

ஆறாத துயரத்திலே அமிழ்ந்திருந்தேன்.
ஆறு படை வீடு எல்லாம் சுற்றி வந்தேன்.
ஏறாத மலை எல்லாம் ஏறி நின்றேன்.
ஏங்கி நின்றேன் என் முருகன் எங்கு என்றேன் .

வனத் தோகை மயிலே !!

வயலுர் விராலிமலை வலம் வந்தேன்.
வழியிலே மயிலே !! உனைக் கண்டு நின்றேன்.
உன் மேல் அமர்ந்து சென்ற முருகன் அவன்
உலகம் சுற்றியபின் எங்கு சென்றான் ?

வனத் தோகை மயிலே !!

சூரனை வதைத்திடவே  செந்தூர் சென்றானோ ?
ஊர் உலகம் சுற்றியபின் பழனி சென்று   அமர்ந்தானோ
வள்ளிதனைக் காணவே வனப் பக்கம் சென்றானோ ?
வேதப்பொருள் சொல்லிடவே வேரகம்  நின்றானோ. '.

..வனத் தோகை மயிலே !!

தனக்கெனவே காத்திருக்கும் தெய்வானை மணமுடிக்க
தாலிச் சரடுடனே பரங்குன்றம் பறந்தானோ ?
காடு மலை சுற்றியபின்  தணிகை மலை அடைந்தானோ
காவடிகள் கூடச் சென்று கதிர்காமம் கண்டானோ

 வனத் தோகை மயிலே !!

கண்டி வழி செல்கையிலே கண்பட்ட காட்சிகள்
கண்டிரா கொடுமைகள், கண்டு மனம் நொந்தானோ ?
தனக்கென தேசம் இல்லா தமிழருக்கோர் வாழ்வளிக்க
வேலுடனே வந்து அவன் வழி ஒன்று சொல்வானோ ?

வனத் தோகை மயிலே !!

**********************************************************************************

இந்தப் பாடலை சுப்பு தாத்தா பாடுவதை
நீங்கள் அவரது இன்னொரு தமிழ்  வலையான

கந்தனைத் துதி


  இவ்விடத்திலே கேட்கலாம்.

*********************************************************************************

பாட்டு எழுதி நானும் பல காலம் ஆயிற்றே.
என நினைத்தேன்.
அடுத்து மனதில் தோன்றிய வரிகள்

தமிழ்க் கடவுள் முருகன் மேல் அமைந்தன.

Monday, April 21, 2014

தஞ்சையம்பதிக்கு ஒரு தனி மடல்.

பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள் நினைவு நாள் இன்று
முக நூலில் கண்ட படம்.

என இன்று 
நினைவு கூர்ந்த 
எனது தஞ்சை அன்பர் நண்பர் 
திரு துரை செல்வராஜ் அவர்களுக்கு வணக்கம். 


நலம். நலம் தானே.

தமிழ் உலகம் என்றென்றும் போற்றும் பாரதி தாசன் தமிழ் உள்ளவரை வாழ்வார் என சொல்லியது இன்று உலகெங்கிலும் எதிரொலிக்கிறது.

அவர் நினைவு நாள் அன்று அவர்தம் நினைவைப் போற்றும் வகையில் அவரது பாடல்களையும் அவரது மகன், பேரன்களுடன் தாங்கள் சந்தித்த விவரமும் தங்கள் பதிவிலே கண்டு மிகவும் மகிழ்ச்சி.

கரந்தை தமிழ்ச் சங்கத்தில் பாரதி தாசன் பேசி இருக்கிறார் என்ற செய்தியும் எனக்கு தஞ்சை வாசி என்ற முறையிலே மிக்க மன நிறைவு தந்தது.


என்றோ ஒரு கால கட்டத்தில், திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு பா எடுத்து அதற்கு ஆங்கிலத்தில் அதே கருத்தோட்டத்தில் "தித்திக்கும் முத்துக்கள் " என்று ஒரு நூல் வெளி வந்தது  அதற்கு என்னால் இயன்ற ஆங்கில மொழி பெயர்ப்பு செய்தமை குறித்து மகிழ்வுற்ற, எனது குடும்ப நண்பர் காலஞ்சென்ற திரு அரசிறைவன் அவர்கள் பாரதி தாசன் அவர்களின் குடும்ப விளக்கு எனும் பாடல் நூலினை பரிசாகத் தந்தார். அது வரை நான் பாரதி தாசனின் கவித்வத்தை உணர்ந்ததில்லை. அதை படித்து முடித்தபின்னோ, நான் பாரதிதாசன் புலமைக்கு தமிழகம் என்றென்றும் கடமைப் பட்டுள்ளது எனவும் உணர்ந்தேன்.

அந்த  நாள் முதல் இன்று வரை

பாரதி தாசனின் தமிழுக்கு யான் அடிமை என்றால் அது மிகை அல்ல.

அவர் செய்த பல தொண்டினிலே எனக்கு மிகச் சிறந்ததாகத் தெரிந்தது சமுதாய சீர்திருத்தம்.

 அதில் ஒரு அத்தியாயமாக, பெண் கல்வி

 பெண்கள் கல்வி எவ்வாறு முக்கியம் என்பதை அவரது குடும்ப விளக்கு எடுத்துக்காட்டுகிறது.  

அதில் இருந்து ஒரு பகுதி.

கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை
நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்!
(குடும்ப விளக்கு)
 முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழு மதி போல் அந்நாட்களில் கவிதை உலகில் பாரதி தாசன் கவிதைகள் பிறந்தன,. அவரின் சிறப்பினை இங்கும் பார்க்கவும்.


நீங்கள் குறிப்பிட்ட பாரதி தாசன் பாடல்களை இங்கே இணைத்துள்ளேன்.

நம்ம வீட்டு தெய்வம்.
எங்கு காணிலும் சக்தியடா.


ஓர் இரவு படத்தில் 
துன்பம் நேர்கையில் 
எம். எஸ். ராஜேஸ்வரி பாடியது. 

பஞ்சவர்ணக்கிளி படத்தில் சுசீலா பாடியது .
தமிழுக்கு அமுது என்று பேர். 


கலங்கரை விளக்கம் என்ற படத்திலோ சங்கே முழங்கு என்று உலகெலாம் தமிழ் சங்கை ஊதி பெருமைபடுபவர் பாடுபவர் சீர்காழி கோவிந்த ராசன் அவர்கள். 
பாரதி தாசனை நாம் இன்று நினைவு கூருவதை
 தமிழுக்கு நாம் குரல் கொடுக்கும் சங்காக கருதுவோம்.

நன்றி வணக்கம்.

சுப்பு தாத்தா.
என்னுடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ( எனது தாத்தா எனக்கு இட்ட பெயர்)

Monday, April 14, 2014

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.


அனைவருக்கும் 
எங்கள் 
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.