Pages

Friday, May 01, 2009

கனியிருப்பக்காய் !!!



அண்மையில் ரசனைக்காரி அவர்களின் வலைப்பதிவு காணும் வாய்ப்பு கிடைத்தது. மொழியின் தோற்றமும் தன் பரிணாம வளர்ச்சியும் அம்மொழியினை செப்பிடுபவர்தம் கடமையினைப்பற்றியும் அழகாக விளக்கியுள்ளனர்.

மனிதர் யாவரும் ஒருவருக்கொருவர் தம் எண்ணக்கதிர்களை மற்றோர் பால் செலுத்தும் கருவியாக மட்டும் மொழியை நினைத்திடாது, மனித சமூகமிடையே அன்பும், ஆதரவும், பண்பும் பெருக உதவிடுவதே மொழி என எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று
.

என்பார் வள்ளுவப்பெருந்தகை.

அக்கனியிலும் சுவைத்து இன்புறும் கனியாக மொழி அமைதல் வேண்டும் என வலியுறுத்துகிறார் ரசனைக்காரி அவர்கள்.

அவர்களது சொற்களிலே:

//நம்முடைய மொழி வன்னொலி எழுப்ப அல்ல..இன்னொலியை அலைவரிசையாக்க..நம்முடைய பாஷை அசைவ சொற்களை உபயோகிக்க அல்ல..அன்பு நெறியை வலியுறுத்த..சமூகத்திற்கும்,வரும் சந்ததியருக்கும் நம்மால் முடிந்த உதவி இதுவாகட்டும்.


அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்”. //


ஒரு சொல்லைச் சொல்லிடில் அது பயனளிப்பதாக அமைதல் வேண்டும்.


சொல்லுக சொல்லைப் பயனடைய, சொல்லற்க,
சொல்லிற் பயனிலாச் சொல்

உலகம் இன்றுள்ள நிலையிலே அன்பில்லாத எந்த சொல்லுமே அது யார் பேசினாலும் எந்தச் சூழ்னிலையில் பேசப்படினும் பயனிலாச் சொல்லே.

அந்த அன்பு எப்படி தானாகவே விளையுமா ?

விளைச்சல் பூமியின் வளத்தைப் பொருத்ததன்றோ ? விதையின் தரத்தைப் பொருத்ததன்றோ ? பாய்ச்சப்படும் நீரின் தன்மையைப் பொருத்ததன்றோ ?

ஆகவே சொற்கள் அன்புவயப்பட்டதாக அமையவேண்டின், மனம் தூய்மைப்படுதல் தேவை. எந்த வித‌ எதிர்பார்ப்புமன்றி பிறர் நலம் பேணுவதே கடமையாகவும், தம் பிறப்பின் நோக்கமாகக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.

வள்ளலார் அதுபோல் திகழ்ந்தார்.

எல்லோரும் வள்ளலாராக இயலுமா?

இயலாது எனினும் அதில் ஒரு விழுக்காடு மனமாவது நமக்கு வேண்டும் என நாம் விரும்பினால், அந்த விருப்பு வெறுப்பு யாவையும் கடந்த இறைவன் மேல் நமக்கு பற்று வேண்டும்.

வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு
யாண்டும் இடுமபை இல.


இவ்வுலகத்தே காணுறும் இடும்பை யாவையும் அகன்றிட, நற்சிந்தனைகள் தோன்ற, நல்ல எண்ணங்கள் வழியே நல்ல வார்த்தைகள் சொல்லிட, ஆண்டவனே துணை புரியவேண்டும்.

இறைவனைப் போற்று முகத்தான், வாழ்த்தி நல்வழி பெற நமக்கு, தங்கமணி அவர்களின் வலைப்பதிவு துணையாக நிற்கிறது.


மேலும் தமது மார்ச் 24 பதிவில் எழுதுகிறார்:
வாழுகின்ற எல்லா உயிர்க்ளிடத்துமே மானிடம்தான் உயர்பிறப்பு.
ஆகவே, மானுடனாகப் பிறந்த யாவரும் இவ்வுலகில்
எவ்வுயிர்க்கும் நன்று செய்வோம் என சூளுரைக்கவேண்டும்.
இதற்கு வழி இறைவனடி சேர்வது தான் என்பார்.

அவர் எழுதிய பா இதோ !


ஊழின் வலிமையிது;உற்றிடும் பல்பிறப்பில்
வாழும் உயர்பிறப்பு மானிடம்தான்!---தாழுமோ?
நல்லுலகில் எவ்வுயிர்க்கும் நன்றுசெய்வோம்!என்றென்றும்
வல்லவன்சீர்ப் பாதம் மருந்து.




அங்கே செல்வோம். இறைவனை துதிப்போம். நல்ல எண்ணங்கள் பெறுவோம்.

மேடம் தங்கமணி இயற்றிய பாடல்கள் மூன்றினை நான் என்னால் இயன்றவரை பாட
முயன்றிருப்பதை காண்க









http://kavidhaithuligal.blogspot.com/

4 comments:

  1. பல நேரங்களில் பேசுவதையே தவிர்த்துவிடுவேன் ஏனென்றால் அவர்கள் மனநிலை நாம் சொல்லும் சொல்லின் அர்த்தம் என்று பல நிலைகளை கடந்து இன்சொல் என்பது எதிரில் நிற்பவரை பொருத்தது.
    என்னுடைய மிகப்பெரிய பலம் என்று கருதுபவது நான் காக்கும் மௌனமே.அது எனக்கு இன்சொல்.

    ReplyDelete
  2. ஒரு கோணத்தில் நீங்கள் சொல்வது மிகவும் சரியானதாகவே தோன்றுகிறது.

    நாம் யாரிடம் பேசுகிறோமோ, அவர்கள், என்ன கேட்கப்படுகிறது என்பதை பொறுமையுடன் கேட்பார் எனத்தோன்றாவிடின் அவ்விட‌த்து மெளன‌ம் சாதிப்ப‌தும் ஒரு வகையில் சிற‌ந்த‌தே.

    சுப்பு ரத்தினம்
    http://thesilentzonewithin.spaces.live.com

    ReplyDelete
  3. திரு.சூரி அவர்களுக்கு,
    வணக்கம்.நீங்கள் பாடிய
    மூன்று பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன்.
    உங்கள் இசையில் பக்தியும்,ஆர்வமும் தெரிகின்றன!
    இசையமைத்துப் பாடும் உங்கள் சேவைக்கு என்
    சிரம்தாழ்ந்த நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  4. அன்புள்ள சூரி ஐயா,

    குமரன் ஐயா அடியேனுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து கௌரவித்தார், அதே விருதை அடியேன் தங்களுக்கு வழந்குகின்றேன்.

    விருதைப்பற்றி அறிய செல்லுக இங்கே
    விருதுவாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி