Pages

Saturday, November 24, 2007

வெளிச்சம் ஏதேனும் தெரிகிறதா ?

எனது வலைப்பதிவில் சூர சம்ஹாரம் பற்றிய தகவலைப் படித்த ஒரு நண்பர்
உங்கள் வலைப்பதிவின் தலைப்புக்கும் ( தமிழ் மறை, தமிழர் நெறி ) இந்த ப்பதிவிற்கும்
என்ன பொருத்தம் என கேள்வி கேட்டிருக்கிறார்.

இதை விளக்கவே எழுதுகிறேன்.

விளம்பரம் ஒன்று ( இந்தியா ‍ பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் போது) காட்ட ப்படுகிறது.
மனிதனின் பொருளாதார வாழ்வினை அறத்தே நோக்குகையில் உள்ளங்கனி நெல்லிக்கனி போல விளக்குகிறது.
இறக்கும் தருவாயில் உள்ளவரிடம் அவரது வாரிசு ஒருவன் அவரது உயிலில் மன்றாடி 10000 என்பதை இன்னொரு ஸைபர் சேர்க்கசொல்லி, 100000 ஆக்கச்செய்கிறான்.
அவன் அப்பாடி என்று மகிழ்வுறும் வேளையில், அந்தோ பரிதாபம், கூரையிலிருந்து ஓர் நீர்த்துளி அந்த உயிலின் மேல் சொட்டுகிறது.. 100000 என்னும் எண்ணில் உள்ள 1 அழிந்து போகிறது. வாரிசு திரும்பவும் முதியவரை நோக்க அவர் இறந்து போயிருக்கிறார்.
தன் தலை விதியை நொந்து அழும் காட்சிதனை, தத்ரூபமாக தந்திருக்கிறார்கள்.

இந்த காட்சியிலிருந்து நாம் பெறும் பாடம் என்ன?
வள்ளுவர் சொன்ன குறட்பா தான்.

" பரியினும் ஆகாவாம் பால அல்ல ; உய்த்துச்
சொரியினும் போகா தம. " ( அறம் ‍ 38 ‍ 6 )

நமக்கு (ஊழினால்) உரிமை இல்லாதவற்றினை எத்தனைதான் வருந்திக்காத்தாலும், அவை
நம்மைவிட்டு நீங்கும். (அதே சமயம்) நமக்கு எவை நமக்கு உரியதோ அவை நாம் வேண்டாம் என த்தள்ளி விடினும் நம்மை விட்டு நீங்கா.

நீதி என்ன? எது நாம் நமது அறிவு, உடல் முயற்சியினால் ஈட்டுகின்றோமோ, அது நம்மிடம் நிலைத்து நிற்கும். மற்றவை நம்மை விட்டு நீங்கிவிடும்.

நம்மிடம் நிலைத்து நிற்பதாகக் காணப்படும் செல்வத்தையே நாம் ஊழ்வினைகளுக்குட் பட்டுத்தான் அனுபவிக்க இயலும்.

வள்ளுவர் கூறுவார்:

" வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது " ( அறம் 38 7 )

எவ்வளவு தான் ஒருவன் கோடிக்கணக்கில் செல்வத்தைச் சேர்த்து வைப்பினும், இறைவன்
நமக்கு எவ்வளவு என வகுத்து வைத்துள்ளானோ அந்த அளவு தான் அந்த செல்வத்தினை
அனுபவிக்க இயலும்.

வள்ளுவப்பெருந்தகை நியாயமான வழிகளில் பொருள் ஈட்டவேண்டிய அவசியத்தை
வற்புறுத்திக் கூறுகிறார்.

இன்றைய உலக வணிக சந்தையிலே வள்ளுவனின் நீதிக்குரல் கேட்கப்படுகிறதா? எல்லாத்துறைகளுமே வணிகமாகிவிட்டன. உலகத்தில், ஏன் ? புண்ணிய பூமி என நாம் சொல்லிக்கொள்ளும் பாரத நாட்டிலேயே, எல்லாவற்றிலேயும், அதர்ம வியாபார வழிகள் நுழை ந்து விட்டன என்பதைச் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

இதிலிருந்து வெளிவர வழி இருக்கிறதா ? வெளிச்சம் ஏதேனும் தெரிகிறதா ?


நமது மனதிலே ஏற்படும் அறவழிக்கு அப்பாற்பட்ட எண்ணங்கள், அந்த எண்ணங்களால்
உந்தப்படும் பேச்சுக்கள், செயல்கள் தான் அசுரர் ஆவர்.

சூரபத்மன் வேலனால் கொல்லப்படுவது போல, மனதின் பாற்‌எழும் தீய‌ எண்ணங்கள்
முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி