Pages

Wednesday, December 31, 2008

புத்தாண்டு சபதம் என்ன எடுத்துக்கொள்வோம் ?

2009
புத்தாண்டு உறுதிமொழி
என்ன எடுத்துக்கொள்வோம் ?

புத்தாண்டு 2009 ஜனவரி திங்கள் முதல் நாள்
எல்லோரும் எல்லோரையும் வாழ்த்தும், வாழ்த்தி வணங்கும் ஆசி பெறும் திரு நாள்.

இனியதோர் புத்தாண்டு பிறக்கும் நல்வேளையில் உலகத்து தமிழர்களுக்கெல்லாம் புத்தாண்டு நல் வாழ்த்துக்களும்
எனது ஆசிகளையும் கூறும் அதே தருணம் அவர்தமக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கலாம் என நினைத்தேன்.

எல்லோரும் புத்தாண்டு பிறந்த உடனே, ஒரு உறுதி எடுத்துக் கொள்வர். அதைக் கடைப்பிடிப்போமென‌
இன்னொரு உறுதியும் கொள்வர்.

இந்த வருடம் என்ன உறுதி எடுத்துக் கொள்வது ?

முக்காலத்துக்கும் பொதுவாம் தமிழ் மறையாம் திருக்குறளிலிருந்து ஒரு பத்து குறட்பாக்களை ஈண்டு தந்து
அவற்றினில் ஏதேனும் ஒன்றில் புதைந்திருக்கும் கருத்தினை அறிவுறைதனை இவ்வருடம் முழுவதும் இம்மி குறையாது கடைப்பிடிப்போமென‌ உறுதி கொள்ளலாமா ?

முதலாவது:
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ' இவன் தந்தை
என் நோற்றான் கொல்" எனும் சொல்.

இரண்டாவது:
கற்க கசடுஅறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.

மூன்றாவது:
தேறற்க யாரையும் தேராது, தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

நான்காவது:

ஆக்கம் கருதி,முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடையார்.

(லாபமே குறிக்கோளாகக் கொண்டு தமது முதலையும் இழக்கும் காரியத்தை
அறிவுள்ளோர் செய்ய மாட்டார்.)


ஐந்தாவது:
நெடு நீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடு நீரார் காமக் கலன்.

ஆறாவது.:
ஒல்வது, அறிவது அறிந்து, அதன் கண் தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

ஏழாவது:
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவது ஓர் நோய்.

எட்டாவது:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.

ஒன்பதாவது:
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

பத்தாவது:
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன்:
ஆகுல நீர பிற.

நன்றே செய் அதை இன்றே செய் என்பார்கள்.
நமக்கு நல்லது என்று தோன்றுவதை இன்னொரு கணத்துக்கு ஒத்திப்போடவும் கூடுமோ ?

யார் எதை எடுத்துக்கொள்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தப் பத்துக்குறட்பாக்கள் மட்டும்தான் என்றில்லை. எந்த ஒரு குறளையும் எடுத்து
அது புகட்டும் பண்பினையும் நன்னெறிதனையும் மனதில் இறுத்தி வாழ்வினை
வளம் பெறச்செய்வோமாக.

Friday, December 05, 2008

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்திருவாசகம்.


தில்லையில் அருளிய அச்சுப்பத்து

ஆனந்தம் உறுதல்.

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

இசை ஞானி இளையராஜா இன்னிசையுடன்

courtesy: kskogulan from www.youtube.com
இப்பதிகத்தின் பொழிப்புரை இப்பதிகத்தின் கீழ் தரப்பட்டுள்ளது.
நன்றி: ஸ்ரீ சுவாமி சித்பவானந்தர். ஸ்ரீ ராமகிருஷண தபோவனம்


புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

அம்மநாம் அஞ்சு மாறே.
அம்மநாம் அஞ்சு மாறே. 1


வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.2

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.3


கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.4

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.5


வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.6


தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.7

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.8

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.9

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 10


1 சிவனைக்குறித்து சிறப்பு அறிவு இலாதலால், அவனிடத்து ஒன்றாத எவரிடமும்
பழகுதல் ஒவ்வாது.

2 ஈசனிடம் பக்தி இல்லையேல் வரும் கேடு கொலைக்கருவியினால் வரும் கேட்டைவிட‌
பயங்கரமானது. கொடியது. உலகப்பற்றுடையார் உறவு பக்தியின் மேன்மைக்கும்
வளர்ச்சிக்கும் ஒவ்வாது.

3 சிலரோ பக்தியின் மேல் நிலைக்குச்சென்றபின் இறங்கிவிடுவர். இவர்களுடன் நேசம்
பொருந்தாது.

4 திரு நீறு போன்ற சிவ சின்னங்கள் அணிவது சாதனத்துக்குத் துணை. ஆதலின்
சின்னங்களைப் புறக்கணிக்கலாகாது. சிவனிடத்து பக்தியும் சிவ சின்னங்களிடத்து
பக்தியும் ஒன்றே.

5 மலர்கள் போன்ற பூசைக்குரிய சாதனங்களை ப்பயன்படுத்துவது பக்தியை வளர்ப்பதற்கோர்
உபாயமாம். மலர்களைக் கொய்ய வருகையில் தடைகள் ஏற்படினும் பக்தர் அதை
பொருட்படுத்தமாட்டார்.

6 ஒன்றுமித்த கூட்டுறவு பக்தருக்கும் பக்திக்கும் பேருதவியாம். பக்தரைப் பழிப்போரும்
உலகில் உண்டே. அன்னவருக்கு அஞ்சி தன் பக்தி சாதனங்களை மறைப்பது
முறையாகாது.

7 ( நிந்தையும் புகழ்ச்சியும் பக்தனுக்குப் பொருளற்றவை. இறப்புக்கு அவன்
அஞ்சுவதில்லை.)

8 விவேகம் உடையவர் உறவு வேண்டும் அது போல விவேகம் அற்றவர் உறவு உதவாது.
யானைக்கும் புலிக்கும் விவேகம் உள்ளவர் அஞ்சார். ஆனால் விவேகம் அற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பர்.

9 எதைக்கண்டும் அஞ்சுபவர் யாருக்கும் உதவார். சிறப்பான ஆத்ம சாதனமான பக்திக்கு
அன்னார் உதவிடார்.

10 யான் கொடிய ஆயுதத்திற்கு அஞ்சமாட்டேன். மரணத்துக்கு அஞ்சமாட்டேன்.
' சந்திரசேகரனாகிய சிவனைத் தீவிரமாக வழுத்தும் ஆண்மையடையாதவனுக்கு அஞ்சுவேன் 'சந்திரசேகரனாம் சிவனைத் தீவிரமாக பக்தி செய்யாதவனுக்கு அஞ்சுவேன்.