Pages

Thursday, January 08, 2009

நெஞ்சு என்பதில் ஒற்றைக் கொம்பு எழுத்தை நீக்கிவிட்டால் ?




நஞ்சு இல்லாத நெஞ்சம்

வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளார் உலகில் தோன்றிய மனித குல மக்களுக்கு நெஞ்சகத்தின் உயர்ந்த பண்பு, நன்மைகள் பற்றி எடுத்துக்கூறுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனின் பெருமைப்பாடும் அவரவரது நெஞ்சத்தில் எழும் நல்ல எண்ணம் செயல் இவைகளைப் பொருத்தே அமைகிறது என்று சொல்கிறார்கள்.

உதாரணமாக,

" நன்று செய்வதற்கு உடன் படுவீரேல் நல்ல நெஞ்சம் பெற்றவர் ஆவீர்."

" மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல். "

" வஞ்சமற நெஞ்சினிடை எஞ்சலற விஞ்சுதிறன் மஞ்சுற விளங்கும் புகழ்."

என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள்.

இத்தகைய நல்லதையே நினைப்பதற்கான நெஞ்சகம் நல்லதை விடுத்து அல்லதை = தீயதை, கெடுதலை நினைக்குமேயானால், அது " நெஞ்சு " அல்ல " நஞ்சு " என்கிறார்கள்.

நெஞ்சு என்பதில் ஒற்றைக் கொம்பு எழுத்தை நீக்கிவிட்டால் அது எப்படி நஞ்சாகிறதோ, அதுபோல், நல்லதை நினைக்கும்போது நெஞ்சு. அல்லதை நினைக்கும்போது அது ' நஞ்சு ' ஆகிவிடுகிறது.

எனவே ஒவ்வொரு ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் அமைந்த நெஞ்சு நன்மையான எண்ணங்களை நினைப்பதற்காகத்தானே அன்றி, தீயதை நினைப்பதற்கு அல்ல. எனவே நல்ல நெஞ்சகம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் அதன் இயல்பான, இயற்கையான குணமாகிய சத்துவ‌ குணத்தையே தழுவி, நல்லதை நினைத்து நல்லதையே சொல்லி, நல்லதையே செய்து நன்மைகளைப் பெற்று நலமும் வளமும் மேலோங்கி வாழவேண்டும்.

== குரு பக்கிரிசுவாமி " அருட்சுடர்" மாத இதழ்.

நன்றி: மஞ்சரி மாத இதழ்.

Posted by Picasa

Sunday, January 04, 2009

" இன்று " " இப்பொழுது "


" இன்று "
" இப்பொழுது "
எனச்சொல்லும்போதே இவ்வார்த்தைகளில் இருக்கும் இ, ப், ஆகிய எல்லாமே இறந்த காலம் ஆகிவிடுகிறது.
ஒவ்வொரு கணமும் புதியதாகத் தோன்றுகிறது. தோன்றும் கணத்திலே வளர்கிறது. பின் மறைகிறது.
மறைந்த அக்கணமும் புதிதெனத் தோன்றும் புது கணத்திற்கும் உள்ள கால வித்தியாசம் மிக மிகக்குறைவானதால்
நம்முடைய சிந்தையிலே நிற்பதில்லை.

ஒவ்வொரு கணமும் நம் உடலில் ஆயிரமாயிரம் புதிய உயிரணுக்கள் ( செல்கள் ) பிறக்கின்றன. அது போல் ஆயிரமாயிரம் செல்கள் மரிக்கின்றன.
கணத்துக் கணம் நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். இந்த மாற்றத்திற்கு எதுவும் விதிவிலக்கு இல்லை.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வெள்ளிடைமலை. ஆயினும் மனம் மட்டும் இறந்தகாலத்திலே வசித்திட விரும்புகிறது. இறந்தகாலத்தில்
ஏற்பட்ட சுக துக்கங்கள், ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், பெற்றவை பெறாதவை, நின்றவை, நில்லாதவை என பலவில் நின்று
நம்மை நிகழ்காலத்தில் வாழ விடாமல் தடுத்து நிறுத்துகிறது.

ஒவ்வொரு கணத்திலும் நாம் புது மனிதனாகி, நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றினையும் முதன் முறையாகப் பார்ப்பது போல் பார்க்கவேண்டும்.
அதாவது நமது புது நோக்கு சென்ற காலத்தில் மனதில் ஏற்பட்ட கரைகள் ( விரும்பியது, விரும்பாதது எல்லா) நீங்கியதாக இருப்பின்
நிகழ் காலத்தை நிம்மதியாக மன மகிழ்வுடன் வாழ இயலுமில்லையா ?

சென்ற காலத்தில் வாழ்வோரை இனியேனும் புதிதாய்ப் பிறந்தோமென எண்ணுங்கள் எனச் சொல்கிறார் பாரதி.

கவிதையைப் பார்ப்போமா ?

" சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
நின்று விளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம். திரும்பி வாரா. "












Wednesday, December 31, 2008

புத்தாண்டு சபதம் என்ன எடுத்துக்கொள்வோம் ?

2009
புத்தாண்டு உறுதிமொழி
என்ன எடுத்துக்கொள்வோம் ?

புத்தாண்டு 2009 ஜனவரி திங்கள் முதல் நாள்
எல்லோரும் எல்லோரையும் வாழ்த்தும், வாழ்த்தி வணங்கும் ஆசி பெறும் திரு நாள்.

இனியதோர் புத்தாண்டு பிறக்கும் நல்வேளையில் உலகத்து தமிழர்களுக்கெல்லாம் புத்தாண்டு நல் வாழ்த்துக்களும்
எனது ஆசிகளையும் கூறும் அதே தருணம் அவர்தமக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கலாம் என நினைத்தேன்.

எல்லோரும் புத்தாண்டு பிறந்த உடனே, ஒரு உறுதி எடுத்துக் கொள்வர். அதைக் கடைப்பிடிப்போமென‌
இன்னொரு உறுதியும் கொள்வர்.

இந்த வருடம் என்ன உறுதி எடுத்துக் கொள்வது ?

முக்காலத்துக்கும் பொதுவாம் தமிழ் மறையாம் திருக்குறளிலிருந்து ஒரு பத்து குறட்பாக்களை ஈண்டு தந்து
அவற்றினில் ஏதேனும் ஒன்றில் புதைந்திருக்கும் கருத்தினை அறிவுறைதனை இவ்வருடம் முழுவதும் இம்மி குறையாது கடைப்பிடிப்போமென‌ உறுதி கொள்ளலாமா ?

முதலாவது:
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ' இவன் தந்தை
என் நோற்றான் கொல்" எனும் சொல்.

இரண்டாவது:
கற்க கசடுஅறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.

மூன்றாவது:
தேறற்க யாரையும் தேராது, தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

நான்காவது:

ஆக்கம் கருதி,முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடையார்.

(லாபமே குறிக்கோளாகக் கொண்டு தமது முதலையும் இழக்கும் காரியத்தை
அறிவுள்ளோர் செய்ய மாட்டார்.)


ஐந்தாவது:
நெடு நீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடு நீரார் காமக் கலன்.

ஆறாவது.:
ஒல்வது, அறிவது அறிந்து, அதன் கண் தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

ஏழாவது:
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவது ஓர் நோய்.

எட்டாவது:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.

ஒன்பதாவது:
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

பத்தாவது:
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன்:
ஆகுல நீர பிற.

நன்றே செய் அதை இன்றே செய் என்பார்கள்.
நமக்கு நல்லது என்று தோன்றுவதை இன்னொரு கணத்துக்கு ஒத்திப்போடவும் கூடுமோ ?

யார் எதை எடுத்துக்கொள்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தப் பத்துக்குறட்பாக்கள் மட்டும்தான் என்றில்லை. எந்த ஒரு குறளையும் எடுத்து
அது புகட்டும் பண்பினையும் நன்னெறிதனையும் மனதில் இறுத்தி வாழ்வினை
வளம் பெறச்செய்வோமாக.