Pages

Sunday, May 18, 2008

முறைசெய்யா மன்னவன்



கொடுமையான சூறாவளிக்காற்று, வெள்ளத்தினால் அவதியுறும் லக்ஷக்கணக்கான‌
பர்மிய நாட்டவரை பசியிலிருந்தும் பட்டினியிருந்தும் காப்பாற்ற பல்வேறு நாடுகள்
உதவ வரும்போதும் அந்த உதவியை மறுக்கின்ற பர்மீய அரசாங்கத்தின் மானுட‌
நெறி கோட்பாடு தான் என்ன ?

இது பற்றி எண்ணுகையில் இந்த பதிவு எழுதினேன்.



Click here to know what's happening in Burma.


http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7406801.stm


A Crime against humanity

********************************************************************************



நமது தமிழ் பண்டைய இலக்கியங்களில் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்திற்கும் உள்ள பணிகள்,
கடமைகள் பற்றி விரிவாக, விளக்கமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது

ஒரு தந்தை தனது மகன்களுக்குச் செய்யவேண்டிய கடமை, மகன் தன் தந்தைக்குச் செய்யவேண்டியவை,
கல்வி புகட்டுவோர் பால் கற்போர் காட்டவேண்டிய மரியாதை, கடமை பற்றி மட்டும் நில்லாது ஒரு குடி மகன் தனது அரசுக்குச் செய்யவேண்டிய கடமைகள் பற்றியும், அரசு தன் குடிமக்களுக்குச் செய்யவேண்டிய
கடமைகளைப்பற்றியும் வெகுவாக எடுத்துரைக்கிறது.

ஒரு அரசு குடிமக்களிடம் வரி வசூல் செய்வது எதற்காக ? அம்மக்களைக் காப்பதற்காக. பொது நலம்
கருதி தன்னலம் விழையா மன்னரே நல்லாட்சி செய்யும் அரசரென காலம் சொல்லும். தனது நாட்டில்
நிகழும், நிகழப்போகும் குற்றங்களைச் சரிவர ஆராய்ந்து நீதி செய்யாத அரசன் ஒருவன் தன் நாட்டையே
இழப்பான் என்று சொல்கிறார் வள்ளுவர்.

நாள் தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள் தொறும் நாடு கெடும்.


இதில் சொல்லப்பட்ட பல வினைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை:
முதற்கண் மக்களது குறைகளைக் கண்டறிய வேண்டும். அவர்கட்கு நன்மை பயப்பது எது தீயது எது என்பதை
அவர்கள் வாயிலாகவே அறிதல் அவசியம். ' நாடி ' என்கிறார் வள்ளுவர். அதையும் நாள் தொறும் எனச்சொல்வதால், அத்தகைய மக்கள் தொடர்பினை தொடர்ந்து செய்தல் அவசியம் என்பார். தமக்குக் கிடைத்த‌
தகவல்களை ஆராய வேண்டும். மக்கள் விரும்புதல் என்ன ? மக்கள் வெறுப்பது என்ன ? என்பதை எல்லாம்
அறிதல் தேவை. அவர்கள் எதிர்கொள்ளப்போகும் இன்னல்கள் என்னென்ன என்பதையும் ஆராய்தல் வேண்டும்.
வருமுன் காப்போம் எனச்சொல்வது மிகப்பொருத்தம். ஒரு வியாதி வந்தபின் அதற்கு மருந்து கொடுப்பது முக்கியம் எனில் அது வருமுன்னே அந்த வியாதியைத் தடுத்து மக்களை அண்ட விடா வண்ணம் செய்வது மிகவும்
முக்கியம்.

நல்ல அரசாட்சி எது என்பதை விளக்குகையில், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை, மக்கள் படும் இன்னல்களை உணர்ந்து, எவரிடத்தும் தயவு தாட்சண்யம் பாராது நடு நிலையில் நின்று செயல் படுவதே என்பார் வள்ளூவர்;

ஓர்ந்து கண்ணோடாது, இறை புரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை.

ஒரு சமுதாயத்தில் குற்றங்கள் வலுக்குமாயின், நீதி முறை தவறுமாயின், மக்கள் அரசனை அன்றி எவரை
நாடுவர் ? வள்ளுவர் சொல்வார்: மக்கள் மழைக்காக வானை நோக்குவது போல், நீதி நிலை நாட்டு வதற்காக மக்கள் அரசாட்சிதனையே எதிர்பார்ப்பர்.

ஒரு அரசு நீடிப்பதும் நீர்த்துப்போவதும் மக்கட்பால் அதற்குள்ள அன்பினையே மையமாகக் கொண்டுள்ளன என்பதைச் சொல்லிடவும் வேண்டுமோ ?

5 comments:

  1. மறை சொல்லும் முறை அருமை!

    ReplyDelete
  2. மறை சொல்லித்தான் இருக்கு!
    அதையெல்லாம் படித்து கரை கண்டதா சொல்லிக்கிறவங்களே நல்ல ஆட்சியை கொடுக்க முயற்சி பண்ணலையே! காலம் கலி காலம். ஏதோ நம்மால முடிஞ்சத பண்ணிக்கொண்டு போகலாம் போல இருக்கு.

    ReplyDelete
  3. தங்களின் நூலறிவு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    காணாது வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
    கோணாமல் வாய்திறக்கக் கூடாதே -நாணாமல்
    பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
    கீச்சுக்கீச் சென்னும் கிளி!

    அக்கிளியின் நிலையில் நானிப்போதுள்ளேன் -அகரம்.அமுதா

    ReplyDelete
  4. அகரம் அமுதா ! வருக வருக !!
    இன்று ஓர் அகத்தியர் வரவா ?
    ஆச்சரியம் ! ஆனந்தம் !

    இலக்கணமில்லா இலக்கியமும்
    இனிப்பில்லா பழ ரசமும் = கால்
    உப்பிலாக் கஞ்சியும்
    ஒன்றெனவே நீ அறிவாய் =
    என்றுரைத்த என் ஆசான்
    ஐயம்பெருமாள் கோனாரின்
    அன்பு முகம் என் நினைவில்
    வந்து சென்ற விந்தைதனை
    என் சொல்வேன் !!


    பணிவுடன்
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    பி.கு.: தங்கள் பதிவுக்கான சங்கிலியை எனது பதிவில் அமைக்கத்
    தங்கள் அனுமதியை எதிர் நோக்குகிறேன்.

    ReplyDelete
  5. அய்யா! தாங்கள் இப்படியோர் பதிலை என்னிடம் எதிர்நோக்கலாமா? என் பதிவிற்கான சங்கிலியைத் தங்களின் வலைப்பக்கத்தில் இணைப்பது என்பது எனக்குக்கிடைத்த பெரும் பேறு அல்லவா?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி